Thursday, December 28, 2017

KANDAVA VANAM




அக்னியின் பசி J.K. SIVAN

​சுபத்திரா அர்ஜுனன் தம்பதிக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அபிமன்யு என பெயர் சூட்டி வளர்ந்தான். தௌம்யரிடம் அனுப்பினார்கள். வேதம், உபநிஷத் சாஸ்திரங்கள் எல்லாம் கற்றான். ​ அப்பா அர்ஜுனன் தனக்கு தெரிந்த வில் வித்தைகளை கற்று தந்து அவனை இன்னொரு அர்ஜுனன் ஆக்கினான்.

பாண்டவர்களுக்கு திரௌபதி மூலம் ஐந்து பிள்ளைகள். பிரதிவிந்தியன், சுருதசோமா, ஸ்ருதகீர்த்தி, ஸதநீகன். ஸ்ருதசேனன். இவர்களை உபபாண்டவர்கள் என்பார்கள்.

இந்த்ரப்ரஸ்தத்துக்கு கிருஷ்ணன் அடிக்கடி வருவார். ஒருநாள் ''கிருஷ்ணா, கோடைகாலம் தஹிக்கிறதே. குளிர்ச்சியாக எங்காவது கானகம் செல்லலாமா? என்று கேட்டான் அர்ஜுனன்.

​'நல்ல யோசனை. வா செல்வோம்.''

காண்டவபிரஸ்தம் சென்றார்கள். அப்போது அக்னி தேவன் ஒரு பிராமணன் வடிவில் அங்கே வந்தான். கிஷ்ணார்ஜுனர்களை கண்டு வணங்கி நின்றான்.

''ப்ராமணரே, என்ன விஷயம், ஏதாவது உதவி வேண்டுமா?'' என்றான் அர்ஜுனன்.

​''பசி, ப்ரபோ. உணவு வேண்டும்.''

​''அடாடா, உங்களுக்கு என்ன வித உணவு வேண்டும் சொல்லுங்கள் உடனே ஏற்பாடு செயகிறேன்''

​அக்னி தேவன் சுய உருவில் இப்போது நின்று ''இந்த காண்டவ வனத்தை நான் சுட்டெரித்தால் என் பசி ஆறும். ஆனால் . அவன் நண்பன் தக்ஷகன் எனும் நாகம் இந்த வனத்தில் வாழ்வதால் இந்திரன் என் முயற்சியை தடுக்கிறான். உன்னால் எனக்கு உதவி செய்ய முடிந்தால்,இந்த காண்டவ வனத்தை எரிக்க முயலும். என் பசியும் தீரும்.'' என்றான் அக்னி.

​அர்ஜுனனுக்கு ஆச்சர்யம். ''எதற்கு இந்த அழகிய பச்சை பசேலென்ற வனத்தை அழிக்கவேண்டும்? வேறு விதமாக பசியாற முடியாதா?'' என்றான் அர்ஜுனன்.

​''விஷயம் கேள் அர்ஜுனா, அப்போது தான் உனக்கு புரியும். ஸ்வேதகி என்ற ரிஷி சத்ர யாகம் பண்ண எண்ணினார். அது செய்து முடிக்க நூற்றுக்கணக்கான வருஷங்கள் பிடிக்கும். அந்த யாகத்தை தலைமை தாங்க அவிர்பாவம் பெற எவரும் முன்வரவில்லை. மகாதேவா, நீ தான் பிரதம ஆச்சார்யனாக வந்து யாகத்தை நடத்திக் கொடுக்கவேண்டும் '' என்று சிவனை வேண்டினான்.

​''ஸ்வேதகி, உன் சத்ர யாகத்துக்கு பொருத்தமானவர் துர்வாசர் ஒருவரே'' என்றார் பரமசிவன். நூறு வருஷம் நடந்த யாகத்தில் எண்ணற்ற நெய் ஹோமத்தீயில் விட்டதால் எனக்கு திருப்தி. அளவுக்கு மீறி உண்டதால் பிரம்மனிடம் சென்று என் அஜீரணம் தீர வழி கேட்டேன். ''காண்டவ வனம் செல். அதில் உள்ள மூலிகைகளை உண்டால் சரியாகிவிடும்'' என்றான். புரிகிறதா இப்போது?'' என்றான் அக்னி

​''ஓஹோ அப்படியா. இதோ பார் அக்னி, நானும் கிருஷ்ணனும் இங்கே பொழுது போக்க வந்துள்ளோம். நான் வில் அம்பு தேர் ஆயுதம் எதுவும் கொண்டுவரவில்லையே. என்ன செய்ய?'' - அர்ஜுனன்
அக்னி ஒரு கணம் யோசித்தான். தனது நண்பன் வருணனை அழைத்தான்.

