Thursday, December 14, 2017

ENGAL ARASAN



                                  இப்படிப்பட்டவன் அல்லவோ  ஆள வேண்டும்.         
    
இப்போதெல்லாம்  ராஜாக்கள் இல்லை.  ராஜா என்ற பெயர் இருந்தாலும்  ஆளுவதற்கு சிலர் வந்தாலும் அவர்களே நாட்டை சீர்கேடாக்குவதில் முதல் இடம் பெற்று  துரோகம் செயகிறார்கள்.  ஒரு  நாட்டில் எல்லோரும் நன்றாக வாழ வேண்டுமானால் (நான் அக்காலத்தைப் பற்றி சொல்கிறேன் என்பது கவனமிருக்கட்டும்) சிறந்த அரசன் தேவை. அன்பும் பண்பும் கொண்ட மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பார்களே. அந்த மாதிரி அரசர்களும் மக்கள் நலத்தையே மனத்தில் கொண்டு ஆண்டுவந்தார்கள். 


எங்களுக்கு அவ்வாறே ஒரு அரசன் கிடைத்தான். நாம் மிக்க பாக்ய சாலி என்பது நன்றாக நினைவில் இருக்கட்டும்.

நம் ராஜா சிறந்த குணவான். 'எடுத்தேன் கவுத்தேன்'  பேர்வழி அல்ல. எதிராளிக்கு நிறைய சந்தர்ப்பங்கள் கொடுத்து பிறகு தான் தண்டிப்பான். அவன் செய்வதைப்பார்த்தால்  என்ன இவ்வளவு கொடுமைகள் எதிரிகள் செயதும் பேசாமல் பார்த்துக் கொண்டு சிரித்துக்கொண்டு  இருக்கிறானே...நாள், மாதங்கள் நகர்ந்து வருஷம் ஒன்று கூட ஓடிவிடும்போல இருக்கிறதே என்று ஐயம் முதலில் நமக்கு ஒருவேளை தோன்றும். ஆனால்  எங்கள் ராஜாவுக்கு நன்றாகவே தெரியும் எப்போது அணைக்கவேண்டும், எப்போது அழிக்க வேண்டும் என்று. தீயணைக்கும் எஞ்சின் ஓடாது, நகராது. ஆனால் எப்போதும் தயார் நிலையில் இருக்கும் அல்லவா. தக்க நேரத்தில் அது பறப்பது போல் எதுவும் வேகமாக ஓடாது.

எங்களது ராஜாவின் பராக்கிரமம் கண்டு திகைப்போம். அவனை அறியாமல் தவறாக நினைத்து நினைத்து நாம் வாடின நாட்கள் மறைந்து யுகமாக முடிந்து போகும். அவன் யாரையாவது எதிர்க்கவேண்டுமானால், படைகள் சேர்க்க ஆரம்பிக்க மாட்டான், ஆள் படை அம்பு தேட இது எதையுமே தேட நாட மாட்டான்.

''இவனால் என்ன செய்யமுடியும்? வீரமற்ற கடையன், இடையன், பயந்தாங் கொள்ளி, பெண்கள் பின்னே சுற்றுகிறவன்'' என்றெல்லாம் எதிரிகள் ஏசினாலும் அவன் பதில் சிரிப்பு ஒன்றே. 

ஒரு விஷயம் ஞாபகமூட்டுகிறேன். பொல்லாத இரக்கமற்ற அவனது மாமனே , அவனை அழித்துவிடவேண்டும் என்று அவன் சிறு குழந்தையாக இருந்த போதே ஒருத்தர் பின் ஒருத்தராக அநேக பலமிக்க ராக்ஷதர்களை அனுப்பினாலும் அவன் அவர்களை எதிர்கொள்ள நொடியில் அழிக்க, ஒழிக்க, எந்த முஸ்தீபும் தேவை இன்றி  ஆடிப் பாடிக்கொண்டு தானே இருந்தவன்.  அவன் இருந்த ஊர் மக்கள் மயங்கி,  கலங்கி,  மழை இல்லையே பயிர்கள் வாடுகிறதே என என்று கவலையுற்ற போ து நம் அரசன் கவலை கொண்டானா? அவன் தானுண்டு தனது குழலுண்டு என்று பசுக்கள், கன்றுகள், மான்கள், மடந்தைகள் என்று விளையாடிக் கொண்டிருந்தான். தக்க நேரம் வந்தது. கடுமழையிலிருந்து அவர்கள் அனைவரையும் காக்க, மலையையே சுண்டு விரலில் தூக்கி நின்றவன் நமது அரசன் அல்லவா?

