Wednesday, December 9, 2020

MY ANCESTORS

 

என் முன்னோர்கள். J K SIVAN

3. விழாக்களும் வாழ்வும்

''ஊர்லே கல்யாணம் மார்லே சந்தனம்'' என்பது ஏதோ பழமொழி அல்ல. பழைய காலத்தில் அப்படித்தான் வழக்கம். இப்போது மாதிரி சத்திரம், கல்யாண பத்திரிக்கை, கல்யாணம் ஆவதற்கு முன்னாலேயே மணமகன் மணமகளை திருமண தம்பதிகளே என்று அழைத்து வாழ்த்தும் வழக்கம் இல்லை. பெண்ணுக்கும் பிள்ளைக்கும் எட்டு முதல் 12வயதுக்குள் தான் இருக்கும். பாப்பா கல்யாணம். அமெரிக்காவிலே வேலை செயது கை நிறைய சம்பளம் வாங்கும் பையனோ , கண்டிஷன் போதும் பெண் வீடோ இல்லை.
ஒன்றுக்குள் ஒன்று உறவோ, அல்லது தெரிந்த குடும்பமோ. ஜாதகம் மட்டும் தான் பிரதானம். பொருத்தம் பார்த்து கல்யாணம் ஏழு நாள் எட்டுநாள் கூட நடக்கும். பையன் பள்ளிக்கூட மாணவன். பெண் படிப்பை நிறுத்தி அம்மா வீட்டோடு இருந்து பெரியவள் ஆனதும் கணவன் விடுவார்கள். ஐம்பது பேருக்கு சமையல், அடுப்பில் பண்ண தெரியவேண்டும், பசுமாட்டிடம் பால் கறக்க தெரியவேண்டும். கிணற்றில் வாளி வாளியாக 20 பேருக்கு குளிக்க, குடிக்க நீர் சேகரித்து, நண்டு நார்த்தங்காய்களை சமாளிக்க வேண்டும். கூட்டுக குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி. சிலர் உரக்க கத்துவதே சிம்ம சொப்பனம். கணவனோடு சிரித்து பேசுவதோ கண்ட கண்ட இடத்தில் நிற்பதோ, பேசுவதோ, பல கண்குத்தி பாம்புகளால் கவனிக்கப்படும். தண்டனை எழுதுவதற்கு முடியாத படி கொடூரமாக இருக்கும். இதெல்லாம் என் அம்மா சொல்லி எனக்கு தெரியும். விறகு பிளந்து அடுப்பில் சமைக்க வேண்டும். மிக்ஸி கிரைண்டர் கிடையாது. பெரிய கல்லுரல், அம்மி, இதில் தான் சமையல் சாமான்கள் தயாராக வேண்டும். மாவு மிஷினில் அரைப்பதை கல் இயந்திரம் எனும் திருகி மேலே ஒரு பெரிய வட்டங்கள், கீழே ஒரு வட்டங்கள் இடையே அரிசி பருப்பு எல்லாம் போட்டு அரைத்து நைசாக சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். காபி டீ எல்லாம் கிடையாது.
ஒரு வீட்டில் கல்யாணம் என்றாலும் அனைத்து வீடுகளுக்கும் அதில் பங்கு உண்டு. கல்யாண சத்திரம் சமையல் கான்ட்ராக்டர்கள் பிறக்காத காலம். கோட்டை அடுப்பு என்று தெருவில் ஓரமாக சில ஒலைத் தட்டிகளை மடக்கி கூறை போட்டு உள்ளே கண கண வென்று பெரிய வாய் திறந்து கொண்டு கல் அடுப்புகள் நிற்கும். அதில் நிறைய விறகுகள் எரிந்து கொண்டிருக்கும். சாம்பார், ரசம், தாளிப்பு மணம் எங்கும் வீசும். பெரிய தவலை அல்லது வாய் அகன்ற பாத்திரத்தில் அரிசி வெந்து கொண்டிருக்கும். சில சமையல்காரர்கள் ஒரு பக்கம் காய்கறி நறுக்க, சிலர் அம்மியில் பொடி செய்தோ கல்லுரலில் கொட கொட என்று கைவிடாமல் அரைத்துக் கொண்டோ இருப்பார்கள். தலைமை பரிசாரகர் அவர்களை விரட்டிக் கொண்டே இருப்பார். ''சாமா சாதம் ரெடியா?'' ''அண்ணா இன்னும் சத்தே பொறுங்கோ ரெடி. சாதம் வடிச்சுட்டேன் கொஞ்சம் ஓலைப்பூறட்டும். எலே பாலு சீக்ரம் இலை