Sunday, December 20, 2020

MY ANCESTORS

 


என் முன்னோர்கள் J K SIVAN
11. எல்லாம் ராமன் செயல்
நண்பர்களே, நான் எனது அம்மாவழி தாத்தாக்கள் கதையெல்லாம் சொல்லி வருவது அநேகருக்கு பிடித்திருப்பதால் காரணம் அறிவீர்களா? ஏதோ ஒரு குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆசை அல்ல அது. ஒரு முன்னூறு வருஷங்களுக்கு முன் தமிழகத்தில் நடுத்தர வகையினர் எப்படி வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்க்கை முறை என்ன? ஆங்கிலம் ஒட்டாத வாழ்க்கை எப்படி இருந்தது. மற்ற மதத்தினரின் சார்பு, ஆதிக்கம் இன்றி எப்படி பக்தி அவர்களிடையே நிலவியது என்பதெல்லாம் கொஞ்சம் விளங்குகிறதே , அது தான் காரணம்.

என் அம்மா வழி முன்னோர் பற்றிய விவரங்கள் எனக்கு தெரிய முக்கிய காரணம் என் மாமா வசிஷ்ட பாரதி சுப்ரமணிய அய்யர் (இப்போது 100+ . பார்வை இல்லாவிட்டாலும் பிறந்தது முதல் பழகிய ஏட்டில் தனது தேவைகளை தானே மற்றவருக்கு எந்த தொந்தரவும் இன்றி பூர்த்தி செய்து கொண்டு ராம நாமத்தில் நேரத்தை ஈடுபடுத்தி வாழ்ந்து வருகிறார். ஞாபக சக்தி அபாரமாக இருக்கிறது. அவர் மகன் வசிஷ்ட பாரதி (தாத்தாவின் பெயர் பேரனுக்கு ) எனது தாத்தா 1936 களில் சொல்லி, அவை வாராவாரம், இந்து நேசன் என்ற தமிழ் பத்திரிகையில் வெளிவந்த பிரசுரங்களை வெட்டி ஒரு நோட் புத்தகத்தை ஒட்டி வைத்திருந்தஹ் வைத்திருந்து அதை ஒரு நகல் எடுத்து எனக்கு கொடுத்தார்.

அதிலிருந்து கிடைத்த விஷயங்களை ஆதாரமாக வைத்து ஒரு சிறு புத்தகம் இலவசமாக எழுதி ''எங்கள் பாரதி வம்சம் (புராண சாகர நினைவலைகள்) என்ற தலைப்பில் வெளியிட்டேன். 3.5.2015, அன்று சென்னை குரோம்பேட்டை வசந்த மண்ட பத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்து, அனைத்து பாரதி வம்ச உறவினர்களையும் அழைத்து, காலம் சென்ற எனது அருமை நண்பர் ஸ்ரீ திண்ணை ராமாயண சிற்பி கீரனுர் ராம மூர்த்தி அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து அவரது கையால் மேற்படி நூல் வெளியிடப்பட்டது. இதில் என்ன சிறப்பு அம்சம் என்றால் இதன் முதன் பிரதியை பெற்றுக்கொண்டவர் எங்கள் தாய்மாமன் இன்றும் எங்களிடையே வாழும் மேலே சொன்ன என் தாய் மாமன் ஸ்ரீ வசிஷ்ட பாரதி சுப்ரமணிய அய்யர்.. எங்கள் தாத்தா வாங்கிய, தான் பிறந்து வளர்ந்த அதே புரசைவாக்கம் வீட்டில் ரெண்டு தலை முறையாக புரச வாக்கத்தில் வாழ்கிறார். அவரை சித்ரவதை செய்து, பிடுங்கி பிடுங்கி சிறிது சிறிதாக பழங்கதைகளைச் சேகரித்து தான் இந்த புத்தகம் தயாராகியது.
நான் எழுதுவதையெல்லாம் அவர் மகன் (அடுத்த தலைமுறை பெயரில் மட்டும் வசிஷ்ட பாரதி ) அவருக்கு படித்துக் காட்டு வதில் பரம சந்தோஷம் அவருக்கு. கண் இருந்தும் விழியின்றி பார்வை இன்றி, தனக்குத் தெரிந்த தமிழில் ''ஒரு சிறு பாட்டு எழுதினேன் மனத்திலேயே'' என்று சொல்லி அதை இளைய வசிஷ்ட பாரதி முலம் எழுத வைத்து எனக்கு அனுப்பினார் .

