Saturday, December 12, 2020

MY ANCESTORS

 


என் முன்னோர்கள். J K  SIVAN 
     
       

       7    ''பெய்யெனப் பெய்யும் மழை''


ராமஸ்வாமி பாரதி,  வைத்யநாத பாரதி  ரெண்டு  பேருமே   ராம நாடக கீர்த்தனையில் பயிற்சி உள்ளவர்கள். தினமும் அவர்கள் வீட்டு திண்ணையில் சாயந்திரம் ஆனவுடனே பாடுவார்கள். அப்போது ஊரே திரண்டு உட்கார்ந்துவிடும். காலாட்டி சோழகர் ராமஸ்வாமி  பாரதியின் கீர்த்தனைகளில் தன்னையே இழந்து விடுவார்.   ராமஸ்வாமி பாரதி சமஸ்க்ரிதத்தில் கீத கோவிந்தமும் சங்கீத ஞானத்துடன் பாடுவார். ஜெயதேவர் அஷ்டபதி, சதாசிவ ப்ரம்மேந்திரா கிருதிகள் அனைத்துமே தினமும் தனது வீட்டில் பாராயணம் செய்வார். இதற்கெல்லாம் நல்ல ஞாபக சக்தி வேண்டும். அது பயிற்சியில் விட முயற்சியில் தான்  வரும். ஊர் மக்கள் அனைவரும் இரவு பின்னேரம் வரை அமர்ந்து ரசிப்பார்கள்.

உடையார் பாளையத்துக்கும் அவ்வப்போது போய்  ஜமீன்தார்  யுவராங்க பூபதியைப்  பார்த்து விட்டு சிலகாலம் தங்கி பரிசுகள் பெற்று வருவார்கள். பரிசு என்றால்   கொஞ்சம் காசு,   நிறைய   நெல், பருப்பு, காய்கறிகள், எண்ணெய், வஸ்திரங்கள், ஆபரணங்கள்  ஆகியவை.   இதெல்லாம்   மூட்டை கட்டி தலையில்  வைத்து தூக்கிக்கொண்டு பல மைல்கள் நடந்து  வருவது  தான் வழக்கம்.

வீட்டில்  ஜானகிக்கு  ஞானாம்பாள் இல்லாதது  கை ஒடிந்த மாதிரி இருந்தது.  எவ்வளவு சிரித்த முகத்துடன் அவள்  ராமஸ்வாமி பாரதியின்  சடலத்தை அணைத்துக் கொண்டே   எரியும்  தீயில் எல்லோருக்கும்  கையை  ஆட்டி   வாழ்த்தி விட்டு  மறைந்தாள்.   அந்த  காட்சி திரும்ப திரும்ப மனதில் வந்து ஜானகியை படுத்தியது. நோய்வாய்ப்பட்டாள்.   வருஷங்கள்  மூன்று  ஓடிவிட்டது.   ஜானகியும்  இயற்கை  எய்தினாள்.  

ஞானம்மாள் உடன்கட்டை ஏறி மறைந்தபோது  வைத்யநாத பாரதி  சில பாடல்கள் இயற்றினார்.  அதில் ரெண்டு மாத்திரம்  கீழே  தருகிறேன்.

''பூவின் மாமகள் போலும் ஞானம்மாள் 
ஓவு  நாயக னோடுடன் கட்டையில் 
மேவி தீயினில்  மூழ்கி   மேலுல 
காவி தாவவே ,  ஆவி தாவினாள்'' .

''கண்ணென்ன காதலனை காரிகையாள்  தாம் கலந்து 
நண்ணுமொரு  கட்டை யெறி நயந்தவள் தான்  என்னேடி,
நண்ணு மொரு கட்டை எறி  நயந்தாள்   யாரென்னின்  
கண்ணும் என் குலதெய்வம்  ஞானம்மாள் காணேடி''    

வைத்யநாத பாரதிக்கு   ரெண்டு பிள்ளைகள்  மூன்று பெண்கள்.  ஜானகி மறைந்த போது  மூத்தவன்   பரசுராம  பாரதிக்கு  அப்போது  20 வயது.  தம்பி நாகசாமி பாரதிக்கு  15 வயது  ராமநாடக  கீர்த்தனை போன்ற  தமிழ் நூல்களில்  கற்றுச்  சிறந்தார். சங்கீதமும்  கை கொடுத்தது.  ராம நாமமே  அவர்களுக்கு  வாழ்க்கையில்  வழிகாட்டி.  