நறுக்கு. சில தாட் இல்லை, தலை வாழை, நுனி எடுத்து தனியா வை. சம்மந்தி காரைக்காலுக்கு முனை கிழியாத இலை தனியா வை.' தெருவை மடக்கி பந்தல். இப்போது மாதிரி கார், சைக்கிள், ஸ்கூட்டர், பஸ், லாரி, எதுவும் வராது குதிரை மாட்டு வில்வண்டி தூர நிற்கும். நாயனம் வகையறா காலம்பரத்திலே இருந்தே விடாமல் கீர்த்தனங்கள் வாசிக்கும். எல்லோரும் சங்கீதம் தெரிந்தவர்கள் என்பதால் ஜாக்கிரதையாக சுரம் தப்பாமல் வாசிக்க வில்லை யென்றால் பின்னி எடுத்து விடுவார்கள். தவில் சத்தம் ஊரின் அமைதியைக் கொன்று, அனைவரும் எங்கே மேளம் யார் வீட்டில் விருந்து என்று தெரிவதால் முன்கூட்டியே சப் ஜாடா எல்லோருமே வந்துவிடுவார்கள். சிலர் நீர் மோர் பானகம் கொண்டுவந்து விநியோகம் செய்வார்கள். சின்ன மடக்குப் பாய் நீளமாக விரித்து வரிசையாக தெருவே கூடி எல்லோரும் உட்கார்ந்து இருப்பார்கள். மண் தரை நன்றாக சாணம் போட்டு மெழுகி பெருக்கி மாக்கோலம் எங்கும் பெரிதாக போட்டு லக்ஷணமாக இருக்கும். ஜமுக்காளம் விரித்திருப்பார்கள். பெண் வீட்டுக்காரர்கள் அத்தனை பேரும் வந்து ''வாருங்கோ வந்து சாப்பிடுங்கோ'' என்று உபசாரம். எல்லோருக்கும் பதில் சொல்லி வாய் வலிக்கும். பிள்ளை வீட்டுக்காரர்கள் ஒரு பக்கம் இதே உபசாரம் பண்ணுவார்கள். இன்னும் இன்னும் என்று மேலே மேலே இலையில் சாதமும் பலகாரங்களும் சாம்பார் ரசம் கூட்டு எல்லாம் விழும். . பெரிய அகலமான வாழை இலை. மேல்பக்க முனை கை கேட்டது அவ்வளவு பெரிய அகல இல்லை. எல்லாம் காவேரி பாசனம். வளர்த்தியான இலைகள். ஐஸ்க்ரீம் ப்ரூட்சாலட் எல்லாம் தெரியாது. இலையில் பலவித பலகாரங்கள் நிரம்பும் . நொறுக்குத் தீனி இல்லாததால் எல்லோருமே ஒரு கை பார்ப்பார்கள். அப்பளம் பெரிசு பெரிசா இலையையே மறைக்கிற மாதிரி இருக்கும். கல்யாணத்துக்கு என்றே யானையடி அப்பளம் என்று பெரிதாக இடுவார்கள். இந்த அப்பளம் எல்லாம் கல்யாணத்துக்கு பல மாதங்களுக்கு முன்பே எல்லா மாமிகளும் கூடி தினம் தினமாக பல நாள் ஒன்றாக ஜமா கச்சேரி போட்டு இட்டது. வெயிலில் நன்றாக காய்ந்து சுட்ட அப்பளம். எல்லாம் ருசிகரமாக இருக்கும். பாயசத்தில் அப்பளம் நொறுக்கி சாப்பிடும் ருசி அறிந்தவர்கள். தொன்னையில் நெய் நிரப்பி பறிமாருவார்கள். கொலஸ்ட்ரால் என்றால் என்ன வென்றே தெரியாதவர்கள். கொத்தமல்லி கமகமக்கும் தெளிவான ரசம் வாங்கி வாங்கி குடிப்பார்கள். யாருமே சாப்பாடு விஷயத்தில் சங்கோஜப்பட மாட்டார்கள். போடப்போட சூடான வடை காலியாகிக் கொண்டே இருக்கும். டயட் DIET என்றால் ஏதோ ஊசி மருந்து என்று ஓடுபவர்கள். டாக்டரிடம் போக யோசிப்பவர்கள். எல்லாம் கை வைத்தியம். லங்கணம் பரம ஒளஷதம் என்று வயிறு சரியாக இல்லாவிட்டால் உபவாசம் இருப்பவர்கள். வடகம் வத்தல் எல்லாமேகிராமத்தில் அக்ராஹார மாமிகளின் ''மேக்'' தான். வெளியில் விற்க யாருமில்லை ஆதலால் கிடைக்காது. கல்யாணத்தில் பாட்டு தூள் பறக்கும். இட்டுக்கட்டி பாடுவதற்கு