Monday, December 28, 2020

MARGAZHI VIRUNDHU

 மார்கழி விருந்து    J K   SIVAN 


        
           14     பங்கயக் கண்ணான் பரம தயாளன்

நாம் என்ன பாவம் செய்தோமோ நமக்கு  இப்படி  ஒரு எண்ணம் தோன்றிவிட்டது.
கிராமங்களில் மனிதர்கள் வாழவே, பிழைக்கவே முடியாது என்று முடிவெடுத்து கூட்டம் கூட்டமாக அநேகர் அருமையான  கிராமங்களை விட்டு வெளியேறி விட்டோம். கிராமங்கள் தான் நகரத்தின், நாட்டின் உயிர் நாடி  என்பதை மறந்துவிட்டோம்.  இப்போது அதிக பணம் சேர்த்து கிராமங்களில் சென்று வாழ  முயல்கிறோம்.!!

கர்ப்பத்தின் இருட்டறையில் அதிகமாக இடமின்றி கைகால்களை குறுக்கிக்கொண்டு முழங்காலோடு  தலை சேர்த்து  குனிந்து கொண்டுதான் முதலில் உருவானோம். பிறகு தான்  பெரிய பங்களா, கார், ஏரோபிளேன்  ஐந்து ஆறு ஏழு எட்டு நக்ஷத்திர ஹோட்டல்.  அது இல்லை யென்றால் இது இல்லை.

நல்ல வேளை அந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி, மீண்டும் அநேகர் கிராமங்களை திரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இது சுபிக்ஷத்தின் அறிகுறி. ஆரம்பத்தில் பட்டணம் ஸ்வர்க பூமியாக காட்சியளித்தது. கை நிறைய காசு. வசதிகள், நாகரிக வாழ்க்கை, சொகுசு என்று கனவில் மிதந்து இங்கே நாளாக நாளாக நகரவே இடம் இல்லாமல், தண்ணீர் இல்லாமல், மின்சாரம் குறைந்து, வெட்டப்பட்டு, திருடும் கொலை கொள்ளையும் அதிகரித்து பயத்தில் வாழ்ந்து, ஒன்றுக்கு பத்தாக பணம் இறைத்து நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாகி விட்டது. நட்பு, பிரேமை, அன்பு எல்லாம் பறிபோனது. மனிதாபிமானம் ஏட்டுக்குள் அடங்கி விட்டது. இப்போது கெட்டுப்  போனபின் சூரிய நமஸ்காரம் செய்ய தோன்றி இருக்கிறது.

''சார் நான் ரிட்டையர் ஆனபின் அக்கடா என்று கிராமத்தில் போய் சுகமாக இருக்கப்போகிறேன். காசு கொடுத்து இந்த ஜென்மத்தில் இனிமேல் கத்திரிக்காய் கொத்தமல்லி கூட வாங்கமாட்டேன். குழாய் தண்ணீருக்கு சண்டைபோடமாட்டேன்.  தோட்டத்தில்  எல்லா  காய் கறிகளும் விளையும்.  குளத்தில் நீஞ்சுவேன்''

'' சாரி, நாம் ரொம்ப லேட். கிராமங்களும் கெட்டுப்  போக ஆரம்பித்துவிட்டன. நமது தவறான முடிவால் அவசர வாழ்க்கை முறை அங்கும் பரவிவிட்டது.... போகட்டும்.... இருந்தாலும் மீண்டும் அவற்றை புனருத்தாரணம் செய்வோம். ஒவ்வொருவரும் அவரவர் பிறந்த , அவர்கள் பெற்றோர்கள் முன்னோர்கள் வாழ்ந்த ஊர்களை நாடுவோம், திரும்ப அவற்றை பரிமளிக்க உதவுவோம். கோவில்கள் குளங்கள்  எல்லாம்  காணாமல் போகிறது.

கிராமங்கள் என்றால் பொழுதே போகாது என்பார்கள். ரொம்ப தவறு. பொழுது போய்விடுகிறதே என்று ஏங்கும் அளவுக்கு இயற்கை அங்கே   கொழிக்கிறது  அங்கே. இப்பவே இப்படியென்றால் 5-6000 ஆண்டுகளுக்கு முன்புஆயர்பாடி கிராமம் எவ்வளவு  தேவ லோகமாக இருந்திருக்க வேண்டும். குறிப்பாக தெய்வமே கிருஷ்ணனாக  அங்கே வாழ்ந்தபோது! 
அதற்குள் மார்கழி 13வது நாள் நகர்ந்து மார்கழி 14வதுக்கு வழி விட்டுவிட்டதே .

ஆண்டாள் ஒரு இயந்திரம் மாதிரி. சொல்லி வைத்தாற்போல் அதிகாலையில் எழுந்து மற்றவர் களையும் எழுப்ப வந்துவிட்டாள். அவள் தோழியர்கள் அனைவரும் ஏறக்குறைய வந்தாகி விட்டதே. ஒரு சிலரைத் தவிர. ஆண்டாள் தேடுகிறாள் யார் இன்னும் வரவில்லை என்று.?

