Saturday, December 16, 2017

THEVITTADHA VITTALA-ODAKKARAN

ஓடக்காரன்- J.K. SIVAN

''தெவிட்டாத விட்டலா'' என்ற தலைப்பில் நான் பாண்டுரங்கனைப் பற்றி நூறு கதைகள் சிறுவர்களுக்காக எழுதினேன். அதை சிறு சிறு கதைகளாக நீங்கள் சொல்லுங்கள் என்று HINDU CULTURE TV காரர்கள் கேட்டபோது மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு இதுவரை மூன்று கதைகள் உங்களுக்கு வீடியோ கிளிப்பிங் மூலம் அனுப்பினேன்.இன்று கோமாபாய் கதை. தெவிட்டாத விட்டலா புத்தகத்தில் வந்த அந்த கதையை கீழே கொடுத்திருக்கிறேன். விடியோவில் குழந்தைகளுக்கு கதை கேட்கும் வசதியும் சேர்ந்து விட்டது:

இதுவரை சொன்ன பாண்டுரங்கன் கதைகள் உங்களை அடைந்தனவே. உங்கள் மனத்தில் பாண்டுரங்கன் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டிக்கொண்டு வருகிறானல்லவா? இன்றைய கதையில் பாண்டுரங்கனின் லீலை என்ன என்று அறிவோமா?

ஒரு குடு குடு கிழவி. அவளுக்கு யாருமே இல்லை. தள்ளாத வயதிலும் தினமும் கொஞ்சம் அரிசி வாங்கி இட்டிலி தோசை பண்ணி, விற்று அதிலேயே தானும் கொஞ்சம் சாப்பிட்டு காலம் தள்ளி வந்தாள். அவள் பெயர் கோமா பாய். இட்டிலி வேகும்போது அவள் சும்மா இல்லாமல் பாண்டுரங்கன் பஜனை பண்ணிக் கொண்டே சமைப்பாள் அவள் வீடு எங்கே இருக்கிறது, எவ்வளவு பெரிசு தெரியுமா?. சுவர் இல்லாதது. வெறும் வெட்டவெளி, ஒரு வேப்ப மரத்தடி தான் அவளுக்கு வெகுகாலமாக வீடு. அதன் பெரிய ஒரு அடிக்கிளை தான் அவளுக்கு படுக்கும் பாயோ படுக்கையோ. அந்த பெரிய விருக்ஷத்தின் கிளைகளுக்கு இடையே இருந்த இடைவெளிகள் தான் அவளுக்கு சாமான்கள் வைக்கும் அலமாரிகள். அவளுக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு குறிக்கோள் வெகு காலமாக. அது என்ன தெரியுமா? எப்படியாவது ஒரு தரம் பண்டரிபுரம் போக வேண்டும். விட்டலன் பாண்டுரங்கன் என்று எல்லோரும் போற்றுகிறார்களே. அவனை தயாளு, கருணா மூர்த்தி என்கிறார்களே. அவன் பெயரைச் சொல்லும்போதே மனமெல்லாம் ஒரு வித சந்தோஷம் அடைகிறதே . ஒரு தரமாவது பண்டரிபுரம் எங்கிருக்கிறது என்று விசாரித்துக்கொண்டு போய் அந்த விட்டலனை எப்படியாவது தரிசனம் பண்ணவேண்டும் .

ஒரு ஏகாதசி அன்று பண்டரிபுரம் போக முடிவு பண்ணிவிட்டாள். மெதுவாக நடையாய் நடந்து சந்திரபாகா நதிக்கரை வரை சென்று விட்டாள். யாரோ சொன்னார்களே. நதியை கடந்து போனால் அக்கரையில் பாண்டுரங்கன் கோவில் தெரியுமே என்று.

வேகமாக நீரோடு ஓடும் நதியை எப்படி கடப்பது?. அவள் போன சமயம் நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. எப்போது அது வற்றி எப்போது அவள் அக்கரை சேர்ந்து ஏகாதசி தர்சனம் கிடைக்க போகிறது? ''பாண்டுரங்கா, நீதான் எதாவது வழி விடவேண்டும். எனக்கு உன்னை தரிசிக்க ஒரு சந்தர்ப்பம் தரவேண்டும்'' . அவள் உன்மனம் விடாமல் வேண்டிக்கொண்டே இருக்க, இருள் கவிய ஆரம்பித்து விட்டது. வெகுநேரம் நின்று கொண்டிருந்தாள். நதியில் ஒரு ஓடம் வந்து போய்க் கொண்டிருந்தது. அந்த ஓடக்காரன் ஒரு வாலிபன்.

"அப்பனே, என்னை கொஞ்சம் அக்கரை கொண்டு விடுகிறாயா?"
"ஒரு ரூபாய் கொடுத்தால் கொண்டு சேர்க்கிறேன். அது தான் வழக்கமான வாடகை . "
"என்கிட்டே காசு இல்லையே?"
“நான் சும்மா உன்னை ஓடத்தில் ஏற்றிக்கொள்ள முடியாது. போ வேலை கேட்ட கெழவி "

அவள் இருந்த இடம் ஜன சஞ்சாரம் இல்லாத வனாந்திர பிரதேசம் அதன் வழியே தான் அந்த நதி வேகமாக ஓடிவந்து கொண்டு இருந்தது. அதன் இரு மருங்கிலும் அடர்ந்த மரங்கள். காற்றில் அவற்றின் இலைகள் அசைந்து, உராய்ந்து எழுப்பிய சப்தம் அடிவயிற்றைக் கலக்கியது. போதாத தற்கு புதர்களில் இருந்தும் எங்கோ காட்டுக்குள்ளிலிருந்தும் வித விதமான அச்சமூட்டும் சப்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்தது. கொடிய வன விலங்குகள் எப்போதும் இரவில் நடமாடும் என்பார்களே. இரவில் தான் நதியில் நீர் குடிக்க வருமாமே?