இதில் சொற்குற்றம் , பொருட்குற்றம், சந்தம், யாப்பு, தளை , எதுகை,மோனை எதுவுமே தேட வேண்டாம். அவற்றை தேட புத்தி போய்விட்டால் நான் முன்பே எழுதியதுபோல் ''மரத்தை மறைத்தது மாமத யானை, மரத்தில் மறைந்தது மாமத யானை'' கதையாகி, அவர் பாட்டில் இழையோடி யிருக்கும் அன்பு, ஆசை, பாசம், நம்பிக்கை, வாத்சல்யம், மகிழ்ச்சி எல்லாம் தோன்றாமல் போய் விடுமே.
இது தான் மனதில் அன்போடு விழியில் பார்வை இன்றி மனதில் முழுமையாக பார்த்து அவர் இயற்றி அவர் மகன் எழுதி என்னை வந்தடைந்த சிறு பாடல்:

'' அவனன்றி ஓர் அணுவும் அசையாதுஎன்பது ஊரறிந்த உண்மைஇவனன்றி இச்செயல் செய வல்லாரில்லைஎன்பது நாமறிந்த உண்மைஎவனவன் என்று வினவுவாராகின்அனைவருமறிந்த நம் ஜே. கே.சிவனன்றி வேறுயார் கொலோ? ''

