Sunday, December 31, 2017

RANGA'S DIAMAND TILAK







அரங்கா எங்கே உன் திலகம்?
J.K. SIVAN

2018 சுபிக்ஷமாக இருக்க அனைவரும் ஆசைப்படுகிறோம். ததாஸ்து. அதற்கு ஒரு சின்ன தியாகம் நாம் அனைவரும் செய்ய தயாராக இருக்கவேண்டும். நாளை 1.1.18 முதல். என் இஷ்ட தெய்வமே, கிருஷ்ணா, உன் மேல் ஆணை. இனி நான் யாருக்கும் ஒரு பைசா கூட லஞ்சம் தரமாட்டேன். பிடிவாதாமாக கேட்டாலும்

'' தர முடியாது ஐயா மன்னிக்கவும்''

''உங்கள் வேலை நிறைவேறாது'. தாமதமாகும். பரவாயில்லையா'?

'' அதால் உயிர் போய்விடாது அல்லவா?''

தக்க அதிகாரியை கண்டு பயப்படாமல் உண்மையை உடைத்து பேசவேண்டும். இது ஒருவர் செய்வது அல்ல. அனைவரும் நாம் அனைவரும். நமக்கு நாமே துரோகம் செயது கொள்ளவேண்டாம்.

அதேபோல் லஞ்சம், உபரி வருமானம் வாங்கும் நிலையில் உள்ளவரும், இனி யாரிடமும் நாம் ஒரு பைசா கூட கேட்கமாட்டேன். என்னால் முடிந்த அளவு உதவுவேன் என்று மனதுக்குள் சத்தியம் செயது கொள்ளவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக இது பரவினால் சுபிக்ஷத்தை தவிர வேறு எதையும் நாம் பெறமுடியாது

இப்போது இருக்கும் நிலை, எங்கு பார்த்தாலும் நம்மை நிறைய பேர் சுரண்டும் விஷயம் குறைய வேண்டும். . இயலாதபோது நாம் அதிர்ச்சி அடைகிறோம். இவ்வளவா? அத்தனையுமா? இது அடுக்குமா? என்று நிர்கதியாக அரற்றுகிறோம். இனி சுபிக்ஷமா? ஆமாம். நிச்சயம் நாம் தேடி அனுபவிக்கவேண்டியது.

கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.. அடேயப்பா எவ்வளவு காலங்கள் நாம் சுரண்டப் பட்டவர்கள். வாரிக்கொடுத்தது போக வாரிச் சுருட்டிக்கொண்டு போகவும் வழி செய்தவர்கள். ஒன்றா இரண்டா எத்தனையோ அக்கிரமங்களை நாமும் நம் முன்னோர்களும் சகித்துக் கொண்டு தான் இருந்திருக்கிறோம்.
போதுமே அது. முற்றுப்புள்ளி வைக்க முயல்வோமே.

வெள்ளைத் தோல் இருந்தால் நேர்மையானவன், நல்லவன் என்று மடத்தனம் அப்போதே இருந்தது. நிறத்திற்கும் நேர்மைக்கும் என்றுமே சம்பந்தமில்லை. சரி விஷயத்துக்கு வருகிறேன்.

ஆர்லோவ் வைரம் என்று ஒரு வகை. அசாத்தியம், அபூர்வம், அதிசயம் என்று என்ன வார்த்தை வேண்டுமா னாலும் அதற்கு பொருந்தும். ரஷ்யாவில் மாஸ்கோவில் வைரங்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்று இந்த ஆர்லோவ் வைர வகை. கோழி முட்டையின் அளவில் சரி பாதியாக இது கண்டெடுக்கப் பட்டது. எங்கே?? ரஷ்யாவிலோ எங்கேயோ இல்லை. நமது ஊரில் கோலாரில் சுரங்கத்தில்.

அதை கண்டெடுத்த காலம் கி.பி. 2ம் நூற்றாண்டு. சரி அதை எடுத்து என்ன செய்தார்கள்?

இருக்கவே இருக்கிறார் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். உத்சவருக்கு நெற்றியில் திலகமாக பெரிதாக அழகாக பொருத்தி மின்ன வைத்தார்கள். பார்த்தவர்கள் பக்தியோடு பார்த்தார்கள். ஒருவன் மட்டுமே அதை 'ஒரு கை' பார்த்தான். அவன் ஒரு பிரெஞ்சுக்காரன். முன்னூறு வருஷங்களுக்கு முன்பு 1747 வாக்கில் ஒண்ட வந்த பிடாரிகள், பிரெஞ்சுக்காரர்களுக்கும் கிழக்கிந்திய வெள்ளைக்காரர்களுக்கும் சண்டை நடந்தபோது அந்த யுத்ததில் வேலை பார்த்தவன். யுத்தத்தை விட்டு ஓடி வந்து ஸ்ரீ ரங்கம் வந்தான். தினமும் கோவிலுக்கு தவறாமல் வருவான். ''நான் ஒரு 'ஹிந்து' வாக மாறிவிட்டேன், அரங்கனின் பக்தன்' என்று சொன்னதை நம்பி அவனை உள்ளே சேர்த்துக் கொண்டார்கள் எதையும் எவரையும் நம்பும் நம்மவர்கள். தினமும் வைரத்தை தரிசனம் செய்தவன் ஒருநாள் ஆண்டாள் ரங்கனோடு கலந்ததைப் போல் ரங்கநாதரின் ஆர்லோவ் வைரம் அவனோடு கலந்து விட்டது.

