Sunday, December 17, 2017

THIRUPPAVAI 3

சுடச்சுட அக்காரவடிசல் - மார்கழி 3ம் நாள்
J.K. SIVAN
''உலகளந்த உத்தமா! ''

ஆயிரம் ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு வில்லி புத்தூர் எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கணம் கண்ணை மூடி யோசித்து பாருங்கள். எங்கும் மரங்கள் சூழ்ந்த காட்டு பிரதேசம். ஜன நடமாட்டம் குறைவு. கிராமத்தில் எங்கும் வயல்கள் இடையே குளம், குட்டைகள், வளைந்து நெளியும் ஒற்றையடி மண் பாதை, சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வெளியே செல்ல முடியாத கும்மிருட்டு.


ஏகாந்தமான அந்த வனப் பிரதேசத்தில் குளு குளு வென்று காற்று வீசிக்கொண்டிருந்தது. காற்றில் நந்தவன நறுமலர்களின் மணம் கம்மென்று கலந்து நுகர்வதற்கு இன்பத்தை அளித்தது.

வில்லிப்புத்தூர் முழுவதுமாக உறங்கிக்கொண்டிருக்க அந்த சிறிய ஆஸ்ரமம் மட்டும் தீபத்தின் ஒளியை சிறிதாக வெளியே கசிய விட்டுக் கொண்டிருந்தது. உள்ளே ஏதோ ஆள் நடமாட்டம். காற்று என்னவோ அன்று கொஞ்சம் பலமாகத்தான் வீசியது. மரங்கள் செடி கொடிகள் சல சல என்ற சப்தத்தில் ஒலித்துகொண்டு தலையாட்டின.

''ராத்ரி முழுக்க தூக்கம் வரவில்லையம்மா'' - விஷ்ணு சித்தர்.

' ஏன் பா?''

''இன்னிக்கு நீ என்ன பாசுரம் எழுதப்போறே, அதைக் கேட்கவேண்டும் என்கிற ஆவல், எப்போ பொழுது விடியும் என்று காத்துக் கொண்டிருந்தேன் தாயே. அந்த ஜெகன்னாதனைப் பத்தி இன்னிக்கு என்னம்மா எழுதப்போறே நீ என்கிற ஆவல் தான். எனக்கு ''

''அப்பா இன்னிக்கு எழுதவேண்டியதை நேற்று ராத்திரியே முடிவு பண்ணி எழுதி வைச்சுட்டேன். இதோ வாசல் தெளிச்சு வீடு அலம்பி கோலம் போட்டுட்டு வந்து அதைப் படிக்கிறேன்.''

விளக்கைத் தூண்டி விட்டு அவள் எழுதி வைத்திருந்த ஓலைச்சுவடியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு விஷ்ணு சித்தர் கோதைக்காக காத்திருந்தார். நாமும் காத்திருப்போம். வாசலில் அவள் பெருக்கி, சாணம் தெளித்து அலம்பி, கோலம் எல்லாம் போட்டு முடித்து விழித்துக் கொண்டு அவளைப் பார்த்த பொன்னிற கன்றுக்குட்டிக்கு ஒரு முத்தம் கொடுத்து இந்த வேலை எல்லாம் முடித்து, கோதை ஆசிரமத்துக்குள் நுழைகிறாள்.

வந்து விளக்கு அருகில் அமர்ந்தாள். கையில் ஓலைச்சுவடியை எடுத்தாள்.

''பாடும்மா, உன் குரல்லே நீ எழுதுகிற பாசுரங்களைக் கேட்கும்போது காதுக்கு கர்ணாம்ருதமா இருக்கு ''

அவள் தேனினும் இனிய குரலில் அன்றைக்கான முழுப் பாசுரமும் பாடினாள்.மார்கழி மூன்றாம் நாள்.

'' ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்''

பாடி முடித்த கோதை அப்பா விஷ்ணு சித்தரை பார்க்கிறாள்..

விஷ்ணு சித்தர் கண்களில் ஆனந்த பாஷ்பம் நிறைந்து வழிய தழு தழுத்த குரலில்

''கோதை , என் கண்ணே, ஆஹா! என்ன அருமை, என்ன கற்பனையடி உனக்கு, அபூர்வம், அபூர்வம் '' என்று அவர் சொல்லும்போது கோதையின் காதுகளில் எதுவுமே விழவில்லை.......

அவரையே நேரே பார்த்துக்கொண்டு சிலை போல் அமர்ந்திருந்தாலும் அவள் ஆயர்பாடியில் ஆண்டாளாக இருந்தாள்

அங்கு ஆயர்பாடியில் என்ன நடக்கிறது?நாமும் அவளோடு அங்கே செல்வோமா?

'' அப்படியென்னடி ஆண்டாள் அந்த நாராயணன் பெரியவன்? என்று கேட்டேனே. ஆண்டாள், எனக்கு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு நீ போய்விட்டாயே நேற்று? என்றாள் ஒரு ஆயர்பாடிச் சிறுமி ஆண்டாளிடம்..

அவளைத் தொடர்ந்து இன்னொருத்தியும் பேசுகிறாள்.

