Saturday, December 26, 2020

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்   J K  SIVAN 


              மஹா லக்ஷ்மி  அஷ்ட லக்ஷ்மிகளாக.....  


அழகான  பெண்களைப்பார்த்தால்   ''மஹா லக்ஷ்மி மாதிரி''  என்றால்   காலரைத் தூக்கி விட்டுக் கொள்வார்கள்.  அழகுக்கும் கர்வம்,ஆணவத்திற்கும் ரொம்ப  நெருக்கமான நட்பு.
''மாதிரி'' க்கே இப்படி தலை கனமாகிறது எனும்போது  ''ஒரிஜினல் '' மகாலக்ஷ்மி க்கு  கர்வம் வராதா?   இதை கவனிக்கமாட்டாரா  மஹா விஷ்ணு ?

லக்ஷ்மியின் கர்வம் நீங்க  ஒரு பாடம் கற்பிக்கவேண்டும் என்று தீர்மானித்தார்.   ஒரிஜினல்  தண்டிக்கப்பட்டால் தான்   நகல்கள், மாதிரிகள், திருந்த வாய்ப்பு என்று உணர்ந்து  சாபமிட்டு  லக்ஷ்மி க்கு  உருவமே இல்லை.  திருந்தினாள்  மன்னித்தருள வேண்டி,  சாப  விமோசனத்துக்கு கெஞ்சினாள்.    மஹா விஷ்ணு  ஆணைப்படி, காஞ்சிபுரம்  சென்றாள் .  காமாக்ஷி ஆலய  காயத்ரி  மண்டபத்தில்  அமர்ந்து  உமையை வேண்டி  கடும் தவம் இருந்தாள்.   காமாக்ஷி ப்ரத்யக்ஷமாகி  வரமளிக்க   இழந்த  சௌந்தர்யத்தை பெற்றாள் . இங்கு வரும் எவரும்  சகல சௌபாக்கியங் களுடன் வாழ்வார்கள்’ என அருளினாள் காமாட்சி அம்பாள்.  

இன்றைக்கும் காஞ்சி காமாட்சி அம்பாள் சந்நிதியில் பெறும்  குங்குமப் பிரசாதத்தை, காயத்ரி மண்டபத்தில் உள்ள ஸ்ரீஅரூபலட்சுமியின் மேல் வைத்துவிட்டு, அவளையும் வணங்கி,  பிறகு எடுத்துச் செல்லும் வழக்கம் உண்டு.  இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை?   சக்தி வாய்ந்தவள் காஞ்சி காமாக்ஷி.  மஹா பெரியவா அவள் ஸ்வரூபம். 

கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சி அளிக்கும்   மஹாலக்ஷ்மி  , தனம், தானியம், வெற்றி, நீர், நிலம், காற்று, தீ, உணவு, உடை, உறையுள் ஆகியவற்றில் வாசம் செய்கிறாள். அவல்  சந்திர சகோதரி.  சந்திரனுடன்  பாற்கடலில் பிறந்தவள்.  ஒவ்வொரு பெளர்ணமி திதியும் அவளை  வணங்க உகந்தது. குபேரன் மகாலட்சுமியிடம் ஐஸ்வர்யத்தைப் பெற்ற நாள் சித்திரா பெளர்ணமி.

சென்னை பெசன்ட் நகரில்   நமக்கு அருள் புரிய  அஷ்ட லக்ஷ்மிகளும்  இருக்கிறார்கள்.  லோக க்ஷேமத்துக்காக  சித்ரா  பெளர்ணமியன்று  லட்சார்ச்சனை சிறப்பாக நடைபெறும் .

இப்படி  ஒரு அற்புத கோவில் உருவாக வேண்டும் என்று விரும்பியது  மஹா பெரியவா தான்.   மஹா பெரியவா பக்தரான ஸ்ரீ  முக்கூர் சீனிவாச வரதாச்சாரியார்  முயன்று பெரியவா விருப்பத்தை செயலாக்கி நமக்கு அஷ்ட லக்ஷ்மி  ஆலயம்  கிடைத்தது.   கோவில் வேலைகளின்  
அபிவிருத்தி பற்றி  அவ்வப்போது  காஞ்சி மஹா  பெரியவாளுக்கு முக்கூர் ஸ்வாமிகள்  நேரில் வந்து  தெரிவிப்பார்,  விவரிப்பார்.  

