Tuesday, December 1, 2020

PESUM DEIVAM

 

பேசும் தெய்வம்: J K SIVAN

விளைவும் காரணமும். CAUSE & EFFECT

எனது பழைய டயரியில் ஒரு பக்கம் புரட்டி னேன். ஆயிற்று 11 வருஷங்கள். அன்றைக்கு நடந்ததை நான் குறித்து வைத்தது இன்று வந்தது போல் நினைவுத்திரையில் பெரிதாக காட்சி தந்தது.
''ம்ருத்யுஞ்சய நாய்டு ஒரு நல்ல நண்பர். வருமான வரி துறையில் பணி செய்து ஒய்வு பெற்றவர். குடும்பமே வீர வைஷ்ணவர்கள் என்றாலும் நாய்டுவுக்கு மஹா பெரியவா மேல் அளவில்லா பக்தி. காலை பார்க் பக்கம் நடக்கும்போது கண்ணில் பட்டார். ''இன்று சாயந்திரம் நாலு மணிக்கு உங்க வீட்டுக்கு வரேன்.'' 74 வயதிலும் சுறுசுறுப்பானவர். சொல்லி வைத்தது போல் ''கன் டைம்'' gun time என்பார்களே அதுபோல் நாலு மணிக்கு கதவை தட்டினார். . ''இன்று உங்களோடு பெரியவா பத்தி தான் பேசப்போகிறேன். இல்லை இல்லை, நீங்க பேசறதை கேக்கப் போறேன்'' என்றார் நாய்டு. பெரியவா பற்றி என்ன பேசுவது என்று யோசிக்கவே வேண்டாம் நாய்டு சார். மஹா பெரியவா தொடாத விஷயமே கிடையாது. எல்லாத்தையுமே ஆராய்ந்து சிந்திச்சு அதுக்கு ஒரு அர்த்தம் சொல்லுவா. அது நமக்கு இதுவரை புலப்படாத, அதீதமாக இருக்கும். இப்படிப்பட்ட ஒன்று தான் இன்று படித்து குறிப்பு எழுதி வைத்தேன். அதை தான் உங்களுடன் பரிமாறி கொள்ள்ளப்போகிறேன்.
"எதைப்பற்றி?
''துக்க பரிஹாரம் ". துக்கம் இல்லாத ஆள் ஒருவனை காட்டமுடியுமா? நாம் அனுபவிக் கும் இன்ப துன்பம் ஒவ்வொன் றுக்கும் யாரோ எதுவோ காரணம் என்கிறோம் அல்லது அப்படி நினைக்கிறோம்? அப்படியென்றால் நாம் காரணம் இல்லையா? இது தான் உலக வழக்கம். ஆனால் உண்மையில் இதை எப்படி பார்க்கவேண்டும் இன்று மஹா பெரியவா சொல்வதைக் கேளுங்கள்:
”ஒருவனுக்கு வியாதி வந்தால், அதற்குப் பலர் பல்வேறு காரணங்கள் சொல்கிறார்கள். தாது வித்தியாசம் என்பார் ஆயுர்வேத வைத்தியர். இங்கிலிஷ் வைத்யத்தில் ஒவ்வொரு டாக்டரு க்கும் வேறு வேறு காரணம் தோன் றும். இன்னொருவர் மந்திரம் மாயம் என்பார். இன்னொறு ஸைகலாஜிகல்
காரணத்தை ஒரு மனோ தத்வ நிபுணர் கூறுவார் . தெய்வக்கோளாறினால் என்பார் ஒருவர். ஜோஸ்யரைப் பொறுத்தவரையில் இன்ன கிரகம் இன்ன இடத்தில் இருப்பதே நோய்க்குக் காரணம் என்பார். தர்ம சாஸ்திர பிரகாரம் பூர்வ கர்ம பலன் ஒன்று தான் காரணம் என்பார் ஒருவர்.
