Thursday, December 31, 2020

sakkarai ammal

 



சக்கரை அம்மாள்   J K  SIVAN 

           3.  ப்ரம்மஞானி  ஸ்வாமினி 

சக்கரை அம்மாளுக்கு  அப்பா அம்மா வைத்த பெயர்  அனந்தாம்பாள் . வந்தவாசி போளூர் பக்கம்  இருக்கும்  தேவிகாபுரம் பிறந்த  ஊர். அப்பா  உள்ளூர்  பெரிய நாயகி அம்மன் கோவில்  அர்ச்சகர்.   சின்ன வயதிலேயே  அம்மா போய்ட்டாள்.  சித்தியின்  வளர்ப்பு. .அனந்தம்பாளை  எப்போதும்  பெரியநாயகி கோவிலில் பார்க்கலாம்.  கற்பகிரஹத்தையே  உற்றுப் பார்த்து க்

கொண்டு  நேரம் போவது தெரியாமலே  உட்கார்ந்து இருப்பாள். 

அப்பா அர்ச்சகராக  இருந்த  பெரியநாயகி கோவில்  வீட்டுக்கு பக்கத்திலேயே இருந்தது.  ஆகவே   கேட்கவேண்டுமா?. எப்போது வேண்டுமானாலும்  ஓடுவாள்.   அம்பாளையே  உற்றுபார்ப்பது ஒரு பழக்கமாகி விட்டது.  அப்பா  சொல்லிக்கொடுத்த   ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டே இருப்பாள்.   பால்ய  விவாகம். 8 வயதிலேயே நடந்து 20 வயதில் கணவனை  இழந்த  இளம் விதவையாகி விட்டாள் .  கோமளீஸ்வரன்பேட்டையில் கணவன் வீட்டில்  வாசம்.  தலை மொட்டையடிக்கப்பட்டு  காவிஉடை .கோமளீஸ்வரன் கோவிலே கதி.  இனி அவள் தேவையில்லை என்று  கணவன் வீட்டார்  அவளை தேவிகாபுரத்துக்கு பெற்றோர் வீட்டுக்கு  அனுப்பி விட்டார்கள்.   

 அருகே  ஒரு சின்ன  மலை.  நக்ஷத்ர மலை என்று பெயர். அதில் ஒரு  ஸ்வாமினி எப்போதும் சக்தி உபாசகியாக வாழ்ந்து வந்தாள் .  நக்ஷத்ர குணாம்பாள் என்பார்கள்.  நெருப்போடு பஞ்சு சேர்ந்து விட்டது.    குணாம்பாள் சிஷ்யையாகி, அம்பாள் உபாசனை பெற்றுக்கொண்டாள் .   அனந்தாம்பாளுக்கு குணாம்பாளிடம் தனி ஈடுபாடு ஏற்பட்டது, அதே போல் குணாம்பாளுக்கும் அனந்தாம்பாளிடம் தனி ஈடுபாடு ஏற்பட்டது. அவளைத் தன்   குழந்தையைப் போல் நடத்தினாள். தான் மீண்டும் சென்னைக்கு செல்ல வேண்டி வந்தபோது, இனி நான் எப்படி உங்களை நினைத்த போதெல்லாம் சந்திக்க முடியும்என்று ஏக்கத்துடன் அனந்தாம்பாள்  அழுதுகொண்டே  கூறினாள்  

''நீ  கவலையே  பட  வேண்டாம் பெண்ணே,   நீ எப்போதெல்லாம்  விரும்புகிறாயோ அப்போதெல் லாம்  வந்து  என்னைக் காணலாம், நீ  வேறு   யாரைக் காண விரும்பினாலும்  பறந்து சென்று  காணலாம்''

அஷ்டமா சித்திகளில்  ஒன்றான 'லஹி மா' வால்   உடலை  லகுவாக்கி கொண்டு வானில் பறவை போல் பறக்க முடியும்.    அதை   அனந்தாம்பாளுக்கு  குரு  குணாம்பாள்  அருளினாள் .

குணாம்பாளுக்கு  தனது இறுதி   உறுதியாகிவிட்டது  என  தெரிந்ததும்  சமாதி அடையும் முன் அனந்தாம்பாளின்  பக்தியை மெச்சி தன் ஆன்மீக ஆற்றல் முழுவதையும் அவளுக்கு செலுத்திவிட்ட பின்பே   சமாதி அடைந்தாள். 

