Friday, December 4, 2020

DEATH



 


                           ஸாஸ்வதம்     J. K . SIVAN 

இப்போது நான் சொல்லும் விஷயம்  நிஜம்.  கற்பனை அல்ல. நீங்களும் நானும் எப்படி நிஜமோ அப்படி இந்த சம்பவத்தில் வருபவர்கள் சர்வ நிஜமானவர்கள். 
  
காசிக்குப் போய் திரும்பாமல்  அப்படியே  மேலே போவதற்கென்றே  அங்கே  செல்வோர்கள்  பல நூற்றாண் டுகளாக இன்றும்  இருக்கிறார்கள்.  அப்படி அங்கே  இறப்பதற்கு  ''காசி லாபம்;  மோக்ஷ  யாத்திரை லாபம்''  என்று  பெயர். காசியில் மரணம் மோக்ஷம் தரும் என்ற நம்பிக்கை.  இப்படி சாக விரும்பும் யாத்ரீகர்கள் தங்க சில இடங்கள் காசியில்  உண்டு.  அதில் ஒன்று காசி லாப  முக்தி பவன்  என்ற விடுதி.  அங்கே வந்து தங்குவது தான் கடைசி யாத்திரை.

அந்த விடுதிக்கு மேலாளர் ஒருவர் பெயர் பைரவ் நாத் ஷுக்லா.  கிட்டத்தட்ட  அரை நூற்றாண்டு அங்கே உத்யோகம். ஒவ்வொரு நாளும் இன்று நாம்  சாகமாட்டோமா  என்று ஏங்கி தவித்து அங்கே இருப்பவர்களை அவர் நிறைய  பார்த்தவர். இப்படி  சாக வருபவர்கள் ஏழைகள்  மட்டுமல்ல, நல்ல வசதியான பணக்காரர்களும்  தான். மோக்ஷம் தேடுவதில்  ஏழை என்ன பணக்காரன் என்ன?  ஷுக்லா ஒருவருக்கு  பேட்டி கொடுத்து சொன்ன சாராம்சம்  பிரமிக்க வைக்கிறது. எல்லோரும் சாக வரும் இடத்தில்  பிழைத்து வாழ  வேலை  கிடைத்து வாழ்ந்தவர் ஆயிற்றே. :

''இது மாதிரி சாக வருகிறவர்கள் எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள் ?''
''குறைஞ்சது பன்னிரெண்டாயிரமாவது இருக்கும் ''
''ஞாபகம் இருக்கும் சில விஷயங்களை சொல்லுங்கள்''
''ஸ்ரீராம் சாகர் என்ற படித்த பண்டிதர் ஒருவர். ஆறு சகோதரர்களில் மூத்தவர். கடைசி தம்பி மீது ரொம்ப அன்பு. அவனோடு இருந்தார். ஏதோ மனஸ்தாபம்  முற்றி வீட்டில் குறுக்கே சுவர் கட்டும் அளவு வளர்ந்தது.
ஸ்ரீராம்  கடைசிநாளை கழிக்க வெறும்  வெற்றிலைப் பெட்டியுடன் மட்டும் இங்கே ஒருநாள்  வந்தார்.  சாக வந்தவனுக்கு சவுக்கியம்  என்ன?  பெட்டி  படுக்கை எதற்கு?   மூன்றாம் நெம்பர் அறை  கொடுத்தேன். இன்னும்  16  நாளில்  மறைவேன்  என்றார். 14ம் நாள்  என்னை  அழைத்து  ''என் தம்பியை வரவழையுங்கள் ' என்றார் . 

''நாற்பது வருஷமாக பேச்சு வார்த்தை இல்லை.  நான் போகுமுன்  சண்டை தீர்ந்து சமரசம் ஆக விரும்பு கிறேன்.'' என்றார். லெட்டர்  அனுப்பினேன்.  16ம் நாள் தம்பி வந்தான். ஸ்ரீராம் அவன் கையை பிடித்துக் கொண்டு  அழுதார்.  அவனும் தான். 

