Wednesday, December 9, 2020

OLDEN DAYS

 ன் முன்னோர்கள்.   J  K   SIVAN 


                   

மூதாதையர்  வாழ்ந்த காலம்......

ஒரு விளக்கம் தந்து விட்டு  எழுத ஆரம்பிப்பது சால  உத்தமம்.  இந்த தொடரில்  நான் ஏற்கனவே சொன்ன  எனது அருமை தாத்தாவின்  வாழ்க்கை குறிப்புகளை  அங்கொன்றும் இங்கொன்றுமாக தொகுத்து வழங்க உத்தேசம்.  பழைய நினைவுகள் மீண்டும்  மனத்திரையில் வரும்போது  முதலில் கல்யாணம் ஆனா ஞாபகம் வரும் அப்புறம்  சின்ன வயதில் விளையாடியவர்கள் திடீரென்று  வருவார்கள் அவர்களைத் துரத்திக்கொண்டு  ஆஸ்பத்திரியில் எப்போதோ காலில் எலும்பு முறிவுடன் படுத்துக்கொண்டிருந்ததை நினைவு கூர்வோம்...   லட்டுக்கு  எந்தப்பக்கம் இனிப்பு  ஜாஸ்தி?  ஆகவே  எனது தாத்தாவின் குறிப்புகளை நான்  விளக்கமாக எழுதுவது ஸ்வாரஸ்யத்தின் அடிப்படையில் தான்.  சரித்திர புத்தகம் அல்ல இது. 

தாத்தாவுக்கு  காஞ்சி மஹா பெரியவாளிடம்  மிகுந்த பக்தி உண்டு.   முடிந்தபோதெல்லாம்   மஹா பெரியவாளை அடிக்கடி நேரில்  தரிசித்து   அளவளாவியவர் .   மஹா பெரியவா  தாத்தாவின்  கம்ப ராமாயண,  புராண  பிரசங்கங்களால்  ஈர்க்கப்பட்டு  அவரைப் பாராட்டி அளித்த விருதுக்கு  இப்போது கிட்டத்தட்ட எழுபத்தைந்து எண்பது  வயதாகப்போகிறது:  அந்த விருது இதுதான்:  

''ஸ்ரீமத் சத்வ குண  ஸம்பன்னரான  புதுக்கோட்டை நகர் நிவாஸியான  வஸிஷ்ட  பாரதி அவர்களுக்கு  ஸர்வாபீஷ்டங்களும்  ஸித்திக்குமாறு   நாராயணஸ்ம்ருதி: 

 முத்து பவழம் முதலியன கடலை நாடி இருப்பது போல் புராணங்களும் அவற்றின் கருத்துக்களும் தங்களிடம் நிறைந்திருப்பதை அறிந்து மிகவும் சந்தோஷித்து  நாம்  தங்களை ''புராண ஸாகரம்'' விருதை அளித்து அனுகிரஹிக்கிறோம்'' ---   நாராயணஸ்ம்ருதி''

மஹா பெரியவா  தாத்தாவின் புரசைவாக்கம் இல்லத்துக்கு வந்திருக்கிறார். ஸ்ரீ   T.S . பாலகிருஷ்ண சாஸ்திரிகள் என் தாத்தாவிடம்   பிரசங்க பயிற்சி பெற்றுக்கொண்டவர். 

எனது தாத்தா அவருக்கு முந்தைய ஐந்தாறு  தலைமுறைகளைப் பற்றிய  விவரங்கள் சேகரித்து குறிப்பு
 வைத்திருப்பது  அக்காலத்திய,  அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை படம் பிடித்து காட்டுகிறது.  இந்தியாவை  வெள்ளைக்காரன்  ஆளுமை முழுதாக  இருக்கவில்லை.  முகலாய சாம்ராஜ்யம் டெல்லியில் அந்திம காலத்தை நெருங்கி கொண்டிருந்த வேளை  அது.  தஞ்சாவூர்   மராத்தா மன்னர்கள் வசம் இருந்தது.   சரபோஜி,  சிவாஜி, சாம்பாஜி    என்று  தெய்வ பக்தி  நிறைந்த பக்திமான்கள்.  வீரமும் வித்தையும்  அறிந்தவர்கள். சிறந்த   சங்கீத  கலா ரசிகர்கள்  ஆதலால்  எண்ணற்ற கவிஞர்கள்  வித்வான்கள்,  நாட்டிய, நாடக நாடக, விற்பன்னர்கள், ஆதரிக்கப்பட்டார்கள்.    தேன் , வெல்லம்  இருக்குமிடத்தில் வண்டுகள் சுற்றாதா? இவர்களைத் தவிர  பாளையப்பட்டுகள், ஜமீன்கள், மிராசுகள்  வேறு  சிறந்த கல்விமான்களாக இருந்த நேரம்.   காவிரிக்கரையில்  வளமான பயிரோடு  வயிறார உணவும், முத்தமிழ்  முன்னேற்றமும் சிறப்பாக இருந்தது.  