''பெருமாள்  விக்ரஹம் பிரதிஷ்டை  பண்ணிட்டேளா?'

''பெருமாள் விக்ரஹம்  பிரதிஷ்டை  பண்ணலை பெரியவா''

''மஹாலக்ஷ்மி இருக்கும்போது மஹா விஷ்ணு இருக்கணும்.  நான் ஏற்பாடு பண்றேன்''  

பெரியவா  ஸ்தபதி ஒருவரை வரச்செயது   பெருமாள் விக்ரஹம்  வடிக்கச் செய்தார்.   விக்ரஹம்  தயாரானதும்  முக்கூர் சுவாமி  அந்த சிலாரூப  பெருமாளை எடுத்துக்கொண்டு பெரியவாளிடம் சென்று  காட்டினார்.   அப்போது  பெரியவாள் தரிசனத்துக்கு   அங்கே  ஜஸ்டிஸ்  கைலாசம் தம்பதியர்  வந்திருந்தார்கள்.  அவர்களை   முக்கூர் ஸ்வாமிகளுக்கு அறிமுகம் செயது வைத்து விட்டு  

''இவர்  சீக்கிரமே  சுப்ரீம்  கோர்ட் நீதிபதி ஆகப்போகிறவர் ''  என்கிறார்.   தம்பதிகளிடமும்   இந்த லக்ஷ்மி  நாராயணனை  தரிசனம் செய்யுங்கோ. அடிக்கடி  அஷ்ட லக்ஷ்மி  கோவில் போய்ட்டு வாங்கோ ''என்கிறார்.  

அடுத்த வாரமே  கைலாசம் உச்சநீதி மன்ற  நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதாக  செயதி வருகிறது.  இது  எப்படி பெரியவாளுக்கு முன்பே  தெரிந்தது...!! அது தான் மஹா பெரியவா.

 பாற்கடலில்   தோன்றிய மகாலட்சுமிக்கு பெசன்ட்நகரில்  வங்காள விரிகுடா கரையில் கோவில்  பொருத்தம் தான்.  ‘வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை’ மணந்தவள்  அல்லவா?  அவள் கோவில் வங்கக்கடலை பார்த்தவாறு இருக்கிறது.  கடற்கரையில் அவளைத் தனியாக விடலாமா? பெரியவா விருப்பப்படி   லக்ஷ்மிநாராயணர் சந்நிதியும் உள்ளது.   ஆலயம்  ''ஓம்கார'' வடிவம்.

ஆலய  அஷ்டாங்க விமானத்தில் அஷ்ட லக்ஷ்மிகளும்  அருள் பாலிக்கிறார்கள். நல்ல சிற்பக் கலை வேலைப்பாடு கொண்ட  கோவில்.   கோபுரத்தில் ஒரு பக்கம் ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்ரம் சொல்லி மகாலட்சுமி  தங்க நெல்லிக்கனி மழை பொழிந்த காட்சி.. வேதாந்த தேசிகருக்காக   மீண்டும் ஒரு முறை  மகா லக்ஷ்மி  அருளால் தங்கமழை  பொழிந்த காட்சி.

திருப்பாற்கடலைக் கடைந்தபோது, முதலில் தோன்றியதால்   ஆதி லக்ஷ்மி.  தளத்தில் தெற்கு முகமாக அமர்ந்துள்ள ஆதி லக்ஷ்மியின் திருப்பாதத்திற்குக் கீழ் பூரண கும்பம், கண்ணாடி, சாமரம், கொடி, பேரிகை, விளக்கு, ஸ்வஸ்திகம் என்ற அபூர்வ மங்கள அம்சங்கள் அமையப் பெற்றுள்ளன. ஆதி லக்ஷ்மியை வணங்குவதால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் குணமடை வதாக நம்பிக்கை நிலவுகிறது.

