Friday, December 15, 2017

NEELAKANTA SIVAN




இவர் ஒரு தமிழ் தியாகராஜ ஸ்வாமிகள்...j.k. sivan

நேற்று இரவு ஒரு அசாத்தியமான பாடலை கேட்டு அனுபவித்தேன். ''ஆனந்த நடமாடுவார் தில்லை.''.... என்ற

நீலகண்ட சிவன் (1839-1900) கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு கர்நாடக இசை மேதை. இயற்கையாக அமைந்த ஞானம். சாதாரண இசைப் பயிற்சி பெறாதவர்.

நீலகண்ட சிவன்ள நாகர்கோவில் பக்கம் உள்ள வடிவீஸ்வரத்தில் 1839 ஆம் ஆண்டில் பிறந்தார், நன் பிறப்பதற்கு நூறு வருஷங்களுக்கு முன்பு பிறந்தவர். அந்தக்கால திருவாங்கூர் தலைநகரான பத்மநாபபுரத்தில் வாழ்ந்தவர். அவரது தந்தை சுப்பிரமணிய ஐயர்’ பத்மநாபபுரம் நீலக்கண்டஸ்வாமி கோவிலில் ஒரு அதிகாரியாக இருந்தார். அவரது தாயார் அழகம்மாள்.

சிவன்ஒ சில வருஷங்கள் கிராமப்பஞ்சாயத்து தலைவராக வேலை பார்த்தார். ,மதாச்சார பழக்கங்களை பின்பற்ற வேலையை விட்டுவிட்டார்.

இவரது பாடல்கள் சிலவற்றை நான் முன்பே கேட்டு ரசித்தவன். சங்கீத மஹாதேவ சாரம் (ராகா பவ்லி); என்றைக்கு சிவக்கிருபை வருமோ, என்ன வந்த்தாலும் நான் உன்னை மறப்பதில்லை ; ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்.... ஆஹா எம். கே. தியாகராஜ பாகவதர் பாடிய இந்த பாடல் இன்னும் காதில் ஒலிக்கிறது. அதை இந்த கட்டுரையுடன் சேர்த்திருக்கிறேன். லிங்க் சொடுக்கி கேளுங்கள்.

நிறைய பாடல்கள் இயற்றியிருக்கிறார் நீலகண்ட சிவன். தமிழ் மொழியில் மிகவும் பிரபலமான பாடல்கள்.

சிறு வயது முதலே கவி இயற்றும் திறன் அமைந்திருந்தது. கோடகநல்லூர் சுந்தர ஸ்வாமிகளை ஒருதரம் சந்தித்தபின் வாழ்க்கை பாதை திசை திரும்பியது. தெய்வீக பாடல்கள் நிறைய தோன்றியது. பஜனை சம்பிரதாய கீர்த்தனைகள் அவரது நேரத்தை ஆட்கொண்டது.

ஏறக்குறைய 2,000 கிருதிகள் பண்ணி இருக்கிறார். நீலகண்ட தாசர் என்று தமது முத்திரை பதித்தவர். நிறைய சிவன் கோவில்களுக்கு சென்று பாடி அந்தந்த க்ஷேத்ர ஸ்வாமிகள் மீது பாடி எல்லோரும் அவரை 64வது நாயன்மார் என்று சொல்லும்படி பேர் எடுத்தவர். ஒரு முக்கியமான விஷயம் இவரது பிரதம சிஷ்யர் தான் பாபநாசம் சிவன்.

பல வருஷங்கள் புத்ர பாக்யம் இன்றி பெற்றோர்கள் அம்பாள் அழகம்மையை வேண்டி பால் காவடி சுமந்து பிறந்த பிள்ளைக்கு சுப்ரமணியன் என்று பேர் வைத்தார்கள். குலதெய்வமான முருகன் மீது ''உன்னைக் குலதெய்வம் என்று நினைத்து சதா என் உள்ளம் நினைப்பது நீ அறியாததா...'' என்ற பாடல் முருகன் மீது அமைந்துள்ளது.

