Sunday, September 15, 2019

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம்     ஜே கே  சிவன் 

                                        பீஷ்மோபதேசம்   
                                               
''வைசம்பாயனரே , இவ்வளவு விஷயங்களை கோர்வையாக நீங்கள் எப்படித்தான்  கவனம் வைத்திருக்கிறீர்களோ, ரொம்ப ஆச்சரியமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறதே. மேலே சொல்லுங்கள்'' என்றான் ஜனமேஜயன்.

குருக்ஷேத்ரத்துக்கு  கிருஷ்ணன் பாண்டவர்கள், சாத்யகி முதலானோருடன் செல்லும்போது  பரசுராமன் சரித்திரத்தை சொன்னார் அல்லவா.   தேர் இப்போது குருக்ஷேத்திர யுத்த களத்துக்கு   வந்து விட்டது.  எங்கும் நிசப்தம். மரண அமைதி வரவேற்றது.   பேசிக்கொண்டே சென்ற கிருஷ்ணனும் யுதிஷ்டிரனும் பீஷ்மர் படுத்திருந்த இடத்துக்கு சென்றார்கள்.  

பிரம்மச்சர்யம் ஜொலிக்க அம்பு படுக்கையில் பீஷ்மர் மூன்று அம்புகள் உயரமாக தலையை தாங்கி  தலையணையாக இருக்க படுத்திருந்தார்.  பிணங்களும்,  ரத்தவாடையும் சுற்றி இருந்தாலும்  பீஷ்மர் இருந்த இடம், புனிதமாக இருந்தது.வேகவதி ஆற்றின் கரையில் இருந்தார் அவர். அனைவரும் தேரிலிருந்து தூரத்திலேயே இறங்கி மரியாதையோடு நடந்து அவர் இருந்த இடம் வந்தார்கள். அவர் அருகே அமர்ந்தார்கள். முகத்தில் துயரம் தோன்ற கிருஷ்ணன்,

 ''பீஷ்மரே , கங்கா புத்திரரே, உங்கள் சித்தம் இப்போது தெளிவாகிவிட்டதா? உடலில் வலி இருக்காதே? தங்கள் தந்தை சந்தனு மஹாராஜா அளித்த வரத்தின் படி,  தங்களது மரணத்தை தாங்கள் எப்போது விரும்பி ஏற்றுக் கொள்கிறீர்களோ அப்போது தானே அது நிகழும். முக்காலமும் உணர்ந்த ஞானி நீங்கள். வைராக்கியத்தின்  மொத்த உருவம். அர்ஜுனனின் ஆயிரக் கணக்கான அஸ்திரங்களை ஆடையாகக்  கொண்டு மரணத்தை வென்றவர் மூவுலகிலும் நீங்கள் ஒருவரே. தவ வலிமை பெற்று, மனத்தை வென்ற இந்த பிரபஞ்சத்தின் ஒரே பீஷ்மன் நீங்கள் ஒருவரே.  இதோ  யுதிஷ்டிரன் வந்திருக்கிறான். அவனது துயரத்தை, மனக் கிலேசத்தை நீக்கி அருளவேண்டும்.நான்கு வர்ணங்கள், வாழ்வில் நான்கு ஆசிரமங்கள், வேத சாஸ்திரங்கள், புராணங்கள்  முற்றிலும் அறிந்தவர் நீங்கள் ஒருவரே அல்லவா? பூமியை ஆளும் தர்மபுத்திரனுக்கு தக்க உபதேசம் செய்யும் தகுதி தாங்கள் ஒருவருக்கே உண்டு''


பீஷ்மர் மெதுவாக  தனது தலையை உயர்த்தினார்.  கிருஷ்ணனை பார்த்தார். இரு கரங்கள் கூப்பி "நமஸ்காரங்கள் கிருஷ்ணா, தெய்வமே,   சிருஷ்டி, முதல் சம்ஹாரம் வரை சகலமும் உன் சங்கல்பமே,  சர்வ  பிரபஞ்ச காரணா, நமஸ்காரம். பஞ்ச பூத காரணனே, சர்வஞனே, என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அருள்பவனே , உனக்கு நமஸ்காரம்'' என்கிறார்.