நமது வியாதிகளுக்கு மட்டு ம் அல்ல, வாழ் வின் எல்லா வித சுக துக்கங்களுக்கும் இபடித்தான் எத்தனையோ பலவித காரண ங்கள் சொல்வதுண்டு. ஒரே விஷயத் துக்கு இப்படிப் பல காரணங்கள் சொன்னால் நமக்குக் குழப்பமாயிருக்கிறது அல்லவா?
இதெல்லாம் தீர என்ன வழி, என்ன பரிஹாரம்? சுக துக்கங்களுக்கு ஜோதிஷர் சொல்கிறபடி க்ரஹ ப்ரீதி செய்வதா? அல்லது வேறு ஒரு தெய்வத்துக்கோ கிராம தேவதைக் கோ செய்த அபச்சாரத்துக்காகா அந்த தெய்வம், தேவைதைக்கு சாந்தி பரிகாரம் செய்வதா?
கர்ம பலன் என்றால், அது தீருகிறபோது தானே தீரும் என்று வெறுமே, இருந்துவிடுவதா? இப்படிக் குழப்பம் ஏற்படுகிறது.
இந்த காரணங்களில் எது சத்தியம் என்று யோசித்தால் எல்லாமே சத்தியமாக இருக்கும். ஆதி காரணம் நம் கர்மம்தான் என்பது நிச்சயம். அந்தக் கர்மம் ஒன்றே பலவிதமான விளைவுகளை உண்டாக்குகிறது. மழை ஒன்றுதான். ஆனால் அதிலிருந்தே எத்தனை விளைவுகள் உண்டாகின்றன. பூமி முழுவதும் ஈரம் உண்டாகி . ஈசல் உண்டாகிறது. தவளை கத்துகிறது. செடிகள் பச்சென்று தழைக் கின்றன. வேறு சில அழுகுகின்றன. இத்தனை யும் ஒரே மழைக்கு அடையாளங்கள். அதே மாதிரி மாந்திரீகமாகவும் ஜ்யோதிஷ ரீதி யிலும் வைத்திய சாஸ்திரப்படியும் நாம் குணம் பெற வேண்டிய வியாதிக்கும் ஒரு கர்மாவே காரணம்.
இன்னும் வாழ்க்கையில் வியாதியைத் தவிர, பலவிதமான பிரச்சனைகள், பணத்தால், உத்தியோகத்தால், தேக பலத்தால், அறிவு சக்தியால் கவனிக்க வேண்டிய பிரச்சனைகள் (Problems) எல்லையில்லாமல் இருக்கின்றன. இந்தப் பிரச்சனைகள், கஷ்டங்கள் எல்லா வற்றுக்கும் காரணம் கர்மம்தான். ஸயன்ஸ் படி விளைவு (Effect) இருந்தால் காரணம் (Cause)ஏதாவது ஒன்று இருந்தேயாக வேண்டும். ஜகத் முழுதும் காரணம் - விளைவு, செயல் - பிரதிச் செயல் ( Action and Reaction) என்ற துவந்தத்துக்குள்தான் கட்டுண்டிருக்கிறது.
பௌதிக சாஸ்திரம் ( Physics ) முழுதும் இந்த உண்மைதான் விளங்குகிறது. ஜீவன் பிர பஞ்சம் இரண்டும் ஒரே மூலத்திலிருந்தே வந்ததால் ஜகத்துக்கு உள்ள இந்த விதி மனித மனித வாழ்விலும் உண்டு. நம் செயலுக் கெல்லாம் நிச்சயமாகப் பிரதி உண்டு. இன்று நாம் அநுபவிக்கின்ற சுகங்களுக்கும் கஷ்டங் களுக்கும் காரணம் நாம் முன்பே இந்த ஜன்மாவிலோ, பூர்வ ஜன்மாவிலோ செய்த நல்லது கெட்டதுகள்தான். சில சமயங்களில் நாம் செய்த பாப புண்ணிய விளைவோடு, குறிப்பிட்ட வேறு சிலரது பாப புண்ணிய பலனும் நம்மைச் சேருவதாக சொல்வதுண்டு.
