Sunday, December 17, 2017

bharathiyar

''கண்ணா, வருகிறேன் உனைத் தேடி!''
j.k. sivan

உலகத்தில் ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன். காதல் வயப்பட்டவனுக்கு கண்டதெல்லாம் சொர்க்கம் என்பார்கள். அவ்வளவு சந்தோஷம் அவன் மனதை நிறைத்திருக்கும்.

மனதைப் பறிகொடுத்தல் என்பது காதல் ஒன்றில் மட்டுமே சாத்தியம். சாதாரண மனிதர்களுக்கே, அல்ப ஜீவன்களுக்காகவே இவ்வாறு மனதை இழப்பதில் சந்தோஷம் என்றால் அந்த பரமாத்மாவிடம் காதல் கொண்டால், 'அவனுக்கே ஆளாமே' என்றால், அவனாகவே ஆகிவிட்டால், எத்தனை சந்தோஷம் என்று யாராலாவது அளந்து சொல்ல முடியுமா? இதுவே சிற்றின்பத்துக்கும் பேரின்பத்துக்கும் உண்டான வித்தியாசம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அமரகவி பாரதி தன்னை ஒரு பெண்ணாக பாவித்து, அவள் ஒருவன் மேல் மையல் கொள்கிறாள். அந்த ஒருவன் வேறு யாரோ அல்ல. புருஷோத்தமனான கண்ணன். அவனே அவளது காதலன். அந்த காதலில் அவள் அனுபவிக்கும் உணர்ச்சிகளை உயிருள்ளவையாக்கி மெருகூட்டிய தமிழில் பருகும்போது கிடைக்கும் ஆனந்தம் மட்டுமே உண்மையிலே பரமானந்தம் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யலாம்..

''என் உயிருக்குயிரான தோழியரே, என் மனத்தை பிளந்து உள்ளே ஓடும் உணர்ச்சிகளை கொட்ட முடியாமல் துடிக்கின்றேன். நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. தூக்கம் என்னை நெருங்க மாட்டேன் என்கிறது. நீங்கள் இருப்பதும் என் நினைவில் கொஞ்சமும் இல்லை. என் அன்புத் தோழியரே, நீங்கள் ஆடி ஓடி கூடி கும்மாளமடிக்கிரீர்கள். எனக்கு ஏனோ துளிக்கூட சந்தோஷம் இல்லையே. இரவில் திருடும் திருடன் கூட தூக்கத்தில் கண்ணை சுற்றும்போது ஆழ்ந்து கீழே பொத்தென்று விழும் நேரம் ஆனபோதிலும் பொட்டு தூக்கம் கூட என்னை ஏனோ அணுகவில்லை.

நீங்கள் எல்லோரும் வீட்டில் என்னமாக எல்லாம் கோலாகலம் நடத்துகிறீர்கள். சத்தம் ஊரைக் கூட்டுகிறது. உங்களது உற்சாக மகிழ்ச்சிக் கூச்சல். வீட்டில் அம்மா என்று ஒருவள் இருக்கிறாள் என்று கூட ஞாபகம் இல்லாமல் போய் விட்டதே.

உங்கள் பேச்சில் உற்சாகம், சந்தோஷம், ரசம், சாரம் இருக்கிறது என்கிறீர்கள். எனக்கோ நீங்கள் பேசுவதை கேட்க சலிப்பு தான் வருகிறது.

எவ்வளவோ நாள் நானும் பொறுத்திருந்து பார்த்தாகி விட்டது. நாளுக்கு நாள் இது அதிகரித்துக்கொண்டு தான் போகிறது.

யாரோ ஒரு கூனன் ஒருவன் வந்தான். மெதுவாக நாணிக் கோணி பின்னலிட்ட கொண்டையில் மலர்கள் கலைந்து கீழே விழுமாறு இழுத்தான் என்கிறீர்கள்.

ஒரு யானை மதம் பிடித்து வேகமாக பிளிரிக் கொண்டு வஞ்சியின் அருகில் ஓடியது, அவள் அலறிக்கொ ண்டே மூர்ச்சையுற்றாள் என்று கதை சொன்னீர்கள்.

