Tuesday, December 15, 2020

MY ANCESTORS

 என் முன்னோர்கள்.     J K  SIVAN 

     
                                                     
   9. பரசுராம பாரதி பெற்ற  சம்பாவனை  

சாத்தனூரில்  வைத்தியநாத பாரதிகள் காலம் முடிந்தது. பரசுராம பாரதி  வழக்கம்போல்  ராமன் நினைவோடும்   ராம நாடக  கீர்த்தனை  துணையோடும்  துக்கத்தை மறந்து வாழ்ந்துவந்தார்.   மீண்டும்  இயற்கை சோதனை செய்தது. வழக்கமாக  வரும்  வைகாசி வெள்ளம்  தாமாதமாகிவிட்டதே?   சாகுபடிக்கு தாழ்வாக  தண்ணீர் வேண்டுமே. அதை நம்பி அல்லவோ  வேளாளர்கள் வாழ்கிறார்கள் .  விவசாயம் தடைபட்டால், அடிபட்டால்  ஜீவனம் எப்படி? எல்லோரும் வானத்தை பார்த்தபடி  உஷ்ணமாக பெருமூச்சு விட்டார்கள்.

சோழகர்கள் கவலையைத் தீர்க்கத்தான்  பரசுராம பாரதி இருக்கிறாரே. திமு திமுவென்று  விவசாயிகள்  ஒருநாள்  அவர் வீட்டு வாசலில் கூடி விட்டனர்.  

''சாமி  தான் தண்ணி வரவழைக்கோணும். நாங்க வாழோணும்.  பாட்டு பாடுவீங்களே  பாடி தண்ணி கொண்டுவந்து கொடுங்கய்யா''

பரசுராம பாரதி தன்மீது சுமத்தப்பட்ட  சுமையை யாரிடம் தள்ளுவார்?  இருக்கவே இருக்கிறாரே  கை கொடுக்க  மதகடிப் பிள்ளையார்.  அதற்குத்தானே   தண்ணி வருகிறதா என்று ஆற்றைப்பார்த்துக்கொண்டு  கரையில் அமர்ந்திருக்கிறார்.

விக்னேஸ்வரர்  இருக்கார்,  நமது குறைகளை தீர்த்து நம்மைப் பார்த்துக்கொள்வார்  என்று  சோழகர்களுக்கு ஆறுதல் சொன்னார்.  பிறகு  மதகடிப் பிள்ளையார் முன் சென்று  தியானத்தில் ஈடுபட்டார். கண்களில் நீர் வழிய  ஒரு  வேண்டுகோளை  வெண்பாவாக்கி சமர்ப்பித்தார்.

 ''உள்ளமுனக்கே  தெரியும் உணர்த்துவதென் அய்யனே
  பள்ளம்  படுகுழியும்  உலர்ந்ததுகாண்  பாரதனில்
  தெள்ளும்  தியக்கமிது தீர உந்தன் கடைக்கண் ணருளி 
  வெள்ளம் பெருகிவரச்  செய்மதகார் விநாயகனே'' 

உண்மையான  மனமுருகச் செய்யும் பிராத்தனைக்கு பலன் நிச்சயம் உண்டு.  அது தான் சக்திவாய்ந்த மந்திரம். இறைவன் அதற்கு நிச்சயம்  கட்டுப்படுவான் அல்லவா?  கணநாதன்  தேவகணங்களுக்கு உத்தரவிட்டான்.

 அன்று  இரவே வானத்துக்கு  ரோசம் வந்து  பொத்துக்கொண்டதாம்.  ஜோ வென்று மழை இரவெல்லாம் கொட்டியது.  ஆற்றில்  வெள்ளம்  கண் நிறைய கண்டார்கள்.  மனதில் முகத்தில் மகிழ்ச்சி  வெள்ளம்.

மறுநாள் பரசுராம  பாரதியைத்தேடி வந்துவிட்டார்கள்.  

''சாமி  எங்க நம்பிக்கை வீண் போகலை .   வயத்தில்  பால் வார்த்தீங்க. எங்களுக்கு என்ன செய்யறது உங்களுக்கு என்றே ஒண்ணும் தெரியவில்லை. மனது சந்தோஷமாக இருக்குது''.  

''எனக்கு ஒண்ணும்  செய்யவேண்டாம். எல்லோரும் சந்தோஷமா போங்கோ. நானா தண்ணி கொண்டுவந்தேன். எல்லாம் நமது மதகடிப் பிள்ளையார் லீலை. அவருகிட்ட போய்  நமஸ்காரம் பண்ணுங்கோ. வேண்டிக்கோங்கோ''

ஒருவர் விடாமல்  அனைவரும்  யாரோ  காளமேகப் புலவர் என்று ஒருத்தர் இருந்தாராமே. அவர் சொன்னா அப்படியே நடக்குமாமே . இந்த  ஐயா  தான் நமக்கு காளமேக புலவர் தான். சந்தேகமே இல்லை.  இவருக்கு எதனாச்சும்  செய்யோணும்.   

காலாட்டி சோழகர் அனைவரையும் அழைத்து  பேசினார். கலந்து ஆலோசித்தார்கள்.   அவர்களுக்கு திருவள்ளுவர் பரிச்சயம் இல்லை.  தெரிந்தால்  இந்த குறள் பற்றி பேசியிருப்பார்கள்.  