''தம்பி  குறுக்கு சுவரை இடித்து விடடா. என்னை மன்னித்து விடடா '' என்கிறார். ரெண்டு  பேரும் பழங்கதை 
யெல்லாம் பேசினார்கள்,  அழுதார்கள்  மனசு ரெண்டுபேருக்கும் இளகி  பழைய அன்பு தெரிந்தது. ஸ்ரீராம் முகத்தில் கவலை மறைந்து மகிழ்ச்சிதோன்றியது. கண்கள் நிலை குத்தி அசையாமல் போய்விட்டார்... போகுமுன் விரோதம் எவரிடமும் வேண்டாமே.''

''இது மாதிரி நிறைய பேர் எண்ணுவார்களா  இங்கே?''
''இது போல  வேறே வேறே  மாதிரி,  பழசெல்லாம் மறந்து  போக விரும்புவார்கள்,   பார்த்திருக்கிறேன்''

''சில  பேர்   வாய்க்கு ருசியாக கண்டதெல்லாம் தின்றது போதும். கடைசி நாட்கள்  சாத்வீக அரை வயிறு உணவு ருசி பார்க்காமல் உண்டால் போதும். இத்தனை காலம் தேடி விரும்பிய மசாலா வீண்''   என்று வருந்துபவர்களை  இங்கே பார்த்திருக்கிறேன்.  அமைதியான கடைசி சிலநாள்  எளிய வாழ்வை தேடுபவர்கள் உண்டு.   சாவதற்கு முன்  கிடைத்ததில், இருப்பதில்  திருப்தி அடைய வேண்டுபவர்கள்  இங்கே வருவார்கள்''

''ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி ஸார் . நல்லவன் கெட்டவன் என்று பார்க்காமல்  கெட்டவனிடத்திலும் இருக்கும் நல்லதை பார்ப்பவர்கள் கடைசி காலத்தில் இங்கே வருவார்கள். அவர்களிடம் அன்பு செலுத்துவார்கள். 

பிறர் கையை எதிர்பார்க்காமல் எல்லாவற்றையும் தானே செய்யும் பக்குவம் இங்கே வந்து  கற்றவர்கள் பலரை பார்த்திருக்கிறேன். அகம்பாவம், ஆணவம்  கொண்டவர்கள் இங்கே வந்து தங்கினாலும்  
 பிறருக்கு உதவும் மனப்பான்மை  மற்றவர்களைப்  பார்த்து  தானாகவே வந்துவிடும். கடைசி நாட்களில் ஏதாவது உதவி தேவை என்றால்  தாராளமாக மனம் விட்டு கேட்பவர்களும்  இருக்கிறார்கள். 
 
''யாருமே  எல்லாம் அறிந்தவர்கள் தான். மற்றவரை மதிக்கும் பண்பு அவசியம்.  திறந்த மனது வேண்டும் ஸார். நான் இங்கே தான் அதை கற்றேன். 

