Monday, May 27, 2019

NARASIMMA



நரசிம்மா.ஆ ஆ ஆஆ J K SIVAN
5 ''எப்படி உள்ளே வந்தாய்?

மார்கழி 23ம் நாள் திருப்பாவையில் நரசிம்மன் வருகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். கிருஷ்ணனை பார்க்கும்போது ஆண்டாளுக்கு என்ன தோன்றுகிறது.... கிருஷ்ணனின் ஒரு முந்தைய அவதாரமான நரசிம்மனை நேரில் பார்ப்பது போல் இருக்கிறதாம். ''மூரி நிமிர்ந்து முழங்கிய சிங்கம்'' என்கிறாள் கோதை ''.

ஒவ்வொரு நாளும் நமக்கு புத்தம் புதிதாகத் தான் அமைகிறது. நாள் என்ன ஒவ்வொரு கணமும் புதிது. மாறுதல் இன்றியமையாதது அல்லவா?.

புதிய எண்ணங்கள், புதிய எதிர்பார்ப்புகள். சில புதிய நம்பிக்கைகள். இதை முன்னேற்றம் என்று சொல்லலாமா? முன்னேற்றம் என்பது ஒரேயடியாக மேலே தாவுவது அல்ல. ஒன்றிலிருந்து மற்றொன்
றுக்குப் படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக மேலே நகர்வது.

மார்கழி 23ம் நாளில் வரும் சிங்கத்தை ஆண்டாள் பாடும் அருமையான பாசுரம்.

''மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் போங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் அறிந்து அருளேலோர் எம்பாவாய்''

ஆண்டாள் (நர) சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்து விட்டாளே.

''கிருஷ்ணா, உன்னைப் பார்க்கும்போது எனக்கு என்ன மனதில் தோன்றுகிறது தெரியுமா? ஒரு அடர்ந்த வனம். அதில் ஒரு பெரிய மலை. அதன் அடிவாரத்தில் இயற்கையாக அமைந்த ஒரு பெரிய குகை. அந்த குகையில் தனது ராணியுடன் ஒரு சிங்கம் வசிக்கிறது. மழை காலம். எனவே, அடக்கமாக ராஜா சிங்கமும் ராணி சிங்கமும் உறங்குகின்றன. கொஞ்சம் மழை விட்டது. சூரிய வெளிச்சமும் கொஞ்சம் குளிரை விரட்டியடித்துவிட்டது. எனவே சிங்கராஜா எழுந்து விட்டார். தலையைச் சிலிர்த்து, அசைக்கிறார். கம்பீரமான அவரது மஞ்சள் விழிகள் சிவந்த நிறத்தை அடைந்து விட்டன. நெருப்பு உமிழ்கின்றன. எல்லா பக்கமும் நோட்டம் விடுகின்றன. அடர்ந்த பிடரியை அனாயாசமாக ஒரு உலுக்கு உலுக்குகிறார் சிங்க ராஜா. பிறகு தனக்கே உரித்தான சிங்க நடை போட்டவாறு தலையைத் தூக்கியவாறு கம்பீரமாக ராஜா குகைக்கு வெளியே வருகிறார். ஒரு பெரிய பாறை எதிரே தெரிகிறதே அதன் மேல் ஏறி நின்றதும் தனித்துவமான சிம்ம கர்ஜனை ஒன்று அவரிடமிருந்து வெளிப்படுகிறது. வனாந்திரமேல்லாம் அது கர்ஜித்து எதிரொலிக்கிறது.

