Monday, December 25, 2017

THIRUPPAVAI 11



 சுடச்சுட அக்காரவடிசல்  -      ஜே.கே. சிவன் 
மார்கழி முப்பது நாள் விருந்தில் இன்று 11வது விருந்து:


வானகம் வேறு வையகம் வேறு. அதை இங்கு காணமுடியாது. முடியும் என்கிற வகையில் பூலோகத்தில் சில இடங்கள் தேவ லோகங்களாக காட்சியளிப்பது விந்தையிலும் விந்தை. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று ஆயர்பாடி . ஆயர்பாடி எப்போதும் கோலாகலமான ஒரு பூலோக வைகுண்டம் அல்லவா?

ஏற்கனவே அது ஒரு அமைதியான இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம். ஒவ்வொரு மரமும் செடியும் கொடியும் போட்டி போட்டுக்கொண்டு நிறைய புஷ்பங்களை வாரி வழங்க, என் பங்குக்கு நான் சும்மா இருப்பேனா என்று தென்றல் அந்த அழகிய மலர்களின் நறுமணத்தை அப்படியே தூக்கிக் கொண்டு போகுமிடத்தில் எல்லாம் எங்கள் கிருஷ்ணனுக்கு எங்களது அன்புக் காணிக்கை என நறுமணத்தைப் பரப்ப, நான் என்ன இளைத்தவளா என்று யமுனை அழகாக தன்னுடைய குளுமையை அந்தக் காற்றுக்கு கொடுக்க ஆனிரைகளும், பறவைகளும் தங்கள் பொறுப்பாக இனிமையாக அந்த சிற்றூருக்கு தத்தம் அழகையும் சங்கீத இசை எனும் ஓசையும், வளமையும் சேர்த்தன.

இந்தச் சூழ்நிலையில், எந்த ஒரு சிறு நிகழ்ச்சியும் அனைவரும் பங்குகொள்ளும் வைபவமாக ஆகி விடுவதில் என்ன அதிசயம்? ஆயர்பாடி சிறுமிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த புத்திசாலி சிறுமி ஆண்டாளோடு மார்கழி முப்பது நாளும் பாவை நோன்பு நோற்கிறார்கள் என்பது ஆயர்பாடி மக்களுக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுத்தது. அனைவரும் அந்த சிறுமிகளுக்கு நல்ல ஆதரவைக் கொடுத்தார்கள்.

இன்று மார்கழி 11ம் நாளை அவர்கள் அந்த சிறுமிகளை ஆவலாக எதிர் கொண்டார்கள். ஆண்டாள் தலைமையில் அனைத்து சிறுமிகளும் சேர்ந்து தினமும் காலை நாராயணனின் அவதாரமான கிருஷ்ணனை போற்றி ராக பாவங்களோடு பாடி ஆடி பரவசமாக வீடு வீடாக சென்று பெண்களை எழுப்பி நோன்பில் பங்கு கொள்ள செய்வதல்லவோ வழக்கம்?  இப்படித்தானே  நடக்கிறது  கடந்த பத்து நாட்களாக?. இன்று ஒரு செல்வ மிக்க கோபனின் பெண்ணுடைய வீட்டு வாசலில் ஆண்டாள் மற்றவர்களோடு நின்று குரல் கொடுத்தாள்.

அவளை எழுப்ப வேண்டுமே. ஆண்டாள் தன்னுடைய குரலில் மிக அழகாக பாடுவாளே. அந்த பாட்டிலேயே அந்த பெண்ணை ''உடனே நீ எழுந்திரு'' என்ற கட்டளையும் இருக்குமே.

