Wednesday, September 18, 2019

LIFE LESSON



                கஷ்டமும் கிருஷ்ணனும்  J K SIVAN 

வாழ்க்கையில் பிரச்னையே  இல்லாத  ஒரு  ஆளை நாம்  பார்க்க முடியுமா?  பிரச்னைகள் சிறிதாக இருந்தாலும்,  பயத்தாலும், எதிர்கொள்ளும் தைர்யம்  இல்லாததாலும், தன்னம்பிக்கை இழப்பதால் அது ஹிமாலய பிரச்னையாக வெடிக்கிறது. வள்ளுவருக்கு என்ன ஒண்ணரை அடியில்  ''சிரி'' என்று  சொல்லிவிட்டார். ''துன்பம் வந்தால்  நகுக'.  சரி,  சிரிக்க வேண்டாம். கொஞ்சம்  நிதானமாக  அந்த பிரச்னையை மூன்றாவது நபர் பிரச்னையாக நினைத்து அணுகினால்  அதன் உக்கிரம்  குறையும் .
  ''  என்னதான் நடக்கும் நடக்கட்டுமே''     ''தலைக்கு மேலே  வெள்ளம் போனால் சாண்  என்ன முழமென்ன?''  என்று  பாடத்தோன்றும்.   அவனே தைரியசாலி. வெற்றிசாலி. நமக்கு  துன்பங்கள் வருவதே  நம்மை தைர்யசாலியாக்கவே தான்.  நல்வழிப் படுத்த.  செய்த பழைய தப்பு இனி வேண்டாம். போனதெல்லாம் போகட்டும். நிறைய எதிர்காலம் காத்திருக்கிறதே. முன்னேறுவோம் என்று புரிந்து கொள்ள கடவுள் தந்த பரிசு.  இது புரியாமல் நாம் செய்த தவறுகளுக்கு  கடவுளை திட்டுகிறவர்கள் நம்மில் எத்தனையோ பேர். 

பிரச்னைகள் துன்பங்கள் வருவதே நம்மை மாற்ற வருவதை எதிர்கொள்ள, என்று  சொன்னேனே. ஒரு புது வழி காண.   மனிதமனம்  மாற்றத்தை அவ்வளவு சுலபமாக  ஏற்பதில்லை .  கஷ்டம் தான்.   யார் இல்லை என்று சொன்னது. ஆனால் மாறினால் வழி உண்டு என்றால் மாற மனது ஒத்துழைக்க வேண்டும்.

நீ செய்தது தவறில்லையா? இனியுமா தொடர்ந்து அதையே  செய்து கொண்டு  போவாய்? என்று கிருஷ்ணன் கேட்பது காதில் விழுவதில்லை. உன்னை நீ பரிசோதித்துக் கொள்ள  தான் இந்த பிரச்னைகள், துன்பங்கள் எல்லாமே.

ஒரு பொருத்தமான  உதாரணம்.  சின்னதாக ஒரு பேப்பர் பையில் டீத்தூள் போட்டு தருகிறார்கள். கொதிக்கும் வெந்நீரில் நூல் கட்டிய அதை மூழ்கடிக்கிறோம்.  அதிலுள்ள டீ  கொதிக்கும் வெந்நீரில் நமக்கு சுகமான  டீ  ஆகிறது.   நாம் அத்தனைபேருமே  அந்த  tea  packets , தேயிலை பேப்பர் பைகள்.   நமக்கு வரும் துன்பம், கஷ்டம் தான் கொதிக்கும் வெந்நீர்.   நம்முள் இருப்பது நமது கஷ்டத்தில், துன்பத்தில் தான் வெளிப்படும். நாம்  யார்  எப்படிப்பட்டவர்கள்  என்று நாமும் அறிவோம். பிறரும் அறிவார்கள். துன்பம்  நம்முள் அமைதியை, பொறுமையை,  உண்டாக்கும். தன்னம்பிக்கையையும்,  பக்தியையும்   வளர்க்கும்.

துன்பங்கள் பிரச்னைகள் ஒருவிதத்தில் நாம் செய்த தவறுகளின் பூதக்கண்ணாடி.     மறுபடியும் அதை செய்யாது தடுக்க உதவுபவை. ஒருதடவை சூடு பட்டவன் அடுத்தமுறை கொதிக்கும் பாத்திரத்தை  கிடுக்கி, துணி இன்றி தொட்டு கையை  சுட்டுக் கொள்வானா?.

ஒருவனுக்கு   அவன் முதலாளி செய்ய சொன்ன ஒரு தவறான காரியத்தை, தப்பை, செய்ய மறுத்ததால்  வேலை போய்விட்டது. சில மாதங்கள் வேறு வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டான்.  முதலாளி வேறு ஒருவனை கொண்டு அந்த தவறான காரியத்தை செய்து முடித்து  சில நாட்களில்  காவல் துறை,  அரசு  அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, ரெண்டு பேருமே பல வருஷங்கள் ஜெயிலில் இருக்கிறார்கள்.  ரொம்ப பெரிய ஆள்  ஒருவர்  திஹார் ஜெயிலில் இல்லையா?  பிரச்னை எப்படி கொஞ்சம்  கஷ்டம் கொடுத்தாலும் தவறு செய்ய மறுத்தவனை காப்பாற்றியது என்று புரிகிறதா? இதோ அவனுக்கும் நல்ல வேலை ஒன்று கிடைத்து நிறையவே சம்பளம் வாங்குகிறான். அவனுக்கு வந்த பிரச்னை நல்லதை தானே செய்தது?

தவறு செய்து பிரச்னைகளில் சிக்கி வெளிவந்தவன் திருந்துகிறான். இது கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டிய நேரம். அவன் இனிமேல்   எந்த சின்ன  தப்பு தவறு கூட  செய்யாத அளவு மனப் பக்குவம், குணம் அமைந்து விடுகிறது.  ''நன்றி கிருஷ்ணா'' என்று சொல்லவேண்டும். சிலர் சொல்கிறார்கள். .

நமது  அன்றாட வாழ்விலும்  ஒவ்வொரு செயலிலும் நம்மோடேயே  இருந்து  நம்மை  சீர்படுத்துகிறான் கிருஷ்ணன். ''இப்படி செய்யாதே,  அப்படி செய் '' என்று அவனது மெல்லிய குரல் நம்முள் கேட்டாலும், நாம் செவிடர்களாக இருந்து தவறு செய்து அதன் பயனாக  கஷ்டப்பட்டாலும் நம்மை  மீட்டு விடுகிறான். ஒவ்வொரு தவறும், பிரச்னையும் கூடவே ஒரு நல்ல பாடம், படிப்பினையைத்  தருகிறது. அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் நாம் இன்னமும் அறியாதவர்களே. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...