​'வருணா ஓடு சீக்கிரம். வில் அம்புகள், தேர் அர்ஜண்டாக கொண்டுவா. கிருஷ்ணனும் அர்ஜுனனும் எனக்கு உதவ தயார். இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது.''

​வருணன் காண்டீபம் எனும் ஒரு வில், எடுக்க எடுக்க குறையாத அம்புகள் நிறைந்த அக்ஷய துணீரம் என்ற அம்பறாத்தூணி, ஆஞ்சநேயர் கொடி (கபி த்வஜம் ) பொறித்த ஒரு தேர் கொண்டுவந்தான். கிருஷ்ணனிடம் சுதர்சன சக்ரம் கௌமோதகி எனும் கதை தந்தான். ''இதெல்லாம் மகேஸ்வரன் என்னிடம் தந்தவை'' என்று வணங்கினான் வருணன்.

''அக்னி தேவா, உன் கவலையை விடு. இனி காண்டவ வனத்தை உனக்காக அழிப்பது என் வேலை'' என்றான் அர்ஜுனன். அக்னி ஒரு பக்கம் தீயை உமிழ்ந்தான். வனம் பற்றி எரிய துவங்கியது. அர்ஜுனன் கிருஷ்ணன் இருவரும் அக்னியை எதிர்ப்பவரை அழிக்க தயாரானார்கள். காட்டின் காவலர்கள் எதிர்த்தார்கள். அவர்களை அர்ஜுனன் கொன்றான். காட்டில் வாழும் கொடிய விலங்குகள் ஜீவன்கள் வெந்து சாம்பலாயின. தேவைதைகள் அனைவரும் இந்திரனிடம் சென்று முறையிட, தேவேந்திரன் முகத்தில் கவலை கோடிட்டது. அவன் நண்பன் தக்ஷகனை காப்பாற்றுகிறேன் என்று வாக்களித்திருந்தானே.

''வருணா, இங்கே வா, உடனே கருமேகங்களுடன் சென்று காண்டவ வனம் தீக்கிரையாமல் விடாது மழை அங்கே பொழியட்டும்'. இந்திரன் கட்டளையை வருணன் ஏற்று மழை பொழிந்தது. அர்ஜுனன் தனது அம்புகளால் ஒரு பெரிய குடையை உருவாக்கி மழை எரியும் காண்டவ வனத்தில் நுழையாது தடுத்தான்.

​தக்ஷனின் மகன் அஸ்வசேனன் உயிர்தப்ப தனது தாயுடன் பறந்து செல்ல முயல்வதை அர்ஜுனன் கவனித்தான். அம்புகளை செலுத்தினான். இந்திரன் ஒருவாறு இருவரையும் காப்பாற்றினானே தவிர தக்ஷகன் பற்றிய கவலை இருந்தது. தொடர்ந்து இந்திரனுக்கும் அர்ஜூஜனுக்கும் யுத்தம் நடந்தது.
வெகுநேரம் யுத்தம் தொடர, வானில் ஒரு அசரீரி ஒலித்தது.

''இந்திரா, உன் எதிரே நிற்பது நரனும் நாராயணனும். அவர்களை உன்னால் வெல்லமுடியாது. தக்ஷகன் இந்த காட்டில் இப்போது இல்லை. தப்பி குருக்ஷேத்ரம் சென்றுவிட்டான். அவனைப் பற்றி கவலைப்படாதே. உன் யுத்தத்தை உடனே நிறுத்து.''

இந்திரன் வணங்கிவிட்டு தேவலோகம் சென்றான். மயன், நமுச்சியின் சகோதரன், காண்டவ வன தீயில் சிக்கி வாடிக் கொண்டிருந்தான். ''அர்ஜுனா என்னை காப்பாற்று'' என்று கத்தினான். கடைசியில் மாயன், அஸ்வசேனன்,நான்கு சாரங்க பறவைகள் மட்டுமே அந்த பெரிய காண்டவ வனத்தில் உயிர் பிழைத்தவர்கள்.



​தொடரும்...​

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...