பத்மநாப புரம் ஆலயத்தில் நீலகண்டேஸ்வரர் ஆனந்தவல்லி சந்நிதிகளில் அவரை அடிக்கடி பார்க்கலாம். பஜனை பாடிக்கொண்டே இருப்பார். முத்து தாண்டவர் அருணாச்சல கவி பாடல்கள் அவருக்கு அம்மா மூலம் பாடமாகி இருந்தது. பதினாலு வயதில் அந்த கால வழக்கப்படி கல்யாணமும் ஏற்பாடானது.

தாணு ஐயர் என்ற ஜோசியர் ''இந்த பயலுக்கு கல்யாணம் பண்ணினால் அந்த பெண் ஒரே வருஷத்தில் விதவையாகிவிடும் என்று ஜாதகம் சொல்கிறதே '' என்றார். வேறு பெண் பார்க்கவும் திட்டம். சுப்ரமணியன் இதை கேட்டதும் வீட்டை விட்டு சென்றுவிட்டான்.சுசீந்திரத்தில் ஸ்தாணுமாலயம் சென்றான்.

''இல்லறமே நல்லறம்'' என்று ஒரு அசரீரி அங்கே அவனுக்கு கேட்டது. மணவாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே பக்தி யில் தொடர முடிவெடுத்தான் . அப்பா அம்மா ஏற்பாடு பண்ணிய பெண்ணை திருமணம் செயது கொண்டான்.

18வயதில் வீட்டை விட்டு சொல்லாமல் வெளியேறிய சுப்ரமணியன் ஸ்தாணுமாலயன் தேரில் ஏறி மறைந்து கொண்டு மூன்று நாள் அன்ன ஆகாரம் இன்றி இருந்தான். அவனது ஒரே நோக்கம் பகவானை எப்படியாவது தரிசிக்க வேண்டும். தியானத்தில் ஆழ்ந்தான். பல்லி பாம்பு தேள் ஆகியவை சூழ்ந்த போதும் கவலைப் பட வில்லை.

மூன்றாம் நாள் இரவு யாரோ ஒரு தம்பதி எதிரே தோன்றினார்கள். பசித்திருந்த அவனுக்கு உணவு, பால், பழங்கள் கொடுத்தார்கள். வாயில் வெற்றிலை பாக்கு தாம்பூலம் அவனுக்கு அந்த தாய் ஊட்டினாள். மின்னல் போல் உடனே அவன் முகத்தில் தேஜஸ் கூடியது. கோவிலை விட்டு வெளியேறும்போது சுப்ரமணியன் மற்றுமொரு திருஞான சம்பந்தராகி இருந்தான். ஞானப்பால் பருகியவன் அல்லவா? ''பண்டென்ன பூசை யான் செய்த பயனோ அலாது பரமனின் கருணையிலோ பாவி என்னை ஆட்கொள்ள வேண்டுமென ''என பாடினார்.

ஆனந்தவல்லியை நெஞ்சுருக நன்றியோடு இரு கைகூப்பி பாடினார் இதுவரை சுப்ரமணியனாக இருந்த நீலகண்ட சிவன்: ''தாயே எனக்கு அருள் தா அனைத்துலக தாயே என்னை கை விட்டு விடாதே''

அவரது முதல் க்ரிதி ''ஸ்ரீ நீலகண்ட தசகம்'' சில அற்புத பாடல்களை ஒன்று ரெண்டு பேர் சொல்கிறேன் : ''என்ன விதம் பிழைப்போம், எளியோரே , நாம் எப்படி தேறுவோம் சொல்வீரே ". " பணமே நீ ஒரு பிணமே ''
லலிதா மஹாத்மியம் அவரது ஒரு சிறந்த படைப்பு.

