Tuesday, December 5, 2017

ENGAL VAMSAM:

எங்கள் வம்சம்: J.K. SIVAN

பாரதி பெற்ற சம்பாவனை

எனது அம்மாவழி தாத்தாக்கள் கதையெல்லாம் சொல்லி வருகிறேனே. அந்த வம்சத்தை பற்றிய குறிப்புகள் எனது தாத்தா ஜீவித வந்தராக இருந்தபோது இந்து நேசன் என்ற தமிழ் பத்திரிகையில் 1930களில் எழுதிவந்ததை ஜாக்கிரதையாக பாதுகாத்து வந்த எனது மாமாக்களுக்கு பல கோடி நமஸ்காரம். எனக்கு அதன் நகலை எனது மாமா ஸ்ரீ வ. சுப்ரமணியன் தந்தபோது அதனுள் இருக்கும் விஷயம் எனக்கு தெரியாது. அது ஒரு அரிய பொக்கிஷம். உடனே அதில் இருந்து சில பகுதிகளை மட்டும் புத்தகமாக்கி இலவசமாக எனது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு வழங்க ஒரு விழா தயாரானது. அதற்கு உறுதுணையாக இருந்தவர் எனது கடைக்குட்டி மாமா ஸ்ரீ வ. மஹாலிங்கம். ஸ்ரீ வசிஷ்டபாரதி நினைவு நாள் ஒன்று 5.3.15 அன்று கிரோம்பேட்டையில் ஒரு மண்டபத்தில் சிறப்பாக நடந்தது. ''எங்கள் பாரதி வம்சம் - புராண சாகர நினைவலைகள்'' எனும் அந்த புத்தகத்திற்கான விபரங்களை என் தாய் மாமன் ஸ்ரீ வ. சுப்ரமணிய அய்யரை (96 வயதாகிறது. கண்களில் பார்வை இல்லை. தாத்தா வாழ்ந்த அதே வீட்டில் ரெண்டு தலைமுறையாக புரச வாக்கத்தில் வாழ்கிறார்) சித்ரவதை செய்து, பிடுங்கி பிடுங்கி சிறிது சிறிதாக பழங்கதைகளைச் சேகரித்தேன். நினைவில் சில குறிப்புகளை வைத்திருந்தார். அவருக்கு நான் இப்போது எழுதுவதையெல்லாம் அவர் மகன் (அடுத்த தலைமுறை பெயரில் மட்டும் வசிஷ்ட பாரதி ) அவருக்கு படித்துக் காட்டினதில் பரம சந்தோஷம் அவருக்கு. கண் இருந்தும் விழியின்றி பார்வை இன்றி, தனக்குத் தெரிந்த தமிழில் '' சிவா, நான் ஒரு சிறு பாட்டு எழுதினேன் மனத்திலேயே'' என்று சொல்லி அதை ஜூனியர் வசிஷ்ட பாரதி முலம் எழுத வைத்து எனக்கு அனுப்பினார் .

இதில் சொற்குற்றம் , பொருட்குற்றம், சந்தம், யாப்பு, தளை , எதுகை,மோனை எதுவுமே தேட வேண்டாம். அவற்றை தேட புத்தி போய்விட்டால் நான் முன்பே எழுதியதுபோல் '' மரத்தை மறைத்தது மாமத யானை, மரத்தில் மறைந்தது மாமத யானை'' கதையாகி, அவர் பாட்டில் இழையோடியிருக்கும் அன்பு, ஆசை, பாசம், நம்பிக்கை, வாத்சல்யம், மகிழ்ச்சி எல்லாம் காணாமல் போய் விடுமே.