காயாம்பூ வர்ண மலரணிந்த கண்ணா, அந்த சிங்கம் வேறு யாரும் இல்லை அப்பா. நீயே தான் . உன் தலையை நிமிர்த்தி, உயர்த்தி, எழுந்து ராஜ நடை போட்டு இந்த அழகிய ரத்ன சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு '' ஹே பெண்களே, எதற்காக என்னை வந்து எழுப்பினீர்கள்?'' என்று நீ கேட்பாயானால் நாங்கள் நீ கேளாமுன்னரே எங்களுக்கு உன் அருள் உண்டு, எங்கள் நோன்பின் பயனை உன் தரிசனத்திலே அடைந்தோம் என்று அர்த்தமாக எடுத்துக்கொள்வோம். எங்கள் மீது கருணை கொண்டு எங்களை நீ ரட்சிக்க வேண்டும். ''

ஆண்டாள் இப்படி வக்கணையாக பேசுவது நமது நன்மைக்காகவும் தான். இந்த பாசுரத்தில் ஆண்டாள் கிருஷ்ணனை நரசிம்ஹ மூர்த்தியாக பாவிப்பது அபூர்வம். என்ன வளமான கற்பனை.

சிங்கம் இந்த இடத்தில் நரசிம்மனாக ஸ்ரீமந் நாராயணன் அவதாரமெடுத்து ப்ரஹலாதனைக்காக்க ஹிரண்யனை வதம் செய்ததை இந்த பாசுரம் நினைவு கூர்கிறது.

ஆந்திராவில் மட்டப்பள்ளியில் லட்சுமி ஒரு நரசிம்மர் கோயில் இருக்கிறது. அது ஒரு ஜன நடமாட்டம் இல்லாத வனப் பகுதி. அங்கே வாழ்ந்த ஒரு காட்டுவாசிக்கு மட்டப்பள்ளி பகவான் மீது பக்தி. அவன் இடத்திலிருந்து அந்த ஆலயம் இருக்கும் இடம் ரொம்ப தூரம்.

ஒருநாள் பகவானை தரிசிக்க அரிசி, பருப்பு, காய், கனிகள் ஆகியவ ற்றை மூட்டை கட்டி தலையில் சுமந்தவாறு அந்த காட்டுவாசி மட்டப்பள்ளி நரசிம்மர் ஆலயம் நோக்கி நடக்கிறான். காட்டில் இரண்டு நாட்கள் நடப்பது எவ்வளவு சிரமம் என்பது நடந்தால் தான் தெரியும். அவன் சென்றபோது இரவு நேரம் அதிகம் ஆகிவிட்டதால், மட்டபள்ளி ஆலயம் மூடி இருந்தது. களைத்து வந்த காட்டுவாசி கோயில் முன்பு ஒரு மண்டபத்தில் படுத்தான். அடுத்த கணம் நீண்ட நடை தந்த களைப்பில் ஆழ்ந்து உறங்கிவிட்டார். கோயில் பட்டாச்சார்யார் வந்து எழுப்பினார்.

“யாரப்பா நீ? எழுந்திரு. எங்கிருந்து வந்திருக்கிறாய்?”

''நான் அந்தால இருக்கிற காட்டிலே இருக்கிறேனுங்கோ. நரசிம்ம சாமி பாக்க வந்தேனுங்கோ. உள்ளே உடுவீங்களா? இல்லாட்டி இங்கிருந்தே பாக்கிறேனுங்கோ ''

“அதெல்லாம் வேண்டாம் நீ உள்ளே வா. உன் பக்தியை நான் மெச்சுகிறேன்'' என்கிறார் பட்டர்.
காட்டுவாசி கொண்டுவந்தவற்றை நரசிம்மனுக்கு நைவேத்தியம் செய்து, சடாரி வைத்து தீர்த்தம் கொடுத்தார்.
சுவாமியை தனிமையில் மிக அருமையாக தரிசித்த காட்டுவாசிக்கு பரிபூர்ணானந்தம்.
''அப்பா. இருட்டிப்போயிடுத்தே. நீ எப்படி போவே இங்கிருந்து?'' என்கிறார் பட்டர்.
''மெதுவா நரசிம்ம சாமி பேர் சொல்லிக்கிட்டே நடப்பேனுங்கோ.''
''இருட்டில் போகாதே. கொடிய விலங்குகள் ஜாஸ்தி இந்தப்பக்கம். இங்கேயே ராத்திரி கோவில் உள் மண்டபத்தில் தங்கி நான் காலையில் நடை திறந்த பிறகு வெளிச்சத்தில் போவது நல்லது.'' என்கிறார் பட்டாச்சாரியார்.
''ரொம்ப சந்தோசமுங்கோ''

இரவு கழிந்து மறுநாள் காலை பட்டாச்சார்யார் கதவை திறந்தார். அங்கு ஒருவர் அழுக்கடைந்த ஆடையுடன் குளிக்காமல் படுத்திருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்து கடுங்கோபத்துடன் திட்டினார்.

