Monday, September 23, 2019

OLDEN DAYS



இப்படியா வாழ்ந்தார்கள்.... J K SIVAN


இப்போதிருப்பவர்களுக்கு ரெண்டு மூன்று முந்தைய தலைமுறைகள் வாழ்ந்த காலத்தில் என்று நான் சொல்லும்போது ஒரு நூறு நூற்றைம்பது வருஷங்கள் முன்பு இருந்த தமிழக மக்கள் வாழ்க்கை பற்றி தான் சொல்கிறேன்.

எல்லோர் வீட்டிலும் குறைந்தது 5 அல்லது 6 உருப்படிகளுக்கு குறையாமல் குழந்தைகள் இருக்கும். நான் சொன்னது குறைந்த அளவு. 10 ம் அதற்கு மேலும் குழந்தைகள் இருக்கும் குடும்பங்கள் சர்வ சாதாரணம். நானே பதிமூன்றா வது ஆசாமி எங்கள் குடும்பத்தில். சில குழந்தைகள் இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்துவிடும் நிலை அப்போது. காரணம் வியாதிகள் விவரம் நிலவரம் எல்லாம் தெரியாது. கை வைத்தியமாகத்தான் வியாதிகள் குணப்படுத்தப்பட்டன.

நாட்டு வைத்தியர் எனும் நாவிதர் கொடுக்கும் குளிகைகள், கஷாயம், சூரணம் லேகியம் இவற்றை நம்பியவர்கள். குலா தெய்வத்தை வேண்டி காசு முடிந்து வைத்தவர்கள், முடி இறக்குவதாக வேண்டிக்கொண்ட வர்கள் ஜாஸ்தி. ஆங்கில வைத்தியம் தெரிந்த டாக்டர்கள் அபூர்வமாக காணப்பட்டார்கள். அதுவும் பட்டணங் களில் தான் அவர்களை காண முடிந்தது. கிராமங்களில் மாரியம்மன், சிவன், பெருமாள் காவல் தெய்வங்கள் பூசாரி, மேலே குறிப்பிட்ட நாட்டு மருத்து வர்களை நம்பி தான் வாழ்க்கை. ஆனால் சுற்றுப்புற சூழ்நிலை இயற்கை அவ்வளவாக பாதிக்கப்படாமல் இருந்தது. கடவுள் நம்பிக்கை சில விரதங்கள், பத்திரங்களை அனுஷ்டிக்க வைத்தது.

இன்றும் திருப்பதி வெங்கடாசலபதி, வைத்தீஸ்வரன் அய்யனார் போன்ற தெய்வங்கள் குலதெய்வங்களாக வழிபடப்படுவதும் நன்றி உணர்ச்சி யுடன் தான். பூஜைகள் செயது தாயத்து ரக்ஷை கட்டிக்கொண்டார்கள்.

போட்டோ வசதி இல்லாத கிராமங்கள் என்பதால் கூடப்பிறந்தவர்கள் போட்டோ, உருவமோ தெரிய வாய்ப் பில்லை. என்னுடன் பிறந்தவர்களில் நிறைய பேரின் பெயரோ, வயதோ, உருவமோ எனக்கு இன்னும் தெரியாது. போட்டோ எடுத்தால் ஆயுசு குறையும் என்றும் பயம் இருந்ததும் இதற்கு ஒரு காரணம். கோடி ரூபாய்கள் கொடுத் தாலும் என் சகோதர சகோதரிகளின் பெயரோ, உருவமோ, குரலோ, விருப்பு வெறுப்புகளோ எதையும் நான் இந்த ஜென்மத்தில் அறியப்போவதில்லை.