இத்தகைய  சிறந்த  பக்தர்கள்   யாரையாவது  ஒருவரை  வாழ்த்தினால்  அவர்கள்  சிறந்து வாழ்ந்தனர்.  மனமொடிந்து  சிலரை  கடினமாக  சபித்தால்  அதுவும்  பலித்தது.  பரசுராம  பாரதியை  இப்படி ஒரு சிறந்த  தூய  ராம  பக்தராக, வாக்தேவி  சக்திவாய்ந்த தெய்வமாக சாத்தனூர் கிராம மக்கள் பார்த்தனர். போற்றினர். எவருக்கு  வியாதி வந்தபோதும்,  மாடு கன்றுகளுக்கு  நோய் வந்தாலும்   பரசுராம பாரதி  ராமநாமம்  உச்சரித்து  துளசி ஜலத்தால், சில  சமயங்களில்  வெறுமே  கை நிறைய  மண் எடுத்து கொடுத்தாலும்  வியாதி, நோய் எல்லாம்   குணமாகியதாக   ஊரார்   சொல்வார்கள்.   எந்த மாடு கன்று நோய் வாய்ப் பட்டாலும் அவரிடம்  வந்து  மந்திரித்து, குணமாகியது. இதனால்  அவர் பெயர்  பிரசித்தமாகி  பக்கத்து  ஊர்களில் இருந்தெல்லாம்  மக்கள்  திரண்டனர்.  

அதிகாலையில்  காவேரி  ஸ்நானம் செய்து  நியமங்கள்  முடித்து கம்பராமாயணச் சுவடியோடு உட்கார்ந்துவிடுவார்.   ராம  பாராயணம், பூஜை.   பிறகு  உச்சி வேளையில்  போஜனம்.  பிறகு  தன்னையே   மறந்து  ராமத்யானம்.  அவருக்கு  ராமனின்  தியானம்  '' ரா (இரவு)   மத்யானம்(பகல்)   இருவேளையும்  நடந்தது  என்று சொல்வார்கள் .  இப்படிப்பட்ட   சுத்த ராம பக்தர்   பரசுராம பாரதி. .

 சாத்தனூர்  காவேரிக்கரையில்  மதகடியில் அரசமரத்தருகே   ஒரு பிள்ளையார்  வெயிலிலும் மழையிலும் வானமே கூரையாக  இருந்தார் .  அவருக்கு   ஒரு  சிறு  ஆலயம்  கட்டி  மதகடிப்பிள்ளையார்   என்று  பெயர் சூட்டினார்.  அந்த  பிள்ளையார்  பெயரில்  பஞ்சரத்ன மாலை,  வேறு  சில  பதிகங்கள், எல்லாம்  இயற்றினார்.  பிள்ளைகள்  விளையாட்டுக்காக  மானம்பு பாட்டு,  கோலாட்ட  பாட்டு  எல்லாம் பாடியிருக்கிறார்.  மழைவராவிடில்  பரசுராம பாரதிகளிடம்  விவசாயிகள்  வந்து  முறையிட்டு  அவரை  பிரார்த்திக்க  சொல்வார்கள்.

ஒருசமயம்  புரட்டாசி  வரை  கூட மானம்  பொய்த்து  விட்டது. ஆனி  மாசம்  ஹஸ்த நக்ஷத்ரத்தில்   விதை  விதைத்தால் அமோக  விளைச்சல்  என்று  நம்பிக்கை.   கம்பர்  ராமாயணத்தில்  ''ஏரெழுபது'' எனும்  காவியத்தில்  ''விரை விடு  இலக்கணம் '' எனும்   செய்யுளில்  இதை   கம்ப நாட்டாழ்வார்  விளக்கியிருக்கிறார்.  

 வைகாசி  மாதம்  காவேரியில்  வெள்ளம் வராமலும்   ஆனி ,  ஆடி,  ஆவணி, புரட்டாசி வரைகூட  மேல் மழை  பெய்யவில்லை  என்றால்  வேளாளர்களுக்கும்  சோழகர்களுக்கும்   வயிற்றில் புளி  கரைக்குமே.  ஓடி வருவார்கள்  பரசுராம  பாரதியிடம். வாசல்  நிரம்பிவிடும்.

 ''பாரதி  சாமி,    நீங்க   பாட்டு பாடி   மழை  பெய்ய வைச்சால்  தான்  நாங்க  இஞ்ஜெயிருந்து நவுருவோம்''  என்று கூட்டமாக  வாசலில் அமர்வார்கள்.   எவ்வளவு நம்பிக்கை!    வெய்யில் தான்    ஏறியதே  தவிர  வேளாளர்கள் இடத்தை விட்டு  நகரவே இல்லை.  கண்கள்  ஆர்வமுடன்  நம்பிக்கையோடு  பாரதிகளையே  பார்த்துக்கொண்டிருந்தன.

 வெகுநேரம்  ஆகாயத்தையே கண் கொட்டாமல்  பார்த்துக்கொண்டு   ராமநாமம்  ஜபித்துக்கொண்டிருந்த  த  பரசுராம  பாரதி  ஒரு  கவி  உடனே  இயற்றி  பாடினார்.