அவர் மாமனார் வில்லன் நம்பியார். சிவனது அருமை அறியாது நூற்றுக்கணக்கான கிருதிகள் எழுதி வைத்திருந்ததை எல்லாம் தெருவில் வீசி விட்டார். இரவில் விளக்கில் எண்ணெய் ஊற்றுவதில்லை. இருட்டில் கிடக்கட்டும். இவன் எழுதவில்லை என்று யார் அழுதார்கள்''. இப்படி ஒரு ஆசாமி அந்த மாமனார். சிவன் கவலைப்படவில்லை. வெற்றிலை வாயில் குதப்பிக்கொண்டே இருப்பவர்என்பதால் அடிக்கடி வாய் கொப்புளிக்க ஒரு சொம்பில் ஜலம் வைத்திருப்பார். அந்த சொம்பில் இருந்து கொஞ்சம் ஜலத்தை விளக்கில் விட்டு விளக்கு எரிந்தது!! இதே போல் கோவிலிலும் ஒரு தரம் எண்ணெய் இல்லாத போது குளத்து ஜலத்தை விட்டு விளக்குகள் எரிந்து இருக்கிறது.

108 சிவாலயங்கள் சென்ற மஹான் நீலகண்ட சிவன். எத்தனையோ அதிசயங்கள் நிகழ்த்தி இருக்கிறார். .
ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

திருநெல்வேலி அருகே ஒரு ஊர். கருங்குளம் என்று பெயர். மழை பெய்யாமல் பஞ்சம் மக்களை கொடுமைப்படுத்தியது. சிலர் நீலகண்ட சிவனை அந்த ஊருக்கு அழைத்து வந்தார்கள்.

''நீங்கள் சிவ பக்தர். மஹான். எப்படியாவது எங்களை இந்த பஞ்சத்திலிருந்து விடுவிக்க மழை தருவிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்கள்.

''பகவானே மார்த்தாண்டேஸ்வரா, தாயே குலசேகரி , நீயே கதி '' என்று அந்த ஊர் சிவனை வேண்டி, நீலகண்ட சிவன் நெஞ்சுருகி ஒரு விருத்தம் பாடினார்:

" பிழைகளெல்லாம் நீ பொறுப்பாய் பெற்றவளே, பிள்ளைகளுக்கு உன் கழலிணை திருவடிகளே துணை அல்லதோர் கதி காணோம் கண் திறவாய், மழையென வந்தருள் தருவாய் '' என்று பாடுகிறார். இந்த பக்தி பிரவாகத்தை தொடர்ந்து ஜோ என்று வானம் பொத்துக் கொண்டு மழை கொட்டோ கொட்டு என்று பெய்கிறது.
நாட்கணக்கில் மழை தொடர்கிறது.

ஒரு முறை திருடர்கள் அவர் பிரயாணம் செய்யும்போது அவரைத்தடுத்து அவரிடமிருந்து பொருள்களை கொள்ளையடிக்கிறார்கள். அவர் கொள்ளைக்கார்கள் ஓடும்போது நிறுத்தி ''என்ன அவசரம், இந்த வண்டியில் என்னுடைய வாத்தியங்கள் சிலதும் இருக்கிறதே அதையும் எடுத்துச் செல்லுங்கள்'' என்று அழைக்கிறார். பேராசை பிடித்த திருடர்கள் வண்டியில் இருந்த அவரது பஜனை சங்கீத வாத்தியங்களை எடுத்துச் செல்ல தொடுகிறார்கள். அவ்வளவு தான். அவர்கள் கைகளும் கால்களும் புஸ் என்று வீங்கி கைகால்களை .அசைக்க முடியவில்லை.

கண்களில் நீர் மல்க அந்த கொள்ளைக்கார்கள் நீலகண்ட சிவன் பாதங்களில் விழுகிறார்கள். அவர் அவர்களை திருந்தி நல்லவர்களாக வாழ ஆசீர்வதிக்கிறார். அவரிடம் ஏதோ ஒரு தெய்வீக சக்தி இருந்தது.