ஊரில் எவருமே அதிகம் வெளி உணவு சாப்பிட வழியில்லை. ஹோட்டல்கள் கிடையாது. யார் வீட்டிலாவது கிடைத்த உணவு வகை ரொம்ப பிடித்தது. இப்போது போல் ஏழு நாள் முந்தி சமைத்ததை குளிர் பெட்டியில் வைத்து சாப்பிடும் எண்ணம் எவருக்கும் எழுந்ததில்லை. மண் அடுப்பு, விறகு, மண் பாத்திரங்கள், வெண்கலம், இரும்பு சட்டி. செக்கில் ஆட்டிய எண்ணெய் . வீட்டில் கடைந்த தயிர், வெண்ணை, தோட்டத்தில் கறந்த பசுவின் பால்
ஆட்டுக்கல், அம்மி, கல் யந்திரம், இதில் அரைத்த சமையல், அன்றன்று புதிது புதிதாக சமையல்,

கூட்டுக்குடும்பங்களில் மாற்றி மாற்றி யாராவது அத்தை, மாமி பெரியம்மா சித்தி அம்மா பாட்டி என்று முறை போட்டுக்கொண்டு சேர்ந்து சமைப்பது வேறு வேறு ருசி தந்தது. இது தான் எல்லோர் வீட்டிலும் பழக்கமாகி உபயோகமாக இருந்தது.

காலையில் பல் துலக்க, சாம்பல், கரிப்பொடி, ஆற்றில் குளத்தில் அமிழ்ந்து குளியல். சிலர் துறவு கிணறுகளில், ஏற்றம் இறைக்கும் கிணறுகளில் இறங்கி குளித்தார்கள். பெண்களுக்கு தனி இடம் அங்கெல்லாம் உண்டு. எல்லோருக்கும் நீந்த தெரிந்தது.

இப்போது போல் கலப்படம், இல்லை. கிணற்றுநீர் ஆற்றுநீர் வடிகட்டி, காய்ச்சி குடித்தார்கள். குழந்தைகளுக்கு கடவுள்கள் பெயர்களை வைத்தார்கள். அன்றாட உணவுக்கான பயிர்களை, கீரை , காய் கனிகளை வீட்டுக் கொல்லைப் பக்கத்தில், தோட்டத்தில் ரசாயன உரம் இன்றி வளர்த்து உண்டார்கள். வீட்டுக்கு ஒரு வேப்ப மரம், முருங்கை, மாட்டுச்சாணத்தால் வீடு வாசல் மெழுகி கிருமிநாசினிகளை உபயோகித்தார்கள்.

குழந்தைகள் மரணம் நேர முன் ஜென்ம கர்மா காரணமாகவும் சொல்லப்பட்டது. ஒரு வீட்டில் பத்து பனிரண்டு குழந்தை கள் குடும்ப கட்டுப்பாடு இன்றி பிறந்து வளர்ந்ததில் நான்கு ஐந்தாவது தேறாதா என்ற ஆதங்கத்தில் அதிகம் பெற்றுக்கொண்டார்கள்.

நொடி வந்தால் வைதீஸ்வரனுக்கு வேண்டிக்கொண்டு, திருப்பதி வெங்கடாசலபதிக்கு முடிந்து வைத்தும் குடும்ப பழக்கம் இன்றும் சில குடும்பங் களில் தொடர்கிறது.

யமன் குழந்தைக்கு மூக்கிலோ காதிலோ துளை இட்டு பின்னம் பண்ணினால் நெருங்க மாட்டான், கசப்பான வேம்பு என்றால் கிட்டே வரமாட்டான், மண்ணாங்கட்டி, பிச்சை, என்றெல்லாம் பெயரிட்டால் நெருங்க மாட்டான் என நம்பினார்கள். தெய்வம் போட்ட பிச்சையால் ஆயுசு நீளும் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருந்தது இன்னும் நிறைய குடும்பங்களில் வேம்பு, பிச்சை எல்லாம் இருக்கிறார்கள். . என் அண்ணாவின் பெயர் பிச்சை. google தலைமை அதிகாரியும் ஒரு சுந்தர் பிச்சை தான்... அவர் முன்னோர் பெயரை வைத்திருக்கிறார்களோ?

பெரியோர் பெயரை சொல்லி கூப்பிட்டு அவமதிக்க கூடாது என்று குழந்தைகள் அம்பி, பெரியம்பி, சின்னம்பி , அண்ணு, அண்ணப்பா , அம்மாளம் , அங்கச்சி, போன்ற வேடிக்கையான பெயர்கள் இன்னும் சிலர் தாங்கிக் கொண்டிருக் கிறார்கள். கடவுள் பக்தி, முன்னோர்கள் பெரியோர் வாக்கில் நம்பிக்கை அக்கால மக்களை காப்பாற்றியது என்று தாராளமாக கூறலாம்.