 பின்னொரு காலத்தில்  அனந்தாம்பாள்   ''நான் தான் நட்சத்திர குணாம்பாள்''  என்று வெளிப்ப டுத்தி இருக்கிறார்.    ஸ்ரீ சக்ர  உபாசனையும்  உபதேசம் செய்தாள்.

அப்போது  போளூர் பக்கம்  விடோபா ஸ்வாமிகள் வாழ்ந்து வந்தார். இவரைப் பற்றி என்னுடைய  ''ஒரு அற்புத  ஞானி'' புத்தகத்தில் விவவரமாக எழுதியிருக்கிறேன்.  அவரை தரிசித்து  ஆசி பெற்றாள் அனந்தாம்பாள்.   அவளுக்கு  கிடைத்த  இன்னொரு பாக்யம்  ஜீவன்முக்தர்  அடிமுடி சித்தரின் சந்திப்பு.   அவரை உபசரித்து  ஆசி பெற்றவர்.  இந்த  அடிமுடி சித்தர்  திருவண்ணா மலையில் நாம்  வழிபடும்  கிரிவலப்பாதை அமைத்தவர். அவரைப்பற்றி ஆச்சர்யமான  விஷயங்கள் இருக்கிறது. ஒரு தனிக்கட்டுரை எழுதி இருக்கிறேன்..

அனந்தாம்பாள் பறவை போல் வானில் பறந்து செல்வதைப் பலரும் பார்த்துள்ளனர். அவர்களுள் தமிழறிஞரும் தேசபக்தருமான தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார் 'உள்ளொளி' என்ற தலைப்பில் தமது நூல் ஒன்றில்  எழுதியது:

''சென்னை கோமளீச்சுவரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலம் சென்ற மருத்துவர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் (இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரி) மாடியில் பறந்து வந்து நின்றார். மானுடம் பறக்கின்றது என்றால் விந்தையல்லவா? அக்காலத்தில் சென்னையில் வசித்த விஞ்ஞானிகள் பலர் சூழ்ந்து கொண்டு அம்மையார் நிலையை ஆராய்ந்தனர். அப்போது சென்னை மியூசியத் தலைவராக இருந்த ஓர் ஐரோப்பியரால் (எட்கர் தர்சுடன்) பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தில் சேர்ந்தவர் என்றும், அவரிடம பறவைக்குரிய கருவி காரண அமைப்புகள் சில உள்ளன என்றும், கூர்தல் அறப்படி (evolution) அத்தகைய பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்று அவரால் விளக்கப்பட்டது.

Dr  Edgar Thurston:  after examining the facts connected with the flying ability of  Sakkarai Ammal  gave his opinion as follows: 
''... some humans rarely possess inbuilt mechanism of wings and Sri Sakkarai Amma was one bestowed with that kind of mechanism!.....

அவர் விளக்கம் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நான் தேசபக்தன் ஆசிரியராக இருந்தபோது நஞ்சுண்ட ராவுடன் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. அமரர் ராவ் அவர்கள், அம்மா சித்தர் இனத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னார். 

சமீபத்தில்  வாட்ஸாப்பில்   சிலர்  ஒரு வீடியோக்களை வெளியிட்டிருந்தார்கள்.  யாரோ  கருப்பாக  ஒரு  உருவம்  திருவண்ணாமலையில் ஒரு  அமர்ந்திருக்கிறது...  திடீரென்று அந்த உருவம் பறந்து சென்று மறைகிறது.....  இன்னொரு  வீடியோவில் ஒரு துறவி  அமர்ந்து, அசையாமல் தியானம் செய்த்துக்கொண்டிருக்கிறார்.... அடுத்த சில வினாடிகளில் பறந்து மறைகிறார்... அவர் இருந்த சுவடே தெரியவில்லை....  நமக்கு தெரியாததால், நாம்  அறியாததால் சில உண்மைகளை அப்பட்டமான பொய்,  ஜிகினா வித்தை என்று சொல்லிவிட முடியாது.

