Thursday, December 24, 2020

HUNGER AND THIRST

 



 
      பசியும் நீரும்   J K .SIVAN 


உலகத்திலேயே  முதல் பணக்காரனாகட்டும், பலநாள் பிச்சையெடுத்து வாழ்பவனானாலும்  பசி தாகம்  அறியாதவன் கிடையாது.  அந்த நேரத்தில் அவனுக்கு கிடைக்கிறதா என்பது தான் வித்யாசம், கிடைத்தாலும் என்ன, எது கிடைக்கிறது என்பதும் வித்யாசம்.  இந்த உடலைப்படைத்தவன் உள்ளே பசி தாகமும் வைத்திருக்கிறான்.

பொழுது விடிந்தால் எங்கும்  பசி பற்றியே செய்தி.  குழந்தையை விற்கும் தாய்.  மகனைக் கொண்ட தாய். தந்தையை சகோதர சகோதரியை கொன்றவன். எல்லாம் எதோ தேவையை பூர்த்தி செயகிற நோக்கத்துடன் தானே. பணப்பசி, பேராசை என்பதே  தீராத பசி.  உடல் பசி இருக்கும் ஈனப்பிறவிகள் ஒருபக்கம் இருப்பதைப்  போலவே சில ஞானப்பசி  கொண்ட யோகிகளும் இருக்கிறார்கள். .  

எப்போதுமே  பொருள் தேடி  வாழ்வே  முடிந்தவர்கள் பலர்.  வாழ்வில் ''சேர்த்த பொருளை சிக்கனமா செலவு செய்ய பக்குவமா அம்மா கையிலே  கொடுக்காம யார் யாரோ அய்யாக்கள் கணக்கில் எங்கெங்கோ போட்டுவிட்டு  முதலுக்கு மோசமாகி   போலீசுக்கும்  கோர்ட்டுக்கும்  அலைவதும் தெரிந்ததும்  தான்.  பத்திரிகைகள்  நிறைய செயதியும் படமும்  போடுகிறது.  எனக்கும்    ஐம்பது  நூறு  வருஷ  நம்பிக்கையான  நிறுவனங்களை  ''நம்பி''   சேர்த்த பணத்தை  ''எதிர்கால'' சுக வாழ்வுக்காக கொடுத்துவிட்டு   ''இப்போதே''   தெருத்தெருவாக  அலைந்த அனுபவம் உண்டு. ருசியை லக்ஷியம் செய்யாமல் பசித்த வேளைக்கு சிறிது உணவு  போதும் என்று திருப்திப்படுபவன் உலகிலேயே பெரும் தனவந்தன். 

 உப்பு  தின்னவன்  தண்ணி குடிப்பது பழைய வாக்கு எல்லோருக்கும் தெரிந்தது.  தண்ணீர்
 என்றதும் இப்போதைய பத்திரிகை, டிவி செயதி மற்றும் யூ ட்யூப் எல்லாமே  ஏகோபித்து  மனம் திருப்தியளிக்கும் காட்சிகளை  காட்டுவது எழுதுவது எல்லாம்  என்னவென்றால்   நீர் தேக்கங்களில், அணைக்கட்டுகளில் பொங்கி வழியும் நீர்.  அடுத்த கோடையில் தெருவில் தண்ணீர் லாரிகள் அலையாமல் இருக்கும் வரை ரொம்ப சந்தோஷம்.   தண்ணீரை வீணாக்காமல் சேமிக்கவேண்டும். ஆற்றையும்   ஏரியையும் , குளத்தையும்  விழுங்கி கான்க்ரீட் அடுக்கு மாடி  கட்டிடங்கள் தோன்றாமல் இருந்தாலே  புண்ணியம். . மணல் திருடி நீரில்லாமல்  வீடு கட்டி வாழ்ந்து என்ன பயன்.  தவறு செய்த  சமூக விரோதிகள்  யாராக இருந்தாலும்  வேண்டியவர்கள் வேண்டாதவர்கள்  உயர்ந்தவர் தாழ்ந்தவர்  என்று பாராமல் பாரபக்ஷமின்றி  தண்டனை கடுமையாக பெறவேண்டும். பயம் தப்பு செய்ய தூண்டாது.  எல்லோரும்  ஏன் போட்டி போட்டுகொண்டு  தேர்தலில் ஜெயித்து ஆட்சி அமைக்க, பதவியை பிடிக்க  சண்டை போடுகிறார்களே? உண்மையான காரணம் என்ன?  நம்மை  நேர்மையாக ஆளுவதற்கா? நமக்கு நன்மை செய்ய ஆவலா? முட்டாள் தான் இப்படி நம்புவான். நம்மை  கவனத்தை வைத்து உண்மையாகவே  நமக்கு உழைக்க விரும்புவனை அடையாளம் கண்டு  அவனை நியமிக்கவேண்டும்.  பழம் பெருச்சாளிகள் அனுபவம் நமக்கு நிறைய இருக்கிறது.