''ஆண்டாள்,  இதைப் பார்த்தாயா, இந்த கோமளா வீட்டு புழக்கடையில் இதோ தெரிகிறது பார் இந்த அல்லிக் குளத்தில் நேற்று ராத்திரி பூத்த ஆம்பல் தூக்கம் வந்து மெதுவாக கூம்பிவிட்டது. பக்கத்தில் இருக்கும் அல்லி எல்லாமே ஜோராக மொட்டவிழ்ந்து மெதுவாக மலர்கிறதே. "

ஆண்டாள் தலை அசைத்தபடியே கோமளா வீட்டு வாசலில் வந்து கதவைத்தட்டி எழுப்புகிறாள்.

''அடியே, கோமளா, உன் வீட்டு பின்புறம் குளத்துக்கு அப்பால் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சில துறவிகள் யோகிகள்  செல்வதை வெளியே வந்து பாரடி பெண்ணே!    வெள்ளையாக தாடி, மீசை, பல், உடலில் செங்கல் நிற காவி உடை, கையில் வெள்ளை சங்கு.    அதன் ஓசை மூலம்   பெருமாளை  துயில் எழுப்ப,   பெருமாள் முன் நின்று பரவசத்தோடுஅவர்கள்  வெண் சங்கை ஊதி சுப்ரபாத சேவை பண்ணப் போகிறார்கள். ''வா, அவர்களை பார்த்துக் கொண்டே நாம் நதிக்கு சென்று நீராடி, வழக்கமாக செய்யும் நோன்பு பிரார்த்தனைகள் முடித்து பிறகு நாமும் பெருமாள் கோவிலுக்கும் செல்வோம்''

ஆண்டாள் குரல் கோமளாவுக்கு உள்ளே கேட்டதோ இல்லையோ, தென்கோடியில் வில்லி புத்தூரில் விஷ்ணுசித்தருக்கு ஸ்பஷ்டமாக கணீரென்று கேட்டது. நேற்றைய குளிர் இன்று இன்னும் அதிகமாகிவிட்டது.     எனினும் அதிகாலையில் எழுந்து ஸ்நானம் முடிந்து  நித்ய  பூஜைக்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்தார். கோதை அன்றைய பாசுரத்தை எழுதி தயாராக வைத்திருந்ததால் அதையும் ஆவலாக ரசித்து படித்தாகி விட்டது. அவரது மனம் அந்த ரசானுபவத்தில் தான் ஆயர்பாடி ஆண்டாளை நினைவில் கொண்டு நிறுத்தியது.

மார்கழி மாதத்தில் 29- 30 நாளுக்கு பதிலாக முன்னூறு நாளாக இருக்கக்கூடாதா என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. ஒருவேளை அப்படி இருந்தால் நமக்கு தினமும் ஆண்டாளின் பாசுரங்கள் கிடைத்துக்கொண்டே இருக்குமே என்ற பேராசை!

மீண்டும் ஓலைச்சுவடியை எடுத்து கோதையின் வார்த்தைக் கோர்வை அழகைப் படித்தார்.

'' உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

மேலெழுந்தவாரியாக இதில் வர்ணனை என்று வார்த்தைகள்  தென்பட்டாலும் வார்த்தைகளின் உள்ளர்த்தம் அவரைக் கவர்ந்தது. ஞானத்திலும் கண்ணன் மீதுள்ள பற்றிலும் கோதை சிறு பெண்ணல்ல. பழுத்த கிழவி. அவளது திருப்பாவை ஒரு உபநிஷதம்,   கோதை எழுதிய  கோதோ பநிஷதம் . என்ன ஞானம் அவளுக்கு! நாக்கு உணவை ருசிக்க மட்டுமல்ல. சாக்ஷாத் கிருஷ்ண
னின்  பெருமையைப் பாடுவதற்காகவே .

'வா, வந்து க்ரிஷ்ணனைத் துதி செய்' என்று அந்த தூங்கும் பெண்ணையா எழுப்புகிறாள்.? அல்ல, அஞ்ஞானத்தில் உழலும் மாந்தர்களே,   நீவிர் உய்வீர்களாக என்று உலகத்துக்கே ஒரு வரியில் வழி காட்டுகிறாளே !

''அப்பா''

கோதை அழைக்கும் குரல் கேட்டு சிந்தனை தடைப்பட்டு ஆஸ்ரமத்தின் உள்ளே சென்றார் விஷ்ணு சித்தர்.  மீண்டும்  மார்கழி 15ம் நாள் தான் அவரை சந்திக்கமுடியும்.

ATTACHED IS THE  PHOTO OF  PARTHASARATHI TEMPLE TRIPLICANE  TAKEN IN 1851



 

                                                   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...