Monday, September 16, 2019

DOG AND LAMBS



அன்பும் ஆடும் J K SIVAN

''அன்பிலாரெல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு''
சிலருக்கு தம்மைபற்றி பேசவே, நினைக்கவே, புகழவே நேரம் போறாது , அவர்கள் எப்படி மற்றவர்களை மதிக்கவோ, அவர்களிடம் அன்பொழுக பேசவோ, பழகவோ செய்வார்கள்?. பிறர் நலம் கருதி அன்பாக பழகுபவன் இறந்தாலும் அவன் எலும்பு கூட பிறரால் போற்றப் படும்

....வள்ளுவர் அழகாக சொன்னார் இதை. ரொம்ப அருமையான எனக்கு பிடித்த குரள் இது.

அன்பினால் மனமே, மனசாட்சியே அற்ற கொடூர ஆயுள் சிறைக்கைதிகளை கூட கட்டுப் படுத்தலாம் என்று ஒரு இந்தி படம் ரொம்ப காலத்திற்கு முன் பார்த்தது ஞாபகம் வருகிறது. பெயர்: ''இரு கண்கள் பன்னிரு கைகள்'' DO ANKHEN BARAH HATH. சாந்தாராம் என்பவர் இயக்கி நடித்த படம். வெகுநாள் எல்லோராலும் புகழப்பட்ட நீண்டநாள் ஓடிய ஹிந்தி படம். பாட்டு எல்லாமே பிரமாதம். ''ஏ மாலிக் .''.. இன்னும் காதில் ஒலிக்கிறது.

ஒரு தனி வெளி இடத்தில் ஆறு குற்றவாளிக ளும் சிறை அதிகாரியும் தங்குகிறார்கள். அதிகாரின் சிறிய தனி வீட்டைச் சுற்றிலும் புதர்கள் காடாக மண்டிக்கிடக்கிறது. கை விலங்குகள் இல்லாமல் சுதந்திரமாக கைதிகள் உலாவ, சிறை அதிகாரி அன்பையும் கருணையும் பொறுமையையும் மட்டுமே அதிகாரமாகக் கொண்டு, அவர்களை நல்லவராக்கு கிறார். கைதிகள் .ஆரம்பத்தில் அவரை எதிர்க்கிறார்கள். தப்பி ஓட முயற்சிக்கிறார்கள். ஆனாலும் ஏன் அது முடியவில்லை? சாந்தாராமின் ( சிறை அதிகாரி) சாந்தமான பார்வை காந்தமாக அவர்களை கட்டி இழுக்கிறது. ஒரு சமயம் அவரைக் கொல்லவும் முயற்சி. ஆனால் அவர் கருணை விழிகளின் தாக்கத்தில் மனம் மாறி திருந்துகிறார்கள்.

சுற்றிலுமுள்ள புதர்களை, காட்டை, திருத்தி விளைச்சல் நிலமாக்குகிறார்கள். அன்பு வழியேஎன்றும் வெல்லும் என்னும் தத்துவத் தை படம் அற்புதமாக புரியவைத்தது..அன்பு
பற்றிய ஒரு குட்டிக்கதை சொல்லட்டுமா?
குப்பணாம்பட்டி யில் கோவிந்தசாமி ஆடு வளர்ப்பவன். ஆடு மாதிரியே அவனும் சாது. ரொம்ப நல்ல குணம். எல்லோரிடமும் அன்பாக பழகுபவன்.எல்லோருக்கும் அவனைப் பிடிக்கும். அடுத்த வீட்டில் அப்துல்லா, அவனிடம் ரெண்டு வேட்டை நாய்கள். ரெண்டுபேரும் நல்ல நண்பர்கள். ஆனால் அவர்கள் வளர்க்கும் ஆடுகளும் நாய்களும் இந்தியா பாகிஸ்தான். வேலி தாண்டி குதித்து வேட்டைநாய்கள் கோவிந்தசாமியின் ஆடுகளைக் கடிக்கும். நான் தான் பாகிஸ்தான் என்று சொல்லி விட்டேனே.

''அப்துல்லா, உன் நாயை கொஞ்சம் கட்டிப்போடப்பா, வேலியை எகிறி குதிச்சு என் ஆடுகளை அப்பப்போ கடிக்குதே. கொஞ்சம் கட்டிப்போட்டு அடக்கி வையேன் பா''
''இனிமே அங்கே வந்து கடிக்காம பார்த்துக்கறேன்'' என்று அப்துல்லா சொன்னாலும் நாய்களுக்கு இந்த சேதி போகவில்லை. சுதந்திரமாக உலவின. ஆடுகள் கடிபடுவது தொடர்ந்தது.

அந்த ஊரில் சுப்புசாமி ஒரு ஒய்வு பெற்ற மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி. அவரும் கோவிந்தசாமியின் நண்பன். அவரிடம் தனது குறையை சொல்லி அப்துல்லா மீது நீதி மன்ற நடவடிக்கை எடுக்கலாமா என்று கேட்கிறான் கோவிந்தசாமி.

ஒரே கேள்வி கேட்கிறார் சுப்புசாமி.'''கோவிந்தா, உன் நிலைமை புரியுது. நான் அப்துல்லா மேலே கேஸ் போட்டு அவன் நாய் கடிக்காம பார்த்துக்கிறேன். ஆனால் அப்புறம் அவன் உனக்கு நண்பனில்லை. அடுத்த வீட்டுக்காரன் விரோதியாயிடுவான். நண்பனா? விரோதியா? யார் வேணும் உனக்கு சொல்லு.''

''ஐயா, எனக்கு அப்துல்லா நண்பனாகவே இருக்கட்டும் ''

''அப்படின்னா உனக்கு நான் ஒரு வழி சொல்றேன் அதன்படி நடந்தா உன் ஆடுகளை இனிமே அவன் நாய்கள் கடிக்காது.'' என்று காதோடு ஒரு வழி சொல்கிறார் சுப்புசாமி.
சிரித்துக்கொண்டே தலையாட்டி விட்டு வீடு வந்த கோவிந்தசாமி ரெண்டு ஆட்டுக்குட்டி களை தூக்கிக்கொண்டு அப்துல்லா வீட்டுக் கதவை தட்டுகிறான்.

''என்ன கோவிந்தா ஆட்டுக்குட்டி கொண்டாந்திருக்கே, இன்னா விசேஷம்?''

''அப்துல்லா உன் பசங்க ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு ஆட்டுக்குட்டி பரிசு கொண்டாந்தி ருக் கேன். அவனுங்க என் வீட்டுக்கு வந்த இதுங்களோடு விளையாடுறாங்களே. அவங்களுக்கே இந்த குட்டிகளைக் பரிசா கொடுத்துட்டா வீட்டிலேயே விளையாடு வான்களே ''

ஆட்டுக்குட்டிகளை வாங்கிக்கொண்ட அப்துல்லாவிற்கு வாயெல்லாம் இல்லை, உடம்பெல்லாம் பல்லு.

அவன் நாய்கள் ஆட்டுக்குட்டிகளை பார்த்து விட்டு ஆசையாக அவற்றைக் கடிக்க ஓடிவந்த போது மூங்கில் கம்பினால் அப்துல்லா அவைகளை விளாசினான், ரெண்டையும் கயிற்றால் கட்டிப்போட்டான்.

சுப்புசாமியின் சமயோசித அன்புவழியால் ரெண்டு நண்பர்களும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்பதைவிட ஆடுகள் நாய்களின் பல்லிலிருந்து விடுபட்டு ஆரோக்யமாக வாழ்ந்தன என்பதே சரி.

சுபம் சுபம் சுபம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...