Wednesday, September 4, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்   J K  SIVAN 

                                             
                                    '' வா  வீரா,  பீமா,வா ''

''விதுரா உன்   சொற்கள் என் இதயத்தில் தேன்  தடவியது போல்  சுகமாக இருக்கிறது. மேலே சொல்'' என்கிறான்  திருதராஷ்டிரன்.
                                                        
'' என் கடமையை நான்  செய்கிறேன்.எனக்கு  நியாயம், நேர்மை என்று தெரிந்ததை அவ்வப்போது சொல்லிக்கொண்டு  தான் வந்திருக்கிறேன். என்ன   செய்வது.விதியின் கொடுமை. சொல்கிறேன் கேள்: 

ஒரு நீண்ட பயணம் செல்பவன் அங்கங்கே வழியில் சற்று தங்கி இளைப்பாறுவதைப் போல் தான் நமது கர்ம வினை வாழ்க்கையில் அடுத்து அடுத்து எடுக்கும் பிறவிகள். ஐம்புலன்கள் வசம் மாட்டிக்கொண்டு அவன் அடையும் அல்ப சுகம், அவன் இயலாமை, வியாதிமூலம் அவனைச்  சீரழிய வைக்கிறது. நாள், மாதம், வருஷம், பருவம்   ஆகியவை எல்லாம் அவனை மரணத்தை நெருங்க வைக்கும் யமதூதர்கள்.

நமது  உடம்பு தான் தேர். ஐம்புலன்கள் தான் குதிரைகள். அவை இழுத்து செல்லும் பாதையில் போகிறவன் மீண்டும் பல பிறப்பெடுக்கவேண்டும். அவற்றை அடக்கி செல்பவன் தப்புகிறான். அதனால் தான் இன்ப துன்பங்கள் ஆட்டிப் படைக்காமல் வைராக்கியமாக இருக்கவேண்டும் என்றேன். எந்த உயிரும் மரணத்தை விரும்புவதில்லை. எனவே அனைத்திடமும் கருணையும் அன்பும் வேண்டும்''   என்று விதுரன் திருதராஷ்டிரனுக்கு எடுத்து சொன்னான்.

அப்படியும் திருதராஷ்டிரன்  மனம்  அமைதி அடையவில்லை...  தனது மக்களை இழந்த சோகத்தில் கண்ணீர்விட்டு மயங்கி விழுந்தான். அவனைத்  தெளிய வைத்து, ஆறுதல் சொல்கிறார்கள் சஞ்சயனும் விதுரனும். ''நான் இன்றோடு என் வாழ்வை முடித்துக் கொள்கிறேன்'' என்று நொந்து கொள்கிறான் திருதராஷ்டிரன்.

வியாசர் அப்போது என்ன சொல்கிறார்  என்று கேட்போம்.

''திருதராஷ்டிரா,  நான் நேரடியாக கேட்ட விஷயம் சொல்கிறேன் கேள்.'' பூமாதேவி இந்திரன் எதிரே நின்று என் பாரத்தை போக்கவேண்டும். என்னால் தாங்க முடியவில்லை . நீங்கள் உதவுகிறேன் என்றீர்களே'' என்றாள்.   விஷ்ணுவே அப்போது  அவளிடம் ''பூதேவி,  உன் குறையை குருவம்ச அரசன் துரியுரோதனன் தீர்த்து வைப்பான். அவன் மூலம் எண்ணற்ற உயிர்கள் பூமியிலிருந்து அகலும் '' என்கிறார். ஆகவே துரியோதனன் கலி யின் அவதாரம். நாரதர் இதை முன்பே அறிந்ததால் ராஜசூய யாகத்தில் யுதிஷ்டிரனை எச்சரித்தார்.

''யுதிஷ்டிரா,  கௌரவ பாண்டவ குலங்கள் அழிய நேரும். தர்மத்தை விட்டு விலகாதே ''என்றார்  நாரதர்.  எனவே தான் கடைசிவரை தர்மன் யுத்தத்தை தவிர்த்து அமைதியோடு வாழ சமாதானம் தேடினான் .  ஆகவே தான் சொல்கிறேன்  திருதராஷ்டிரா, இனியாவது  பாண்டவர்கள் மேல் அன்போடு கருணையோடு வாழ்வாயாக '' என்று அறிவுரைத்தான்  விதுரன்.

திருதராஷ்டிரன் யோசித்தான். ஒரு முடிவுக்கு வந்தான். ''காந்தாரியையும், அந்தப்புர பெண்களையும் கூப்பிடு இங்கே'' என்றான். குடும்பத்துக்கு, ஏன் தனது வம்சத்துக்கே வந்த கேட்டை எடுத்து சொல்லி அவர்களைத்  தேற்றினான். இனி நடப்பதை பற்றி யோசிப்போம் என்று சொல்லி வெளியே காந்தாரி சஞ்சயனோடு கிளம்பினான் குருக்ஷேத்திர பூமிக்கு செல்கிறார்கள். 

