Monday, December 25, 2017

GANGADHARESWARAR TEMPLE




யாத்ரா விபரம் J.K. SIVAN

கங்காதீஸ்வரர்/கங்காதரேஸ்வரர்

நமது முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து தவறுகிறோம். ஏன்? அவர்களை பற்றிய சிந்தனை இல்லை. அவர்கள் எப்போதோ ஏதோ சரித்திர புத்தகத்தில் படித்த அக்பர் அசோகரா? படித்து மறக்க? நமது இன்றைய வாழ்க்கைக்கு ஆதாரம். வேர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை. அது இருந்தால் தான் உச்சாணி கிளையில் இலை பச்சையாக உயிரோடு இருக்கும். வேருக்கு நீர் வார்ப்பது தான் பித்ருக்களுக்கு நாம் செய்யும் எள்ளும் நீரும், வருஷாந்திர ஸ்ரத்தையான சடங்குகள். அதை திருப்தியோடு நன்றியோடு செய்யவேண்டும். காத்திருந்து அன்று நம்மிடம் நம்பிக்கையோடு அந்த திதியன்று வருபவர்களுக்கு போ உனக்கு பசி தீர்க்க இங்கே சாப்பாடு கிடையாது என்று விரட்டுவது தான் நமது கடமையிலிருந்து தவறுவது. '



'அடப்பாவி உனக்காக நாங்கள் எவ்வளவு பாடு பட்டோம்' என்று மனம் வெதும்பி அவர்கள் படும் ஏமாற்றம், அதிருப்தி தான் பித்ரு சாபம். நமக்கு பல விதங்களில் துன்பம் நேருவதற்கு ஒரு முக்கிய காரணம். நமது தவறுகளுக்கு பரிகாரமாக நாம் சில க்ஷேத்ரங்களுக்கு சென்றால் துன்பம் குறையும் என்ற நம்பிக்கையையும் நமது முன்னோர்கள் ஊட்டியுள்ளார்கள்.

சென்னையில் உள்ள சிவதலங்களில் பித்ரு சாபம் போக்கும் மிக அருமையான தலம், புரசைவாக்கத்தில் உள்ள கங்காதரேஸ்வரர் ஆலயமாகும். இந்த ஆலயத்தை பற்றி தெரியாதவர்களுக்கு தகவல் இது:

சூரியகுல ராஜா சகரன், அயோத்தியில் ஆண்டு வந்தான். நாடும் மக்களும் க்ஷேமமுடன் வாழ ஒரு அஸ்வமேத யாகம் துவங்கினான். அஸ்வமேத யாகத்திற்கு தயார் செய்த ஒரு குதிரையை வீரர்கள் புடைசூழ எல்லா தேசத்துக்கும் அனுப்புவார்கள். அந்தந்த ஊர் ராஜாக்கள் அதை வரவேற்று வேண்டிய பொருள்களை கொடுத்தால் ஆதரவு. எதிர்த்தால் அவர்களோடு யுத்தம். அதில் அவர்களை வென்று வேண்டிய பொருள்களை பெற்று அடுத்த ஊர்... இப்படி பல ஊர்களுக்கு சென்று வெற்றிகரமாக திரும்பியபின் அஸ்வமேத யாகம் சிறப்பாக நடைபெறும். பெரும் புகழும் கௌரவமும் ராஜாவுக்கு கிடைக்கும்.

சகரன் இப்படி அஸ்வமேத யாகத்தை வெற்றியுடன் நடத்தினால் இந்திர பதவி பெறுவான். அது தன்னை பாதிக்குமே, தன் பதவிக்கு ஆபத்தாக முடியுமோ என கவலையும் பயமும் கொண்ட இந்திரன், சகரன் அனுப்பிய யாக குதிரையை வழியில் எங்கோ திருடிச் சென்று பாதாள லோகத்தில் கபில முனிவர் தவம் செய்யும் குகையில் கட்டி வைத்தான்.

''அடாடா, நமது அஸ்வமேத குதிரைக்கு என்ன ஆயிற்று. எங்கே அதை காணோம்'' என்று தவித்த சகரன், தனது அறுபதாயிரம் புதல்வர்களை அந்த குதிரையைத் தேட அனுப்பினான்.

அவர்கள் தேடிய குதிரை எங்கோ ஒரு காட்டில் ஒரு ரிஷியின் ஆஸ்ரமத்தில் கட்டப்பட்டதை கண்டு சகரனின் புத்திரர்கள் கடும் கோபம் கொண்டார்கள். கபிலர் தான் குதிரையை எப்படியோ பிடித்து இங்கே கொண்டுவந்து கட்டி வைத்திருக்கிறார்'' என்று தியானத்தில் ஆழ்ந்திருந்த கபிலரைத் தாக்கினர்.