''செய்யாமல் செய்த உதவிக்கு  வையகமும்  வானகமும்
ஆற்றல் அரிது''

' நாம  கஷ்டப்படும்போதெல்லாம்  நமக்கு  இந்த  சாமி உதவராரே .  ஏற்கனவே நஞ்சை  நிலம்  ஊரில் மானியம்  உட்டிருக்கோம்லே .   இன்னலேர்ந்து  படுகையில்  புஞ்சைலே  சோளம், கம்பு, கேழ்வரகு, உளுந்து, பயறு,எள்ளு, எது விளைச்சாலும் ஏத்துக்கு குறுணி  (மரக்கால்  என்பது ) பாரதி சாமி குடும்பத்துக்கு  நாம கொடுக்கோணும்''  தீர்மானம்  ஏகமனதாக  நிறைவேறியது.   ஏத்துக்கு  என்பது  ஒரு ஈற்றுக்கு  என்று பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு விளைச்சலிலும்  என்று புரிந்து கொள்வோம்.

 அந்த காலத்தில்  கல்யாணத்தின் போது ,பெண்ணுக்கு  திருப்பூட்டினதுக்கு  பிறகு,  பிள்ளையையும்,  பெண்ணையும்,  குடும்பத்தில் பெரியவர்களும்,  பந்துக்களும், பச்சை  அரிசி, அருகம்புல் எல்லாம்  சேர்த்து  ஆசிர்வதித்து  ரெண்டு  கையாலும், வாரி விடுவது  வழக்கம்.   இதற்கு  ''சேடை ''  இடுவது  என்று  பெயர்.  

காலாட்டி சோழகர்  இன்னுமொரு  தீர்மானமும் கொண்டுவந்தார்  ''  இஞ்செலுருந்து  நம்ம  பாரதி  சாமி சேடை  இடும்போது காணிக்கையா  ஒத்த ரூவாக்கு  குறையாம,  ஒவ்வொரு வூட்டிலேருந்தும் கொடுக்கோணும் ''  .
அனைவரும்  ஒப்புக்கொண்டார்கள்.  

ஊரில் அக்ரஹாரத்தில் இருந்த  வேறு சில   பிராமண குடும்பங்களும்  தங்கள்  வீட்டில் கல்யாணம்  நடந்தால்  பரசுராம பாரதியை  அழைத்து   உபசரித்து ஆசீர்வாதம்  பெற்று  சம்பாவனை செய்தார்கள்.  இந்த  வைதிக உபசாரத்துக்கு    ஹரிஹர   சம்பாவனை என்று பெயர். இன்றும்  கல்யாணங்களில் வாத்யாருக்கு மற்ற பெரியோர்களுக்கும்  கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.  

அவர்கள் எடுத்த முடிவு:      யார்  வீட்டில்  எப்போது யாருக்கு கல்யாணம் நடந்தாலும்  ஊரில்  சிவன் கோயில்,   பெருமாள் கோயிலுக்கு  கட்டவேண்டியது   ஒவ்வொரு கோயிலுக்கும்  4  அணா.
ஆச்சர்ய சம்பாவனை என்பது  தமது  மதத்தில்   ஒவ்வொரு விசேஷம் நடக்கும்போதும்  பெரியவாளுக்கு, ஜகத் குருவுக்கு  நமஸ்காரம் பண்ணி ஆசீர்வாதம் வேண்டி அளிக்கும்  நமது காணிக்கை.  அது   எவ்வளவு  என்று    தீர்மானிக்கப்பட்டது  தெரியுமா :  அதுவும்  4  அணாதான்.  
அடுத்தது  சரஸ்வதி சம்பாவனை என்பது  நன்றாக வேதம்  சாஸ்திரம் புராணம் எல்லாம் கற்ற  பெரியவர் களுக்கு அளிக்கும் சம்பாவனை.   சரஸ்வதி சம்பாவனை  பரசுராம பாரதிக்கு  எவ்வளவு கொடுப்பது?  

சரஸ்வதி சம்பாவனை என்று  கல்யாணம் நடக்கும்போது  பரசுராம பாரதிக்கு  ஒரு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாய் வரை அவரவர் சக்திக்கு ஏற்ப  சம்பாவனை சமர்ப்பிக்க வேண்டும் ''.  இந்த  வருமானத்தில் தான்  பரசுராம பாரதி வாழ்க்கை நடந்துவந்தது.

சிரிக்காதீர்கள் நண்பர்களே.  இது வருமான வரிக்கட்டி கணக்கு சமர்ப்பிக்கும் மாதம். உங்கள்  ஆண்டு வருமானத்தை பரசுராம  பாரதியின்   வருஷத்துக்கு  ஒரு ரூபாய்  வருமானத்தோடு  ஒப்பிடாதீர்கள்.  அவர்  காலமே வேறு.  அவர் வாழ்ந்த  வசதி,  அவருடைய  சந்தோஷம்,   நீங்கள் நாம் எவரும் எந்த ஜென்மத்திலும் ஏன் கனவிலும்  கூட பெற  முடியாது.. அப்படி வாழ முடியாது...

மேலே சொல்கிறேன்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...