Monday, September 30, 2019

FLUTE MALI

ஒரு  மஹா வித்வான் நினைவு... J K SIVAN

..
அவர் ஒரு தனிப்பிறவி. விந்தை மனிதர்.  அவர்  வாசித்தது சாதாரண புல்லாங்குழல் இல்லை. ஏழு சுருதி புல்லாங்குழல்.  ஆம்  ஏழு கட்டை  ஸ்ருதியிலே வாசிக்க ஆரம்பித்து  ஐந்துக்கு  குறைத்துக் கொண்டவர்.  
அவர்  வாசித்தது எல்லாம் சரியாக ரெகார்ட் செய்யப்படாதது நமது துரதிர்ஷ்டம். கிடைத்த சில  மெழுகு இசைத்தட்டுகள்  rpm  பொருத்தமில்லை.   இடையிடையே என்னென்னவோ  சத்தம் வேறே.   ஒரு  அபூர்வ, அற்புத கலைஞனின்  தெய்வீக இசைப் பரிசு  நமக்கு கிட்ட நாம்  பாக்யம் செய்ய வில்லையே.   எதற்கு  அவரிடம்   அவ்வளவு சின்ன  புல்லாங்குழல்? ரெண்டு கை வைத்துக் கொண்டபோது குழலே  மறைந்து போனது.   இரு கைகள் வைத்துக் கொள்ள இடமே போதாமல்.....

''என்ன மாலி, நீங்க ஏன்  ஐந்து கட்டைலே  வாசிக்கறேள்? நிறையபேர்  ரெண்டரை கட்டைக்கு மேல் தாண்டறதில்லையே''.  

''அதெப்படி ...ஹுஹும்..   டெக்னீகலா அது தப்பு.  நுண்ணிய ஸ்வரம்  மெல்லிசா அழகா பேசாதே''    மாலி  என்னென்னவோ   சங்கீத டெக்னிகலாக  விளக்கம் சொன்னது  தலையாட்டி கேட்ட ரசிகருக்கு சுத்தமாக  புரியவில்லை.

மாலியின்  புல்லாங்குழலில்  உச்ச கட்டைலே தான் கிளி கொஞ்சும்.   எனக்கு  பிடித்த  குழல் வித்வான்கள் புல்லாங்குழல்  மாலி,  நாதஸ்வரத்தில்  T N  ராஜரத்தினம் பிள்ளை.   ரெண்டும் தனித்தன்மையோடு சுதந்திரமாக  இசை  அலை வீசி மனசிலே நிக்கும். ரெண்டும்  ரெண்டு கண்ணு.

'' 75% கேக்கறது தான்  எதையுமே  கற்றுக்கொள்ள சிறந்த வழி. '' இது மாலி சொன்ன ரஹஸ்யம். 

மறைந்த பிரபல கர்நாடக சங்கீத வித்வான் செம்மங்குடி  ஸ்ரீனிவாசய்யரை ஒரு தடவை யாரோ  ''கர்நாடக சங்கீதத்தில்  ரொம்ப  டாப்  யாரு சொல்லுங்கோ?'' என்று கேட்டபோது அவர் 

''பதில் சொல்றது ரொம்ப சுலபம்:  மூணே பேர் தான்.  ஃப்ளுட்  மாலி, TN  ராஜரத்தினம் பிள்ளை நாகஸ்வரம், பால்காட் மணிஐயர் மிருதங்கம். அம்புட்டு தான் ''

மாலி தான் முதல் இடத்தில்....!  மாலி ஒரு மூடி moody  ஆசாமி. நேரத்துக்கு வரமாட்டார், ரசிகர்களை சபாகாரர்களை, பக்க வாத்யக் காரர்கள் பற்றிய கவலை துளியும் கிடையாது. பணம் பிரதானம் இல்லை.  அவர் வரமாட்டாரா என்று ரசிகர்கள் கொட்டும் மழையிலும் மணிக்கணக்காக  காத்திருப்பார்கள். மாலிக்கு மட்டும் நல்ல மூட் வந்து வாசித்தார் என்றால் அவ்வளவு சங்கீத தேவதைகளும் கை கட்டி எதிரே மண்டியிட்டு நிற்கும்.  நேரம் பாராமல்  இசையில் மூழ்கி எல்லோரையும் வேறு  நனைத்து விடுவார். எப்போது கிறுக்குத்தனம் வரும் என்று அவருக்கே தெரியாது.