அன்னாரின் சீரிய பணி சிறப்புற செயல்பட வாழ்த்துகிறேன் - சுப்ரமணியன் மாமா
இதில் நான் ஒரு வயதான மனிதனின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள வேண்டு கிறேன். தன் மூதாதை யரைப் பற்றி தானோ தனக்கு முன் எவரோ, தன்னுடன் பிறந்தவரோ எடுத்துச் சொல்ல முன் வராததை அடுத்த தலைமுறையில் ஒருவன் முயற்சிப்பதைப் பாராட்டும் வாழ்த்து. இதில் முக்யமான பெருமை என் எழுத்துக்கல்ல. அதில் வரும் மகனீயர்களின் வாழ்க்கை விபரத்துக்கு.
இதற்கு முந்தைய பதிவில் பரசுராம பாரதியின் வீடு ஒரு இரவு தீப்பற்றி எரிந்து சாம்பலாகி ரெண்டு ஜாமத்தில் அங்கே ஒரு புது உருவாக்கி ஒரே நாளில் கிரஹப் ரவேச மும் செய்தவர்கள். எல்லாம் சாப்பாடு நேரத்துக்குள் என்பது குறிப்பிடத்தக்கது.
''தென்னோலை புதுகீத்து முடஞ்சு அது மேலே லாவுணும், தரையை கூராடி, சமன் பண்ணோ ணும். சுவரு தரைல்லாம் மழுப்பணும் . பழைய சுவர் இடிச்சு தோது பண்ணி, வாச திண்ணை உசத்தணும். படுக்க, சமையல் ,கூடம் சாமி பூஜா பண்ற இடம், உக்ராணம், ரேழி, கொல்லை , புழக்கடை, மாடு சார்ப்பு, எல்லாமே சுவரு உசத்தி நிக்கோணும் '' என்ற காலாட்டி சோழகரின் கட்டளைகள் செயல்பட என்ன காரணம் ? காசுக்கு வேலை செய்பவன் வேலையில் சுத்தம் காட்ட மாட்டான். மனசெல்லாம் நிரம்பி அன்பு பாசம் பொங்கி வழிய கிராம சகல மக்களும் பரசுராம பாரதியின் புது வீட்டை மயன் கட்டியது மாதிரி நிர்மாணித்தனர். ஒரு ஜாமத்தில் சகல வேலையும் நிறைவேறியது. காலாட்டி சோழகர் சரியான அட்மினிஸ்ட் ரேட்டர். உற்சாகப்படுத்தி ஜனங்களை வேலை வாங்கினார். '' சாமி, அம்மா குழந்தேங்கோ பட்டினி கிடக்காங்க. பாவிப்பசங்களா சீக்ரமே வேலை முடிங்கடா.'' ஒரு பரிசுத்த ராம பக்தருக்கு எவ்வளவு சிறப்பு பாருங்கள். எல்லாமே ராமன் செயல்.
மனமகிழ்ந்த பரசுராம பாரதியும் அவர் மனைவி சங்கரையும் அப்போது ஒரு விண்ணப்பம் அறிவித்தார்கள். '' எல்லோரும் இங்கே இருந்து சாப்பிட்டுவிட்டுத்தான் போகணும்.''
புது வீட்டில் சோழகர் வாங்கி அளித்த பட்டுப்புடவையோடு சங்கரி அம்மாள் 100 பேருக்கு சமையல் சாப்பாடு தயார் செய்தாள் . அந்தகாலத்தில் ஸ்டவ், மின்சார மிக்சி, காஸ் அடுப்பு, குக்கர் ஒன்றுமே இல்லாமல், விறகு எரித்து, ஒரு புது குமுட்டி, புது மண் அடுப்பு வைத்துக்கொண்டு தனந்தனியளாய் சமையல் செய்தாள். பாயசம் வடை எல்லாம் பண்ணி ஸ்ரீ ராமனுக்கு நைவேத்யம் ஆகி, பிராமண போஜனம். பரசுராம பாரதியாரும் சேர்ந்து கொண்டார். போஜனம் ஆன பிறகு சோழகர் மற்றும் கிராமத்தார்களும் அடுத்த பந்தியில் அமர்ந்தனர்.
இந்த சங்கரியம்மாள் சமையல் செய்த பாங்கிற்கு அவர்களது கைக்கு ஒரு தங்கக் கடயம் , கங்கணம், போடவேண்டும் என்று சோழகர் சொன்னதாக ஒரு ஓலைச்சுவடியில் இருந்த பாடல் அமைந்துள்ளது. அதை என் மாமா போற்றி பாது காத்து வந்திருக்கிறார். சங்கரி அம்மாள் ஒரு பிசாசு வேகத்தில் சாதம் வடித்து, பருப்பில் நெய் வார்த்து, சுவையான ஒரு குழம்பு காய்கறிகளோடு சேர்த்து அதில் வார்த்து, அருமையான ரசம் செய்து, தொட்டுக் கொள்ள காய்கறி துவட்டல், கெட்டித்தயிர், ஊறுகாய் வாழை இலை , வயிறு நிறைய பரிமாறினாள். அந்த கைக்கு தான் தங்க கடயம் இடவேண்டும் என்று சோழகர் விரும்பி இருக்கிறார்....

''பட்டு புடவைதனைக் கட்டி
பரதேவதை போல் முன் வந்து
மட்டில்லாத மகிழ்ச்சியுடன் மலர்போல்
சோற்றில் நெய் வார்த்து
கெட்டிப் பருப்பும் குழம்பு ரசம்
கிளரும் துவட்டல் தயிரோடு
இட்ட சங்கரியம்மாள் கைக்கிடுவேன்
தங்க கடயங்களே''

இது நடக்கும்போது பரசுராம பாரதிக்கு 60 வயது. எப்படி அமைந்து விட்டது சஷ்டியப்த பூர்த்தி?? ராமனுக்கு தனது பக்தனின் சஷ்டி யப்த பூர்த்தி புதுவீட்டில் 100 பேர் சேர்ந்து சாப்பிடும் படி அமைந்தது ஆச்சர்யமாக இருக்கிறது.
அக்னி பாரதியின் பழைய க்ரஹத்தை கபளீகரம் செய்து, புது மனை அமைந்து, 60ம் கல்யாணமும் நடந்து, எல்லாமே புதுசுடன் காலாட்டி சோழகர் மூலமாக அந்த ஸ்ரீ ராமனே அரேஞ்சு பண்ணினது மாதிரி இருக் கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...