"உன்னைத்தானடி அழகிய பெண்ணே, தங்கக் கொடியே, படிப் படியாய் பால் கறக்கும் எண்ணற்ற ஆனிரை உள்ள செல்வனின் மகளே, எதிரிகளைப் பொடிக்கும் வீரன் மகளே, எழுந்து வாடி, உனக்காக உன் வீட்டு முன் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம். உன்னோடு சேர்ந்து நாம் அனைத்து பெண்களும் அந்த கார்மேக வண்ண கண்ணன், மாதவன் கேசவன் மேல் வாயினிக்க செவியினிக்க பாடுவோம் . உன் குரலும் இதில் சேர வேண்டாமா? இன்னும் என்னடி தூக்கம்? வா வெளியே".

ஆண்டாளின் இனிய குரல் கேட்ட அந்தப் பெண் எழுந்து மெதுவாக வெளியே வந்தாள்,அவர்களோடு சேர்ந்தாள். அனைவரும் யமுனையில் வழக்கம்போல நீராடி விரதமிருந்து அன்றைய நோன்பை ஸ்ரீ கிருஷ்ணனுக்கே அர்ப்பணித்து வேண்டி சந்தோஷத்தோடு வீடு திரும்பினர்.

மேற்கண்ட பாசுரத்தை ஆண்டாளின் குரலில் தவழவிட்டு பாடிக்கொண்டிருந்தவள் கோதை என்கிற சிறுபெண்.
ஆயர்பாடியில் கேட்ட குரலின் உரிமைக்கு சொந்தக்காரி வில்லிபுத்தூர் கோதை.

இடைச்சிறுமிகள் ஆயர்பாடியில் ஆண்டாளோடு வீடு திரும்பும்போதுதான் விஷ்ணு சித்தரும் அருகில் இருந்த ரங்க மன்னார் ஆலயத்தில் திருப் பல்லாண்டு பாடிவிட்டு அரங்கன் பிரசாதத்தோடு வீடு திரும்பிக்கொண்டி ருந்தார்.

விஷ்ணு சித்தர் வீட்டில் நுழையுமுன்பே கோதையின் கணீர் என்ற வெண்கலக்குரல் அன்றைய திருப்பாவையின் முக்ய இடமான "சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி '' என்ற வார்த்தைகளை ஆலாபனம் பண்ணி பாடிக்கொண்டிருந்தது கேட்டு சிலையாக நின்றார்.

 ஆண்டாளாக ஆகிவிட்ட கோதை முழுமையாக தான் அன்று எழுதிய பாசுரத்தை மீண்டும் ஆரம்பத்திலிருந்து பூராவாக  பாடினாள். அது தான் இது:

''கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து 
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம்  பொற்கொடியே
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்''

ஆண்டாள் தன்னையே அந்த முகில் வண்ணனின் செல்வப் பெண்டாட்டியாக மனத்திலிருத்திக் கொண்டிருக்கிறாளோ?

இது ஒரு பக்கம் அவள் பக்தியை செய்தாலும், அவளது அரங்கன் பித்து அவரைத் திக்குமுக்காடவும் வைத்தது. இது நடக்கக்கூடியதா என்கிற அச்சம் வேறு உள்ளே அந்த முதியவரை உலுக்கியது.

ராமன் பிறந்தபிறகு முதியவன் தசரதன் மீண்டும் உடலிலும் உள்ளத்திலும் இளைஞனானான் என்று சொல்வது வழக்கம். ஆயர்பாடியில் ஆண்டாள் குரல் கேட்டு, கண்ணன் மேல் உள்ள அபிமானத்தில் கிழப்பசுக்களும் மீண்டும் இளமை பெற்று நிறைய பால் கரந்தனவாம். ஆழ்வார்களும் வைணவர்களும் நாராயணன் பெயரைச் சொல்லும் போதும், பாடும்போதும், நினைக்கும்போதுமே தன்னை மறந்த நிலையில் மகிழ்வோடு திளைத்தார்கள் என்பது நாம் எல்லாரும் அறிந்ததல்லவா?

இந்த களிப்போடு மார்கழி 12வது பாசுரத்தைச் சந்திப்போமே! அதற்கிடையே  வழக்கம்போல்  MLV பாடும் இந்த பாசுரம் கேட்போமே.   https://youtu.be/-5mX56rZk3Q

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...