நமது  எள்ளுத்தாத்தா   கொள்ளுதாத்தா  காலத்தில்  பகலைக் காட்டிலும்  அவர்கள்  வாழ்ந்த  இருள் காலங் களே  அதிகம். சூரியனை   நம்பி  வாழ்ந்தவர்கள்.   இப்போது போல்  பாதைகள்,  பயண  ஊர்திகள், வங்கிகள்,  செய்தித் தாள்,  கடிதாசு ஒன்றுமே  இல்லாத நிலையில்,  கைப்பொருளைக்   கள்வர்  பயமின்றி  காப்பாற்ற  பெருமுயற்சி  தேவையாக  இருந்தது.  அவர்கள் காலத்தில்  ஒவ்வொரு  வீட்டிலும்  ஒரு  ரகசிய  இடம்  இருக்கும்.  இது ஒன்று  தான்  லாக்கர், பேங்க், பணப் பெட்டி. ஒருவர் முறை  மற்றவர்க்கு  தெரியாது.  இருந்தபோதும்  அனேகமாக  எல்லோரும்  பானையையே  நம்பினர் .

 
வீட்டில்  செல்வம்  பானையில்  இருக்கும்.   ரூபாய் நோட்டாக  இல்லை. அரிசியாக, பருப்பாக,  புளியாக, வெல்லமாக .  சில தங்க  வராகன் காசுகள்  ஒவ்வொரு வீட்டிலும்   இருக்கும்.  அது  பரம்பரை பரம்பரையாக  கூட ஒரு தலைமுறையிலிருந்து அடுத்ததற்கு  வந்து சேர்ந்தது. வட்டியில்லாத  அசல்.   வங்கி அல்லது  பேங்க்  என்று  எண்ணத்தில்  தோன்றவில்லை.
 
தெருக்களே  ரொம்ப  சொல்பம்.  அதுவும்  இருந்த  ஒன்றிரண்டு தெருவில்  சில  வீடுகளே  இருக்கும்.  ஒவ்வொன்றும்  தோட்டமும்  துரவுமாக  இருக்கும்.  ஒவ்வொரு வீட்டிலும்  பெரிய  குடும்பம்.  பத்து  உருப்படிக்குக் குறையாது.  காப்பி  டீ   எல்லாம்  குடிக்கும்  வழக்கம் கிடையாது.  கஞ்சி, மோர், இளநீர் எலுமிச்சை ரசம்  தான் எல்லோர் வீட்டிலும்.  

பக்ஷணங்கள்  வீட்டில்  செய்தவை.  கடலை  எண்ணெய் , நல்லெண்ணெய்  தேங்காய்  எண்ணெய்  மூன்று  தான்  வழக்கத்தில் இருந்தது.  பாமோலின் , பாமாயில்  எல்லாம்  அப்பறம்  பிறந்தவை.

இவற்றில்  தான் ஜம்மென்று  வாசனையோடு   பக்ஷணங்கள்  தயாராகும்.   ஊரைக்கூட்டும். திரும்ப  திரும்ப  ஓமப்பொடி, முறுக்கு,  மனோகரம், குஞ்சாலாடு, மைசூர்பாக், பொருள்விளங்கா உருண்டை, ரவா லாடு, ஒக்காரை, நாடா, அதிரசம்  அப்பம், அல்வா, கடலை உருண்டை, பொட்டுக்கடலை  உருண்டை  இவை போன்றே .  

காரட், முட்டைகோஸ், பீன்ஸ்  போன்ற  காய்கள் உபயோகத்தில் இல்லை.    நிறைய  கிழங்குகள், பச்சை காய் கறிகள்  தான் சமையலில்  இடம் பெரும்.  பூண்டுக்கோ  வெங்காயத்துக்கோ இந்த  அக்ரஹார  தெரு  வீடுகளில்  அனேகமாக  இடம் இல்லை.

விடியற் காலை  காலை முழிப்பு   கொடுத்துவிடும்.  கடிகாரம்  தெரியாது.  வயலுக்கு  நடந்து வாயில்  வேப்பங் குச்சியோடு   ஒரு  சுற்று சுற்றி வந்து  வாய்க்கால்  பக்கம்  ஒதுங்கிவிட்டு   பிறகு  ஆற்றிலே  குளித்து விட்டு  வேஷ்டியை  அலசி பிழிந்து  தோளில்  போட்டுக்கொண்டு  ஆற்றங்கரை   மரத்தடிப்  பிள்ளையாரை  ஒரு  பிரதக்ஷணம்   சுற்றிவிட்டு   தெரிந்த ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டு  தோப்புக்கரணம்  போட்டுவிட்டு  விபூதி  எடுத்து இட்டுக்கொண்டு  வீடு  திரும்புவார்கள்.
 
 வீட்டில்   காலை  வழிபாட்டை முடித்துக் கொண்டு  நேராக  தெருக்கோடி  கோவிலுக்குச்  செல்வார்கள். அங்கு அபிஷேகம்  அதற்குள்  நடந்திருக்கும்.   கையில் கொண்டு சென்ற  தேங்காய்  வாழைப்பழம்  வெற்றிலை எல்லாம்  அர்ச்சகரிடம்   அளித்து  ஒரு  அர்ச்சனை.  

