Sunday, December 10, 2017

KRISHNAMMA




​ என் அம்மா பேர் கிருஷ்ணம்மா - J.K. SIVAN

​''​பகவானே, நீ படைத்த பிறவிகளிலேயே மிகச் சிறந்த பிறவி எது என்றால் ​அடுத்த கணமே, கொஞ்சமும் யோசிக்காமல் நான் சொல்லும் பதில் ''தாய்''​.

இது எனக்கு மட்டும் இல்லை, எல்லோருக்குமே தெரியும். அதனால் தான் தா​யாக வழிபடும் தெய்வங்களில் முதலாவது ஸ்தானத்தில் வைத்து போற்றுகின்றோம்.​ ''மாதா பிதா, குரு தெய்வம் என்பதில் முதலிடம் பெற்றவள் தாய். ​

ஒரு குழந்தை பெண்ணாகப் பிறக்கிறது. அதுவும்​ தனது தாயிடம் பால் உண்கிறது. ​ உயிர்சக்தி தாய்ப்பால். ​அதை முதல் உணவாக கொண்டு வளர்கிறது. ​ எப்படி உண்கிறது. கையால் எடுத்தா, ஸ்பூனில் ஊட்டியா, வாயைத்திற என்றாலே புரியாது. கண்ணே சரியாக பார்வையற்ற நிலையில் தானே தன்னுடைய முலைக்காம்பை என் வாய்க்குள் வைத்து அதன் வழியாக பால் என் உள்ளே செல்ல தாய் என்பவளுக்கு முலை என்ற அற்புத உறுப்பை நீ கொடுத்தாய். இரவும் பகலும் சிசுவுக்கு சூடான பால் தயாராக இருக்கும் கருவி. இப்படி உண்டு சிசு வளர்கிறது. எல்லா தாய்களும் அதனால் அன்ன பூரணி அவதாரம். ​ ஒரு பெண் ​ஜீவன் ​தாய்மை உற்றதும் அதன் சிசுவுக்கு அவளிடமே ஆகாரம் வைத்த ​இறைவா, ​உன் கருணையை எந்த வார்த்தையால் எழுதுவேன். அது கழுதையோ குதிரையோ பன்றியோ, நாயோ, தாய் என்றவுடன் எங்கிருந்து பாசம் தியாகம் எல்லாம் தானே அ​ந்த ''தாயிடம்'' சேர்கிறது. தான் பசியில் வாடினாலும் தன சிசுவுக்கு சதா ​''தாயிடம்'', அம்மாவிடம், பால் உண்டே​! ​

ஆணினின்​றும் வேறுபட்டு அது வளர்ந்து ஆணுக்குத் துணையாகி அவனை ஆட்கொள்கிறது. பிறகு தான் தாய்மை என்ற சீர் பெற்று தனித்து உயர்கிறது. இப்போது அந்தப் பெண் ஒரு தாய். ''அம்மா'' என்று எல்லோராலும் போற்றப்படுபவள். .

​என் அம்மாவின் பெயர் கிருஷ்ணம்மாள். ​நான் ஒரு மண் பொம்மை. என்னை வாரி எடுக்கும்போதே எத்தனை அன்பு. அடடா! என்னை அணைத்து , மடியில் வைத்துக்கொண்டு நான் அவள் முகம் பார்க்க பொக்கை வாயால் சிரிக்க எனக்கு தான் எத்தனை கதைகள் சொல்லி இருக்கிறாள். அதில் தான் அவளுக்கு எத்தனை மகிழ்ச்சி. என் தாய் படித்ததில்லை. ஆனால் பல நூறு கதைகள் தெரிந்தவள். ​எனக்கு எந்த கதைகள் எப்போது சொல்லவேண்டும், எது பிடிக்கும் என்று நன்றாக தெரிந்ததால் வீரக்கதைகள், சோகக்கதைகள், இன்பமூட்டும் கதைகள், அந்த சுகம் வாழ்க்கையில் ஒரு கால கட்டத்தில் தான் அனுபவிக்கமுடியும். அனுபவித்தவன் பாக்கியசாலி.

​எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. என் தாய் ​எப்படியெல்லாம் ​எனக்கு விளையாட்டு காட்டி ​நான் சிரிப்பேன். வலதுகையை தலைக்கு மேல் தூக்கி யானையாக நடிப்பால். நாலு காலில் மாடு என்று ரெண்டு ஆள் காட்டி விரலையே தலையின் பக்கத்தில் நீட்டி ''அம்மா'' என்று கத்துவாள். நான் ''மாடை'' பார்த்து பயப்படுவேன்.
இடுப்பில் நான் சௌகர்யமாக உட்கார்ந்திருக்க, மேலே சந்திரனைக் காட்டி எனக்கு நிறைய விஷயங்கள் சொல்வாள். கதைகள், பாட்டு, நிலவை நான் வா வா என்று அழைக்க பண்ணி, அதனுள் உட்கார்ந்திருக்கும் மாவரைக்கும் பாட்டி, ஒரு முயல் என்று உருவங்கள் என் மனதில் இன்னும் நிலைத்திருக்கிறதே. எவ்வளவு கலர் மேகங்கள் காட்டி இருக்கிறாள். பெரிசு சின்னது என்று நிறைய.....மழையை வேடிக்கை பார்த்திருக்கிறேன். சூரியனை காலையில் அஸ்தமன நேரத்தில் எல்லாம் காட்டி எவ்வளவு பெரிதாக, உருண்டையாக, முழுசாக, வர்ண வர்ண கோலமாக பார்த்து நான் மகிழ்ந்தது எத்தனையோ நாட்கள்.இதெல்லாம் என் மரப்பாச்சியை தவிர நான் ரசித்த இயற்கை பொம்மைகள். அடாடா, இந்த வானத்தில் தான் எத்தனை ரகமான பொம்மைகள். நக்ஷத்திரங்களை எத்தனை ராத்திரிகள் எண்ணி தோற்றுப்போயிருக்கிறேன். எது ரொம்ப தூரம், பெரியது, ஒளி அதிகமாக வீசுவது என்ற ஆராய்ச்சி வேறு. அதெல்லாம் ரிஷிகள் என்று சொல்லி இன்னும் விறுவிறுப்பை கூட்டுவாள்.

