Friday, December 29, 2017

VAIKUNDA EKADASI






பரமபத வாசல் தரிசனம் J.K. SIVAN

தனுர் மாச சுக்ல பக்ஷ ஏகாதசி தான் வைகுண்ட ஏகாதசி. மோக்ஷத ஏகாதசி. அது இன்று. வைகுண்ட வாசல் திறந்து வைத்திருக்கும் இன்று. பெருமாள் கோவில்களில் இன்று வழக்கத்தை விட அமோக கூட்டம்.
இன்றைக்கு உபவாசம் இருப்பவன் மீதி 23 ஏகாதசிகளில் உபவாசம் இருந்த பலனை பெறுகிறான் என்று விஷ்ணு புராணம் சொல்கிறது. மாசம் ரெண்டு ஏகாதசி ஒன்று சுக்ல பக்ஷம்,இன்னொன்று கிருஷ்ண பக்ஷம். மொத்தம் வருஷத்திற்கு 24 ஏகாதசி.

முதலில் இந்த வைகுண்ட வாசல் ரெண்டு ராக்ஷஸர்களுக்காக திறக்கப்பட்டது. '' ஐயா விஷ்ணு பரமாத்மா ஒரு சின்ன வேண்டுகோள். எங்கள் கதையை யாராவது கேட்டு இந்த நீங்கள் உள்ளே இருந்து இந்த கதவு திறந்து வருவதை பார்த்தால் அவர்களுக்கும் உள்ளே மோக்ஷம் செல்ல வழிவிட வேண்டும்'' என்று அந்த ராக்ஷஸர்கள் கேட்டதற்கு விஷ்ணு சரி என்று தலைஆட்டினாராம்.

பத்ம புராணம் கொஞ்சம் வித்யாசமாக சொல்கிறது. விஷ்ணுவால் முரனைக் கொல்ல முடியாமல் பத்ரிகாஸ்ரமத்தில் ஒரு குகையில் ஹைமவதி என்ற சக்தியை உபாசித்து, அந்த தாயார் அம்சம் முரன் எனும் ராக்ஷஸனை வதம் செய்து தேவர்களை காத்தது. அவளை 'ஏகாதசி' என்று பெயரிட்டார் விஷ்ணு. அம்மா ஏகாதசி உன்னை யார் யார் எல்லாம் முரனை வெற்றி கொண்ட இந்த ஏகாதசியில் நினைக்கிறார்களோ அவர்களுக்கும் மோக்ஷம்'' என்று வரமளித்தார் என்கிறது. தவிர ஏகாதசி அன்று உபவாசம் இருப்பவர்கள் பாவம் தொலைகிறது.

புராண கதை என்று பாராமல் ஒரு சித்தாந்தத்துடன் பார்த்தால் முரன் என்பது நம்மிடையே உள்ள ரஜோ, தமோ குணம். அதனால் தான் பேராசை, ஆசை, பாசம் சோம்பல், கர்வம், கோபம் தம்பம் எல்லாம் உண்டாகிறது. இதெல்லாம் தொலைப்பது தான் உபவாசம். அதனால் விளைவது தான் சத்வ குணம் என்பது மனதில் குடியேறுகிறது. அது தான் மோக்ஷ சுகம் தருவது. உபவாசம் இருந்து கண் விழிப்பதால் மனதில் நல்ல எண்ணங்களும் சாத்வீக சிந்தனையும் நிறைகிறது. மனம் அமைதியுறுகிறது. ஆன்மாவுடன் தொடர்பு நீடிக்கிறது. விஷ்ணு தெரியமாட்டாரா அப்பறம்.

சாப்பாடு தான் முரன். சாப்பிட்டால் தூக்கம், கோபம் தாபம், உணர்ச்சிகள் பெருகும். ஆன்மாவை மனம் தேடாமல் செய்து விடும். அர்த்தம் தெரிந்தோ தெரியாமலேயோ சில சடங்குகளை செய்யவேண்டும். மனது தானாகவே அதில் ஈடுபட்டு கேட்ட, தீய சிந்தனைகளுக்கு இடம் இல்லாமல் செய்யும் . மஹாபாரதத்தில் அர்ஜுனன் கீதை பெற்றது இந்த மாதிரி ஏகாதசி அன்று தான்.

ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு முன் பத்து நாள் பகல் பத்து வைபவம். அடுத்து பத்து நாட்கள் ராப்பத்து. இந்த இருபது நாளும் ரங்கனுக்கு முத்து அங்கி. பகல் பத்து முடிந்த அன்று நம்பெருமாள் மோஹினி அலங்காரத்தில் காட்சி தருவார்.

வைகுண்ட ஏகாதசி அன்று பரமபத வாசல் என்று ஒரு வழி அமைத்து எல்லோரும் உள்ளே சென்று பெருமாளை தரிசிப்பார்கள் .ATTACHING AN OLD PHOTO OF THIRUPATHI BALAJI ON A VAIKUNDA EKADASI DAY

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...