ஒரு கிராமத்தில் இருக்கும்போது அவரது சிஷ்யர்கள் அங்கே இரவில் தங்க ஏதோ ஒரு வீட்டி திண்ணையில் படுக்க இடம் தேடினார்கள். வீட்டுக்காரன் அனுமதிக்க வில்லை. இதை கவனித்த சிவன் திடீரென்று

''அடாடா, நாளை என்னை தேய்த்து குளித்து விட்டு இறக்கப்போகும் இவன் ஒரு திண்ணையைக் கொடுத்து உதவ மறுக்கிறானே '' என்று சொல்கிறார். அதே மாதிரி மறுநாள் அந்த வீட்டுக்காரன் எண்ணெய் தேய்த்து குளிக்க ஆற்றுக்கு சென்றவன் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்படுகிறான். அவன் பிணம் மட்டும் எங்கோ கரையில் ஒதுங்குகிறது. தன்னை எந்த தீங்கு செய்தலும் பொறுக்கும் அவர் தனது சிஷ்யர்களுக்கு, பக்தர்களுக்கு, துன்பம் நேர்ந்தால் தாள மாட்டார்.

அவரிடம் இன்னொரு பழக்கம். எங்கே சென்றாலும் மதியம் உணவுக்கு வரும்போது நிறைய பெரு சாப்பிடும்படியாக சாதம் வடியுங்கோ என்று சொல்வார். வீட்டில் அரிசி தானியங்கள் இருக்கிறதா என்று கூட தெரியாது. முக்கால்வாசி அரிசி மணியளவு கூட இருக்காது.

அப்படித்தான் ஒருநாள் இரவு திடீரென்று ராத்திரி எட்டு மணிக்கு தனது மகனை கூப்பிட்டார்.

''நாளைக்கு ஒரு ஆயிரம் பேருக்கு அன்னதானம் பண்ணணுமே. ஏற்பாடு பண்ணு ''
''ராத்திரி எட்டு மணி ஆயிடுத்தே. இனிமே இருட்டில் எங்கே போய் என்ன பண்றது'' என்று கவலைப் பட்டான்.

''எட்டு மணின்னு கவலைப்படறியே. நாளைக்கு காலம்பற ஆறு மணிக்கு பாரு'' என்று சொல்லி விட்டு போய்விட்டார் சிவன்.

காலை ஆறுமணிக்கு சொல்லி வைத்தாற் போல, வண்டி வண்டியாக அரிசி பருப்பு தானியங்கள் எல்லாம் வீட்டு வாசலில் வந்து இறங்கின. யாரோ மஹாராஜா வின் பக்தர்கள் அனுப்பினதாம்.

தமிழ் தியாகராஜ ஸ்வாமிகள் என்று அழைக்கப்பட்ட பக்தர் நீலகண்ட சிவனுக்கு தனது அந்திம காலம் நெருங்குவது தெரிந்தது. வயது அறுபது ஆரம்பித்தது. குடும்பத்தாரை அழைத்தார்

''எனக்கு உலக வாழ்க்கை போறும்''. மனைவி மக்கள் துடித்து போனார்கள் இதை கேட்டு. சேதி விரைவில் எங்கும் பரவியது. மஹானுக்கு கபால மோக்ஷம் நடக்கப்போகிறது. மூன்று நாட்கள் இரவும் பகலுமாக விடாமல் பஜனைகள் தொடர்ந்து ஒலித்தன.

''சிவன் உரக்க '' மஹாதேவ, மஹாதேவ, மஹாதேவா என்று உன்னை அழைத்தேன்'' என்று பாடினார். விபூதி அலங்கரித்த இரு கரங்களையும் மேலே தூக்கினார். கபாலம் வெடித்தது. பிராணன் மேலே எழும்பி பரம சிவனோடு ஐக்கியமானது. அவர் வழிபட்டு பூஜை செய்து வந்த சிறிய சிவலிங்கம் பூஜை அறையின் கதவை பிளந்து வெளிப்பட்டது மேலே சென்று விண்ணில் மறைந்தது.

எத்தனை எத்தனை மஹான்கள் நம்மோடு வாழ்ந்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது நாம் எவ்வளவு புண்ணியம் செய் திருக்கிறோம் என்று புரியும்.

PLEASE CLICK THE LINK https://youtu.be/vdodll1aKns TO ENJOY MKT BAGAVATHAR SONG ''ORUNAAL ORUPOZHUDHAAGILUM '' IN THE OLD MOVIE ''THIRU NEELAKANTAR''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...