Friday, December 25, 2020

MY ANCESTORS

 

என் முன்னோர்கள்   J K  SIVAN 


         14.  செக்கான் சாமிநாதன்..


காலம் என்பது நிற்காமல் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பிரேக் இல்லாத வாகனம். அது நின்றது என்றால் சகலமும் முடிவுறும்.  ஒரு புல் பூண்டு ஜீவராசி எல்லாமே  நின்று போய்விடும்.  ஆகவே  தான்  இறைவன் அதை ஓடவைத்துக்கொண்டே  இருக்கிறான்.  பிரபஞ்சமே ஒரு சுழற்சி தான். மானாட  மயிலாட, மங்கை சிவகாமியாட...... எல்லாம்  ஒரே  ஆட்டம்....  அவனே ஆடலரசன் தான்.     ஓட்டம்  ஆட்டம் இருப்பதால் தான்   வாழ்க்கையில்   பிரயாணம் செய்யும் நாம் எப்போது திரும்பி பார்த்தாலும்  சென்ற காலம், இடம் எல்லாம் இனிக்கும்.

கடந்த காலத்தை நினைப்பது என்பது இறைவன் அளித்த ஒரு அற்புத பரிசு. பழைய நினைவுகள் வாழ்க்கைக்கு தெம்பை அளிப்பவை என்று எல்லோரும் ஒப்புக்கொண்டு தலை ஆட்டுவீர்கள்.

                              
ஆம், அவரவர் வாழ்க்கையில் நடந்தது அவரவர்க்கு புத்துணர்ச்சி தருவது. சில நினைவுகள் பொதுவாகவே எல்லோருக்கும் சந்தோஷம் அளிப்பவை. நான் தேர்ந்தெடுப்பது எல்லோருக்கும் மகிழ்ச்சி தரவேண்டும் என்ற ரகத்தை சேர்ந்தது. 

ஒரு சிலர்  என் முன்னோர்கள் கட்டுரைகளைப்படித்து விட்டு என் குடும்பம் தான்  அதி உன்னத, ஸ்ரேஷ்டமான  கடவுள் அனுக்கிரஹம் பெற்ற  குடும்பம் என நினைக்கிறார்கள், சொல்கிறார்கள். வாழ்த்துகிறார்கள்.  நண்பர்களே, நம் அனைவரின் முன்னோர்களும் ஒரே காலத்தவர். அற்புதமானவர்கள்.  நான் கொஞ்சம்  ஞாபகம் வைத்திருக்கிறேன்.  சிலர்  அப்பா  அம்மா முகத்தையே, பேரையே மறந்துவிடுகிறார்கள்.  

++
பரசுராம பாரதியின் ஜேஷ்ட புத்திரன் ராமஸ்வாமி பாரதி அப்பாவைப்போலவே வாக் பலிதம் பெற்றவர் ஆகிவிட்டார். சிறந்த  ராம பக்தரான  ராமஸ்வாமி பாரதி சொன்னது நடக்கும் என்று சாத்தனூர் வேளாண் குடி மக்கள் நம்பி வந்தனர். கல்யாணங்களுக்கு நடத்திக்கொடுப்பதில் வரும் வருமானம் தவிர சரஸ்வதி சம்பாவனை வரும்படி, ஊர்காரர்களுக்கு அறிவுரை சொல்வதில் கிடைப்பது, ஊரார் விட்ட மானியம் ''ஏத்துக்கு ஒரு குறுணி '' யில் கிடைத்த உணவு தானியங்கள் எதேஷ்டமாக அவர் குடும்பத்துக்கு உதவியது.

சாத்தனூரில்  செக்கான் சாமிநாதன் என்று ஒருவன் வாணியன், எண்ணெய் ஆட்டும் செக்கு வைத்திருந்தான். படுகையில் நிறைய எள்ளு விதைத்து நல்ல போகம். ஆனால் ஊர் பஞ்சாயத்து கட்டுப்பாட்டின் படி  எந்த வருஷமும்  பரசுராம பாரதி குடும்பத்துக்கு  ''ஏத்துக்கு ஒரு குறுணி எள்ளு'' கொடுக்கவில்லை.  தீர்மானம் செய்த பிறகு  ரெண்டாவது வருஷமும் கொடுக்கவில்லை.

ராமசாமி பாரதி ஒருநாள் அவனை ஊர் கிணற்றருகே பார்த்து விட்டார். அவன் எண்ணெய் விற்பதற்காக , எண்ணெய் நிரம்பிய பீப்பா வண்டியை தள்ளிக்கொண்டு வந்தான்.