எங்களுக்கு ஒரு கதி காட்டு என்று அவனிடம் சென்றால் தனது கால் கட்டைவிரலை கையில் பிடித்து வாயில் போட்டுக் கொண்டு சிரிப்பான் அந்த ராஜா குழந்தைப்பருவத்திலேயே. இது எதை உணர்த்தியது ? ''என் கால் இருக்கும்போது உனக்கென்ன கவலை '' என்று நமக்கு அவன் உணர்த்தியதன் அர்த்தம் புரிந்து கொள்ள நமக்கு தான் வெகு காலம் நேரமாகிறது.

அவன் நம்மைக் காப்பவன் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். அவன் எங்கோ மறைந்து வாழ்ந்தான். வளர்ந்தான். இருந்தாலும் சும்மாவா அங்கிருந்தான்?. இருந்த இடத்திலேயே அரக்கர்களை ஒருவர் பின் ஒருவராக தீர்த்துக் கட்டி அல்லவோ உலகம் காத்தான். அவனது சட்டத்தில் ''தானே திருந்து,  நிறைய நேரம் காலம் தருகிறேன், இல்லையேல் தீர்த்து விடுகிறேன்'' என்ற ஒரே நிபந்தனை தான்.

ஒரு ராஜாவுக்கு என்னென்ன தெரியவேண்டும் என்று எங்கள் ராஜாவிடம் தான் மற்றவர் தெரிந்து கொள்ளவேண்டும். தந்திரம், மந்திரம்,சர்வ சாதாரணம் அவனுக்கு. தான் வலிமையுள்ளவனாக காட்டிக் கொள்ளவே மாட்டான். எங்க ராஜாவிடம் தான் ஆங்கிலேயன் camouflage என்றால் என்ன என்று கற்றுக்  கொண்டானோ?

என் ராஜா விசித்ரமானவன். புரிந்து கொள்ள எளிதானவன். அதே சமயம் புரிந்து கொள்ள முடியாதவன். இரண்டுமே எப்படி? காலம் கனிந்தால் புரிபவன். அமையான பசுவின் கன்று போல் சாது என எண்ணி தீங்கிழைக்க நினைப்பவர் உலகத்தையே அசைக்கும் ஆலகால விஷத்தைவிட அவன் கொடியவன் என்று அனுபவித்துப் புரிந்து கொள்வார்கள். இது நான் சொல்ல வேண்டாம் சரித்திரம் பேசுகிறது.

நம் ராஜா பற்றி சொல்லவேண்டுமானால் துஷ்ட நிக்ரஹன், சிஷ்ட பரிபாலனன். எதிரிகளை வேர் மட்டுமல்ல வேரடி மண்ணும் இல்லாமலேயே வெந்து போக பகைவரைச் சுட்டுப் பொசுக்கிவிடுவான். அதே நேரம் துன்பம் எதுவாயினும் '' என் ராஜா, கண்ணா '' என்று மனமுருகி வேண்டினால், இந்த பூமி மட்டுமல்ல, வானமும் கூட ஆயிரமாயிரம் ஆண்டுகள் பட்ட துன்பங்கள் எல்லாமே ஒட்டு மொத்தமாக கணத்திலே மாற்றிவிடுவான் அந்த மூங்கில் மந்திரக் கோல் மன்னன்.

நேரம் வந்தால் மட்டுமே, அவசியம் ஏற்பட்டால் மட்டுமே எங்கள் ராஜா வேறு வழியின்றி அவனது பிரத்யேக ஆயுதமான சக்ரத்தை கையில் எடுப்பான். அப்போது தர்மம் பாரில் தழைக்க வேண்டும், தக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும். இதை நிறைவேற்றும்போது பகை எந்த ரூபத்தில் வந்தாலும், தடை எப்படிப்பட்ட தானாலும் மாய்ந்து விடும் என்பதில் சந்தேகம் வேறா?

எங்கள் ராஜா கண்ணனைப் பற்றி நினைத்தாலே அவன் புகழ் பேசினாலே கவிதையாக வார்த்தைகள் வந்து விழுகின்ற மாயம் கவனித்தீர்களா? அவனைக் காலமெல்லாம் போற்றுவேன்.

வாசலில் பெருக்கி மெழுகி கோலம்போட்டு திண்ணையைத் துடைக்க வந்தவனைக் கூட தனது மந்திரியாக்கிக் கொள்ளும் அன்பு படைத்தவன் அல்லவா எங்கள் ராஜா.

அடுத்த வேளைச் சோற்றுக் கென்ன வழி என்று தெரியாமல் அவனைத் தேடி வந்தேனே? என்ன செய்தான் தெரியுமோ? எனக்கு நிகர் யாருமில்லை என்று உலகோர் போற்றுமளவிற்கு என்னை செல்வந்தனாக்கினான் - இது குசேலனே சொல்வது போல் காதில் விழுகிறதா? அப்படியென்றால் முற்றிலும் சரியே.