வெண்ணைப் பானையிலிருந்த அத்தனை வெண்ணையும் தோழி ரோகிணி விழுங்கியதால் வயிற்று நோய் தாங்கவில்லை அவளுக்கு என்றீர்கள். அதற்கும் எனக்கு சிரிப்பு வரவில்லை.

பண்ணையில் வேலையா யிருந்த ஒரு உழவன் மனைவியை பத்து சிறுவர்கள் சூழ்ந்து கொண்டு ஆசையாய் முத்தமிட்டார்கள் என்றீர்கள்.

ஒரு பெண்ணுக்கு ஜோசியம் பார்த்து சொல்கிறேன் என்று ஒருவன் சொல்ல அவள் அவனிடம் கை நீட்டினாள் . அவள் கையைப் பார்த்து விட்டு உனக்கு அதிர்ஷ்டம் பெண்ணே, நாற்பது அரசர்கள் போட்டி போட்டுக்கொண்டு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வரப்போகிறார்கள் என்று ஒரு வாய் கஞ்சி குடித்து விட்டு சென்றாள் . நல்லவேளை ஜோசியனுக்கு நல்ல காலம். அவளுக்குப் பரிசம் போட்டம் மாமன் வருவதற்குள் அந்த ஜோசியன் சென்றுவிட்டான்.

ஒரு பெண்ணோடு கோபத்தில் மற்றவள் சண்டை போட்டாள் என்றீர்கள். வித்தைகள் கற்றவள் என்று ஒரு பெண்ணைப் பற்றியும் மேற்கு திசையில் அவ்வூர் மக்கள் பேசும் பல பாஷைகள் அவள் பேசுவாள் என்றெல்லாம் மூட்டை மூட்டையாக பொய் சொன்னீர்கள்.

நீங்கள் செய்த சொன்ன எதிலும் எனக்கு சுவாரசியம் இல்லை.
எனக்கு ஏதடி தூக்கம்?
உங்களால் எனக்கு இம்சையாக தான் இருக்கிறது.
உங்கள் வாத்தியங்களை மூடி மூலையில் சார்த்துங்கள். வீணை, தாளங்கள் எனக்கு வேண்டவே வேண்டாம். கண்ணுக்கு தெரியாமல் எங்காவது கொண்டு வையுங்கள்.
கதவு ஜன்னல் எல்லாம் சார்த்துங்கள். முணுக் முணுக் என்று ஒரு சிறு தீபம் மட்டும் எரியட்டும் அதை மேல் பக்கம் சுவற்றில் மாடத்தில் வைத்து விட்டு இங்கிருந்து எல்லோரும் இடத்தைக் காலி செய்யுங்கள். உங்கள் வீட்டை பார்க்கபோங்கள்.
என்னை தனியே விடுங்கள்.

''கண்ணா நீ என் மனதை ஆக்ரமித்த போது என் மனம் வேறு எதிலும் செல்லவில்லை என்பது புரிகிறதா?
தோழிகள் எல்லோரும் சென்று விட்டார்கள்.
என் நண்பி ஒருத்தி '' தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே'' என்று அடிக்கடி பாடுவாள். என் கண்கள் தூக்கத்தை தழுவுமா?

''கண்ணா உன்னை இன்றிரவு கட்டாயம் பார்த்தே தீரவேண்டும் அதற்கு முன்னாடி எனக்கு தூக்கம் வருமா? நீயே சொல். வா சீக்கிரம் கண்ணா. வா, என் நண்பிகள் யாரும் இல்லை. எல்லோரையும் அனுப்பிவிட்டேன்.

''என்ன சொல்கிறாய் நீ? என்னை வரச்சொல்கிறாயா கண்ணா? அப்படியானால், இதோ வருகிறேன். உன்னைப் பார்க்க ஓடோடி வருகிறேன்.? சொல் எங்கே வரவேண்டும்?