போளூரிலிருந்து கோமளீச்சுவரன் பேட்டைக்கு திரும்பியதும் அனந்தாம்பாள் தன் வீட்டு மொட்டை மாடித் திண்ணையில்   விடாது முன்னினும் அதிகமாக  தியானத்தில்  ஈடுபட்டாள் . தன் உலகக் கடமைகளை எல்லாம் மறந்தாள், நீரும் உண்டியும் கொள்வது கூட  எப்போவாவது தான்.  ''பாவம் இளம் வயதிலேயே  கணவனை இழந்ததால்  பிச்சியாகி விட்டாள்'' என்றனர் . மாடியில் உள்ள சிறிய அறையில் அவளுக்காக சிறிது நீரும் சோறும் வைத்துவிடுவார்கள் அவ்வளவே.

பத்தாண்டுகள் இடைவிடாத ஸ்ரீ சக்ர வழிபாட்டினால் நட்சத்திர குணாம்பாள் சொல்லி இருந்தபடி ஆனந்தம் எய்தும் அந்த நாள் வந்தது. திடீரென்று, அவள் கண்கள் கூசும்படி ஒள்ளிய ஒளி வட்டத்தின் கதிர்களால் அனந்தாம்பாள் சூழப்பட்டாள். தானே எரிந்து ஒளிர்வதைப் போன்ற உணர்வை இது  அவளுக்கு தந்தது.  பேரின்பப் பெருவெளியில் மிதந்து  சதா  களிப்பான  நிலையில் காணப்பட்டாள். மகிழ்ச்சியில் வாய்விட்டு கட்டுக்கடங்காமல்   ''ஹா ஹா''  எனசிரிப்பாள்.   சிரிப்பது  அவளது  பண்பாகிப் போனது. இதைப் பார்க்கும் மடத்து மக்களும் உறவினரும் அவளை ஒரு பிச்சி என்று  கருதினர். இதன் பின் பல சித்திகளை அனந்தாம்பாள் அடைந்தாள். இனி அவள்  அனந்தாம்பாள் இல்லை.  ஸ்ரீ சக்ர  உபாசகி ஞானி ஸ்வாமினி சக்கரத்தம்மாள், ஆனால்  பின்னர் காலப்போக்கில்  சக்கரை அம்மாள் ஆனவள். 

போளூரில் இருந்து கோமளீஸ்வரன் பேட்டைக்கு திரும்பிவரும் போது அனந்தாம்பாளின் உடன்பிறப்பான அருணாசலமும் உடன்வந்தார். 

கோமளீஸ்வரன் பேட்டை  எண்ணற்ற  மோட்டார் வாகன உதிரி பொருள்கள்  விற்கும்  காயலாங்கடை என்ற பெயரோடு தெருவின் இரு மருங்கும்  சிறு  சிறு  முஸ்லீம் வியாபாரிகளின் கடைகளுக்கு இடையே  மறைந்திருக்கும் பழம் பெரும் புனித ஸ்தலம்.  நான் அங்கே  சில வருஷங்கள் வாழ்ந்த பாக்கியசாலி. தினமும் சந்த்ரபானு தெரு மூக்கில்  ராமர்  கோவில் இருந்தது  அதற்கும்  கோமளீஸ்வரன் ஆலயத்துக்கும் செல்வேன்.  என் தெரு அருகே   மங்களூர்க்கார  (ஒருவேளை  நஞ்சுண்டராவ்  வம்சாவழியினரோ?)  பய்  PAI   என்று ஒருவர்  நடத்திய  டிஸ்பென்சரிக்கு சென்று இருக்கிறேன்.  அப்போதுஎனக்கு   சக்கரை அம்மாளை பற்றி தெரியாது. 

அருணாச்சலம் என்ற  சக்கரை அம்மாள் உறவினர் தக்க வாரிசு இல்லாமையால் அவரே மடத்திற்கு தலைவராகி ஆண்டுகள் உருண்டோடின. அருணாசலத்திற்கு உடல்நலம் குன்றியதால் மருத்துவர் திரு M.C. நஞ்சுண்டராவ் அவருக்கு மருத்துவம் பார்க்க மடத்திற்கு வந்து போய்க் கொண்டிருந்தார். ஒருமுறை அவர் மருத்துவம் பார்க்க வந்திருந்த போது 

''மாடியில் இருந்து  தொடர்ந்து  யாரோ  உரக்க  சிரிக்கிறார்களே  யார்?''  என்கிறார்.
''பித்துபிடித்த பெண் ஒருத்தி  மாடியில் இருக்கிறாள். வேளை கெட்ட வேளையில்
 அர்த்தமில்லாமல்  கடுஒலியுடன் சிரிக்கிறாள்  என்ன பண்ணுவது?'' என்று  அந்த உறவினர் சொன்னார்.