"பீஷ்மரே, உங்கள் பக்தி ஈடு இணை அற்றது என்பதால் உங்களுக்கு எனது விஸ்வரூபத்தை  காட்சியாக அளித்தேன். சத்தியத்தை கடைபிடித்த,  எனக்கு பிடித்தமான,   சிறந்த விஷ்ணு பக்தனாக  உங்களை கருதுகிறேன்.  இன்னும்  ஐம்பத்தாறு நாட்களே இந்த பூவுலகில் உங்களுக்கு பாக்கி இருக்கிறது. உங்களை தேவலோகம் மீண்டும் அழைத்து செல்ல அனைத்து வசுக்களும், தேவர்களும் ஆவலாக காத்திருக்கிறார்கள''  என்றார் 
கிருஷ்ணன்..

''சிவனே, நாராயணனே , நான் பாக்கியசாலி.உன் வார்த்தைகள் என்னை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது. எவனால் இந்திர லோகத்தை இந்திரன் எதிரிலேயே வர்ணிக்க முடியுமோ அவனாலேயே  உன் எதிரிலே இந்த பூமியிலே நேர்மை, நீதி, நியாயம், இன்பம் துன்பம், கடமை, கர்மம் தியாகம், பக்தி, யோகம்,, மோக்ஷம்  பற்றி பேசமுடியும். 

உடல் பாதையினால் என் உள்ளம் சோர்ந்துள்ளது , அவயவங்கள் சக்தியற்றுள்ளது. கோவிந்தா, இந்த நிலையில் நான் என்ன யுதிஷ்டிரனுக்கு சொல்வேன்?   என் மூச்சு காற்று வெளியேற தக்க சமயத்தை எதிர் நோக்கி இருக்கிறதே. என் நா குழறுகிறது.   நான் எதை எப்படி பேசுவேன்? என்னை மன்னித்து விடு. வாக் தேவதையான  உன் முன் என் வாக்கு என்ன பயன் பெறும்.  உன் அருளால் என் உயிர் ஏதோ ஊசலாடிக்கொண்டிருக்கிறது. எனவே  கிருஷ்ணா, நீயே  பேசேன், நானும்  யுதிஷ்டிரனோடு சேர்ந்து சந்தோஷமாக கேட்கிறேன்'' என்று பதிலளிக்கிறார்  பீஷ்மர்..

''பீஷ்மரே,  உங்களுக்கு உடலிலும் உள்ளத்திலும் எந்த  சோர்வும் உபாதையும் இருக்காது இந்தக் கணத்திலிருந்து.'' என்றான் கிருஷ்ணன். மீண்டும் நாளை வருகிறோம்'' என்று சொல்லி கிருஷ்ணனும் மற்றோரும்  பீஷமரை மும்முறை வலம்  வந்து வணங்கி  புறப்பட்டார்கள்.

மாளிகையில் கிருஷ்ணன் தனது அறையில் சிறிது நேரம் கண்ணயர்ந்து மீண்டும் விழிப்பு நிலை மேற்கொண்டான்.  பொழுது விடிவதற்கு   அரை ஜாமம் முன்பு த்யானத்தில் ஆழ்ந்தான். பிரம்மத்தில் மூழ்கினான்.

பொழுது விடிந்தது. மங்கள வாத்தியங்கள், சுப்ரபாதங்கள் கேட்டது.  கிருஷ்ணன் மந்த்ரங்களை  உச்சரித்தான் .