வைசூரி, காலரா போன்ற கொள்ளை நோய்களுக்கு மருந்து தெரியாமல் மறைந்தவர்கள் ஏராளம். மாரியம்மனை, அம்மை என்று வழிபாட்டு நிவாரணம் தேடினார்கள், பச்சிலை, வேப்பிலை, இளநீர் மருந்தாக அமைந்த காலம் அது. ரண சிகிச்சை அதிகம் நம்பப்படாமல், ஊசி தெரியாமல், விபூதி, மந்திர தீர்த்தம், மஞ்சள், பச்சிலை வைத்தியத் தை பூரணமாக குணம் பெற நாடினார் கள். நிறைய பேர் பக்தியால் நிவாரணம் பெற்றார்கள் எனலாம். வியாதி நோய்க்கு ஏழரை நாட்டான், பித்ரு சாபம், என்று பரிகாரம் தேடினார்கள். நவகிரஹ கோளாறுக்காக தினமும் கோயிலை சுற்றினார்கள்.

பிரசவங்கள் வீட்டிலேயே நடந்தது. நான் அப்படித்தான் பிறந்தவன் . வீட்டு மருத்துவச்சி ஒரு கிழவி, அவள் மகள், மருமகள் உதவ (அவர்கள் அடுத்த தலைமுறை டாக்டர்கள்) எத்தனையோ குழந்தைகள் பிறக்க காரணர்கள்.

ஒரு சில வியாதிகளின் பெயர்கள் மட்டுமே அனைவருக்கும் தெரிந்தவை யாக இருந்தது. எல்லோரும் அதற்கு வைத்தியம் தேடினார்கள். பித்தம் வாதம் கபம் என்று கைநாடி பார்க்கும் வைத்தியனை நம்பி வாழ்ந்தார்கள்.

இப்போது வைத்தியம் வேறுவிதம். வியாதிகள் எத்தனை எத்தனையோ புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு சமமாக மருந்துகளும் அதிகரித்து விட்டன. ைத்தியசாலைகள் மாறிவிட்டன. இளம் மருத்துவர்கள் ஆணும் பெண்ணும் எங்கும் வெள்ளை கோட்டில் திரிகிறார்கள். எதையும் இயந்திர உதவியால் அறிகிறார்கள். அவசர உதவிக்கு நாலு சக்கர வண்டிகள் இரவும் பகலும் பட்டி தொட்டியெல்லாம் இருக்கிறது. ஊருக்கு ஊர் ஆஸ்பத்திரிகள், உடனே டாக்டரை அழைக்க டெலிபோன், என்ன நடக்கிறது உடம்பில் என்று காண ஸ்கேன் scan வசதிகள் உள்ளது. அறுவை சிகிச்சை, ரத்தம் ஏற்றுதல், மாற்றுதல் எல்லாவற் றிற்கும் கருவிகள், குழாய்கள், இதயத்துடிப்பை, ரத்த அழுத்தத்தை அறியும் கலர் கலர் கோடுகள் மேலும் கீழும் காட்டும் வண்ண திரைப்பட பெட்டிகள், சாய்மான படுக்கைகள், குளிர் சாதனம்.
அடேயப்பா, பழங்கால கிழங்கள் மூக்கில் விறல் வைத்து அதிசயிக்கிறதா? அஞ்சுகிறதா? எனக்கு உண்மையில் புரியவே இல்லை. நான் வைத்தியநாதன் விபூதியை நம்புபவன். வேலும் மயிலும் துணை, கிருஷ்ணனே கதி என்று எஞ்சிய இன்னும் சில வருஷங்களை ஓட்ட தயாராக இருப்பவன். இதனால் எனக்கு குறையோ, குறைவோ இருப்பதாக கொஞ்சமும் நினைக்கவில்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...