ஒரு வேடிக்கை சம்பவம் ஸார் . ஒரு கிழவியை கொட்டும் மழையில் இரவில் இங்கே கொண்டுவந்தார்கள் சிலர். வருபவர் விபரம் எழுதும் படிவம் எவரும் எழுதி கையெழுத்து போட்டு தரவேண்டும். அதை செய்யவில்லை. பேசாமல்  அவளை  இங்கே விட்டுவிட்டு போய்விட்டார்கள்.  மறுநாள் காலை போலீஸ் வந்து ''நேற்று இங்கே சில  தீவிரவாதிகள் வந்தார்கள் என்று அறிகிறோம். யார் வந்தது?''  
''எனக்கு தெரியாது ஸார் . என்னை யாரும் வந்து பார்க்கவில்லை''  என்றேன்.
அடுத்த நாள் ஒரு இளைஞன் வந்தான். கிழவியின் பிள்ளையோ பேரனோ.  அவனிடம்  போலீஸ் விசாரித்ததை சொன்னேன். அவன் பொய் சொல்லாமல் ஒப்புக்கொண்டான். 
''என்னய்யா இது அக்கிரமம்?  தீவிரவாதி  ஆயுதம் ஏந்துபவர்கள் என்றால் பேசாமல் இந்த கிழவியை போட்டு தள்ளி எரித்து விடவேண்டியது தானே. எதற்கு இங்கே அழைத்து என் உயிரை வாங்குகிறீர்கள்?''
''ஐயா,  நீங்கள் சொல்வதை சுலபமாக செய்ய முடியும்.  இந்த கிழவி மேல் பாசம். என் கடைசி நாள் நான் காசியில் மரணம் அடையவேண்டும். என்னை கொண்டு விடப்பா'' என்றாள் . அவள் ஆசையை பூர்த்தி செய்ய அழைத்து வந்தேன்'' என்றான். அவன் கண்களில் கண்ணீர்.

நாங்கள் இங்கே  மூன்று வேளையும்  பக்தி  பஜனை  சங்கீதம்  ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள்   ஒலிபரப்புவோம்.  அதை கேட்டு கண்களில் நீர் வடிய ஆனந்தமாக ரசிப்பவர்கள் அநேகர்.  இதற்கு முந்தி அதெல்லாம் கேட்டாலும் இங்கே வந்து கடைசி நாளில் கேட்கும்போது தனி அனுபவம் என்பார்கள். 

இங்கு வந்தும்  வாழ்க்கை நியதியை ஏற்காதவர்களும் உண்டு.  ஆணவம், கர்வம், பெருமிதம்,  குறைவதில்லை. கரைவதில்லை.  ஆனால்  ஆச்சர்யமாக இங்குள்ள மற்றவர்களது நடத்தை, பண்பு, அவர்களையும் மாற்றி விடுகிறது. வாழ்க்கையின்  உண்மை புரிந்ததும்  அன்பாக மாறுகிறது. கவலைகளோடு பயத்தோடு வந்தவர்கள்  மரணத்தை இனிமையாக வரவேற்க கற்றுக்கொள்கிறார்கள். 

இங்கு வந்தபின் மனிதர்களில் எந்த வித்தியாசமும் இல்லை என்று புரிந்து கொள்பவர்கள் ஜாஸ்தி ஸார் . எல்லோருக்கும் மரணம் நிச்சயம். அது எல்லா வித்யாசங்களையும் நீக்கி விடுகிறது.  அறிவு மலர்ந்து அதை வரவேற்கிறார்கள். 

இங்கு வேலைக்கு வந்த புதிதில் எனக்கு  ஜாதி, மதம், வயது, பணக்காரன், ஏழை, உயர்குலம் தாழ்குலம் என்றெல்லாம் எண்ணங்கள் இருந்தது.  கோபம்  தாபம் எல்லாம் இருந்தது.  இங்கு வருபவர்களை பார்த்து பார்த்து நான் ரொம்ப மாறிவிட்டேன் ஸார். எல்லோரிடமும் அன்பு செலுத்த கற்றுக்கொண்டேன், எதுவும் சாஸ்வதமில்லை.

''நாம் பிறந்ததின்  உண்மையான அர்த்தம் இங்கே புரிகிறது ஸார். மரணம் தப்ப முடியாதது.  எதுவும் வாழ்வில் சாஸ்வதமில்லை, அன்பும் இனிமையான நட்பும் தான் முக்கியம் என்று புரிய வைக்கிறது ஸார்''

நல்ல பழக்கங்களை எல்லோரும் உடனே கற்க வேண்டும் ஸார் . கடைசி காலத்தில் கற்று என்ன பயன். பெரும்பாலான காலம் வீணாகிவிடுகிறதே.  வாழும் ஒவ்வொருநாளும் பிறர்க்கென  ஒரு சிறு செயல், தியாகம் அற்புதம் ஸார்''