''ஆமாம் ஆண்டாள், நீ சொல்வதெல்லாம் எங்களுக்கு புதிதாகவும், சந்தோஷமாகவும் ஆர்வமாகவும் உள்ளது. மழையில் நனைந்துகொண்டே நாம் ஆற்றுக்கு போவதற்குள் சொல்லேன். கேட்டுக்கொண்டே போவோம்''

ஆண்டாளின் வாயைப் பிடுங்கி அவள் தோழிகள் என்ன தெரிந்து கொண்டனர்:

"ஆமாம். அந்த நாராயணன் ரொம்ப பெரியவனாயிருந்ததால் தான் இந்தஉலகம், மேல் உலகம், கீழ் உலகம் எல்லாவற்றையுமே, ரெண்டு கால் அடி வைச்சு அளந்தவன், மூணாவது அடி மண்ணுக்கு கால் எங்கே வைக்கறது என்று வேறு வழியின்றி அந்த மஹாபலி ராஜாவின் தலையிலேயே காலை வைத்தான் என்று பாட்டி கதை சொல்வாளே. எவ்வளவு பெரிய கால், இருக்கவேண்டும். அதனாலே தான் அவ்வளவு பெரிய அவன் , நம்மை அருளணும்னு நாம் இந்த நோன்பு விரதமெல்லாம் இருக்கப் போகிறோம். நம்ப விரதத்தாலே நிறைய மழை பெய்யும், பசுவெல்லாம், நிறைய பால் வெள்ளமாகக் கொடுக்கும். விளைச்சல் அமோகமாக இருக்கும். நாடு செழிச்சா நமக்கு சுபிட்சம் தானே. சுபிட்சம் இருந்தா, திருடு, கொள்ளை, கொலை எதுவுமே இருக்காது இல்லையா. எப்படி என்றால் எல்லார் கிட்டயும் பணம் நிறைய இருந்தால் ஏன் இன்னொருத்தர் கிட்ட திருடணும், கொள்ளை அடிக்கணும்?'

''ஆமாண்டி, ஆண்டாள் நீ சொல்றது வாஸ்தவம் தான். நாம் எல்லாம் அன்பா சந்தோஷமா இருப்போம். அதுதான் அந்த நாராயணன் விரும்பறது. மழையில் நனையும்போது கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் நிறைய மழை இருந்தா தான் விளைச்சல் வரும். நாடு சுபிக்ஷமா இருக்கும் . பல நாள் சுகத்துக்கு சிலநாள் கஷ்டப்படறது நல்லது தானே''.

மழையில் நனைந்துகொண்டே ஆற்றிலும் மூழ்கி குளிர் நீரில் நீராடினர் அந்த பெண்கள். நாராயணனை வேண்டிக் கொண்டே பாடினர், வீதி வலம் முடிந்து தத்தம் வீடு சென்று விரதம் இருந்தனர். மறுநாள் காலைக்கும் ஆண்டாளுக்கும் சேர்த்து ஒன்றாக, காத்திருந்தனர்.

இப்போது நாம் மீண்டும் வில்லிப் புத்தூரில்:

குறைந்தது ஒரு பத்து தடவையாவது விஷ்ணு சித்தர் அந்த பாசுரத்தைப் பாடி அதன் உள்ளர்த்தத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார்.

''நாராயணா இந்த புவனம் நீ படைத்தது. பூமி விஷ்ணுவின் படைப்பு. அதில் நீ படைத்த எதுவுமே எவருமே நீ தானே? . வைஷ்ணவர்கள் யார்? உன் அம்சம்.விஷ்ணுவின் அம்சம். இந்த உலகம் நமக்கு சந்தோஷத்தைத் தருவதற்கு என்பது தவிர அதில் எதுவும் நமதல்ல. பூங்காவில் உள்ள புஷ்பங்கள் நமக்கு தூரத்திலிருந்து பார்த்து சந்தோஷம் தருவதற்கே தவிர பறித்து நமக்கென்று வைத்துக் கொள்வதற்கில்லை. சகல ஐஸ்வர்யங்களும் வேண்டவே வேண்டாம். அவை உனது. எங்களுக்கு வேண்டியது நீயும் உனது பாத கமல தரிசனமும் தான். '

ஆண்டாள் அந்த அறியா இடைச் சிறுமிகள் வாயிலாக மூவுலகும் அளந்த அந்த திரிவிக்ரமன் மகாத்மியத்தை சுலபமாக உணர்த்தி எல்லாம் அவனே, அவனதே என்பதை உணர்த்தி விட்டாள் .''உத்தமன் பேர் பாடி என்று எவ்வளவு பொருத்தமாக அந்த திவ்ய அஷ்டாக்ஷர மந்த்ரோபதேசம் செய்கிறாள்.'' அவன் பேர் சொன்னாலே போதுமே. ''ஆபத் பாந்தவா, கோவிந்தா என்ற திரௌபதிக்கு அந்த கிருஷ்ணன் எப்படி உடனே வந்து உதவினான் ! ''

பொழுது புலர்ந்து விட்டது. மழையும் சற்று நின்றது. எண்ணத் தொடர் சற்று அறுந்து பார்வை நந்தவனத்தில் பூத்துக் குலுங்கிய மலர்களின் மேல் செல்ல, பெரியாழ்வார், ' நாராயணா என்னே உன் கருணை '' என்று பூக்குடலையுடன் நந்தவனத்தில் நுழைந்தார்.

LISTEN TO THE PLEASING MLV'S GOLDEN VOICE RENDERING THE 3RD THIRUPPAVAI PASURAM https://youtu.be/X95fVDqg7i4https://youtu.be/X95fVDqg7i4

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...