''சாத்யகி, நீ  உடனே யுதிஷ்டிரனைச்  சென்று பார்.  நித்ய கர்மாநுஷ்டானங்கள் முடித்து தயாராக இருக்கிறானா என்று பார்த்துச்  சொல். பீஷ்மரை சென்று பார்க்கவேண்டும்.'' என்று கிருஷ்ணன் சொல்ல,

''யுதிஷ்டிரா,  கிருஷ்ணன் தேரோடு காத்திருக்கிறான். நீ தயாராக இருக்கிறாயா?    வா உடனே, பீஷ்மரை சந்திக்க புறப்படவேண்டும்'' என்று சாத்யகி செயதியை அறிவித்தான்.

''அர்ஜுனா,  என் தேரைத்  தயார் செய், நம் ஐவரோடு வேறு  யாரும் வர வேண்டாம். பீஷ்மரை துன்புறுத்தக் கூடாது.'' என்றான் யுதிஷ்டிரன்.

கிருஷ்ணனும் சாத்யகியும்  பஞ்ச பாண்டவர்களும் தேரில் புறப்பட்டார்கள். தாருகன் கிருஷ்ணனின் தேர் குதிரைகள்  வலஹகன், மேகபுஷ்பம், சைவ்யன்,சுக்ரீவன், ஆகிய குதிரைகளை தட்டிக்கொடுத்து ''செல்வங்களே, செல்லுங்கள்'' என்றதும்  அவை  பறந்தன. ரிஷிகள் புடைசூழ குருக்ஷேத்திர யுத்த களத்தில் பீஷ்மர் அஸ்திர படுக்கையில் சாய்ந்திருந்தார்.

தேரை விட்டு கிருஷ்ணனும் சாத்யகியும் இறங்கி அங்கிருந்த ரிஷிகளை வணங்கினார்கள். பீஷ்மரை நெருங்கி யுதிஷ்டிரனும் பாண்டவர்கள் மீதியோரும் அவரை வணங்கினார்கள்.

பீஷ்மர் தன்னைச் சுற்றிலும்  அமர்ந்திருந்த அனைவரையும் பார்த்தார்.

நாரதர்,  ''யுதிஷ்டிரா, இதுவே  சரியான நேரம்.  நீ  கேட்க எண்ணிய  அறிவுரைகளை  உடனே  பீஷ்மரிடம் கேள்.

தேவவிரதன் தனது பூவுடலை நீத்து புண்ய சரீரத்தோடு விண்ணுலகம்  செல்லப்  போகிறார் .அதற்கு முன்பாக உன் மனதில் தோன்றியவற்றை எடுத்துச் சொல்லி அவர் உபதேசம் பெறுவாயாக.'' என்று கிருஷ்ணன் அறிவிக்கிறார்.
''ஹ்ரிஷிகேசா, உன்னையன்றி  வேறு யார் கர்மம்,  தர்மம்,  பக்தி யோகம் பற்றி பேச இயலும்.  எனவே  நீயே முதலில் பீஷ்மரிடம் பேசு''  என்கிறான் யுதிஷ்டிரன்.

''பீஷ்மரே , நேற்று இரவு நிம்மதியாக கழிந்ததா?  உங்கள் மனம் அமைதியால் நிரம்பியிருக் கிறதா? ஆத்ம ஞானம் பெற்றீர்களா? உடல் உபாதை இல்லையே?  களைப்போ, தாகமோ, பசியோ இருந்திருக்காதே,?'' என்றார் கிருஷ்ணன்

''நீ வந்தது முதல் கிருஷ்ணா, எனக்கு  எந்தவிதமான மயக்கமோ, எரிச்சலோ, களைப்போ, வலியோ, இல்லையப்பா, சென்றது, நிகழ்வது, நடக்கப் போவது எல்லாமே  பளிச்சென்று கையில் வைத்த கனியாக தெரிகிறது. வேதம் சொல்லும் கர்மமோ, வேதாந்த கோட்பாடோ, நீ கொடுத்த வரத்தால்  நன்றாக புரிகிறது. ஞானிகள் வாக்கு நினைவில் இருக்கிறது. ராஜ்ய பரிபாலன தர்மம் நன்றாக  கோர்வையாக ஞாபகத்தில் உள்ளது. உன்னருளால், கிருஷ்ணா, த்யானம் செயது பலன் அடைந்தேன். புத்துணர்ச்சியோடு   யுதிஷ்டிரன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி விளக்கத்  தயாராகிவிட்டேன்'' என்கிறார்  பீஷ்மர்..