எடுத்தவன் நேராக சென்னைக்கு ஓடி வந்துவிட்டான். கிழக்கிந்திய வெள்ளையர்களிடம் பேரம் பேசினான். அது பல வைர வியாபாரிகள் கை மாறியது. ஹாலந்து தேசத்தில் ஆம்ஸ்டெர்டாம் என்ற ஊர் வைரத்துக்கு ரொம்ப பேர் போனது. அங்கே வைர சந்தையில் ரங்கனின் வைர திலகம் விற்பனைக்கு வந்தது. அதிக விலை கொடுத்து (நாலு லக்ஷம் டச்சு காசுகள் அப்போது . எத்தனை கோடியோ இப்போது . எனக்கு கணக்கு தெரியாது. ) கிரிகோரி கிரிகோரிவிச் ஆர்லோவ் என்ற ஒரு வைர நிபுணன் பெரிய வியாபாரி. ரஷ்யாக்காரன். அதை அவன் விலைக்கு வாங்கினான் ரங்கன் திலகம் ரஷ்யா போய் பார்த்தது.

கிரிகோரிவிச்சுக்கு ஒரு நீண்ட கால ஆசை. ரஷ்ய ராணி காதரின் மீது கொள்ளை காதல். அவள் 3வது பீட்டர் மனைவி. இந்த வைரத்தால் காதரினை தூண்டில் போட்டு மயக்கினான். வைரம் ஒன்று சேர்த்தது. இதனால்
சிம்மாசனத்திலிருந்து பீட்டர் கழண்டு போனான். காதரின் ராணியானாள். வைரம் போல் ஒர்லோவ் உறவு உறுதியானது.

ரங்கனின் திலகம் ராணி காதரினின் வைரச் செங்கோலில் உச்சியில் அரை உருண்டையாக பொருத்தப்பட்டு ஒளி வீசியது. அதன் அளவு 32 mm x 35 mm x 21 mm. ள்ளையில் பட்டை தீட்டப்பட்ட நீல டால் அடிக்கும் இந்த வைரக்கல் 189.62 carats (37.924 g). அதற்கு மேல் தான் ரெட்டை தலை கழுகு

அந்த வைரத்தின் மதிப்பு?விலைஎன்ன என்று கேட்காதீர்கள். சுவிஸ் பேங்கில் இருக்கும் யார் பேர்களிலோ இருக்கும் நமது பணத்தை விட அதிகம் என்று வேண்டுமானால் தோராயமாக சொல்லி வைக்கிறேன். சரியா தப்பா என்று எனக்கு என்ன கவலை? எனக்கு இங்கேயே பணம் இல்லை!

1700 பிற்பகுதியில் பொருத்தப்பட்ட அந்த வைரம் 1913 யாரோ அதை சரியாக இருக்கிறதா என்று பார்க்கும்போது கீழே விழுந்ததாம். எடுத்தவன் அதை எடை பார்த்தானாம். எழுத மறந்து போச்சாம். கிட்டத்தட்ட 190 காரட் (38g )என்று சொன்னானாம்!

இப்போது அந்த வைரம் எங்கே? ரங்கநாதனுக்கு சக்தி உண்டு ஒரு நாள் அது அவனை அடையும். அவன் காரணமாகத்தானே எதையும் விட்டு வைப்பவன். காலம் செல்லட்டும் வழி சொல்லட்டும்.



காதரினின் வைர செங்கோலையும் ஆர்லோவ் கொடுத்த வைரக்கல்லையும் அதில் பார்த்தேன். நீங்களும் பார்க்க இணைத்துள்ளேன். ரங்கா மசமச வென்று இருக்காதே. உனது திலகம் சீக்கிரம் உன்னிடம் வரவேண்டாமா? நீ தான் ஏதாவது செய்வாயே, செய்யேன்! கோலில் பார்த்த அந்த வைரத்தை கோவிந்தா உன் நெற்றியில் பார்க்க என்னால் முடியுமோ???என்னால் முடிந்தது இந்த வைரத்தின் பொம்மையை அளவாக வெட்டி உன் நெற்றியில் ஒட்டி வைத்து அழகு பார்க்கிறேன். அவ்வளவு தான்!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...