வெகு தூரத்தில் ஒரு காட்டில் அஸ்வத்தாமன், கிருபர், கிருத வர்மன் ஆகியோரை சந்திக்கிறார்கள். நடந்ததெல்லாம் அறிகிறார்கள். அஸ்வத்தாமன்  வணங்கி விஷயம் சொல்கிறான்:

 ''திருதராஷ்ட்ர மஹாராஜா, இனி நாங்கள் உயிர் தப்பி மறைந்து வாழவேண்டும். பாண்டவர்களை எதிர்க்க சக்தி இல்லை, எங்களைப்  பழி வாங்க முனைவார்கள். உங்கள் அனுமதியோடு நாங்கள் விடைபெறுகிறோம் '' என்று திருதராஷ்டிரனை காந்தாரியை வணங்கி கங்கைக் கரை நோக்கி செல்கிறார்கள். தனித் தனியே பிரிகிறார்கள். கிருபர்  ஹஸ்தினாபுரத்திலும், அஸ்வத்தாமன் வியாசரிடமும் கிருதவர்மன் தனது காம்போஜ நாட்டுக்கும் செல்கிறார்கள் .   

அஸ்வத்தாமன்  பாண்டவர்களை கொன்றதாக கருதி அடுத்த தலைமுறையினரை அழித்ததை, அர்ஜுனன் பீமனிடம் பிடிப்பட்டதை, சிரோமணி இழந்ததை, உத்தரை வயிற்றில்  கருவாக இருந்த பரீக்ஷித் கிருஷ்ணனால் காப்பாற்றப்பட்டதை,  சகல சக்தியையும் இழந்து, நடை பிணமாக யாத்திரை  சென்றதை   ஏற்கனவே  அறிந்தோம்..

யுதிஷ்டிரன் பாண்டவர்கள், கிருஷ்ணன், திரௌபதி மற்றும் இதர பெண்டிரோடு கங்கைக் கரையில் திருதராஷ்டிரனை சந்தித்து வணங்கினான் . இருபக்க குல நாசத்தை எடுத்து சொல்கிறான். திருதராஷ்டிரன் ஒவ்வொருவராக பேரைச் சொல்ல அவர்களை அணைக்கிறான். திருதராஷ்டிரன் மனதில் இருந்த பழிவாங்கும் எண்ணத்தை அறிந்த கிருஷ்ணன் பீமனைப் போல் ஒரு இரும்பு பதுமையை ஏற்கனவே தயார் செயது கொண்டு வந்திருந்தான்.

''எங்கே என் மகன் வீராதி வீரன் அந்த பீமசேனன். அவனை  ஆசை  தீர  அணைக்கவேண்டும் '' என்று  திருதராஷ்டிரன் கேட்டபோது கிருஷ்ணன் அந்த இரும்பு பதுமையை அவனிடம் நகர்த்தினான்.
''வா,  வீரா வா , உன்னை தான் ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன் என் மகனே என்று உள்ளத்தில் கடுங்கோபம் கொண்டு தனது கைகளாலேயே அவனது மக்கள் அனைவரையும் கொன்ற பீமனை இறுக்கமாக  கட்டி நெறிக்க திட்டமிட்டான் திருதராஷ்டிரன். எனவே இரும்பு பதுமையை ஆவலோடு இரு கைகளாலும் அனைத்து மார்போடு சேர்த்து பலம் கொண்டு இறுக்கினான். அவனது கோபமும், பழிவாங்கும் எண்ணமும், பலத்தோடு சேர்ந்து இரும்பு பொம்மை தூள் தூளானது . ஆஹா என்று சிரித்தான். இரும்பு மார்பில் குத்தியதில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. வாயில் ரத்தம் வழிந்தது. கீழே விழுந்தான். சஞ்சயன் அவனை தூக்கி நிறுத்தினான்.

அவன் கோபம் ஆத்திரம் பீமனைக் கொன்றதில் தீர்ந்ததும் பாசம் நெஞ்சில் ஊற, ''ஐயோ பீமா, என் ஆத்திரத்தில் உன்னை கொன்றுவிட்டேனே'' என்று அழுதான்.
''இல்லை திருதராஷ்டிரா, வருந்தாதே, நீ கொன்றது பீமனை அல்ல. ஒரு இரும்பு பொம்மையை. உன் கோபம் ஆத்திரம் மிருக வெறி எல்லாம் அடங்கியதால், இதோ இனி பீமனை வாழ்த்து. உன் மக்கள் அழிந்ததற்கு பீமன் காரணம் அல்ல, நீயே. பீஷ்மர், துரோணர், விதுரன் நான் எவ்வளவோ உனக்கு எடுத்துச் சொன்னோம். பாண்டவர்களை வெல்லவோ கொல்லவோ முடியாதென்று படித்து படித்து சொன்னேன். உன் மகனைப் போலவே நீயும் துர்க்குணம் கொண்டு உன் துன்பத்தை நீயே விலைக்கு வாங்கி கொண்டாய். இப்போது கூட உன் குணம் எண்ணம் தெரிந்ததால்  தான் பலர் முன்னிலையில் நீ பீமன் என்கிற இரும்பு பதுமையை  நாசமாக்க விட்டேன்.   இனியாவது விவேகம் உனக்கு கிட்டட்டும்'' என்றார் கிருஷ்ணன்.. திருதராஷ்டிரனுக்கு இப்போது தான் உரைத்தது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...