''பீஷ்மரே , குரு  வம்ச பிதாமகரே, உலகில் நன்மை தீமை எதற்குமே  நானே காரணம். இருப்பினும்  உங்கள் மூலம் உலகம் உபதேசம் பெற்று  உங்கள் புகழை பூவுலகில் நிலை நாட்ட எண்ணம் கொண்டேன். உங்கள் உள்ளத்தில் அதற்கு வேண்டிய  சக்தியையும், ஞானத்தையும் பரி பூர்ணமாக ஊக்குவித்திருக்கிறேன்.உலகம் உள்ளவரை பீஷ்மரே,  உமது உயர்ந்த ஞானம் போற்றப்படும்.  பாண்டு புத்ரன் யுதிஷ்டிரனுக்கு நீங்கள் உபதேசிப்பது உலகப் பிரசித்தி பெறும். வேதப்ரமாணம் பெற்று விடும்.  எவனொருவன் உங்கள் வாக்கின் படி நடக்கிறானோ அவன் மேன்மை பெறுவான். முழு பலனையும் அடைவான். இதற்காகவே உங்களுக்கு தெய்வீக ஞானத்தை அளித்திருக்கிறேன்.   பூமியில் பிறந்தது முதல் ஒரு குறையும் சொல்ல இயலாத வாழ்க்கை வாழ்ந்தவர் தாங்கள்.  உங்கள் உபதேசம்  பெற  அனைவருமே இங்கே திரண்டு இருக்கிறார்கள். மிகுந்த நீண்ட அனுபவசாலியான நீங்களே தக்கவர் இதற்கு. இதை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் தான் உங்களை பாபம் சேரும்''  என்றான் கிருஷ்ணன்

''மாதவா, மதுசூதனா, என் மனம் ஒரு நிலைப்  பட்டுள்ளது. எனக்கு சக்தி வந்துவிட்டது. உன் ஆணைப்படி  என் கருத்துகளை, உபதேசங்களை நான் இப்போதே  எடுத்துரைப்பேன். கோவிந்தா, யுதிஷ்டிரன் என்னிடம் என்ன கேள்விகள் கேட்கிறானோ அதற்கு சரியான விளக்கங்களை தருகிறேன். நான் தயார்'' என்கிறார் பீஷ்மர்.

''யுதிஷ்டிரன் தங்களை எதிர்த்து தாக்கியதில் வெட்கமும் துக்கமும் கொண்டு தயங்குகிறான்.'' என்றார்  கிருஷ்ணன்.

''க்ஷத்திரியன்  யுத்தம்  என்று வந்து விட்டால், உறவு முறைகளை லக்ஷியம் செய்யாமல் போர் புரிவது அவன் கடமை. கொல்வதிலும் ஞாயம் உண்டு.  எனவே  யுதிஷ்டிரன் எந்த தவறும் செய்யவில்லையே. எதற்கு தயக்கம்?''  என்கிறார் பீஷ்மர்.

இதைக் கேட்ட யுதிஷ்டிரன் தைர்யம் அடைந்தான். அவர் அருகே சென்றான். கிருஷ்ணனையும்  பீஷ்மரையும் ரிஷிகள் பெரியோர்களை எல்லாம்  வணங்கினான். ''ஒழுக்கமும் கடமையும் கொண்டவர்கள் ஒரு அரசனுக்கு அவை அத்தியாவசியம் என்பார்கள். அந்த சுமையை அவன் தாங்கியாகவேண்டும்.   பாரபக்ஷமின்றி ராஜ்ய பரிபாலனம் செய்யவேண்டும். அவை பற்றி எனக்கு தாங்கள் அறிவுரை கூறவேண்டும்''  என்றான் யுதிஷ்டிரன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...