மாலி  மைலாப்பூர்  பஜார் ரோடிலே  இருந்தார். (அங்கே தான் என் மனைவி சித்தப்பா இன்னொரு பெரிய புல்லாங்குழல் வித்துவான்  அகில இந்திய வானொலி நிலைய  புல்லாங்குழல் வித்துவான் கே.ஆர். கணபதியும் இருந்தார். நான் மறக்கமுடியாத ஒரு சிறந்த மனிதர். இசை ஞானி) .  

ஒரு ரசிகர் மாலியின் வீட்டுக்கு போனபோது மேலே மாடி ஜன்னலிலிருந்து தேவ  கானம் காற்றில் மிதந்து வந்தது. தரையில் படுத்துக் கொண்டு  சுவற்றில் தலைகாணியை சாய்த்து தலைக்கு  வைத்து  சுருதி பெட்டி   எதிர் சுவற்ற ருகே வைத்து அதை காலால்  இயங்கிக் கொண்டே,   (ஹார்மோனியம் மாதிரி அதை மூடி திறந்து இயக்கினால் தான் காற்று உள்ளே சென்று சுருதி கேட்கும்)  புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தார். 

 என்ன  இப்படிப்பட்ட  அவமரியாதை.  ஸ்ருதி பெட்டி  ஸரஸ்வதியாச்சே. காலால் அதை தொடுவார்களா?என்று கேட்பவர்களுக்கு  அவருக்காக  பதில் சொல்கிறேன்..

''இல்லை தப்பு இல்லை...ஸரஸ்வதி தேவி  மாலியின்  சிறந்த தெய்வீக  இசையை கேட்க தயாராக இருந்தாள் . ஸ்ருதி போடக்கூட   ஆள் இல்லாமல்  பாவம் தன்னை வருத்திக் கொண்டு  அவர் அற்புதமாக  சுருதி பேதமில்லாமல் வாசிக்க முயல்கிறார்...தான் முதலில் திருப்தி அடைய முயற்சித்து அதை அப்புறம் எல்லோருக்கும் நன்றாக சமைத்த ருசியான உணவாக அனைவருக்கும் வழங்க தவிக்கிறார்.. வேறு யாரும் உதவுவதற்கு இல்லாதபோது  தனது கால்களால் சுருதிப் பெட்டியை   இயக்கிக் கொண்டது  தவறல்ல.  அந்த காலத்தில் பட்டனை அமுக்கினால் சுருதி வரும் மின் கருவிகளோ, வசதிகளோ இல்லையே .

\
பம்பாயில்  ஷண்முகானந்த சபா சொந்த கட்டிடம் இல்லாமல் வாடகைக்கு அங்கங்கே சிறிய வசதியற்ற ஈத்;ங்களில் சங்கீத நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்த காலம் 1950களில்.   ஒரு முறை மாலி புல்லாங்குழல் கச்சேரி.   மாதுங்காவில் டான் பாஸ்கோ ஸ்கூல் மைதானத்தில் பந்தல்  பொங்கி வழிந்தது.  வந்ததே லேட். அப்புறம் உப்பு சப்பு இன்றி ஏதோ ஒரு  அரைகுறை  வாசிப்பு.  ரசிகர்கள் அமைதி இழந்து உறுமினார்கள் . சப்தம் போட்டார்கள். அரைமணி நேரம் ஓடிவிட்டது.  பாலகாட் மணி ஐயர்  மிருதங்கம்,  T N  கிருஷ்ணன் வயலின்.  ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு  ஏமாற்றத்தில் முடிந்து ஆத்திரம் கிளம்பியது.. கூச்சல்...

''என்ன சத்தம்? "  என்று இந்த உலகத்துக்கு வந்த  மாலி பாலகாட் மணி அய்யரை கேட்கிறார். 

