Friday, September 27, 2019

MY ANCESTORS




                       கை தேர்ந்த குடும்பங்கள்  J K  SIVAN 

என் முன்னோர்களில் பலர்  பல விதத்தில் கை தேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று அறியும்போது எனக்கு நாம் எதிலும் சிறக்க வாழ இன்னும் கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே.  உத்யோகத்தில் ஏதோ சம்பளம் வாங்கியது எல்லோருக்கும் பொதுவான விஷயம் தானே.  இனி தனித்துவம் கற்றுக்கொள்ள காலமோ நேரமோ அதிகமில்லையே என்கிற வருத்தம் நெஞ்சை அடைக்கிறது.

பலர் சங்கீத  வித்வான்களாகவும்  சிறந்த  ராம  பக்தர்களாகவும் இருந்தார்கள்.  சாதரணமாக  பாடுபவர் களைக் காட்டிலும்  அசகாயத்தனமாக பாடுபவர்களுக்கு  மவுசு  (DEMAND ) இருந்ததால்,  வித்வான்கள் '' தனித்திறமை காட்டி பரிசுகள் பெற  முனைந்தனர்.  ''கனம் '' பாடுவது பற்றி  சொல்லியிருந்தேனே.  அது போல்  தான்  மற்றொரு அசாத்யமான சாதகம், கழுத்தில்  கூரான  கத்தி கட்டிக்கொண்டு  பாடுவது.  கண்டம் சிறிது சரிந்தாலும்  குரல் வளை பெருத்தாலும்  பிடிப்பாக  கட்டிக்கொண்டிருந்த கூரான  கத்தி  தொண்டையை  பிளந்து விடும்.  இப்படி அசுர சாகசம் பண்ணி இருக்கிறார்கள். 

இன்னொரு  சாதகம்  தலையில்  எலுமிச்சையை வைத்துக்கொண்டு  அசையாமல்  பாடுவது.  இது ரொம்ப  கடினம்.  ஏனென்றால், பாடும்போது  தலையை அசைத்தும் கைகள், உடம்பை  மாவாட்டுவது  போல்  உருட்டியும்  பாடுபவர்கள்  இன்னும்  இருக்கிறார்கள்.  எனக்கு  தெரிந்து  சிறுவயதில்  MK  தியாகராஜ பாகவதர்  சினிமாவில் நேரில் கூட, பாடுவதை  பார்த்திருக்கிறேன்.  துளிகூட  முகம் சுளிக்காமல்  பாடுவார்.  உடம்பும் அஷ்ட கோணலில் அசையாது. உச்ச ஸ்தாயியிலும்  சர்வ லகுவுடன்  அற்புதமான குரலில் பாடுவதால் ஏழிசை மன்னன்  என்று பேர்  பெற்றவர்.  கந்தர்வ கானம்  என்பார்கள்.  4 - 4 1/2 கட்டையில்  பாடுபவர் என்றெல்லாம்  புகழ்வார்கள்.  இன்றும்  அவர்  பாட்டுகளை  விடாமல்  கேட்டு வருவதில்  தனி ஆனந்தம்  கொள்பவர்கள்  என் ரகம்.  

மேலே  சொன்ன  தலையில் எலுமிச்சை  வகை  சங்கீதம்  குழந்தைகள்  இன்றும்  விளையாடும்  லைம்  அண்ட் ஸ்பூன்  lime  and  spoon ஓட்ட பந்தயம்  போன்றது.  இது  ஓடி ஜெயிப்பது.   அவர்கள்  சாதித்தது பாடி  ஜெயிப்பது.

இந்த  மாதிரி  வித்தைகளில் கற்று  தேர்ந்தவர் எங்கள் தாய்வழி முன்னோரில் ஒருவரான  கனம்  கணபதி சாஸ்திரிகள். அவருக்கு சகோதரி புருஷனாக  வைத்தவர் திருக்குன்னம்  சங்கீத  வித்வான்  கனம்  கிருஷ்ணய்யர்.