அவள் எனக்கு காட்டிய பொம்மைகள் இன்னும் நிறையவே இருக்கிறது. தூரத்தில் பச்சை, கருப்பு, மலைகள், கூட்டமாக இருப்பதை காட்டியே என்னை சாப்பிட ​ ​வைத்திருக்கிறாள். சாப்பிடாமல் ஆடம் பிடித்தபோது அந்த மலைகள் பின்னால் இருப்பதாக பயமுறுத்திய அடர்ந்த கருப்பு காடுகளில் உள்ள சிங்கம் புலியைத் தவிர ஒரு சில ராக்ஷஸர்கள் என்னை சாப்பிட வைத்திருக்கிறார்கள். இப்போது அதையெல்லாம் நினைத்தால் நன்றிக் கண்ணீர் தான் வடிகிறது.

​அந்த மலைகள் ஓடி வரும் என்பாள். நம்பி இருக்கிறேன். என்னை யோசிக்க வைத்தவள் என் தாய் க்ரிஷ்ணம்மா .உலகத்திலேயே சிறந்த மொழி மௌனம். அது விளக்குவது போல் எந்த மொழியிலும் கற்க முடியாதே. இதையும் பொம்மையாகத்தான் என் தாய் எனக்கருளியிருக்கிறாள்.

எங்கள் ஊரில் மட்டுமில்லை. எல்லா ஊர்களிலும் அப்போதெல்லாம் நதிகள், ஆறுகள், குளங்கள், குட்டைகள், ஏரிகள் சில உண்டு. இப்போது அவை வீடுகளாக மாறிவிட்டதே . ஆற்றங்கரைக்கு கையைப் பிடித்து அழைத்து சென்று நீரை காட்டியது வாயைப் பிளந்திருக்கிறேன். காகிதக் கப்பல்கள் செய்து ராஜா ராணிகள் பிரயாணம் செய்த்திருக்கிறார்கள். கத்தி கப்பல், ரெட்டை கப்பல், அடடா.... அவை குட்டையில், மழை நீர் தேங்கிய இடத்தில் பல காத தூரம் மிதந்து இருக்கிறதே. கற்றுக்கொடுத்தவளே என் க்ரிஷ்ணம்மா தான்.
சமுத்திரங்கள், அதன் ஆழங்களை, அதன் அடியில் உள்ள ராஜ்ஜியங்கள், ராணிகள், ராஜாக்கள், பல தலை கொண்ட பாம்புகள்..... நிறையவே கேட்டு நடுங்கிஇருக்கிறேன். ''இன்னும் சொல்லு '' என்று கேட்டிருக்கிறேன்.
நதிகள் எப்படி வேகமாக ஓடி கடலில் சென்று கலக்கும் என்று சப்தத்துடன் நடித்து காட்டி இருக்கிறாள் என் தாய்.

இதுமட்டுமா என் தாய் எனக்கு காட்டிய இயற்கை பொம்மைகள். நிறையவே இருக்கிறது. கொஞ்சம் சொல்கிறேன்

பட்டணத்தில் இயற்கை காட்சிகள் குறைந்து விட்டதால் குழந்தைகளை பார்க் என்று பசுஞ்சோலைகளுக்கு கூட்டி செல்கிறோம்?. குழந்தைகள் அதைக் கண்டு எப்படி உல்லாசமாக ரசிக்கிறார்கள்.

எங்கள் காலத்தில் நிறைய தோப்புகள், தோட்டங்கள், வயல்கள் , கோவில் நந்தவனங்கள், வீட்டின் பின்னால் பெரிய கொல்லை தாவரங்கள். அதில் வண்ண வண்ண பூக்கள், பிஞ்சு காய்கள், பெரிய பெரிய பழங்கள், குலை குலையாக கனி வர்க்கங்கள் , பூத்து குலுங்கும் புஷ்ப ஜாதிகள் பெரிய சிறிய இலைகள், மொட்டுகள், என்று எல்லாம் எனக்கு இயற்கை பொம்மைகளாக காட்டியவள் என் தாய் க்ரிஷ்ணம்மா . எத்தனை பெரிய மரங்களை மேலே வாயைப் பிளந்து பார்த்திருக்கிறேன். சிலவற்றை கட்டி பிடிக்க முடியாத குண்டு மரங்களாக ரசித்திருக்கிறேன். சில கிளைகளில் ஏறி அமர்ந்திருக்கிறேன்.

அம்மா நினைவு இன்னும் தொடரும்.....

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...