''முடிச்சுடுங்கோ கச்சேரியை என்று ஜாடை காட்டுகிறார்  மணி ஐயர் "" 

ரசிகர்களின் அமளி, கோபக் கொந்தளிப்பு.  சிலர்  மாலியை , மணி அய்யரை  ஜாக்கிரதையாக மேடையிலிருந்து  மெதுவாக  காருக்கு கூட்டி செல்கிறார்கள்.   ஒரு முப்பது வயசு  காலிலிருந்து செருப்பை கழட்டிவிட்டு கையில் வைத்துக் கொண்டிருந்தது...... மாலியை  நோக்கி வீசியது....ஒருத்தன் புல்லாங்குழலை பிடுங்கிக்கொண்டு பக்கத்தில் இருந்த  ரயில்  ட்ராக்குக்கு  ஓடுகிறான்.  அருகே   ரயில் வண்டி தண்டவாளம்  கிங் சர்க்கிள் - வடாலா நிலையங்கள் இடையே. யாரோ அந்த கோப  ரசிகனை  ஒருவழியாக
 சமாதானம் செய்து புல்லாங்குழலை ஜாக்கிரதையாக  திரும்ப கொண்டுவருகிறார்.  மாலி சென்னை திரும்பி ஒரு மன்னிப்பு கடிதம் எழுதுகிறார்.  இன்னொரு சந்தர்ப்பம் கொடுத்தால் அற்புதமாக வாசிக்கிறேன்.... என்கிறார். ஒரு வருஷம் கழித்து அது நிறைவேறியது. 

''வரமுலு  சாக்கி ப்ரோவு...'' கீர்வாணி யில்  எடுப்பு வேணுகானத்தில்  விண்ணுலகிலிருந்து சுதந்திரமாக  கற்பனா சக்தியோடு தைவதத்தில் ராஜகம்பீரத்தோடு  மிதந்து வந்தது. வழக்கமான பஞ்சமத்தை காணோம். 
பரி தான மிஞ்சிதே (பிலஹரியில்)  பல்லவி முடியும் இடத்தில்  காகலி  நிஷாத சங்கதி அற்புதமாக பேசியது. ரசிகர்கள் மெய்ம்மறந்து மயிர்க்கூச்செறி வோடு சங்கீத  தேன் கடலில் மூழ்கி கொண்டிருந் தார்கள்.  தன்னால் சிறப்பாக தான் விரும்பியதை, உணர்வை கொண்டுவர முடியாத நேரத்தில் அதிருப்தியில், செய்வதறியாது  ஆர்வம் குறைந்து மாலி ரசிகர்களை வாட்டி விடுவார். என்ன செய்வது அந்த மஹா வித்வான் குணம் அப்படி. 

 மாலி  மோர்சிங் மற்றும் இதர வித்வான் களுக்கும் கச்சேரிகளில் நிறைய நல்ல சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும் என்று பரந்த மனம் கொண்டு தன்னுடைய  கச்சேரிகளில் அவர்களை  வாசிக்க வைப்பார்.

ஒரு தடவை  தனக்கு வாசிக்கும் பிடில் வித்துவான்  பாப்பா வெங்கட்ராமய்யரை ''உங்களுக்கு வீணை தனம்மாள்  பதங்கள் தெரியுமே. எனக்கு ஒரு பதம் சொல்லித் தாருங்கள்'' என்கிறார்.

''அவ்வளவு சீக்கிரம் பிடி படாதே. நிறைய கால அவகாசம் இழுக்குமே''

''பரவாயில்லே நீங்கள் சொல்லுங்கள் நான் பிடித்துக்கொள்கிறேன்...அப்புறம் என்ன ...... அந்த மஹா வித்வான்  குறைந்த சில  மணி நேரங்களில்  அதை முறையாக கற்றார்''  மாலி யின் அன்றைய சாயங்காலம் கச்சேரியில்  துளியும் பிசகில்லாமல் வெகு அற்புதமாக அந்த பதத்தை  நீண்ட காலம் தொடர்ந்து வாசித்தவர் போல் கொஞ்சமும்  ஒதுக்கல் செதுக்கல் இல்லாமல் புல்லாங்குழலில் வாசித்து  பாப்பா வெங்கட்ராமையர் அசந்து போனார்   

''நீங்க ஒரு மஹான். தெய்வீக சங்கீத வித்வான்'' என புகழ்ந்தார். 

FOR  SAMPLE  I AM  GIVING  AN ENCHANTING  MOHANAM PRESENTATION BY TRM . CLICK THE LINK  https://youtu.be/wG3oINWmkTI

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...