Friday, September 27, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J K SIVAN

நன் மந்திரி நரி சாவி கொடுத்த கடிகாரம் ஒரே சீராக ஓடுவது மாதிரி யுதிஷ்டிரனுக்கு பீஷ்மர் அநேக விஷயங்களை போதிக்கிறான். அவனும் ரொம்ப சந்தோஷத்தோடு, ஆர்வத்தோடு மனதில் பதிய வைத்துக் கொள்கிறான். டேப் ரெக்கார்டர், டயரி, பேனா பென்சில் இல்லாத காலம். எல்லாம் மனப்பாடம். நடுநடுவே ஏதேனு துளியாவது சந்தேகம் இருந்தால் கேள்வி மேல் கேள்வி யாக துளைத்து அவரிடம் இருந்து விஷய தானம் பெறுகிறான். ''யுதிஷ்டிரா, ஒரு அரசன் எவ்வாறு தனது உதவியாளர்களை புரிந்து கொண்டு அவர்கள் சேவையை பெற வேண்டும் என்பதற்கு ஒரு கதை சொல்கிறேன்.'' என்கிறார் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறு: இது ஒரு நரிக்கும் புலிக்கும் நடந்த சம்பாஷணையை பற்றியது.கேள். புரிகா என்று ஒரு ஊர். ரொம்ப செழிப்பான அந்த ஊரின் ராஜா பௌரிகன். கொடுங்கோலன். பிறரை துன்புறுத்துவதில் அலாதி சந்தோஷம்.
ஒருநாள் அவன் காலமாகி அடுத்த பிறவியில் ஒரு நல்ல நரியானான். முன் ஜென்ம கர்மாவின் பிராயச்சித்தமாக மாமிசம் சாப்பிடாத நல்ல எண்ணம் கொண்ட சைவ நரி இப்போது அவன். யோகிகள் மாதிரி மரத்திலிருந்து விழும் பழங்களே ஆகாரம். ருத்ரனைப் போல மயானத்தில் வாசம். மற்ற நரிகள் ஆச்சர்யமாக அவனைப் பார்த்து என்ன கேட்டன?
''நண்பா, நீ எங்களில் ஒருவன். எங்களை போலவே உண்ணவேண்டும். பழகவேண்டும். இந்த ரிஷி வாழ்க்கை நமக்கு சரிப்படாது. இந்த மயானத்திலிருந்து உடனே கிளம்பி எங்களோடு காட்டுக்குள் வா. உன்னை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'' என்றன. ''நண்பர்களே, ஒருவனது நடவடிக்கையே அவனது குணத்தை காட்டும். இந்த வாழ்க்கையை நான் தேடி எனக்கு என அமைத்துக் கொண்டு அமைதியாக இருக்கிறேன். இதுவே போதும். வயிறே பிரதானம் என்ற வாழ்க்கை எனதல்ல. உயர்ந்த எண்ணங்கள், செயல்கள் என்னை ஈர்க்கின்றன.. ஆகவே நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள். என்னை என் போக்கில் விட்டு விடுங்கள் '' என்றது சைவ நரி. நரியின் இந்த வார்த்தைகள் அந்த பக்கமாக வந்த ஒரு புலி ராஜாவின் காதில் பட்டது சைவ நரியின் போக்கு குணம், புலி ராஜாவுக்கு ரொம்ப பிடித்து விட்டது. ''இவ்வளவு நல்லவனை விடக்கூடாது என்று நரியை தனது மந்திரியாக நியமித்தது. புலி ராஜா நல்லவனாக இருப்பதால் சைவ நரியும் அதோடு சென்று மந்திரியாகி விட்டது. ''நரியாரே , இனி நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அப்படித்தான் இந்த ராஜ்ஜியம் நடக்கும். உங்கள் நேர்மை நியாய எளிய குணம் எனக்கு மிகவும் பிடிக்கிறது.'' என்றது புலி. நரியின் நிர்வாகம் எல்லோருக்கும் பிடித்திருந்தது. எளிய வாழ்வே ஆடம்பரமின்றி அது வாழ்ந்ததால் அதன் மேல் மதிப்பும் மரியாதையும் உயர்ந்தது. புலி ராஜாவின் நாடு ஆகிய காடு,.சுபிக்ஷமாக வளர்ந்தது. எல்லோரும் நரியை மெச்சினார்கள். ''அரசே ஒருவன் நல்லவனாக இருந்து நேர்மையாக எல்லோராலும் மதிக்கப்பட்டால் அவன் மேல் மற்றவருக்கு பொறாமையும் கோபமும் வளரும். எனக்கும் உனக்கும் உள்ள நட்பை உடைக்க சிலர் தந்திரம் செய்து என்னைப் பற்றிய அவதூறுகளும் சொல்லலாம். இதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் எதையும் எதிர்பார்ப்பவனல்ல. யாரையும் தவறாக நினைப்பதுமில்லை. கெடுதல் செய்தாலும் அவர்கள் மேல் அன்பு குறையாது.''