நிறைய பேர் நதியின் அடுத்த கரைக்கு ஓடத்தில் போனார்கள். அவர்களையும் கெஞ்சிப் பார்த்தாள். ஒரு பயணி கூட அவளுக்காக ஒரு ரூபாய் கொடுக்க முன்வரவில்லை, ஹு ஹும், ஒருத்தருமே லட்சியம் பண்ணவில்லையே . என்ன செய்வது, இருட்டி விட்டதே? பாண்டுரங்கா, விட்டலா!.

மறுபடியும் ஒடக்காரனையே கெஞ்சினாள்.

“தம்பி, நீ கடைசி தடவை அந்த பக்கம் போகும்போதாவது என்னை தயவு பண்ணி கூட்டிச் செல்லேன்? ரொம்ப பயமாக இருக்கிறதே இங்கு தனியாக இருக்க''

'' கிழவி, அப்பறம் பார்க்கலாம். இப்போ பேசாம போ. இன்னும் ஒரு நடை ரெண்டு நடை திரும்பி வரும்போது சொல்றேன். இங்கேயே இரு. ”

நரிகள் ஊளையிட ஆரம்பித்தன. இருட்டு கருப்பு திரையை அடர்த்தியாக போர்த்த ஆரம்பித்தது. சரி நமது கடைசி முடிவு நரிகள் வாயில் தான் போலிருக்கிறது. இங்கு சாவதை விட பண்டரிபுரத்தில் மண்டையைப் போட்டாலாவது கொஞ்சம் புண்ணியமாச்சே."

ஓடக்காரன் வரவில்லை. அங்கேயே தங்கி விட்டானோ?.

“விட்டலா என்ன துர்பாக்கிய சாலி நான். அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே நல்ல வேளை . ஓடம் கண்ணில் தென்பட்டது. '' அப்பாடா அதோ ஓடக்காரன் வருகிறான் . பாடிக் கொண்டே வருகிறானே. என்ன ஆச்சரியம். தான் பாடும் பாட்டு அவனுக்கும் தெரிந்திருக்கிறதே. ரொம்ப சந்தோஷம் போல இருக்கிறது
ஒருவேளை நிறைய சம்பாதித்திருப்பானோ இன்று.''

"ஏ பாட்டி, சட்டு புட்டுன்னு வா ஓடம் கிளம்பப்போகிறது. இது தான் இன்றைக்கு கடைசி நடை. சீக்கிரம் ஏறி உள்ளே வா ஆடாம அசையாம ஒரு இடத்தில் உக்காரு. .''

“நீ ரொம்ப நல்லவன் பா. பெரிய மனசு பண்ணி காசில்லாத இந்தக் கிழவியை பண்டரிபுரம் போக வைத்தாயே. நாளைக்கு பண்டரிபுரம் போய் பிச்சையெடுத்தாவது உனக்கு சேர வேண்டிய கூலி ஒரு ரூபாயைக் கொடுத்து விடுகிறேன்”.

''சரி சரி ஒண்ணும் பினாத்தாமல் வாயை கொஞ்சம் மூடிக்கொண்டு உட்காரு. ''

ஓடம் சென்றது. இரவே மெதுவாய் நடந்து பண்டரிபுரம் ஆலயத்தில் கோமாபாய் விட்டலனை தரிசித்தாள். ரொம்ப மகிழ்ச்சி அவளுக்கு. மறுநாள் காலை அங்கு கோவில் வாசலில் அமர்ந்து பஜனை பாடி பிச்சை எடுத்தாள். நிறையவே காசு சேர்ந்தது. சந்தோஷமாக சந்திரபாகா நதிக்கரை வந்தாள். ஓடக்கார பையன் உட்கார்ந்திருந்தான்.

“தம்பி, இந்தா ஒரு ரூபாய்” என்று கொடுத்தவளை ஏற இறங்க பார்த்தான் அவன்.
“நீ எப்படி இங்கு வந்தே?”
“நீ தானே ராத்திரி என்னை ஓடத்தில் கூட்டி வந்தே மறந்து போய் விட்டாயா?”.
“நானா? என் ஓடத்தில் நான் உன்னை கூட்டி வரவே இல்லையே?”
''அப்போ வேறே ஏதாவது ஓட த்தில் வந்து சேர்ந்தேனா?
''நான் ஒருத்தன் தான் இங்கே ஓடம் வைத்துக்கொண்டு ஓட்டுபவன். அவன் யாரு வேறே ஒருத்தன்?

கோமா பாய்க்கு விட்டலன் தான் ஓடக்காரன் என்று தெரிந்ததும் மீண்டும் ஓடினாள் விட்டலனை தரிசிக்க.
அவள் விட்டலன் காலடியில் ஒரு ரூபாய் வைத்தாள் '
'இந்தா உன் ஒடக்கூலி என்று ஒரு ரூபாயை அவள் வைத்து சொன்னபோது இடுப்பில் கை வைத்துக்
கொண்டு விட்டலன் சிரித்தான். விட்டலனை உற்றுப்பார்த்தாள் கோமா பாய். ஒடக்காரப்பையன் முகம் எதிரே தெரிந்தது.

குழந்தைகளே, ஓடக்கார விட்டலனை உங்களுக்கு பிடித்ததா?''..............................

இந்த கதையை வீடியோவில் கேட்க கொடுக்கவேண்டிய லிங்க் https://youtu.be/7qiDYM3jBQEhttps://youtu.be/7qiDYM3jBQE

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...