''சீராமன்   பாதத்தை சிந்திக்கப்  பெய்யும்  மழை
வாரா  வளங்கள் எல்லாம்  வந்திடுமே  தேறீர்  
நன்மைகள்   யாவும் நாளுக்கு நாள்  பெருகும்
தினமைகள்  ஏதேதும் வாராதே''  

 (இந்த  பாடலை என் அம்மாவழி  தாத்தா  பிரம்மஸ்ரீ  வசிஷ்ட  பாரதிகள்   ஞாபகம்  வைத்திருந்தார்.  அது  நம்முடைய  அதிர்ஷ்டம். )  

 மேற் சொன்ன  பாடலை பரசுராம பாரதி உடனே இயற்றி  பாடியதும்   ' ஸ்ரீ   ராமனின்  கிருபை  என்கிற  மழை,  கருணை மழையாக  பொழியும் , என்  அப்பன்  மதகடி விநாயகன் எங்கே  போனான்? அவன் இதை கவனிப்பான்.  நீங்கள்   யாவரும் மனம்  தளர வேண்டாம். இது  சத்தியம்.  தைரியமாகச்  செல்லுங்கள்.  நம்புங்கள்.   மழை வரும். ''  அந்த மதகடி பிள்ளையார் இன்னும் இருக்கிறாரா என்று  அந்த ஊர்க்காரர் யாரவது சொன்னால் நன்றாக இருக்கும். 

 விடுவிடென்று  கிளம்பினார் பரசுராம  பாரதியார்.  மதகடி பிள்ளையார் ஆலயம்  சென்றார்.  விபூதியைக் குழைத்து  பூசிக்  கொண்டார்.   விநாயக மூர்த்தியை  வலம்  வந்தார்.  மற்றுமொரு வெண்பா பிறந்தது. 

 ''மண்ணுருகப்  பேயும்,  பொன்னுருகக்  காயும்,,  
 மண்ணாளப்  புரட்டாசி என்பது  பிரட்டா?  -சீ  போ
எண்ணுரு   தேதியுமாச்சே  இனிமேல்   எப்படி விரைப்பு?
 எப்படி நாத்து  விடல்?  எப்படியே நடவாகும் ?

அண்ணலே இது  உனக்கு  சம்மதமா?  உந்தன்
           அடிமைகளாம்  குடிகளுரை  சாத்தனூர் அதனில்
பண்ணுரு  செய் பயிர்  தழைக்க  உயிர்களெலாம் செழிக்க
          பக்ஷமுடன் மதகடி வாழ்  கணபதியே  அருள்க.''

அவர்  மழை பெய்யாத  விஷயத்தைச்  சொல்லி,  பெய்யவைக்கும்  பொறுப்பை  மதகடிப்பிள்ளை யாரிடம் தள்ளிவிட்டு   சந்தோஷமாக  வெற்றிலை  போட்டுக்கொண்டு  குடியானவ  ஜனங்களிடம்  பேசிக்  கொண்டிருந்தார்.   வானம்  கருத்தது.  இடி இடித்தது.  கார் மேகங்கள்  நகர்ந்து  வந்தன. ஒரு நாழிகை  நேரம்  மழை கொட்டோ கொட்டு என்று  மண்வாசனை நிறக்க  மழை பெய்தது.   மழையில் நனைந்து கொண்டே  கம்பர்  இயற்றிய  ராமாயண  பாலகாண்ட   திரு அவதார படலத்தில் ஒரு செய்யுளை  பரசுராம பாரதி  பாடினார்.  சோழகர்கள் கேட்டார்களோ  இல்லையோ, வருணன் இந்த செய்யுளைக் கேட்டு உடனே  ஜோவென்று மழை பொழிய ஆரம்பித்தது.   அந்த செய்யுள் 

''வளநகர் முனிவரன் வருமுன், வானவன்
களன் அமர் கடு எனக் கருகி, வான் முகில்,
சள சள என மழைத் தாரை கான்றன-
குளனொடு நதிகள் தம் மேற்கொள் தீரவே.  

அதாவது  '' கலைக்கோட்டு மாமுனி  (ரிஷ்ய ஸ்ரிங்கர் ) வரவால் அங்க தேசத்தில்  மழை பொழிந்து வறுமை  நீங்கியவாறு''   நமது ஊர்  சாத்தனூரில்  இங்கும்  மழை  பெய்யும்.. ஒரு குறைவு மில்லை. போய் வயலில்    விரை  விடுங்கள் '' என்று  குடியானவர்களை சந்தோஷத்தோடு அனுப்பினார்.  

 அந்த வருஷம்  அமோக விளைச்சல்.  ஊர்  மக்கள் கூடி  பொதுவில்  ''கோவிலடி செய்'' என்ற  பெயரில் ஒரு பெரிய ''செய்"  (நன்செய்,  புன்செய்" மாதிரி நிலம்) அதன் பக்கத்தில் வேறு  சில  நிலங்களும் ஊர்ப் பொதுவில்  ''பாரதி மானியம்'' என்று   அவருக்கு  ஒதுக்கினார்கள்.

 இந்த  நிலம்  வெகுகாலம்  அவர் குடும்ப  அனுபவத்தில்  இருந்து வந்தது.   வருஷா வருஷம்   கறவைப் 
பசுவும்,விளைச்சலில்  பங்கும்  அவர்  குடும்பத்தை  வந்தடைந்தது.

அடுத்து  எழுதுகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...