இன்னுமொரு முக்கிய விஷயம்.  தண்ணீர் வீடுகளில் சேமிக்கப்படவேண்டும் என்ற கட்டுப்பாடு வரவேற்க தக்கது. மழைநீர் அதிகமாக வீணாக கடலில்  கலக்கவேண்டாம்.  போதிய அளவுக்கு மழைநீர் சேமிப்பு ஒவ்வொரு இல்லத்திலும் பூமிக்குள்  செல்லட்டும். மரங்களை செடிகொடிகளை வளர்த்தால் தான் மழையே வரும்.  மரம் வளர்ப்போம். மழை பெறுவோம்.  மகிழ்வோம். வீட்டுக்கு ஒரு செடி தாவரம், மரம்  நடுவோம். 

இந்திய சமுத்திரத்தின் நடுவே சிறு சிறு தீவுகளாக  மாலத்தீவுகள். அவற்றின் தலைநகர் தீவில் நான் பல வருஷங்கள் இருந்த போது  ஒவ்வொரு வீட்டிலும் எப்படி மழைநீர் சேகரித்து உப்புநீர் மலிந்த நடுக்கடல்  பிரதேசத்தில்  குடிநீர் தட்டுப்பாடு  கொஞ்சமும்  இல்லாமல்  வாழ்கிறார்கள், அவர்களோடு நானும் வாழ்ந்தேன் என்று  நினைத்து மகிழ்கிறேன். அருமையான மக்கள். அன்போடு எல்லோருமே பழகியது ஆச்சர்யம். வித்யாசம் தெரியாத மக்கள்.

கஞ்சியானாலும் காய்ச்சி குடி என்று நமது முன்னோர்கள்  டாக்ட்டருக்கு படிக்காமலேயே சொன்னார்கள். எந்த நீரையும் வடிகட்டி காய்ச்சிவிட்டு குடிப்போம். வெந்நீர் குடிப்பது எவ்வளவு சுகம்,  நல்லது என்று நான்  அனுபவத்தில் கண்ட உண்மை. கொரோனா காலம் இது.  சூடான வெந்நீர் பற்றி  எங்கும் சொல்கிறார்கள்.  பேசுகிறார்கள். முன்னோர்கள் சொல்லி நாம் மறந்ததை ஞாபகப்படுத்துகிறார்கள்.

தினமும் காலை வெறும் வயிற்றில் ஒன்று இரண்டு லோட்டா  வெந்நீர் தண்ணீர் உள்ளே சென்றால் அது பரம ஒளஷதம். நாம் மூச்சு விட தேவையான  ப்ரணவாயுவுக்கு அடுத்து உயிர் வாழ  நமக்கு அவசியமானது தண்ணீர்.

யாருக்காவது தெரியாமலிருந்தால்  ஒரு நல்ல விஷயம்.   தண்ணீரை  செம்பு குடங்களில், தாமிர பாத்திரங்களில்  சேமித்து வைத்து  தாமிர டம்பளர்களில் குடிக்கவும். முன்னோர்கள் பஞ்ச பாத்ரங்களை எதற்கு தாமிரத்தில் வைத்திருந்தார்கள், அதில் சிறிது நீரை தினமும் மூன்று வேளை  சந்தியாவந்தனம் காயத்ரி மந்திரம் சொல்லும்போது ஆசமனம் செய்தவர்கள் என்று இப்போது புரியலாம். நூறு வயது வரை டாக்டரைத் தெரியாமல் வாழ்ந்தவர்கள்.

மனித உடலுக்கு தாமிரம் இன்றியமையாதது.   கிருமி நாசினி, நோய் கொல்லி.   ஆயுர்வேதம்  தாமிரத்தில் பருகிய நீர் தோஷங்களை நீக்குகிறது என்கிறது.கபம் வாதம் பித்தம் என்ற மூன்று தான் மனிதனை கொல்வன .  தாமிரம் அதை தவிர்க்க உதவுகிறது.  தாமிர  சொம்பு , தவலை யில் ராத்திரி ரொப்பிவைத்த நீரை மறுநாள் குடிக்கும்போது தாமிர சத்து நீரில் இறங்கி நமது உடலுக்குள் சென்று நன்மை அளிக்கிறது.  தாமிர நீர் வயிற்றை குடல்களைக்  கழுவி  சுத்திகரிக்கிறது. தாமிரம்  ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது.  கண் நிறம், முடி, உடல் சருமம் அனைத்தையும்  தாமிரம் நன்றாக பராமரித்து ஒளி கூட்டுகிறது.   உடலில் இரும்பு சத்து கூடுவதற்கு  உதவுகிறது.   மூளை நரம்புகளுக்கு சக்தி அளிப்பதோடு புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. வராமல் தடுக்கிறது. பரமசிவனை  தாமிரவர்ணன் என்று நமஸ்கரிக்கிறோம்.

நான் பள்ளியில் படிக்கும்போது மண் பானையில்  அப்பாதுரை நிரப்பி வைத்திருந்த கிணற்று நீரை  அலுமினியம் டம்பளரில்  நீர் குடித்து வளர்ந்தவன்.  81+ இருக்கிறேனே..

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...