Tuesday, December 8, 2020

MY ANCESTORS

 


என் முன்னோர்கள்       J K  SIVAN 
                                   
                                                                  என் அற்புதமான தாத்தா                                 

எனது தாய் வழி தாத்தாவை நினைத்தால் இப்படி ஒரு அற்புதமானவரை நாம் அனுபவிக்க முடியாமல் என் சின்னஞ் சிரிய வயதிலேயே அவரை இழந்து விட்டேனே என்று ஏங்க வைக்கிறது.   நான் மட்டும்  என் மாமாக்களை போல் பெரியவனாக இருந்திருந்தால்?? ஒரு வினாடி கூட  அவரை சும்மா  விட்டிருக்க மாட்டேனோ?   என்ன  ஞானம், என்ன தமிழறிவு,   எவ்வளவு  ராம பக்தி,  குடும்பத்தில்  எல்லா குழந்தைகளும் , பிள்ளைகளாகட்டும், பேரன்களாகட்டும்    வெங்கட்ராமன்,  சீதாராமன்,  கல்யாணராமன், ஜெயராமன், சிவராமன், சுந்தரராமன், என்று  ராமர்களாகவே  பெயர் சூட்டப்பட்டு வளர்ந்தவர்கள்.  

 பகவான் ஒரு குறையை கொடுத்தால்  பல நிறைவுகளைத் தந்து அருள்கிறான் என்பது என் தாத்தா விஷயத்தில்  நிரூபணம்.  கண் பார்வை மங்கினாலும், அதனால்  தமிழ் நூல்களை படிக்கமுடியாவிட்டாலும்,  மற்றவர்களை விட்டு  தமிழ் நூல்களைப்  படிக்கவைத்து மனதை  முழுமையாக அவற்றில் செலுத்தி அப்படியே  மனதில்  கல்வெட்டு போல்   இருத்திக் கொண்டு கடல்மடை திறந்தது மாதிரி   ராமாயண, புராண பிரசங்கங்கள்  நிகழ்த்தி  புகழ் பெற்றவர் ப்ரம்ம ஸ்ரீ  புராணசாகரம் வசிஷ்ட பாரதிகள், என் தாத்தா. 

எனக்கு அவரைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்ததே  அவர் தனது வாழ்க்கைக்  குறிப்புகளை  இந்து நேசன் பத்திரிகையில் வெளியிட்டதால் தான்.   ஒவ்வொரு சம்பவத்திலும் வரும்   பெயர், நாள், விஷயம் எல்லாம்  நெட்டுரு போட்டது போல் பளிச்சென்று நினைவு கூர்ந்திருக்கிறார்.  ஆறு  ஏழு தலைமுறைக்கு முந்திய என் முன்னோர்களின் வாழ்க்கை முறையை படம் பிடித்துக் காட்டுகிறது  தாத்தாவின்  ஆட்டோ பயக்ரபி.   autobiography    தமிழகம்  முன்னூறு  நானூறு  வருஷங்களுக்கு முன்   இருந்த நிலை  கண் முன்னால்  கொண்டு நிறுத்துகிறார். 

 அதை, முழுமையாகவோ,  முடிந்தவரையிலோ, என் மாமாக்கள் நகல் எடுத்து வைத்தது  அவர் எழுதியதை விட மிகச்சிறந்த செயல்.  இல்லாவிட்டால்,  எல்லாமே  தெரியாமல் போயிருக்கும்.  முதலில் மாமாக்களுக்கு,  இருந்தவர்கள், இருப்பவர்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம். 

ஒரு மாமாவின் பையன், தாத்தா பெயரை பெருமையுடன் தாங்கி நிற்கும்  வசிஷ்டபாரதி  எனக்கு ஒரு நகல் எடுத்துக் கொள்ள  உதவினான் . அதிலிருந்து தான் தாத்தாவை என்னால்  புரிந்து கொள்ள முடிந்தது. .  புரசைவாக்கம்  வெள்ளாள தெருவில் முதல் சந்தில் , அவர் வாங்கி  புதுப்பித்த இல்லத்தில் அவரது அந்திம காலத்தில் படுக்கையில்  நான் பார்க்கும்போது அருகில் என்னை அழைத்து தலைமுதல் தடவிக்கொடுத்தார் . அவரது ஸ்பரிசத்தால் என்னை  பார்த்தார், நான்  அவரை உணர்ந்தேன்  என்பது  மங்கலாக  ஞாபகம் இருக்கிறது. என் வயது அப்போது  ஐந்தோ ஆறோ ..... அப்புறம் அவரைப்பார்க்க இந்த ஜென்மத்தில் வாய்ப்பில்லாமல் போய்விட்டது . 





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...