தயார் செய்து கொண்டு வருவார்கள். நலங்கின் போது அவர்கள் சாமர்த்தியங்களை காட்டி, பிள்ளை வீடா, பெண்வீட்டாரா என்று சளைக்காமல் போட்டி போட்டு அவர்களின் திறமை வெளிப்படும். கல்யாண உற்சாகம் 6 நாள் 7நாள் கூட தொடரும். கட்டுச் சாத கூடை வைக்கிற அன்று கண்ணீர் பிரவாகமாக பெருகும் பெண் வீட்டாருக்கு. ஊர்க்காரர்கள் சேர்ந்து அழுதாலும் பெற்றோரைத் தேற்று வார்கள். கல்யாண பெண்ணுக்கோ பிள்ளைக்கோ இதில் சம்பந்தமே இல்லாமல் அந்த சிறுசுகள், வாண்டுகள், விளையாடிக் கொண்டு இருக்கும். தங்களுக்குக் கல்யாணம் என்று ஒன்று நடந்ததாக அறியாத வயது அல்லவா. புதுத் துணியும் பட்சணமும் தான் பிரதானம். நாணா பெருமாள் கோவில் சந்தனம் கோவிலில் இருந்து கொண்டுவந்து எல்லோருக்கும் இட்டு விடுவார். ''நாணா ஸ்லோகம் சொல்லிண்டே சந்தனம் இட்டா ஓடம்புக்கு ஒரு வியாதியும் இல்லை'' என்று ஊரில் பிரசித்தம். ரயில் வண்டி பார்த்ததில்லை. பஸ் என்ன என்றே தெரியாது. எதற்கும் ரெட்டை மாட்டு வண்டி, வில் வண்டி தான். நடை அத்தியாவசியம். உடம்புக்கு முடியவில்லை, ஏதாவது நோய் என்றால் வைத்தீஸ்வரனுக்கு காசு மஞ்சள் துண்டில் முடிந்து வைத்து விடுவார்கள். முடி வளர்த்து காணிக்கை. குலதெய்வத்துக்கு வேண்டுதல்.
கையில் கூஜா, ஒரு பெரிய மூங்கில் தடி. ஜோல்னா பையில் கட்டுசாதம் தலையில் ஒரு துணி மூட்டை இது தான் நெடும்பயணம் செய்ய தேவைப்பட்டது. இருட்டில் பயணம் கிடையாது. யார் வீட்டுத் திண்ணையிலாவது பொது சத்திரம் இருந்தால் அங்கே திண்ணையில் படுக்கை. வீடுகளுக்கு காம்பௌண்ட் வேலி இல்லாமல் மனதைப் போல எல்லோர் வீட்டிலும் திறந்ததாகவே இருந்தது. சாயந்திரம் சதிர் கச்சேரி. நிறைய தீவட்டிகள் எரியும். ஹார்மொநியம் அலறும். காலில் கஜ்ஜை கட்டிக்கொண்டு பட்டுக்கோட்டை சரசா ஆடுவதைப் பார்க்க பல ஊர்களில் இருந்தே மத்தியானமே வண்டி பூட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். அனைவருக்கும் சாப்பாடு உண்டு. முன்பெல்லாம் சரசா பாடிக்கொண்டே ஆடுவாள். இப்போது முடியவில்லையாம். இரைக்கிறதாம். மூச்சு வாங்குகிறது என்கிறாள். சாரீரத்தைப் போல் சரீரமும் கட்டையாகிப் பருத்துவிட்டதே. கோபலாச்சாரி அவர் தம்பி பிர்கா ரங்கு, ரெண்டு பெரும் சுருதி சேராமல், அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல் சேர்ந்து பாடுவார்கள். ராத்திரி ஒருமணி ரெண்டுமணி வரை கூட கச்சேரி இருக்கும். மூன்று இளவட்ட சிஷ்யர்கள் ஜாலரா ,சிப்ளாக்கட்டை, கஞ்சிராவோடு வாங்கிப்பாடுவார்கள். தீவட்டி, அவுட் என்கிற வாண வேடிக்கை இரவெல்லாம் இருக்கும். பெரிய தீவர்த்தி வெளிச்சத்தில் நாடகம், கூத்து நடக்கும். ஒவ்வொரு அடியையும் ரெண்டு மூணு தடவை பாடச்சொல்லி சரசா ஆடுவாள். வாழைத் தோப்பு, எள்ளு புண்ணாக்கு, எண்ணெய் செக்கு ஓனர் கிருஷ்ண செட்டியார் சரசாவின் விசிறி. அவள் நிகழ்ச்சி எந்த ஊரில் நடந்தாலும் வண்டி கட்டிக்கொண்டு சென்று விடுவார்.