உதாரணமாக, குழந்தைக்கு வியாதி வந்தால், மாதா பிதாவின் பாப பலன் என்பார்கள். அவர்கள் குழந் தைக்கு ஸதா சிசுருஷை செய்வதையும், மனத்தால் அந்தக் குழந்தைக்காக அவர்கள் வேதனைப் படுவதை யும் பார்க்கும்போது இதுவும் நியாயம் என்றே தெரியும். எனக்கு இன்னொன்றுகூடத் தோன்று கிறது. அதாவது, நமக்கு ஒரு கெடுதல் வந்தால் அது நம் சத்துருவின் புண்ணிய பலன் என்றும் சொல்லலாம். பிரபஞ்சத்தின் சகல ஆட்டத்துக்கும் காரணம் ஒரே ஒரு பராசக்திதான். அந்த ஒரே ஈசுவர னுடைய ஆக்ஞைப் படிதான் உலக இயக்கம் முழுதும் நடக்கிறது. அவன் பல விஷயங் களைச் சம்மந்தப்படுத்தி விடுகிறான். இந்த உலகத்தில் எதுவுமே தொடர்பில்லாமல் நடக்கவில்லை. நமக்குச் சம்மந்தமில் லாத வையாகத் தோன்று வதை எல்லாம் உள்ளூறச் சம்பந்தப்படுத்தி வேடிக்கை பார்க்கிறான் சர்வேஸ்வரன். . ஒருவர் செய்கிற கர்மம். அதன் பலன் இவையே மனித வாழ்வின் சுக துக்கங்களுக்கு முதற் காரணம். இதற்கு துணைக்காரணமாக - அல்லது அடையாளமாக அமைவது க்ரஹ சாரம். தெய்வ குற்றம். ஆரோக்கி யக் குறைவு முதலியன. ஜாதக ரீதியில், வைத்திய ரீதியில், மாந்திரீக ரீதியில் அவரவர் எப்படி வேண்டுமானாலும் பரிகாரம் தேடிக் கொள்ளலாம். நம் கர்மா தீருகிறபோது தான் அவை பலன் தரும். பகவான் விட்டவழி என்று பக்தியோடு நம் வாழ்க்கையை ஈஸ்வராப்பணம் செய்து விட்டுப் பேசாமல் கிடைக்கிற பக்குவம் இருந்தால், எல்லாவற் றையும்விட அது சிலாக்கியம். அதுவே பெரிய பரிஹாரம், உண்மையான பரிஹாரம். பூர்வ கர்ம சமாசாரம் எப்படிப் போனாலும் இனிமேலாவது கர்ம பாரம் ஏறாமல் பார்த்துக் கொள்வதே முக்கியம். பழையதற்குப் பரி ஹாரம் தேடுவதைவிட, புதிய சுமை சேராமல், பாபம் பண்ணாமல் வாழ்வதற்கு ஈசுவரத் துணை கொள்வதே முக்கியம். பூர்வ கர்மத்தால் இப்போது ஏற்பட்டுள்ள துக்கத் துக்கும் உண்மைப் பரிஹாரம் ஈசுவர தியானம்தான். இனிமேல் துக்கத்துக்கு விதை போட்டுக் கொள்ளாமல் இருக்கிற உபாயமும் ஈசுவர தியானம்தான். துக்கம் தருவதாக இன்னொரு வஸ்துவே இல்லை என்ற அத்வைத அநுபவம் சித்திப்பதே இதன் முடிந்த முடிவாக துக்க பரிஹார நிலை. அங்கே துக்கமும் இல்லை. சுகமும் இல்லை. இரண்டுக்கும் ஆதாரமான சத்தியம் மட்டும் ஸ்வயம் பிரகாசமாக இருக்கும்.””
எப்படி மஹா பெரியவா சொல்லும் பரிஹார கன்சல்டேஷன்? உடனே நாம் இதை செய்ய வேண்டாமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...