Wednesday, December 30, 2020

SAKKARAI AMMAL

 


சக்கரை அம்மாள்   J K  SIVAN  

                               அடிமுடி சித்தர்  

திருவண்ணாமலை  ஒரு    ரஹஸ்ய சுரங்கம்.  எண்ணற்ற  சித்தர்கள் இன்னும்  அங்கே  நம்  கண்களுக்கு புலப்படாமல்  வாழ்கிறார்கள்  என்று  பக்தர்கள் நம்புகிறார்கள். மற்றவரைப் பற்றி நமக்கு கவலை இல்லை. நமக்கு தெரிந்தது சில சித்தர்கள் பெயர்கள் தான்.  எண்ணற்றவர்கள் பெயர்கள் வெளியே தெரியாமலேயே  மறைந்திருக்கிறது.   அப்படி  அதிகம் தெரியாமல் வாழ்ந்த ஒரு சித்தர்  தான் அடிமுடி சித்தர் .
 

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஒரு துறவி ஒரு சிறு  குடிசை   தானே வேய்ந்து வசித்து, சில சீடர்களுக்கு ஞானம் அளித்து வந்தார்.  மற்றநேரங்களில் தியானம்.  அவரது சீடர்களில் ஒருவர் பெயர் அடி முடி சித்தர்.  எளிமையான தோற்றம் கொண்டவர், சிவனடியார்களுக்கு
உதவுவதையே  விரும்பியவர்.  அவரைத் தான்   சக்கரை அம்மாள் என்று  பின்னர்   அழைக்கப்பட்ட    அனந்தாம்பாள்  தனது  இல்லத்திற்கு அழைத்து பிக்ஷை அளிக்க விரும்பினாள் . அழைத்தாள் . வருகிறேன் என்கிறார். 


ஒரு நாள் அடிமுடி சித்தர் போளூர் வழியாகத் திருவண்ணாமலைக்கு  நடந்து வருவதை அறிந்தாள் . அவருக்காக   உணவு சமையல் செய்து விட்டு பலமணி நேரம் வீட்டு வாயிலில் காத்து இருந்தாள் .  அடிமுடி சித்தரைக் காணோம்.  அந்த நேரம்  அனந்தாம்பாள் உறவினர்  ஒருவர் அவள் வீட்டுக்கு வந்து நிலைமை அறிந்தார்.  

''ஏம்மா  நீ இன்னும்  சாப்பிடலியா?''

''அடிமுடி சித்தர் வருகிறேன் என்று  சொல்லி இருக்கிறார்.  அந்த மஹானுக்கு பிக்ஷை அளித்து விட்டு பிறகு சாப்பிடுகிறேன்''

''முட்டாள். ஏன்  இப்படி  சாப்பிடாமல் பல மணி நேரம் கண்ட கழுதைக்கெல்லாம் காத்திருக் கிறாய்'? என்று    உறவினர் கோபித்தார்.  அவள்  பொருட்படுத்தவில்லை. 

சற்று நேரத்தில்  அடிமுடி சித்தர் வந்தார்.   அவரை உபசரித்து உள்ளே அழைத்தாள் அனந்தாம்
பாள்.

'' உனக்கு கம்பங்கூழ்  பண்ண தெரியுமா?''

''தெரியாதே சுவாமி. பண்ணதில்லை. வேண்டுமானால் உடனே பண்ணுகிறேன்''

''சரி  சரி  யாராவது   பக்கத்திலே  இங்கே  ஒரு வண்ணான் வீட்டிலே போய்   கூழ் சாப்பிட்டு விட்டு பிறகு உங்க வீட்டிலே சாப்பிட வரேன்''

போய் விட்டார் அடிமுடி சித்தர் 

என்ன அர்த்தம்?

கழுதை எங்கு யாரிடத்தில் இருக்கும்.  வண்ணார் வீட்டில் தானே?.  ஓஹோ  ''கண்ட கண்ட  கழுதை.....''என்று  அண்ணா சொன்னது அவருக்கு  எப்படி  தெரிந்தது?    முதலில் வண்ணார் வீட்டில்  கூழ் குடித்துவிட்டு பிறகு உன் வீட்டுக்கு வருகிறேன் என்ற வார்த்தை  அவரை கழுதை  என்று  சொன்னதை  உணர்த்துகிறதா....!!?

 அடிமுடி சித்தர் தான் முதலில்  திருவண்ணாமலையில் மலையை ச்சுற்றி  நடக்கும் கிரிவலப்  பாதை அமைத்தவர்.  அவரது குரு  கௌதம முனிவர்.  திவண்ணாமலை  சுற்றும்  பாதையில்  ஒரு பெரிய  பாறை  வழியை அடைத்துக்  கொண்டிருந்தது.  தனது  தலை ஜடாமுடியால் பாறையை  இழுத்து  அகற்றிய சித்தர். இந்த  சித்தரின் தொண்டை கவனித்த அடியார்கள்  சிலர்  அவரோடு தாமும் உழைத்து  கிரிவலப்பாதையை நடைபாதையாக மாற்றியவர்கள். அவர்களுக்கு  அவர்  தமது இருக்கரத்தாலும்  கீழே கிடக்கும்  குப்பையை வாரி கையில் திணிப்பார்.  அவர்கள் கை  திறந்து பார்த்தால்  அத்தனையும் காசுகளாக  மாறி இருக்கும்.  