'' சாமிநாதா,  என்னப்பா  சம்பாவனை, தண்டம்,  ரெண்டு வருஷமாக நீ எனக்கு தரலே'' என்று சாதாரணமாக கேட்டார் ராமஸ்வாமி பாரதி.

''நிலமை சரியில்லே சாமி. அப்பாலே தாரேன், எங்கே போவுது பாக்கி. அதுக்கின்னா இப்போ'' என்று அலட்சியமாக சொல்லிவிட்டு போனான். பாரதி மறுவார்த்தை பேசவில்லை.

பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்திருக்கும்போது வெகுநாள் கழித்து செக்கான் அந்த பக்கமாக போனான்.

''சாமிநாதா '' என்று கூப்பிட்டும் காது கேளாததுமாதிரி பார்த்தும் பார்க்காமல் அலட்சியமாக போனான். ராமஸ்வாமி பாரதி சாந்த குணம் கொண்டவரானாலும் வேண்டுமென்றே அலட்சியம் பண்ணியதால்   மனம் நொந்தது.  புறப்பட்டது.   சாமிநாதன் நடவடிக்கைஅவருக்கும் மனம் வருத்தத்தை தந்தது.   நான் என்ன கேட்டுவிட்டேன் இப்படி என்னை அலட்சியம் பேணுவதற்கு. ஊரார் உதவுவதை தானே  ஞாபகப்படுத்தினேன்''. 

இது நடந்தபோது  ராமஸ்வாமி பாரதி  காலாட்டி  சோழகர்  வீட்டு  திண்ணைப் பள்ளிக் கூடத்திலி ருந்தார்.    அங்கிருந்தபடியே  அப்போது அவர் ஒரு  கவி பாடினார்:

'' வாரேன் என்றான் வரவில்லை
தாரேன் என்றான் தரவில்லை
சேரான் செக்கான் சாமிநாதன்
பாராக் கண்கள் படைத்தானே ''

இயல்பாக அவன் பாராதது போல் சென்றதைப்பற்றி அவர்  வருந்தி பாடினார்  தவிர  சாபமிடவில்லை.   இது நடந்து  சில நாள் கூட ஆகவில்லை. திடீரென்று ஒரு நாள் செக்கான் சாமிநாதனுக்கு  திடீரென்று இரு கண்களிலும்  பார்வை இழந்தது.  அவ்வூர் ஜனங்கள் இது பாரதியின் வாக்கு பலன் என்று  ஜாடை மாடையாக, ஏன்  வெளிப்படையாக  கூட   பேசிக்கொண்டார்கள்.  சாமிநாதன் செந்திய தவறுக்கு  கடவுள் கொடுத்த தண்டனை  என்றார்கள் .   ஊரெங்கும்  சாமிநாதன் கண் பார்வை  பேச்சு தான்.

சாமிநாதன் எங்கெங்கோ அலைந்து பல வைத்தியங்கள் பண்ணிப் பார்த்தும் குணமில்லை. தான் செய்த தப்பு அவனுக்கு உரைத்தது. எள்ளும் எண்ணையும் அதிகமாகவே கொண்டு வந்து ராமசாமி பாரதியிடம் கொடுத்தான் . ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஊர் ஜனங்களுக்கு அவர் மேல் இருந்த மதிப்பும் பக்தியும் இந்த சம்பவத்திற்குப் பிறகு ரொம்ப அதிகமாயிற்று.

சாமிநாதன் எண்ணைக்கடை சாத்தனூரிலிருந்து மகாராஜபுரம் போகும் வழியில் இருந்ததாம். சில காலத்தில் அவனுக்கு ஒரு பிள்ளை பிறந்தது. துரதிர்ஷ்ட வசமாக அந்த குழந்தைக்கும் பிறவியிலிருந்தே பார்வை இல்லை என்பார்கள்.

எங்கள் தாத்தா வசிஷ்ட பாரதியார் 85- 90 வருஷங்களுக்கு முன்னர் ஒரு முறை சாத்தனூர்  சென்றபோது 
சாமிநாதனின்  எண்ணைக்கடை  சாத்தனூரிலிருந்து  மகாராஜபுரம் போகும்  வழியில்  இருந்ததாக  அறிந்தார்.   சில காலத்தில் அவனுக்கு  ஒரு  பிள்ளை  பிறந்தது.  துரதிர்ஷ்ட வசமாக  அந்த  குழந்தைக்கும்  பிறவியிலிருந்தே  பார்வை  இல்லை.  இந்த  விவரம் ஊர்க்காரர்களிடமிருந்து சேகரித்து  தந்திருக்கிறார்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...