Saturday, December 19, 2020

THIRUVEMBAVAI

 

திருவெம்பாவை -     J K SIVAN

       4     வா, வந்து நீயே எண்ணு ?

இன்று நாம்  மணிவாசகரின் நான்காவது  திருவெம்பாவை பாடலை ரசிப்போம்.

மணிவாசகர் சிறு பெண் ஆண்டாளைப்  போலவே மார்கழியில் விருந்தாக நமக்கு திருவெம்பாவையை தந்திருக்கிறார். அவள் தந்தது திருப்பாவை, இவர் தருவது திருவெம்பாவை. ரெண்டுமே மார்கழியில் தூக்கத்திலிருந்து நம்மை தட்டி எழுப்புவது. தூக்கம் இங்கே அஞ்ஞானம், அறியாமை. அங்கே ஆய்ப்பாடியில் துதிப்பது அரங்கனை, இங்கே அண்ணாமலையில் அநங்கனை, உருவமில்லாத சிவலிங்கத்தை, இருவர் தமிழும் அற்புதமான சுவையுடையது. விஷ்ணு பக்தர்கள் சிவபக்தர்கள் இரு சாராரும் மகிழ இந்த விருந்து.

''ஒள்நித் தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம்
உள்நெக்கு நின்றுஉருக யாம்மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில்ஏலோர் எம்பாவாய் !! (4)

திருவெம்பாவையில் தலைவியான பெண் மற்ற பெண்களையும் சேர்த்துக்  கொண்டு,  சிவனை வணங்கி விரதமெடுக்க விடிகாலையில் இன்னும் வந்து சேராத பெண்களை வீடு சென்று எழுப்பி நீராட அழைத்துக் கொண்டு செல்லும் காட்சி.

மேலே சொன்ன பாடலின் பொருள்: 

ஜொலிக்கும் முத்தைப்போல,  வெண்மைநிற முத்துக்களை கோர்த்தது போன்ற பற்களை உடையவளே, இன்னுமா உனக்கு பொழுது விடிந்துவிட்டது தெரியவில்லை?.  

இதற்கு அந்த தூங்கிய  பெண்  என்ன பதில் சொல்கிறாள்?

''என் பல் இருக்கட்டும். அழகிய கிளியைப் போன்று பேசுபவளே, நீ முதலில் எண்ணிப்  பார்த்துச்  சொல் மற்றவர்கள் எல்லோரும் வந்துவிட்டார்களா?'' 

வீட்டிற்குள் படுக்கையில் இருப்பவள் கேட்க,

''நான் எண்ணிச்சொல்வது இருக்கட்டும், அதுவரை நீ சும்மா விருதாவாக படுக்கையில் படுத்து காலத்தை ஓட்டாதே. நினைத்துப்பார் அந்த தேவர்களும் விண்ணுலகோரும் போற்றும் நாம் வணங்கும் அந்த  அமிர்த ரூபனை, வேதங்கள் தொழுதேத்தும் ஞான தேசிகனை, கண்ணுக்கினியானை, பரமசிவனை,   அவனை நாம் போற்றி பாட வேண்டாமா?  , மனம் உருக  நீ  வேண்டுவாயாக. அதை விட்டு நான் எண்ணிச் சொல்வதற்காக  உன்  அருமை  நேரத்தை வீணாக்காதே. எழுந்திருந்து வந்து   நீயே  எண்ணிக்கொள். அப்படி யாராவது விட்டுப்போயிருந்தால், அவர்களும் வரும்வரை கிடைக்கும் நேரத்தில் வேண்டுமானால் மீண்டும் போய் தூங்கு'' என்கிறாள் எழுப்பிய பெண்.

இரு பெண்களும் பேசுவது  யாரைப்பற்றி?   அருணாச்சலேஸ்வரரைப் பற்றி. திருவண்ணாமலைக்கு 260 கோடி வருஷம்  வயது: திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள்.அதாவது, 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பே   தோன்றியது  விட்டது என்கிறது  ஆராய்ச்சி.  உலகிலேயே மிகப்பழமையான மலை என்கிறார்  டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி. முதல்  கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.

ரொம்ப ரொம்ப சிறந்த மாதங்கள்: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்., ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம்.
மனசு அண்ணாமலையார் கிட்டே இருக்கணும்,  மோக்ஷம் நமதே  என்பது பக்தர்கள் வாக்கு. 
தீப  தரிசன மண்டபம்  கோயிலில்   கிளிக்கோபுரம் அருகில் உள்ளது.  மங்கையர்க்கரசி  எனும் ராணி   இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினதால் அதற்கு  மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் பெயர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.

கரும்புத்தொட்டில்  என்பது  திருவண்ணாமலையில்   பக்தர்கள் செலுத்தும் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று. குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர்.  தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள்.  இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

இங்கே  பாடிய  சிறப்பு மிக்க  பக்தர்  திருப்புகழ் பாடிய  அருணகிரி நாதருக்கு  கைகளில் ஆறுவிரல் இருந்ததற்கு   ஆறுமுக பக்தர் என்பதால், அந்த  ஆறுமுகனான ஷண்முகனே, அவருக்கு  ஆறுவிரல் கொடுத்தான் என்பார்கள்.  அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார். அந்த நடை  முருகன் வாகனம்  மயில் நடைபோல  இருக்குமாம்!
இன்னும்  சில  திருவண்ணாமலை  ருசிகர செயதிகள்: திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தின் பெயர்  கத்தியர் தீர்த்தம் என்பர்.
இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து.
இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு.அபூர்வ இனம் சாமி அது என்கிறார்கள். 
தங்கமலை ரகசியம்: அண்ணாமலை தங்கமலையாக இருந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா..?
கைலாஸத்தில் லிங்கம் இருப்பதால் அதற்கு  சிறப்பு.
ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு.இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானி களெல்லாம் வழிபட்டுள்ளனர்.கூறுகிறது.

கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.
கிரிவலம் செய்யும் முறை: திருவண்ணாமலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி, எங்காவது முடிக்கக்கூடாது.
மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும்.
வாகனங்களில் செல்லக் கூடாது.
கிரிவலப்பாதையில் எட்டு திசையிலும் ஒவ்வொரு லிங்கம் உள்ளது.
இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் ஆகிய இவற்றை வணங்கி செல்ல வேண்டும்.
மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடது பக்கமாகவே செல்ல வேண்டும்.
இறைவனை தியானித்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் சொல்லியபடி நடக்க வேண்டும்.
மலையைப் பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும்.
தினமும் கிரிவலம் வரலாம் என்றாலும் பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் மனோசக்தி அதிகரிக்கும்.
அண்ணாமலை பொருள்: அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள்.
''அண்ணா''   என்றால்  யாரோ  ஒரு  ஆசாமியை நினைவில் கொள்ளாமல்  ''நெருங்கவே முடியாத'' என்ற  அர்த்தத்தை நினைத்தால் போதும். 
பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...