எப்போதும் ஒரு புடவை, ரவிக்கை துண்டு, தட்டு நிறைய மொந்தன் வாழை, மாதுளை (எல்லாம் அவர் தோட்டம் தான்) புண்ணாக்கு மூட்டை, எண்ணெய் தூக்கு வைத்து கூடவே ஒரு தங்கக்காசு கொடுப்பார் ஒரு வராகன் ( சவரன் விலை மூன்று வெள்ளிப்பணம் - அப்போதைய மூன்று ரூபாய்.), ஊரில் யார் வீட்டுக் கல்யாணமோ என்றில்லாமல் அவரவர் தங்களிடம் இருக்கும் சிறந்த ஆடைகளையும் நகைகளையும் போட்டுக்கொண்டு பங்கேற்பார்கள். காரை, புல்லாக்கு , நாக ஒத்து, பட்டு புடவை, ஜிமிக்கி, ஒட்டியாணம், வங்கி, காசு மாலை இதெல்லாம் தான் ஆபரணங்கள். பவுடர் கிடையாது. சாந்துப் போட்டும் கும்குமமும் தான் பெண்களை அலங்கரிக்கும். சாந்து கூட்டுவது என்பது ஒரு கலை. தேங்காய் ஓடு கொட்டா ங்கச்சியில் சாந்து சேமித்து வைத்திருப்பார்கள். கண் மையும் வீட்டிலேயே கூட்டுவார்கள். அமங்கலிகள் கண்ணிலேயே படமாட்டார்கள். பாவம் அவர்கள். கணவன் யார் எப்படிப்பட்ட குணம் என்று தெரியும் முன்பே விதவையான சிறுமிகள் பலர் உண்டு. சிலரை உடன்கட்டையாக கணவன் உடலோடு சேர்த்துக் கட்டி எரித்து விடும் வழக்கம் கொடூரமாக இருந்தது. என் முன்னோர்களில் சில பெண்கள் உடன்கட்டை ஏறியவர்கள். அவர்களை தெய்வமாக கொண்டாடுவது இன்னும் தொடர்கிறது.
விதவைகளின் உடை நார்மடி என்று சொல்லப்படும் ஏறக்குறைய காவி கலரில் சிவப்பு அல்லது கருப்பு கரை, அல்லது கரையே இல்லாமலோ பதினெட்டு முழம். மொட்டை தலையை சுற்றி அது கழுத்தை மூடி இருக்கும். தலையில் சிகை இல்லாமல் நகை இல்லாமல், கண்களில் ஏக்கத்தோடு, முகத்தில் மலர்ச்சி இன்றி, வெறும் வேலை, வேலை, வேலை ஒன்றே அவர்களது கடமையாக உழைக்கும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட மதிப்பு மரியாதை இழந்த தெய்வங்கள். பாவப்பட்ட ஜென்மங்கள். அவர்களால் தான் அனைவருக்கும் வேளா வேலைக்கு உணவு கிடைக்கும். இவர்களைப்பற்றி நிறைய எழுதவேண்டும் . ஒருநாள் எழுதுகிறேன். கண்களில் ரத்தம் வடியும் எழுதும்போது. என்ன செய்வது. பெண்கள் பாடவேண்டும் என்பதற்காக சில பாட்டுகளை வாத்தியார் வைத்து சொல்லிக்கொடுப்பார்கள். சாரீரம் இருக்கிறதோ இல்லையோ பெண்கள் பாட்டு நாலு ஐந்தாவது கைவசம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். படிப்பு முக்கியமில்லை. கடிதம் எழுதக்கூடாது. ஆனால் கார்டு வந்தால் அதை எழுத்துக் கூட்டி படிக்கும் அறிவு இருந்தால் போதும். தமிழ் ஒன்று தான் மொழி. ஹார்மோனியம் எல்லார் வீட்டிலும் இருக்கும். நாட்டியம் பெண்களுக்கு அவ்வளவு அவசியம் என்று