டாக்டர்  நஞ்சுண்டராவ் ஒரு தேசபக்தர் மட்டுமல்ல, ஆன்மீக  ஈடுபாடு கொண்டவர், சமூக னால பிரியர்.  ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்பவர். சக்கரை அம்மாள் மேல்  பரிதாபமும், பரிவும் கொண்டு   சக்கரை அம்மாளை  கவனிக்க தொடங்கினார்.  

 ஒரு சமயம் ஒருபோது ஆனந்தாம்பாள் கோமளீச்சுவரன் கோவில் வாயிலில் தரையில் அமர்ந்து கொண்டு வருவோரை எல்லாம் பார்த்து  சக்கரை அம்மாள்   சிரித்து கொண்டிருந்தார்.  டாக்டர் ராவ்  அவரை அணுகி மெல்லிய குரலில் 

''ஏன்? இப்படி சிரித்துக் கொண்டே இருக்கிறீர்கள்?''என கேட்டார். 

சிரிப்பை உடனே நிறுத்திய ஆனந்தாம்பாள், 'மகனே! ஆன்மாவிற்கு எந்நேரமும் ஆனந்தமாய் இருப்பதுவே அதன் இயல்பு. இன்பமும் துன்பமும் பரு உடலையும் நுண் உடலையும் பாதிக்கு மேயன்றி ஆன்மாவைப் பாதிப்பதில்லை. நீ உடம்பு அல்ல, நீ உடலுக்குள் இருக்கின்றாய். இதுவே உண்மை. உடலுக்கு எது நடந்தாலும் அது தற்காலிகமானதே. அதுவே ஆன்மா என்று உன்னை உன் உடலோடு தொடர்பு படுத்திக் கொள்ளாதே. ஆன்மா எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கும். இதை உணராமல் இன்ப துன்பத்தில் உழன்று சலிப்புறும் மனிதர்களைப் பார்த்துத் தான் சிரிக்கின்றேன்' என்றார்.

இவர்  பைத்தியம் இல்லை. எழுத்தறிவில்லாவிட்டாலும்  அவர்   ப்ரம்ம  ஞானி  என்பதை நஞ்சுண்ட ராவ் புரிந்துகொண்டார்.  அம்மாவுடன் பேசியதில் அவர்  உயர்ந்த நிலை  ஸ்ரீ சக்ர உபாசனை பெற்று பக்குவம் அடைந்தவர் என்பதையும் தெரிந்து கொண்டார்.   வெகு சீக்கிரம் டாக்டர்  சக்கரை அம்மா . சக்கரம்மா என்று  எல்லோரும் அவளை   அழைத்தார்கள்.  டாக்டரும் அப்படியே  கூப்பிடுவார்.  மிகப் பிரபலமான  டாக்டர் நஞ்சுண்டராவ்   சக்கரம்மா  என்று   அழைக்க ஆரம்பித்ததும் அனைவருக்கும்  அவள்  நாலாவட்டத்தில்   சக்கரை அம்மாள் ஆனாள் .   எண்ணற்றோர்  அவள் பக்தர்களானார்கள்.   சுவாமி விவேகானந்தர், சேஷாத்ரி  சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், அடிமுடிப் பரதேசி, விட்டோபா ஆகியோரை சக்கரை அம்மா கண்டு வணங்கியுள்ளார்.

டாக்டர்  நஞ்சுண்ட ராவ் சக்ர அம்மாவை காசி உள்ளிட்ட பல திருத்தலங்களுக்கு தம்மோடு அழைத்துச் சென்றுள்ளார். திருவண்ணாமலைக்கு  அழைத்துக் கொண்டு போன போது கந்தாசிரமத்தில் சக்கரை அம்மா ரமணரை சந்தித்து வணங்கினார். சக்கரை அம்மாவை பற்றி பின்பு உயர்வாக தமது  பக்தர்களிடம்  பகவான்  ரமணர் பேசியதை திரு. ஏ. தேவராஜ
 முதலியார் எனும்  பக்தர் ''அனுதினமும் ரமணருடன்''  என்ற தனது  நூலில் சில சித்திகளைப் பெற்ற சக்கரை அம்மா டாக்டர்  நஞ்சுண்டராவுடன் ரமணரை விருபாக்ஷி  குகையில் சந்தித்ததை   எழுதியுள்ளார்.