தியானம் களைந்த கபில முனிவர் தனது யோக சக்தியால் சகர புத்திரர்கள் அறுபதினாயிரம் போரையும் அந்த கணமே எரித்து சாம்பலாக்கினார். அவர்கள் இருந்த இடம் ஒரு சாம்பல் மலையாக காட்சியளித்தது.

குதிரையைத்த தேடி சென்ற அறுபதினாயிரம் பிள்ளைகளோ அவர்கள் தேடிச்சென்ற குதிரையோ என்ன ஆயிற்று என்று கலங்கிய சகரன் எஞ்சி இருந்த தனது பேரன் அம்சுமானை அவர்களைத் தேடி கண்டுபிடிக்க அனுப்பினான். எங்கெல்லாமோ சுற்றி கடைசியில் அம்சுமான் கபிலர் ஆஸ்ரமம் வந்தடைகிறான். அங்கே அவன் தேடிய குதிரை கண்ணில் பட்டது. அம்சுமான் பயபக்தியுடன் கபிலரை வணங்குகிறான்.

அவரிடம் இருந்து தனது பெற்றோர்கள் செய்த தவறை உணர்ந்து அவர்கள் சாம்பல் மலையாக குவிந்திருப்பதை அறிகிறான். கபிலரைக் கெஞ்சி எப்படியாவது அவர்களை உயிர்ப்பிக்க வேண்டுகிறான்.

''அப்பனே அவர்களை உயிர்ப்பிக்க என்னால் இயலாது. ஆகாச கங்கையை பூமிக்கு கொண்டு வந்து அந்தப் புனித நீரினால் இந்த பாதாளத்தில் உள்ள சகர குமாரர்களின் சாம்பலைக் கரைத்தால், அவர்கள் சாபம் நீங்கி நற்கதியடைவார்கள். வேறு வழியே இல்லை. இது விதி'' என்கிறார் கபிலர்.

ஆகாச கங்கையை பூமிக்கு கொண்டு வர அம்சுமான், கடும் தவம் புரிந்து பலனில்லை. அவனும் முடிந்து விட்டான். அடுத்து அவன்மகன் திலீபன் தவம் புரிந்து எப்படியாவது தனது தந்தை, முன்னோர்களை மீட்க கடும் தவம் புரிகிறான். அவனாலும் முடியவில்லை.

திலீபனுக்கு பிறகு அவன் மகன் இதே முயற்சியில் தொடர்ந்து கடும் தவம் புரிகிறான். அவனே பகீரதன். பரமேஸ்வரன் சிவனின் கருணையால் பகீரதன் தவம் பலன் தருகிறது. ஆகாச கங்கையை பூமியில் இறங்கினால் அவளது வேகத்தை பலத்தை பூமி தாங்காது என்று அறிகிறான். சிவனையே வேண்டுகிறான். அவர் கங்கையை தனது சிரத்தில் முடியில் தாங்கி, வேகத்தை அடக்கி மெதுவாக பூமியில் இறங்கி ஓட விடுகிறார். ஹரனின் சிரம் வழியாக பூமியில் கங்கை இறங்கிய இடம் தான் இன்று நாம் சென்று புண்ணியம் தேடும் ''ஹர்துவார்'' (ஹரன் எனும் வாசல் ). பகீரதன் கொண்டுவந்த கங்கை பாதாள லோகம் செல்கிறது. அவன் முன்னோர்களின் சாம்பல் கங்கையில் கரைந்து அவர்கள் பாபமும் அதோடு கரைந்து அவர்கள் சாந்தி அடைகிறார்கள். இன்றும் நமது குடும்பங்களில் முன்னோர் இறந்தால் நாம் கங்கை செல்கிறோம். ஹரித்துவார் சென்று அவர்கள் சாம்பலை அங்கே கரைக்கிறோம். அல்லது அருகே எல்லா நதிகளும் கலக்கும் சமுத்திரத்தில், கடலில் அதை கரைக்கிறோம். அவர்கள் பாபம் தொலையட்டும் என்று அர்த்தம் இதற்கு.

சகர புத்திரர்கள் சாபம் நீங்கி நற்கதி அடைந்தனர். முன்னோர்க்கு தனது கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றிய பகீரதன், அவர்கள் ஆசியோடு, அயோத்தி ராஜா ஆகிறான். ராஜபதவியில் மோகத்தில் அவன் புத்தி மயங்கி தவறுகள் செயகிறான். மண் பெண் பொன் ஆசைகள் தான் ஒருவனை அடிமையாக்கி கொன்றுவிடுமே . ஒருநாள் அவன் அரண்மனைக்கு வந்த நாரத மகரிஷியை அலட்சியப்படுத்துகிறான். அவர் சாபத்தால் சரும நோய் வாட்டுகிறது. தவறை உணர்ந்து பகீரதரன், நாரத முனிவரின் பாதம் பற்றி தன்னை மன்னிக்க வேண்டுகிறான். .