எங்கள் ராஜாவிடம் செல்லும்போது எனக்கு ஒரு வித்தையும் தெரியாதே. வெறும் சோற்றாலடித்த பிண்டம். எண்ணிப்பாருங்கள் இப்போது எனக்கு எத்தனை கலைகள் தெரியும் என்று. உங்களால் நிச்சயம் எண்ணவே முடியாது. வேத சாஸ்திரங்கள் எனக்கு அத்துபடி.

எங்கள் ராஜாவே, கண்ணா, எம்பெருமானே நீ வாழ்க வாழ்க. இந்த கலியுகம் அழிந்து புவி மீண்டும் புனருத்தாரணம் பெற அருள்வாய் தெய்வமே. கண்ணா. எங்கள் உலகம் நீ தோன்றிய உலகம் அண்ணலே. எங்கள் அவலம் நீங்கி, நீ அதை நீக்கி, நாங்கள் மீண்டும் புகழில் ஒங்க அருள் புரிவாய் பரந்தாமா கண்ணா. எங்கள் அரசே.

(மகா கவி சுப்ரமணிய பாரதியார் ''கண்ணன் என் அரசன்'' என்று அருமையாக சில பாடல்களைப் பாடி இருக்கிறார். அதைப் பிழிந்தெடுத்து வடித்தது தான் மேலே எழுதப் பட்டது.)’



                                  கண்ணன் -- என் அரசன்


பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும்
பார்த்திருப்ப தல்லா லொன்றுஞ் செய்திடான்;
நகைபுரிந்து பொறுத்துப் பொறுத்தையோ
நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான்;

கண்ணன் வென்று பகைமை யழிந்துநாம்
கண்ணிற் காண்ப தரிதெனத் தோன்றுமே;
எண்ணமிட் டெண்ண மிட்டுச் சலித்துநாம்
இழந்த நாட்கள் யுகமெனப் போகுமே.

படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல்
பணமுண் டாக்கல் எதுவும் புரிந்திடான்;
‘இடையன், வீரமி லாதவன், அஞ்சினோன்’
என்றவர் சொலும் ஏச்சிற்கு நாணிலான்;

கொல்லப் பூத மனுப்பிடு மாமனே
கோலு யர்த்துல காண்டு களித்திட,
முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும்
மோக முற்றுப் பொழுதுகள் போக்குவான்;4

வான நீர்க்கு வருந்தும் பயிரென
மாந்தர் மற்றிவண் போர்க்குத் தவிக்கவும்,
தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துக்கள்
தனிமை வேய்ங்குழல் என்றிவை போற்றுவான்;5

காலினைக் கையினால் பற்றிக் கொண்டுநாம்
கதியெ மக்கொன்று காட்டுவை யென்றிட்டால்.
நாலி லொன்று பலித்திடுங் காணென்பான்;
நாமச் சொல்லின் பொருளெங் குணர்வதே?6

நாம வன்வலி நம்பி யிருக்கவும்,
நாண மின்றிப் பதுங்கி வளருவான்;
தீமை தன்னை விலக்கவுஞ் செய்குவான்;
சிறுமை கொண்டொளித் தோடவுஞ் செய்குவான்;7

தந்தி ரங்கள் பயிலவுஞ் செய்குவான்;
சவுரி யங்கள் பழகவுஞ் செய்குவான்;
மந்தி ரத்திற னும்பல காட்டுவான்;
வலிமை யின்றிச் சிறுமையில் வாழ்குவான்;8

காலம் வந்துகை கூடுமப் போதிலோர்
கணத்தி லேபுதி தாக விளங்குவான்;
ஆல கால விடத்தினைப்போலவே,
அகில முற்றும் அசைந்திடச் சீறுவான்;9

வேரும் வேரடி மண்ணு மிலாமலே
வெந்து போகப் பகைமை பொசுக்குவான்;
பாரும் வானமும் ஆயிர மாண்டுகள்
பட்டதுன்பங்கள் கணத்திடை மாற்றுவான்;10

சக்க ரத்தை யெடுப்ப தொருகணம்;
தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்;
இக்க ணத்தில் இடைக்கண மொன்றுண்டோ?
இதனுள் ளேபகை மாய்த்திட வல்லன் காண்!11

கண்ண னெங்கள் அரசன் புகழினைக்
கவிதைகொண் டெந்தக் காலமும் போற்றுவேன்;
திண்ணை வாயில் பெருக்கவந் தேனெனைத்
தேசம் போற்றத்தன் மந்திரி யாக்கினான்.12

நித்தச் சோற்றினுக் கேவல் செயவந்தேன்;
நிகரிலாப் பெருஞ் செல்வம் உதவினான்.
வித்தை நன்குகல் லாதவன் என்னுளே
வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான்.13

கண்ண னெம்பெரு மானருள் வாழ்கவே!
கலி யழிந்து புவித்தவம் வாழ்கவே!
அண்ண லின்னருள் நாடிய நாடுதான்
அவலம் நீங்கிப் புகழில் உயர்கவே!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...