Monday, May 13, 2019

PESUM DEIVAM



பேசும் தெய்வம்' J K SIVAN

''ஆமாம் இன்னிக்கு சந்திக்கணும்.''

இதை என்னவென்று சொல்வது? தீர்க்க தரிசனமா? மஹான்களின் வினோதமான செயலா? ஆனால் கட்டுக்கதை அல்ல. நடந்தது தானாம். மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் என்கிற தொகுப்பில் முகநூலில் ''ஜகத் குரு ஜகதகுரு ஸ்ரீ மஹா பெரியவா - காஞ்சி பரமாச்சார்யா'' என்று தலைப்பில் வந்ததாக தகவல்.
கொளுத்தும் வெயில். காஞ்சி மடத்தில் அதிக கூட்டம் இல்லை. மணி பிற்பகல் ரெண்டை தாண்டிவிட்டது என்றாலும் வெக்கை, வெப்பம் சற்றும் குறையவில்லை. எங்கும் சூரியன் வாட்டி எடுக்கும் அப்பளங்கள். அந்த நேரம் பார்த்து ஒரு புது மனிதர் காஞ்சி காமகோடி மடத்துக்குள் நுழைகிறார். காவி உடை, ருத்ராக்ஷம், ஜடை முடி. கண்கள் அங்கும் இங்கும் யாரையோ தேடுகிறது. வங்காள தேசத்தவர் போல் தோன்றியது.
மடத்து சிப்பந்தி ஒருவர் அவரை அணுகுகிறார்.
யாரு? என்ன பார்க்கிறீர்கள்?
தமிழ் தெரியவில்லை. இன்னொருவர் ஆங்கிலத்தில் கேட்கிறார். வந்த சந்நியாசிக்கு ஆங்கிலம் தெரிந்ததால் பதில் சொல்கிறார்.
''எங்கே பெரியவா?''
" பெரியவாவை இப்போ தரிசனம் பண்ண முடியாது. சாயந்திரம் தான் தரிசனம் பண்ண முடியும் . நீங்க இங்கே இருந்தா தரிசனம் அப்போ பண்ணலாம்'' மடத்தில் ஒரு சிஷ்யர் பதவிசாக மரியாதையை கலந்து வந்த சந்நியாசிக்கு சொன்னார்.
அவ்வளவு தான். வந்த சந்நியாசி துர்வாசராக மாறி வானுக்கும் பூமிக்குமாக நர்த்தனமாடி விட்டார்.
"என்ன சொல்றே நீ? என்னது சாயந்திரமா? முடியாது. என்னை வரச் சொல்லி விட்டு அவர் எங்கே போய்ட்டார், பெரியவர்? அவர் எப்போ வராரோ அப்போ வந்துக்கட்டும். நான் போறேன்.''
உரத்த குரலில் இதை சொல்லிவிட்டு அந்த சந்நியாசி திரும்பினார். ரயிலடிக்கு நடக்க திரும்பினார்..
மடத்தில் இருந்த சிஷ்யருக்கு ரொம்ப கோபம் வந்தது.
''என்ன சொல்றீர் நீர்? எங்களை பயமுறுத்துகிறீரா? உம்மை யார் வரச்சொன்னது? ஏதோ ஒரு சாது மாதிரி காவி, தாடி மீசை, ருத்ராக்ஷம் விபூதி என்று இருக்கிறீர் என்று மரியாதையோடு உபசரித்தால் இப்படியா பேசுவது? பெரியவா கிட்ட பய பக்தி இருக்கவேண்டாமா?''
சிஷ்யனும் குரலை உயர்த்தி வந்த சன்யாசியிடம் படபடவென்று பேசிவிட்டான்.
பெரியவா அந்த க்ஷணம் அங்கே வந்துவிட்டார்.
பெரியவாளைக் கண்டதும் சிஷ்யர் பவ்யமாக கை கட்டிக்கொண்டு அவரிடம் ஓடினார்.
பெரியவாளைப் பார்த்த அடுத்த கணம் அந்த சன்யாசியும் குளிர்ந்து விட்டார். கோபம் ஓடிவிட்டது. ரெண்டு பேரும் ஆற அமர ஒருமணி நேரத்துக்கு மேலே பேசினார்கள்.
சிஷ்யனைக்கூப்பிட்டு அவருக்கு சில பழங்கள் கொண்டு வரச் சொன்னார் பெரியவர்.
பெரியவா, ஜடாமுடி சந்நியாசி இருவரை சுற்றி நிறைய பக்தர்கள் கூடிவிட்டார்கள்.
அவர்களை பார்த்துக்கொண்டே சிரித்தவாறு, பெரியவா என்ன சொன்னா தெரியுமா?
''ஒரு தடவை காசிக்கு யாத்திரை போயிட்டு திரும்பின பொது வழியிலே வங்காளத்தில் மிதுனாபூர் என்கிற ஊரில் தங்கினேன். அப்போ தான் ஒரு சந்நியாசி எங்களோடு ஒருவாரத்துக்கு மேலே அங்கே தங்கினார். நல்ல யோக புருஷர். சித்தர் என்று கூட தாராளமாக சொல்லலாம். ஆனால் பச்சை மிளகா. சுறுக்க்கென்று கோபம் வந்துடும். அவர் முன் கோபத்தை மட்டும் யாராலும் அடக்க முடியாது. சில நாள் எங்களோடு தங்கி இருந்த சந்நியாசி ஒரு நாள் புறப்பட்டு போனார். போறதுக்கு முன்னாலே ஒரு வார்த்தை என்னை கேட்டார்:
''உங்களை எப்போ மறுபடியும் பார்க்கறது?''

நான் சொன்னேன் அவரிடம். தெற்கே காஞ்சி மடத்தில் பதினஞ்சு வருஷத்துக்கு பிறகு நீங்க என்னை சந்திக்க போறேள்' என்றேன். இவர் என்னடான்னா பரதன் எப்படி ராமர் திரும்பி வனவாசம் முடிஞ்சு 14 வருஷங்கள் ஆன உடனே,திரும்பி வரணும்னு காத்திண்டிருந்தானோ அது போல சரியா என்னை சந்திச்ச பதினைந்து வருஷங்கள் முடிஞ்சவுடனே கிளம்பி இங்கே என்னை பார்க்க வந்திருக்கார். ஆமாம் அவரை நான் வங்காளத்தியிலே சந்திச்சு இன்னியோடு பதினஞ்சு வருஷம் ஆறது'' என்கிறார் மஹா பெரியவா



இதை எப்படி விளக்குவது, என்னவென்று சொல்லுவது. மஹான்கள் விஷயமே அலாதி இல்லையா!. எதற்கு பதினைந்து வருஷம் என்று சொன்னார்? அவர் எதற்கு அதற்காக காத்திருந்தார்? என்ன பேசினார்கள்... இதெல்லாம் தேவ ரகசியம்.. நமக்கு புரியாது. ஆசைப்படவேண்டாம். கையெடுத்து கும்பிடுவோம்.அது தான் நாம் செய்யவேண்டியது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...