சக்கரை அம்மா 1901ல் திருவான்மீயூர் மருந்தீசுவரர் கோவிலில் சிவனை வணங்கிவிட்டு திரிபுரசுந்தரி சன்னதிக்கு வந்தார்.  அம்பாளிடம்  பக்தர்களை  கை  காட்டி  ''அம்மா என்னுடைய இந்த குழந்தைகளை இனிமேல்   உன்னிடம் ஒப்படைக்கிறேன் அவர்களுக்கு நீ முக்தி கொடுக்க வேண்டும்'' என்று வேண்டினார். டாக்டரோடு  திரும்பி  வரும் வழியில்   ஒரு  சவுக்கு மரத்தோப்பு கண்ணில் பட்டது.  ''நீ  இதை வாங்கு.  இந்த தோப்பில்  என்னை அடக்கம் செய். விரைவில் இங்கே ஒரு சமாதி எழுப்பு.  இங்கிருந்துகொண்டே  எல்லோரையும் நான்  காப்பேன்'' 

அதற்கு பிறகு  பத்தே நாள்  1901 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று மாலை 3.30 மணிக்கு தமது 47 ஆம் வயதில்  கோமளீச்சுவரன் பேட்டை மடத்தில் சக்கரை அம்மா பூவுடலை நீத்தார்.   அவரது உடல் அங்கிருந்து  டாக்டர்  நஞ்சுண்டரா வினால்  திருவான்மியூருக்கு கொண்டு வரப்பட்டு அவர் சுட்டிக் காட்டிய   நஞ்சுண்டராவால் விலைக்கு  வாங்கப்பட்ட  சவுக்கு தோப்பில்   நல்லடக்கம்  செய்யப்பட்டு சமாதி உருவாகியது.   அதற்கு மேல் ஒரு சிறிய  கோவில்.  2001 ல் மீண்டும் கோவில் புனருத்தாரணம்  2002 கும்பாபிஷேகம் நடந்து  எண்ணற்ற பக்தர்கள்  ஸ்ரீ  சக்ரம்மாவை தரிசித்து   அருள் பெறுகிறார்கள்.  

டாக்டர்  நஞ்சுண்டராவ்  தமது டயரியில்  சக்ரம்மாவின்  அபூர்வ  ஞானம், சக்தி, சித்திகள் மஹிமை பற்றி எல்லாம்  எழுதி உள்ளார்.  டாக்டர் ராவ்,  விவேகானந்தர், மஹாகவி பாரதியார், அன்னி  பெசன்ட், ராஜாஜி,  வவேசு ஐயர் ,  சி.பி. இராமசாமி ஐயர் ஆகியோரின் நண்பர். அவர் இறந்த பின் சக்ர  அம்மா சமாதிக்கு அருகே அவரது  சமாதியும்  வைத்தார்கள்.

காஞ்சி மஹா பெரியவா 1948 ஆம் ஆண்டு  ஜனவரியில்  ஐந்து நாள்கள் சக்கரை அம்மா சமாதியில் உட்கார்ந்து  த்யானம் செய்திருக்கிறார்.    டாக்டர்  நஞ்சுண்டராவிடம்  மஹாபெரியவா  ஒருமுறை '' சக்ரத்தம்மா சமாதி ஆலயம் ஒரு மகத்தான சக்தி பீடம். நீங்களும் எல்லோரும் அங்கே தவறாமல் பூஜைகள் செய்யவேண்டும்.'' என்று கூறி இருக்கிறார்.

சக்ரத்தம்மா  சமாதி சென்னை திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா ரோடு,   no  75,  காமராஜ் சாலை ர் சாலை கூடும் இடத்தில் உள்ளது. காலை 6 - 10 மணி வரையும் மாலை 4 - 8 மணி வரையும் திறந்திருக்கும்.





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...