அவர்கள் நினைக்கவில்லை. தெரிந்தாலும் அது வெளியாட்களுக்கு எதிரில் இல்லை. ஆங்கிலம் தெரியாது எவருக்குமே. கணக்கு எல்லாம் மனக்கணக்கு தான். மாகாணி, வீசம், வேலி , மா, ஆழாக்கு உழக்கு, படி, சேர், வீசை, பலம், மரக்கால் என்று தான் பேசுவார்கள். பணம் நிறைய இருந்தால் நம்பகமான ஒருவரிடம் எல்லோருமே கொடுத்து வைத்திருப்பார்கள். அவர்களும் நியாயமாக வேண்டும்போது, தேவைக்குத் தக்கவாறு அந்த பொற்காசுகளை தந்து உதவுவார்கள். கொடுத்தவருக்கு கணக்குத் தெரியாவிட்டாலும் பெற்றவர் அதை வட்டிபோட்டு திருப்புவார். அவர் சொல்வது தான் வேத வாக்கு. எழுத்தில் கணக்கு வழக்கு கிடையாது. பிள்ளையாருக்குப் பொதுவாக என்ற நம்பிக்கையில் இந்த பட்டுவாடா நடைபெறும். . ஒருவருக்கு சங்கீதம் தான் உத்யோகம், கவித்வம், புலமை தான் பாண்டித்தியம் என்றால் அவர் ஊர் ஊராகப் போய் அங்கு இருக்கும் தனாதிபதிகளை, மிராசு, ஜமிந்தார், குறுநில ராஜா, ஆகியோரைக் கண்டு அவர்களைப் புகழ்ந்து பாடி அவர் தந்த தனத்தோடு ஊர் திரும்புவார். சிலரை அந்தந்த பெரிய மனிதர்கள் உங்கள் குடும்பத்தோடு இங்கே வந்து விடுங்கள் என்று அழைத்து ஆதரித்தார்கள். நடக்க முடியாதவர்களை குதிரை வண்டி, மாட்டுவண்டி வைத்து அழைத்து போவார்கள். கோடி பணம் வந்தாலும் ஊரை விட்டு நகராதவர்களும் வாழ்ந்தார்கள். அவர்களது பாடல்களைக் கேட்க பல ஊர்களிலிருந்து படித்தவர்கள், பண்டிதர்கள், ரசிகர்கள், சிஷ்யபிள்ளைகள் வந்தார்கள். சிலகாலம் அவரது வீட்டிலேயே தங்கி கற்று முடிந்தபின் ஊர் திரும்புவார்கள்.
என் குடும்ப முன்னோரில் பலர் புலவர்கள், சங்கீத வித்வான்கள். இவ்வாறு தான் வாழ்ந்தார்கள். அவர்கள் தங்களது சாதுர்யத்தை அந்த பெரிய மனிதர்களைப் புகழ்ந்து இயற்றிய பாடல்களால் அவர்களை மகிழ்வித்து பரிசு பெற்று அவர்கள் ஜீவிதம் ஓடியது. சிலர் பொதுவாக கடவுள் மீது பாடல்கள் இயற்றி அதில் எங்காவது தன்னை ஆதரித்த அல்லது தன்னை பராமரித்த அந்த பிரபு, ராஜா, வள்ளல் பெயரைக் குறிப்பிடுவதும் ஒரு வழக்கம். இதை இன்னும் நிறைய பாடல்களில் காணலாம்.. கம்ப ராமாயணத்தில் ராம பட்டாபிஷேகத்தில் ஒரு இடத்தில் கம்பர் முடிசூட்ட கிரீடத்தை எடுத்து வசிஷ்டர் எனும் பிரம்மரிஷி ராமனுக்கு சூட்டினார் என்ற இடத்தில் ''சடையனே '' புனைந்தான் மௌலி'' என்று எழுதி இருப்பதை சடையன் என்ற சொல் அவரை ஆதரித்த சடையப்ப வள்ளலை நன்றி கூர்ந்து என்று என் தமிழ் வாத்தியார் கூறி கேட்டிருக்கிறேன்.
இன்னும் சொல்வேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...