 இந்த சித்தர்  தான்  சக்கரை அம்மாளுக்கு முக்தி ஞானம்  அளித்தவர். நாம் எல்லோரும் பகவானை நினைத்து  நேரம் செலவழிப்பது  கொஞ்சம் கொஞ்சமாக  ஞானம் பெற வழி. சித்தர்கள் என்றாலே  பல மூலிகைகளை அறிந்தவர்கள் என்று சொல்லலாம். இந்த அடிமுடி சித்தரும் திருவண்ணாமலையில் உள்ள பல  மூலிகைகளை அறிந்து பலரது வியாதிகளை குணப்படுத்தியவர். 

தனது பூலோக வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று  அடிமுடி சித்தருக்கு தெரிந்ததும்  தனது சிஷ்யர்களை அழைத்தார்.

 "நான் இப்போது  நீண்ட நேரம்  தியானம் செய்யப்போகிறேன்.  அப்போது என் உடலைத் தொடாமல்  என் கால்களின் கட்டைவிரல் ரெண்டிலும்,   வைக்கோல் பிறியைத் திரித்து கயிறாக செய்து,  அவற்றில் கட்டி  இழுத்துச் செல்லுங்கள்.  ஒரு இடத்தில் வைக்கோல் பிறி  அறுந்துவிடும். அந்த இடத்தில்  என் உடலை அடக்கம் செய்யுங்கள். 

சிஷ்யர்கள் அவ்வாறே செய்தார்கள்.  அடி அண்ணாமலை அருகே  அவரது குரு கௌதம
 ரிஷியின்  ஆஸ்ரமம் எதிரே  அடிமுடி  சித்தரை இழுத்துக் கொண்டு   வந்த போது ''டப்'' என்று  வைக்கோல் பிறி  கயிறு  அறுந்து விழுந்தது.  அங்கேயே  அடக்கம் செய்தவர்கள் பல நூறு ஆண்டுகள்  அடிமுடி சித்தரின்  ஜீவசமாதி கவனிப்பாரற்று  மண்மூடி  பாம்பு புற்றாகி விட்டது. 

என்றோ ஒருநாள்  யாரோ ஒரு  சிவனடியார்  கிரிவலம் செய்யும்போது  அந்த இடத்தில்  ''பளிச்சென்று'' அவர் கண்ணுக்கு  ஒரு  ஜோதி  ஒளிப்பிழம்பு  தெரிந்தது.   ஆச்சர்யத்தோடு அருகே சென்றார். அங்கே  புற்று ஒன்றில் இருந்து  மிகப்பெரிய நாகம் ஒன்று  படமெடுத்து  நிற்பதை கண்டார்.   அங்கிருந்து வந்தவர் பலரிடம் கேட்டறிந்து  அடிமுடி சித்தர் அங்கே ஜீவசமாதி மேற்கொண்டதை அறிந்தார்.  சித்தரின்  ஜீவசமாதியை எப்படி  அறிவது, எப்படி அவருக்கு 
 தனது இறைப்பணியை செய்வது?   

ஆச்சர்யமாக  இதுவரை பெய்யாத மழை திடீரென்று  சில நாட்கள் கழித்து விடாமல் பெய்து
அந்த இடத்தில் இருந்த பெரிய  புற்று கரைந்து விட்டது.  அந்த  புற்று இருந்த இடத்தில் ஒரு  ஸ்வயம்பு லிங்கம்  தோன்றிய  பாம்புகள் அங்கிருந்து அகன்றுவிட்டன.  அங்கே  ஒரு சிரிய  அடிமுடிச்சித்தர்   ஜீவ சமாதி கோவில் உருவாகியது.  அவர்  ஜீவசமாதி கிரிவலப்பாதையில் உள்ள சூரிய லிங்கத்திற்கு மிக அருகே கௌதம மகரிஷி கோவிலுக்கு எதிரே இருக்கிறது. 

ஒரு  கூடுதல் விஷயம்.  ஒற்றை தலைவலி  migrain என்று அவஸ்தைப்படுபவர்கள் இந்த சித்தர்  சமாதியை மூன்று முறை சுற்றி வந்து உள்ளே  சுவற்றில் மெதுவாக தலையை லேசாக சுவற்றில்  இடித்தால்  கைமேல் என்று சொல்லாமல்  ''தலைமேல்'' பலன் கிடைக்கும், மூன்று சுற்றுக்கு மூன்று முறை  இவ்வாறு செய்யவேண்டுமாம்.   

நாம் தவம் ஜபம் செய்யாதவர்கள்.  பகவானை நினைத்தும் சிந்தித்தும்  முன்னேறலாம்.  நான் சிந்தித்து  எழுதுகிறேன். நீங்கள் அவனைபற்றி படித்து சிந்திக்கிறீர்கள். விடாமல் எழுதுகிறேன். விடாமல் படிக்கிறீர்கள். நாம் இருவருமே  என்றோ ஒரு நாள்  முக்தி அடைவோம்  இல்லையா? இதற்கிடையே நேரம் கிடைத்தபோதெல்லாம் அடிமுடி சித்தர்  போன்ற மஹான்கள் ஆசிரமங்
கள், ஜீவசமாதிகள், அதிஷ்டானங்கள் எல்லாம் சென்று சற்று நேரம் கண்மூடி மௌனமாக
தியானம் செய்வோம். அது போதும்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...