பருப்பு வகைகள், உணவுப் பொருட்கள், பழ வகைகள், கீரை வகைகள் ஆகிய அனைத்து வளங்களையும் உருவாக்குபவள் தான்ய லக்ஷ்மி, அன்ன லக்ஷ்மி. கோயிலில் தரைத்தளத்தில் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறாள். சூரியன் பகலில் உற்பத்தி செய்த உணவுகளை அச்சூரியன் மறைந்த நேரத்திலும் காப்பவள்.. பச்சை மாமலை போல் மேனியன்  மஹாவிஷ்ணு.யுள்ளனர். புல், வயல், மரம், மலை  எல்லாமே  பச்சை. அவற்றை அளிக்கும்  தான்ய லக்ஷ்மியும்  பச்சை நிறம், பசிப் பிணி போக்குபவள்.

எண்ணற்ற  இன்னல்களை வாழ்வில் சந்திக்கிறோம்.  அதற்கான மனோ தைரியத்தை அளிக்கும் தைரிய லக்ஷ்மி   தளத்தில் வடக்கு நோக்கி எட்டு கரங்களோடு இருக்கிறாள்.  வலது திருக் கரங்களில் அபயம், சூலம், அம்பு, சக்கரம் . இடது கரங்களில் வரதம், கபாலம், வில், சங்கம்.

இரு புறமும்  யானைகள்  கலசம் ஏந்தித் திருமஞ்சனம் செய்யும்  கஜ லக்ஷ்மிக்கு,  ராஜ லக்ஷ்மி, ,
ஐஸ்வர்ய லக்ஷ்மி  என்றும் பெயர்.  கோயிலில் கிழக்கு நோக்கித் தாமரையில் வீற்றிருக்கிறாள்.

எது இல்லாவிட்டாலும்  புத்ர பாக்யம் வேண்டும். அதை அளிப்பவள் சந்தான லக்ஷ்மி . சடையும்,  க்ரீடமுமாக,  வரத அபயத் திருக்கரங்கள், கத்தி, கேடயம் ஆகிய ஆயுதங்களுடன்  அருள் பாலிப்பவள்.  கன்னிப் பெண்கள் சாமரம் வீசியும் விளக்கினைக் கையில் ஏந்தி உபசரிக் கிறார்கள்.  திருமணபாக்யம், சந்தான பாக்கியம் அளிப்பவள். பித்ரு தோஷம் நீக்குபவள்.

எடுத்த காரியம் யாவிலும் வெற்றி வேண்டுமே .. அதைத்   தருபவள் விஜயலக்ஷ்மி . கோயிலில் மேற்கு முகமாக அன்னப் பறவையின் மீது ஆரோகணித்து,  விஜயலக்ஷ்மி  அனைத்து வெற்றிகளையும் மங்களத்தோடு அளிக்கும் சர்வ மங்களா, நாராயணியாக  அருள் புரிகிறாள். 

செல்வத்துள்  செல்வம்  கல்விச் செல்வம். ஞானம்.  அதை அருள்பவள்  வித்யா லக்ஷ்மி.  ஸரஸ்வதி யை வித்யா லக்ஷ்மி என்போம்.  தரைத் தளத்தில் வடக்கு நோக்கிக் குதிரை வாகனத்துடன் கூடிய தாமரைப் பீடத்தில் வீற்றிருக்கிறாள்.

தனம்  வாழ்க்கைக்கு  இன்றியமையாதது.  வளமையும்  செல்வமும்  வாரி  வழங்குகிற   தன லக்ஷ்மி   ரெண்டாவது  தளத்தில்  கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்கிறாள்.

அஷ்டலக்ஷ்மிகளைத் தவிர கருடாழ்வார், கமல விநாயகர், தசாவதாரம், குருவாயூரப்பன், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், ஆஞ்சனேயர், தன்வந்திரி   தனிச் சந்நிதிகள் உள்ளன.
மொத்தம்  மூன்று மாடிகள் கொண்ட  அஷ்ட லக்ஷ்மி  கோவில்  1974ல்  அடிக்கல் நடப்பட்டு  ஏப்ரல் 1976-ல் அஹோபில மடம்  44வது ஜீயர் வேதாந்த தேசிக யதீந்திர மகாதேசிகனால்  கும்பாபிஷேகம் பெற்றது.   65 அடி நீளம், 45 அடி அகலம்..

அருகே  தானே  இருக்கிறது சென்னையில். முடிந்த போதெல்லாம்  மஹாலக்ஷ்மி தரிசனம் செய்வோம். அஷ்ட லக்ஷ்மிகள்  அருள் பெறுவோம்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...