மனதில் கவலை பயம் இருப்பவன் சந்தோஷமாக இருக்கமுடியாது. ஆகவே இவை எதுவும் என் மனதில் கிடையாது. உங்களது மற்ற மந்திரிகள் யாரையும் நான் கலந்து செயல்பட மாட்டேன். எனக்கு எது சரி என்று படுகிறதோ அதை சுயநலமின்றி செய்வேன். நன்றியோடு செயல்பட்டு உங்களுக்கு புகழ் சேர்ப்பேன். இது சம்மதம்மென்றால் நான் இன்றுமுதல் உங்கள் அரசாங்கத்தில் உங்களுக்கு நான் ஒரு நம்பகமான மந்திரி.'' என்றது நரி. அவ்வாறே என்றது புலி. நரி முக்கிய மந்திரியாகியது. மற்ற மந்திரிகள், சேனாபதிகள் நரிக்கு எதிராக சதி செய்ய ஆரம்பித்தன. எப்படியாவது நரியை விரட்டிவிட்டு வேண்டும், புலி ராஜாவிற்கும் நரிக்கும் இடையே பகை மூட்ட முயன்றன. நரி சொத்து சேர்க்கவில்லை, லஞ்சம் வாங்கவில்லை, தன் குடும்பத்தை வாரிசாக்க வில்லை. பிரித்தாளும் சூழ்ச்சி செய்யவில்லை. ஜாதி வேற்றுமை பார்க்கவில்லை. நன்றாகவே நாட்டை ஆண்டது. ஒருநாள் மற்ற மிருகங்கள் புலி ராஜாவிற்கு அன்றாடம் அளிக்கும் மான் மாமிசத்தை திருடி நரியின் வீட்டில் வைத்து விட்டன. பசியோடு அன்று புலி சாப்பிட அமர்ந்தபோது மற்ற மிருகங்கள் ''அரசே உங்கள் உணவை அந்த திருட்டு நரி திருடி தனது வீட்டுக்குள் ஒளித்து வைத்திருக்கிறது'' நல்லவன் போல் நடித்து உங்களை ஒருநாள் கொன்றுவிட்டு தானே ராஜாவாக திட்டம் போட்டிருக்கிறது. வாருங்கள் காட்டுகிறோம்'' என்று புலியை நரி வீட்டுக்கு அழைத்து சென்று அங்கே தாங்கள் மறைத்து வைத்திருந்த மான் மாமிசத்தை காட் டினதும் அளவு கடந்த கோபம் வந்தது புலிக்கு'' உடனே அவனை கொல்கிறேன்'' என்று தனது அரண்மனைக்கு திருப்பியது. கெட்டிக்கார சைவ நரிக்கு நடந்ததெல்லாம் நன்றாக தெரிந்தும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஆரம்பத்திலேயே புலியிடம் காரணமில்லாமல் என் மேல் யாரேனும் பழி சுமத்தினால் ஆராயாமல் அதை நம்பாதே என்று சொன்னதும் நினைவிலிருந்தது .
அரண்மனை வேலைக்காரர்கள் நரியின் வீட்டிலிருந்து மீட்ட மான் மாமிசத்தை பற்றி கேள்விப்பட்ட புலியின் தாய் இதை நம்பவில்லை; அவளுக்கு தான் தெரியுமே நரியின் நேர்மையான சைவ குணத்தை பற்றி. ராஜாவான தனது மகனிடம் புலி ராணி ''மகனே, நீ இவர்களை நம்பாதே.நரி நேர்மையான, ராஜ விஸ்வாசம் கொண்ட அருமையான மந்திரி. அவர் மீது பழி சமர்த்த உன் வேலைக்காரர்களின் கூட்டு சதி இது. கூப்பிட்டு விசாரி. பிறகு தண்டனை கொடு. கொல்வது எளிது. நிரபராதியைக் கொன்றால் உன் மனச்சாட்சி உன்னையே கொன்றுவிடும்.'' என்று புலியின் ஒற்றன் சகல உண்மையும் கண்டு பிடித்து புலியிடம் அறிவுரை கூறியது. புலி விசாரணைக்கு ஏற்பாடு செய்தது. நரி எந்த தவறும் செய்யவில்லை என்று ஊர்ஜிதமானவுடன் புலி நரியிடம் சென்று அதை அணைத்துக் கொண்டது. ''என் உயிர் நண்பா, உன்னை சந்தேகித்த பாவி, என்னை மன்னித்து விடு'' என்றது. '' இல்லை அரசே, இனியும் நான் இங்கிருப்பது நல்லதல்ல. என்றும் இது நிலைக்காது. மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் என் உயிர் போகலாம். ஒவ்வொருமுறையும் உண்மையைக் கண்டறிந்து என்னை ஏற்றுக் கொள்வது என்பது அக்னி பரிக்ஷை. நான் மாமிசம் தொடாதவன் என்று தெரிந்தும் நான் உன் மாமிசத்தை திருடியதாக சொன்னதை நம்பினாய். என் உயிர் தப்பியது என் அதிர்ஷ்டம். எஜமானனுக்கு சேவை செய்யும் போது வேலைக்காரன் தனது உயிரையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். உன் நம்பிக்கைக்கு எப்போதும் நான் பாத்திரமாவேன் என்று சொல்ல முடியாதே. ஆகவே புலிராஜா, நான் உங்களை ஒரு நல்ல நண்பனாகவே பிரிகிறேன். அப்போது தான் உங்கள் நினைவில் என்றும் இருப்பேன். '' நரி மீண்டும் பழையபடி தனது மயான இருப்பிடத்துக்கு சென்றது. தவம் செய்தது. காலமானவுடன் மோக்ஷம் அடைந்தது.''
மேலும் பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு என்ன அறிவுரை தந்தார் என்பதை காது கொடுத்து கேட்போம்....

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...