பொய்யே தேவையில்லை ஸார் , நேர்மை நியாயம்  நிம்மதி இதற்கெல்லாம் எதுவுமே ஈடில்லை ஸார் . இரக்கம்  அன்பு  பிற உயிர்களிடம் கட்டாயம் வேண்டும் சார். ஒரு நாளும் வீணடிக்க கூடாது ஸார் . கடைசி நேரம் இதை உணர்ந்து தாம் வாழ்ந்த  உபயோகமற்ற, சுயநல, தவறான  வாழ்க்கைக்கு வருந்துபவர்களை   ஆயிரக்கணக்கில் இங்கே  கண்ணால்  பார்த்தவன்  ஸார் .

இன்னொன்று ஸார் , இங்கே  மற்றவர்களுக்கு  உபதேசம் செய்ய வருபவர்களும் உண்டு.   அவர்கள் சொல்வ தற்கு எல்லாம் நன்றி சொல்லி விட்டு  ஒவ்வொருவரும் இங்கே தனக்குள் தாமே  சுய பரிசோதனை செய்பவர்கள். அவரவர்கள்   தம்மை  ஆன்ம சோதனை செய்து கொண்டு  அறியும் உண்மை  போதும். அது தரும்  நிம்மதி ஆனந்தம்  அற்புதமான அனுபவம்.

இங்கே கடைசி காலத்தை கழிக்க வருபவர்கள் பெரும்பாலும் நடக்க முடியாமல், வியாதியுடன்,  பேச முடியா மல், கேட்க முடியாத நிலையில் வருகிறார்கள். அவர்கள் தமக்குள் போராடுபவர்கள்.  வெற்றிபெற்று தனிமையில் இனிமை, பெறுபவர்கள். மரணம் அவர்களை சந்தோஷமாக அவற்றிலிருந்து  விடுதலை பெற உதவுகிறது.இங்கு உடம்பு சரியாகவேண்டும் என்று டாக்டரை மருந்தை தேடுபவர்களை பார்க்க முடியாது ஸார் .

இன்னொன்று சார்,  எவரோடும் விரோதம் சச்சரவு, சண்டை  தேவை இல்லை.  அவர்களது எண்ணங்கள் தான் ஒப்புக்கொள்ள முடியாமல்  தடுக்கிறது  என்று புரிந்து கொள்ள முடிகிறது. 

எவ்வளவோ  அன்பும், பாசமும் நேசமும் கொண்டு பழகினாலும்  எங்கோ ஒரு சிறு கோப  நெருப்புப்  பொறி இடையே  பிளவை உண்டாக்கி  உறவைப் போக்கி விடுகிறது ஸார்,  நான் பார்த்தவரை  டைவோர்ஸ்   DIVORCE   என்பது உண்மையில்   மனிதர்களுக்கிடையில் இல்லை சார். அவர்கள் உள்ளே  வளர்த்த, வளர்க்கும்  பிடிவாதம்,  ஆணவம் தான் சார் அவர்களை  பிரிக்கிறது.  பழி வாங்கும் எண்ணம் மனதை விட்டு அகல வேண்டும் ஸார் . விட்டுக்கொடுக்கும் பண்பு அவசியம் ஸார் .  பிறரை துன்பத்தில் இருந்து மீட்பதில் கிடைக்கும் இன்பம் வேறெதிலும் இல்லை ஸார் .

சம்பாதிப்பதில்  ஒரு பத்து சதவீதமாவது தான தர்மம் செய்ய பயன்படவேண்டும் என்று புரிகிறது ஸார் .இது ஆன்மிகம் இல்லை சார். மனிதாபிமானம். அது தான் சார் முதலில் அவசியம்.

மரணத்தின்  சகவாசத்தை,  INFLUENCE  தன்மையை  அரை நூற்றாண்டுகளாக  கண்கூடாகப்பார்த்து அனுபவித்த ஒருவரின் வார்த்தைகள் சத்யமானவை அல்லவா?


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...