இது தான் மனதில் அன்போடு விழியில் பார்வை இன்றி அவர் இயற்றி அவர் மகன் வசிஷ்ட பாரதி எழுதி என்னை வந்தடைந்த சிறு பாடல்:

'' அவனன்றி ஓர் அணுவும் அசையாது
என்பது ஊரறிந்த உண்மை

இவனன்றி இச்செயல் செய வல்லாரில்லை
என்பது நாமறிந்த உண்மை

எவனவன் என்று வினவுவாராகின்
அனைவருமறிந்த நம் ஜே. கே.
சிவனன்றி வேறுயார் கொலோ? ''

அன்னாரின் சீரிய பணி சிறப்புற செயல்பட வாழ்த்துகிறேன் - சுப்ரமணியன் மாமா
இதில் நான் ஒரு வயதான மனிதனின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள வேண்டுகிறேன். தன் மூதாதையரைப் பற்றி தானோ தனக்கு முன் எவரோ, தன்னுடன் பிறந்தாரோ எடுத்துச் சொல்ல முன் வராததை அடுத்த தலைமுறையில் ஒருவன் முயற்சிப்பதை பாராட்டும் வாழ்த்து. இதில் முக்யமான பெருமை என் எழுத்துக்கல்ல. அதில் வரும் மகனீயர்களின் வாழ்க்கை விபரம்.

இனி மேலே தொடர்வோம்:

பரசுராம பாரதிக்கு 25வது வயதில் கல்யாணம் நடந்தது. அவரும் உடையார் பாளையம் ஜமீன்தாரால் ஆதரிக்கப்பட்ட ஒரு கலைஞன். அப்போது உடையார்பாளையம் ஜமீன்தாரின் ஆஸ்தானத்தில் ஒரு மகா மேதை இருந்தார். அவர் வேறு யாருமில்லை ஸ்ரீமான் கனம் கிருஷ்ணய்யர். கனம் என்றால் என்ன தெரியுமா? weight அல்ல. கர்நாடக சங்கீதத்தில் இது ஒரு கடின அம்சம். வாயை மூடிக்கொண்டு, நாபியின் ஜீவனாடியிலிருந்து, நாதத்தை எழுப்பி, வாய் திறவாமல், கண்டத்தையும் நாசியையும் ஆதாரமாக கொண்டு ஸ்ருதியோடு கீர்த்தனைகளை பாடுவது. இது ரொம்ப ஸ்ரமம். பல காலம் சாதகம் தேவை. யாரும் முயற்சி செய்து பார்த்து டாக்டருக்கு நிறைய பீஸ் கொடுக்க வேண்டாம்.

அந்தகால சங்கீத வித்வான்களை பற்றி அப்புறம் நிறைய சொல்கிறேன். கனம் கிருஷ்ணய்யரிடம் மீண்டும் போவோம்.

கிருஷ்ணய்யர் தனது தமக்கை பெண் சங்கரியையே பரசுராம பாரதிக்கு மணம் செய்து வைத்தார். இந்த கனம் கிருஷ்ணய்யர் தமிழ் தாத்தா மகாமஹோபாத்யாய ஸ்ரீ உ.வே. ஸ்வாமிநாதய்யரின் நெருங்கிய உறவினர். எங்கள் அம்மா வழி மனைவி வழி உறவினர்.

திருச்சி ஜில்லா, முசிறி தாலுக்கா, முசிறிக்கு வடக்கே 6 மைலில் உள்ள மங்கலம் கிராமத்தில் பரசுராம பாரதியின் தம்பி நாகசாமி பாரதிக்கு தனது ஒரே பெண்ணை மங்கலம் தக்ஷினாமூர்த்தி அய்யர் கல்யாணம் செய்து கொடுத்து அங்கு ஒரு வம்சம் தொடர்ந்து வருகிறது.

பரசுராம பாரதிக்கும் வயதாகியது. ராமத்யானம் ஒன்றே அவர் தொழில் என்றேனே. அவர் தந்தை வைத்யநாத பாரதியும் கைலாசம் சேர்ந்தார். பல வருஷங்களுக்கு பிறகு மீண்டும் ஒருமுறை சாத்தனூரில் வானம் பொய்த்தது. ஆற்றில் நீர் குறைந்தது. வைகாசி மாதம் வரவேண்டிய வழக்கமான வெள்ளம் வரவில்லையே? சாகுபடிக்கு என்ன வழி? சோழகர்கள் பரசுராம பாரதியைத்தானே தேடுவார்கள்? அவரும் வழக்கம் போல் மதகடிப் பிள்ளையாரைப் பிடித்துக் கொண்டார், வேண்டிக்கொண்டார்:

''உள்ளமுனக்கே தெரியும் உணர்த்துவதென் அய்யனே
பள்ளம் படுகுழியும் உலர்ந்ததுகாண் பாரதனில்
தெள்ளுமதி மயக்கமிது தீரன் உந்தன் கடைக்கணருள்
வெள்ளம் பெருகிவரச் செய்மதகார் விநாயகனே''

அன்று இரவே வானத்துக்கு ரோசம் வந்து பொத்துக்கொண்டதாம். மறுநாள் பாரதியை போற்ற வந்த அனைவரையும்

'இதற்கு நான் ஒன்று செய்யவில்லை, நீங்கள் எல்லோரும் நமது மதகடி பிள்ளையாரிடம் போய் நன்றி சொல்லுங்கள்'' என்று விரட்டிவிட்டார். வேளாள மக்கள் இவர் மற்றொரு காளமேகம், புது பெயரோடு வந்திருக்கிறார். அவர் பெயர் இப்போது பரசுராம பாரதி என்று வணங்கினார்கள்.

காலாட்டி சோழகர் சும்மா இருப்பாரா? ஊர் கூட்டி பேசினார்

'' நாம ஏற்கனவே நஞ்சை நிலம் ஊரில் மானியம் உட்டிருக்கோம்லே .
இன்னலேர்ந்து படுகையில் புஞ்சைலே சோளம், கம்பு, கேழ்வரகு, உளுந்து, பயறு,எள்ளு, எது விளைச்சாலும் ஏத்துக்கு குறுணி (மரக்கால் என்பது ) பாரதி சாமி குடும்பத்துக்கு நாம கொடுக்கோணும். சரியா? '' \

அப்பீல் இல்லாமல் அந்த தீர்மானம் நிறைவேறியது.

அந்த காலத்தில் கல்யாணத்தின் போது ,பெண்ணுக்கு திருப்பூட்டினதுக்கு பிறகு, பிள்ளையையும், பெண்ணையும், குடும்பத்தில் பெரியவர்களும், பந்துக்களும், பச்சை அரிசி, அருகம்புல் எல்லாம் சேர்த்து ஆசிர்வதித்து ரெண்டு கையாலும் , வாரி விடுவது வழக்கம். இதற்கு ''சேடை '' இடுவது என்று பெயர்.

சோழகர் மற்றொரு தீர்மானம் கொண்டுவந்தார் '' இஞ்செலுருந்து நம்ம பாரதி சாமி சேடை இடும்போது காணிக்கையா ஒத்த ரூவாக்கு குறையாம, ஒவ்வொரு வூட்டிலேருந்தும் கொடுக்கோணும் '' .
அனைவரும் ஒப்புக்கொண்டார்கள்.

ஊரில் அக்ரஹாரத்தில் இருந்த பிராமண குடும்பங்களும் தங்கள் வீட்டில் கல்யாணம் நடந்தால் பாரதியை உபசரித்து ஆசீர்வாதம் பெற்று சம்பாவனை செய்தார்கள்.

ஹரிஹர சம்பாவனை என்று சிவாலயம் விஷ்ணு ஆலயத்துக்கு 4 அணா ,ஆச்சர்ய சம்பாவனை என்பது தமது மத ஆசார்யாளைப் பணிந்து அளிப்பது. இதுவும் 4 அணாதான்.

சரஸ்வதி சம்பாவனை என்பது பரசுராம பாரதிக்கு அவர்கள் கொடுத்த ஒரு ரூபா. இது தான் அவர் குடும்ப வருமானம். தினமும் அல்ல. வருஷாந்திர வருமானம்.

இதைப்படிக்கும் I .T. மனிதர்களே. உங்கள் ஆண்டு வருமானத்தை பாரதியின் வருமானத்தோடு ஒப்பி டாதீர்கள். இருநூறு வருஷங்களுக்கு முன்பு கால நிலையே வேறு. அவர் வாழ்ந்த வசதி, அவருடைய சந்தோஷம், நீங்கள் என்றுமே கனவிலும் கூட பெற முடியாது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...