என் தாத்தா  வசிஷ்ட பாரதிகள்   மன்மத  வருஷம் வைகாசியில்  (1892) தனது   சகோதரன் சீதாராம  பாகவதருடன்  கும்பகோணம் சென்றிருந்தார்.  அப்போது  பிரம்ம  ஸ்ரீ  உ.வே. சாமிநாதய்யர்  அவர்களை,  அவர்  வீட்டில்  போய்   பார்த்து  பேசிக்கொண்டிருந்தார்கள்.  அப்போது  உ.வே.சாவின்  அப்பா  உத்தமதானபுரம்   வேங்கடசுப்பய்யர்:

 'வாங்கோ,  உங்க  வர்க்கம்  பெரிய  சங்கீத  பரம்பரை என்று  தெரியும்.  எங்கள்  உறவினர்  கனம்  கிருஷ்னய்யருக்கு   பந்துவும்  குருவுமாகியவர் அல்லவோ உங்கள் கனம்  கணபதி சாஸ்த்ரிகள்.  அவர்  பிள்ளைதானே  ரெட்டை  பல்லவி  தோடி  சீதாராமய்யர்?'' 
என்றார். 

 உ.வே.சா  அப்போது  சிறிய வயதினர். சங்கீதத்தில்  பிரசித்தி பெற்ற  பட்ணம்  சுப்ரமணிய  அய்யர்  (சிறந்த  சாஹித்ய கர்த்தா) அவர்களுடைய  தகப்பனார் வைத்யநாத  அய்யர்  தஞ்சாவூர்  பெரிய கோவிலில்  பாடகர் அவர் கனம்  கணபதி சாஸ்திரிகளின்  சிஷ்யர்.  

தாஞ்சவூர்  மகாராஜா, இவருடைய  பாட்டில் லயித்து சன்மானமாக பொன் மஞ்ச நல்லூரில் ஒரு சொல்ப தீர்வைக்கு  நிலம் தானமாக  அளித்தார்.  சில வருஷங்களில்  பஞ்சத்தில்  நிலம்  விளைச்சல்  இல்லாதபோது குடித்தீர்வைக்கு நிர்பந்தம்  பண்ணின சமயத்தில் சாஸ்திரிகள் ஒரு  பதம்  பாடினார்.  இதை ரசித்து மகாராஜாவிடம் சிபார்சு செய்து நிதி  வாங்கி  கொடுத்தவர்  ராஜாவின்  மந்திரி  பாவா சாமி  பண்டிதர்.  அவர்  பெயரிலேயே  சாஸ்திரிகள்  இந்த பதம்  பாடினார்.  அது:

  ராகம் :  சஹானா      தாளம்:  ஆதி  சாபு
                     பல்லவி
பங்கெனக்கு  வேண்டாமையா -  பொம்மஞ்சூரு
பங்கெனக்கு  வேண்டாமையா   (பங்)
                     அனுபல்லவி
பங்கெனக்கு  வேண்டாமையா
பாவாசாமி  பண்டித ராயா
எங்கள் குலம்  கடைத்தேற
கங்காஸ்நானம் போறோமையா   (பங் )

 இந்த  பாட்டை தாளம் தப்பாமல் அப்போதே இயற்றி பாடியதாக என்  தாத்தா  அவர்  பாட்டி  சொல்ல கேட்டிருக்கிறார்   என்றால் எவ்வளவு பழங்கதை இது  என்று  அறியலாம்.

பாவாசாமி பண்டிதர் என்கிற  மந்திரி  இந்த  பாட்டைக்கேட்டு விட்டு    ' சாஸ்திரிகளே  நீங்கள் பாடிய இந்த பாட்டு  என்ன  ராகம்?''  என்றார்
கணபதி சாஸ்திரிகள்: ''உங்கள்  அப்பா  பெயர்''  .
(மராட்டி  மந்திரி  பாவாசாமி யின் அப்பா  சகா நாயக் --  அதாவது  ராகம்  சஹானா )
கணபதி சாஸ்திரி குடும்பம்  காசிக்கு  கங்கா ஸ்நானம் போகிறேன்  என்று  சொன்னபடியே  அவர் தாய்,  அம்மாளுவுடன் , மனைவி  லக்ஷ்மியோடும்   ஒரு நல்ல நாள்  பார்த்து  யாத்ராதானம்  செய்து விட்டு கால் நடையாக  புறப்பட்டார்கள். வண்டிகள் சத்தம்  பேசி (கூலி பேசி என்று அர்த்தம்) கட்டுபடியாகாது என்பதால் அநேக நடுத்தர வர்க்கம் நடந்தே  எங்கும்  செல்லும்.   வழியில்  திருவையாறு,  ஸ்வாமி மலை, கும்பகோணம், மாயவரம், வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர் , திருவதிகை வீரட்டானம்,  திர்க்கழுக்குன்றம், காஞ்சி , தெரிசனம் பண்ணிவிட்டு, சென்னப்பட்டணம் வந்தார்கள்.   
 


 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...