"பகீரதா, இது ஈசன் செயல். பாரத தேசமெங்கும் சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபடு. 1008-வது லிங்கப் பிரதிஷ்டையின்போது சாபம் நீங்கி நலம் பெறுவாய்'' என்று சாப விமோசன வழி சொல்கிறார் நாரதர்.

நாடு முழுவதும் லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட பகீரதன் நிறைவாக 1008-வது லிங்க ப்ரதிஷ்டைக்கு இடம் தேடுகிறான். ஈசன் அருளால் பாரதத்தின் தென் பகுதியில் புரசு காடுகளாக ஒரு இடம் தெரிகிறது. சிவப்பு நிற தீ வண்ண மலர்களாய் பூத்துக் குலுங்கும் அந்த புரசுவனத்தில் 1008வது சிவலிங்கம் ஒரு பெரிய புரசு மரத்தின் கீழ் பகீரதனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம் செய்ய புனித நீர் வேண்டுமே. சிவனை வேண்டியதும் அங்கே கங்கை பிரசன்னமாகி உள்ளமுருக அபிஷேகம் செய்து தொழுகிறான் பகீரதன். ஈசன் தோன்றி சாபம் நீக்கி, மேக நோய் மறைந்து இன்றும் அந்த புரசுவனத்திலேயே, தற்போதைய சென்னை புரசைவாக்கம் "கங்காதரேசுவரர்'' கோவிலாக காட்சி தருகிறார். நிறைய பேர் கங்காதீஸ்வரர் என்றும் சொல்கிறார்கள். இந்தப்பெயர்களும் பலவருஷங்களில் மாறலாம்!

புரசைவாக்கம் சென்ற போதெல்லாம் உள்ளே சென்று தரிசிக்க நான் தவறுவதில்லை. அருகே என் தாத்தா வசிஷ்ட பாரதியார் வாழ்ந்த இல்லம் இன்றும் இருக்கிறது. அவர் இந்த ஆலயத்தில் பலமுறை கம்ப ராமயாணம் மற்றும் புராணங்கள் பிரசங்கம் செய்துள்ளார் என்ற எண்ணம் அப்போதெல்லாம் என்னுள் தோன்றி என்னை நன்றியோடு வணங்கச்செயகிறது.

புரசைவாக்கம் மிகவும் நெரிசலான நிறைய வண்டிகள் ஓடும் பெருஞ்சாலை கொண்ட இடம் இப்போது. நடப்பதே கடினம். சாலை ஓரத்தில் அமைதியாக பழைய பகீரதன் பெருமையோடு பொறுமையாக கங்காதரேஸ்வரர் அருள்புரிவதையும், கங்கை வந்த இடம் குளமாகவும் காண்கிறது.

கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். உள்ளே நுழைந்தால் கொடிமரம், பலிபீடம், நந்தியை. மேலே சென்றால் கண் கங்காதரேசுவரர் தரிசனம். பிராகாரத்தை வலம் வரலாம். மேக நோய் தீர்த்தத்தால் வைத்தீஸ்வரர் என்ற லிங்கம். அருகே விநாயகர் சந்நிதி. எதிரே வில்வ மரம். அம்பாள் பெயர் பங்கஜவல்லி. தெற்கு முகமாய் நிற்கும் அன்னை.

ஒரு விசேஷ விஷயம். இந்த ஆலயத்தினுள் தற்போது 50 அடி உயரத்தில் நிற்கும் பரமசிவனின் சுதை உருவம் அமைத்திருக்கிறார்கள். அருகே லிங்கத்திற்கு பகீரதன் பூஜை செய்யும் உருவச்சிலை. பிரகாரத்தில் சத்தியநாராயண பெருமாள் சந்நிதி. நெருப்பு வர்ணத்தில் மலர்கள் பூக்கும், புரசு மரமும் அதற்கு கீழே கங்கா தீர்த்தமும் உள்ளது. குலோத்துங்க சோழன் காலத்து கோவிலும் குளமும் இவை.

இந்த க்ஷேத்ரம் பித்ரு சாப விமோசன ஸ்தலம். திருமண தடை, பித்ரு சாபம், எதிரிகள் தொல்லை ஆகியவை தீர பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...