“யாரடா நீ ? எப்படி கோயிலுக்குள் வந்தாய்?” என்று கத்தினார். காட்டு வாசி அதிர்ந்து போனான்.

“சாமி, நீங்கள் தானே வாசலிலே தூங்கிக்கிட்டிருந்த என்னை எழுப்பி உள்ளார கூட்டி வந்து சாமி காட்டி நான் கொண்டாந்ததை நரசிம்ம சாமிக்கு பிரசாதம் நைவேத்தியம் பண்ணி என்னை உள்ளார வந்து இங்கே படுக்க சொன்னீங்கோ. அதுக்குள்ள மறந்துட்டீயளா?''

பட்டாச்சாரியாருக்கு தலை சுற்றியது. யார் இவன்? எப்படி கோவில் உள்ளே வந்தான்? சாமி பார்த்தேன் நான் தான் உள்ளே அழைத்தேன், படுக்க சொன்னேன் என்கிறான். உள்ளே அவன் கொண்டுவந்த எதையோ நைவேத்தியம் பண்ணேன் என்கிறான்' '

எதிரே கர்ப்பகிரகத்தை பார்க்கிறார். பூட்டி இருக்கிறது. பெரிய பூட்டு பூட்டி சாவி அவர் இடுப்பில் அல்லவோ இருக்கிறது. பூட்டியிருந்த சன்னதிக்கு சென்றார். பூட்டை இழுத்துப்பார்த்து சாவியால் திறந்தார்.

என்ன ஆச்சர்யம். அந்த அழுக்கு ஆள் சொன்னது போலவே நரசிம்மனுக்கு காய், வேர், கிழங்குகள் பழங்கள் எல்லாம் நைவேத்தியம் செய்யப்பட்டிருந்தது.

பட்டாச்சாரியார் கிழவர். பரம்பரையாக நரசிம்ம பக்தர். சேவை செய்பவர். புரிந்து விட்டது அவருக்கு. நரசிம்மனே தன்னைப் போல் நேரில் வந்து அந்த காட்டுவாசிக்கு அருளியிருக்கிறான். சன்னதிக்குள் நைவேத்தியம் தவிர அனைத்தும் அவர் வைத்துவிட்டு போனது போலவே இருந்தது. உடல் நடுங்கியது. கண்களில் நீர் தாரையாக வழிந்தது.

''நரசிம்மா, இத்தனை காலமும் பூஜை செய்த எனக்கு காட்சி தராமல், எவ்வித ஆச்சாரமும் இல்லாமல், பக்திக்கு முதலிடம் தந்து வந்த அந்த காட்டுவாசிக்கு அருள் தந்தாயே, என்ன பாக்கியவான் அவன். '' பட்டர் மேலே பேசமுடியாமல் நரசிம்மனின் கருணையில் உருகி கண்களில் நீர் பிரவாகம் பெருகி தரையில் சொட்டியது.

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:

நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை ; சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே; அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே; எஜமானனும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே;

என்னதான் தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்தாலும் இயற்கையை மீறி சில காரியங்கள் செய்ய முடியாது. விருத்தாப்பியம் எனும் முதுமை இதில் ஒரு முக்கிய அம்சம். விருத்தாப்பியம் அடைந்த போது தான் அது புரியும். வயது முதிர்ந்தால் ஞானம் வளர்வது பல ஆசைகளை, விருப்பங்களை, தேடல்களை அவன் விட்டுவிட்டு தனிமையை அதிகம் நாடும்போது தான் தெரிந்து கொள்ள முடிகிறது பக்திக்கும் தனிமைக்கும் அத்தனை நெருக்கம். பொருத்தம்.






No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...