ஊரில் அத்தனை பேர் பெயர், கோத்ரம், நக்ஷத்ரம்  எல்லாம்  அர்ச்சகருக்கு  அத்துபடி.  காலணா  உண்டியலில் போட்டுவிட்டு வீடு திரும்பினவுடன்  எல்லாருக்கும்  நீராகாரம்  காத்திருக்கும். மாங்காய் ,  நாரத்தங்காவைத்   தொட்டுக்கொண்டு   ரெண்டு லோட்டா  உள்ளே  போகும்.

இளசுகளும்,  குழந்தைகளும்  வட்டமாகவோ  வரிசையாகவோ  பூவரச ,பாதம்  இலையில்  நாரத்தங்காய்,  அல்லது கருவேப்பிலை, கொத்தமல்லி,  தேங்காய்  துவையலையோ, அல்லது  மோர் மிளகாயோ  வைத்துக் கொண்டு  காத்திருக்க   புளித்த  பழையதில் ,  நல்லெண்ணெய்  உப்பு  போட்டு  பிசைந்து  தலா  ரெண்டு  கை  அல்லது  மூணு  கை  வாங்கி சாப்பிடுவதிற்குள்  பாத்திரம்  காலி.  

 தோட்டத்தில்  பசுவுக்கு   வாழைப்பழம்  இலைகள் எல்லாம்  கொடுத்து விட்டு  அனைவரும்   வயலுக்கு  கிளம்பிவிடுவார்கள். மரத்தில்  ஏறி  தேங்காய் பறிப்பது,  பாத்தி கட்டுவது.  ஏற்றம்  இறைப்பது எல்லாம்  மேற்பார்வை  அல்லது  சேர்ந்து செய்வது. வேலையின் போதே  பாட்டும்  ராக ஆலாபனையும்   தூள் கிளப்பும்.

பெண்கள்  எல்லாம்  விடியற்காலையே  தண்ணீர் பிடித்துக்  கொண்டுவர பித்தளைத்  தவலைகளோடு (எவர்சில்வர்   ஹிண்டாலியம்  எல்லாம்  தெரியாது)   தோளில்   பழைய துவைக்க வேண்டிய  துணிகளோடு  ஆற்றுக்கு  சென்றுவிடுவார்கள்.   புளி  தேய்த்து காவிரியில்  அலம்பிய   பித்தளை பாத்திரங்கள் தங்கப் பானைகளாக  ஜொலிக்கும்.  வழக்கமான இடத்தில்  செங்கல்லில்  அல்லது கரையில்  ஒரு  பாராங்கல்லில்  மஞ்சள்  அரைத்து அரைத்து அதுவே  மஞ்சள்  நிறத்தில்  காத்து இருக்கும்.   ஆற்றங்கரைகளில்    பெண்களுக்கு என்று  தனி  படித்துறை உண்டு.   ஆண்கள் அங்கே  பிரவேசிக்க மாட்டார்கள். 

ஊர்க்கதை  பேச  அது  தான் பெண்கள் ஒதுக்கும்  நேரம்.  மாதர் சபை.     துணி , வம்பு , ஊர்க்கதை   அனைத்தையும்  அலசி  அங்கேயே  பிழிந்து தோய்த்து தோளில்   போட்டுக்கொண்டு  இடுப்பில்  பெரிய  தவலையில்  குடிநீரோடு  திரும்புவார்கள்.  போய்   சமையல்  ஆரம்பித்தால்  சூரியன்  உச்சி அடையும் நேரம்  சாப்பாடு ரெடியாகிவிடும்.   அடுப்பு  களிமண்ணால்  செய்தது.  ரெட்டை அடுப்பு, மூன்று, நாலு  அடுப்பு கூட  ஒரே வரிசையில் இருக்கும்.  விறகு  உடைத்து  காய வைத்தது  நன்றாக  எரியும்.  புகை  வராமல்  ஊதாங் குழாய்  என்று  இரும்பில்  ஒரு  கனமான  இரும்புக்குழாய்,  பைப் துண்டு  ஒவ்வொரு  வீட்டிலும்  இருக்கும்.  மூச்சைப்  பிடித்து  அதில்  காற்றை  ஊதி  புகையை  விரட்டுவார்கள். அடுப்பை எரிப்பார்கள்.  கண்களில் கண்ணீர் பெருகும். 

 மத்தியானத்துக்குள்  ஊர்  சமாசாரம் அனைத்துமே,   வெளியூரில் இருந்து  திரும்பியவர்கள்  மூலம்  அடுத்த  ஊர்  கதைகளும் ஆலமரத்தடிக்கு  வந்துவிடும். அங்கே போய்  தான்  மத்யஸ்தம், பிரச்னைகளுக்கு  தீர்வு.  தீட்சிதர்,  வாத்யார்  நாகராஜன், ஜோசியர்  ராமன்  போன்றோர்  அளிக்கும்  தீர்ப்பு   சுப்ரீம்  கோர்ட்  ஜட்ஜ்மெண்ட்.  தலையாரி  தண்டபாணி  தமுக்கடித்து  ஊரில்   விஷயம் சொல்வான்.  

மேற்கொண்டு தொடரும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...