''என்னது? கடைத்தெருவில் கிழக்கே வெண்கல பாத்திரங்கள் செய்து விற்கும் வாணிகர் கடை வீதி இருக்கிறது. அங்கேயா , அந்த தெரு முனையிலா? எதிர்ப்பக்கம் இருக்கும் வெளி ஓரத்திலா? எங்கே?
அங்கே வந்தால் கண்ணா, உன்னை நிச்சயம் நான் காண முடியுமா, இதோ பறக்கிறேன்.
என் கண்கள் இந்த நிலையில் தூங்குபவையா?
உன்னைக்கண்டு இரு கரங்களாலும் கட்டி அணைப்பதற்கு முன் தூக்கம் வருமா ??

++
இந்த அழகான கற்பனையை தெள்ளு தமிழ் கவிதை வடிவில் படிக்கிறீர்களா? நான் வெறுமே தகர குவளையில் காற்று ஏற்படுத்துகிற சப்தத்தைப் போல ஏதோ எழுதினேனே தவிர இந்த கவிதை தரும் இன்பம் என்கு தகரக் வளையில் ஏது? பாரதியார் பாரதியார் தான்.

கண்ணன் - என் காதலன்
உறக்கமும் விழிப்பும்
நாதநாமக்கிரியை - ஆதி தாளம்
ரசங்கள்: பீபத்ஸம், சிருங்காரம்.

நோம் மிகுந்ததின்னும் நித்திரையின்றி - உங்கள்
நினைப்புத் தெரியவில்லை, கூத்தடிக்கிறீர்;
சோரன் உறங்கிவிழும் நள்ளிரவிலே - என்ன
தூளி படுகுதடி, இவ்விடத்திலே.
ஊரை யெழுப்பிவிட நிச்சயங் கொண்டீர்! - அன்னை
ஒருத்தியுண் டென்பதையும் மறந்து விட்டீர்;
சாரம் மிகுந்த தென்று வார்த்தை சொல்கிறீர், - மிகச்
சலிப்புத் தருகுதடி சகிப் பெண்களே! . ... 1

நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் - இது
நாளுக்கு நாளதிக மாகி விட்டதே;
கூன னொருவன் வந்திந் நாணி பின்னலைக்
கொண்டை மலர்சிதற நின்றிழுத்ததும்,
ஆனைமதம் பிடித்திவ் வஞ்சி யம்மையின்;
அருகினி லோட இவள் மூர்ச்சை யுற்றதும்,
பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால்
பாங்கி யுரோகிணிக்கு நோவு கண்டதும், ... 2

பத்தினி யாளையொரு பண்ணை வெளியில்
பத்துச் சிறுவர் வந்து முத்தமிட்டதும்,
நத்தி மகளினுக்கோர் சோதிடன் வந்து
நாற்ப தரசர் தம்மை வாக்களித்ததும்,
கொத்துக் கனல் விழியக் கோவினிப் பெண்ணைக்
கொங்கத்து மூளிகண்டு கொக்கரித்தும்,
வித்தைப் பெயருடைய வீணியவளும்
மேற்குத் திசை மொழிகள் கற்று வந்ததும், ... 3

எத்தனை பொய்களடி! என்ன கதைகள்!
என்னை உறக்கமின்றி இன்னல் செய்கிறீர்!
சத்தமிடுங் குழல்கள் வீணைக ளெல்லாம்
தாளங்க ளோடுகட்டி மூடிவைத் தங்கே,
மெத்த வெளிச்சமின்றி ஒற்றை விளக்கை
மேற்குச் சுவரருகில் வைத்ததன் பின்னர்
நித்திரை கொள்ளஎனைத் தனியில் விட்டே.
நீங்களெல் லோருமுங்கள் வீடு செல்வீர். ... 4

(பாங்கியர் போன பின்பு தனியிருந்து சொல்லுதல்)

கண்கள் உறங்கவொரு காரண முண்டோ ,
கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே?
பெண்களெல் லோருமவர் வீடு சென்றிட்டார்
பிரிய மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான்;
வெண்கல வாணிகரின் வீதி முனையில்
வேலிப் புறத்திலெனைக் காணமுடி யென்றான்;
கண்கள் உறங்கலெனுங் காரிய முண்டோ ,
கண்ணனைக் கையிரண்டுங் கட்ட லின்றியே? ... 5

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...