Monday, May 13, 2019

ARUPATHTHU MOOVAR



அறுபத்து மூவர் 
திருநாவுக்கரசர் 
                                                                                  
                         
    ''கூற்றாயினவாறு......''

திருமுனைப்பாடி   என்பது தமிழகத்தில்   நடு நாடு என்கிற  முக்யமான  பகுதியை சேர்ந்ததாக  இருந்தது.  அங்கே  திருவாமூர் எனும் அழகிய கிராமம்.   அங்கே   ஒரு அற்புத ஜீவன்  வேளாளர் குலத்தில் உதித்தது.  தந்தை புகழனார் -  தாயார்  மாதினியார் எனும் தவத்தில் சிறந்த தம்பதிகளுக்கு  ஒரு மகனும் ஒரு மகளும். மகள் திலகவதி. மகன் மருள் நீக்கி.

மருள் நீக்கி   இளவயதில் அப்போது தமிழகத்தை பிடித்திருந்த  சமண மதத்தில் பற்றுகொண்டவராக இருந்தான். தனது  பூர்வீக குடும்ப நம்பிக்கையை  காற்றில் பறக்கவிட்டு,  தர்மசேனன் என்ற பெயர் தாங்கி வீர சமணன்  ஆனான்.   பல்லவமன்னன் மகேந்திரவர்மன் ஆதரவில் சமண சமயத்தினைப் பரவச் செய்யும் முயற்சியில்   மருணீக்கியார் பாடலி புத்திரம்  சென்றார்.  சமணரின் பள்ளியைச் சார்ந்தார். சமண முனிவரும் தங்கள் தர்க்கவாதத் திறமையால் தங்கள் சமயமே மெய்ச்சமயம் என்று கூறி அவர் அறிவைமருட்டித் தங்கள் மதத்தில் ஈடுபடுத்தி வந்த காலம்  அது.  மருள் நீக்கியாரும் அம்மத நூல்களில் வல்லவரானார். அதுகண்ட சமணரும் `தருமசேனர்` என்னும் சிறப்புப் பெயர் அளித்து அவரைப் பாராட்டி னர். தருமசேனராகிய மருணீக்கியாரும் புத்தருள் தேரரை வாதில் வென்று சமண் சமயத் தலைவராய் விளங்கிவந்தார்.

திலகவதியைப் பற்றி ஒரு வார்த்தை.  பெற்றோர்  புகழனார், மாதினியார் அவளை  கலிப்பகையார்  எனும் பாண்டிய மன்னன் தளபதிக்கு, வீர சைவருக்கு மணம் முடிக்க ஏற்பாடு  செய்தார்கள்.  அதற்குள் யுத்தம் மூண்டு கலிப்பகையார்  பாண்டியன் சைன்யத்தோடு வெளியே சென்று பலகாலம்  திரும்பவில்லை.யுத்தத்தில் வீர மரணம்   எய்த, அந்த துக்கத்தில் புகழனார்,மாதினியர் மரணமடைய, திலகவதியார் திருமணமாகாமலேயே    மனதில் கலிப்பகையாரின் மனைவியாக வாழ்ந்ததால்  உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தாள் .   அக்காவின்  இந்த  முடிவு மருள் நீக்கியை கலங்க செய்தது.

'' அக்கா, எனக்கு  அப்பா அம்மாவும் இல்லை, வேறு யாரும் துணை இல்லை. நீயுமா என்னை விட்டு போகிறாய்.  எனக்காக உயிர் வாழவேண்டும்''   என்று  கெஞ்ச தனது பாசத்தை மருணீக்கி மேல் பொழிந்து அவனை வளர்த்தவள்.    இப்படிப்பட்ட ஆசைத்தம்பி  சமணனாகி அவள் மனம் உடைந்து  வீரட்டானேஸ்வரரை வேண்டுகிறாள்.  ''என் மருணீக்கியை மீட்டுக் கொடு ''.  '

சிறந்த சிவபக்தை திலகவதியார்.  வீரட்டானேஸ்வரர் திலகவதியார் கனவில் தோன்றி `உன்னுடைய மனக்கவலையை ஒழி. உன்தம்பி முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றவன். அவனை சூலைநோய் தந்து ஆட்கொள் வோம்` என்று அருள்செய்து மறைந்தனன். அவ்வண்ணமே சூலை நோய் தருமசேனர் வயிற்றிடைச் சென்று பற்றியது.

திடீரென்று தர்மசேனனுக்கு  பொறுக்க முடியாத  வயிற்று வலி.   சமண முனிவர்கள் வைத்தியத்தில் நிபுணர்கள். மணி மந்திர ஒளஷதம் கற்றவர்கள். அவர்களை அணுகி குணம் பெற முயன்ற  தர்மசேனனுக்கு   கிடைத்தது தோல்வியும்  அதிக வயிற்று  வலியும்  தான்.   தம்பி  படும் அவஸ்தை  தாங்க முடியாத  திலகவதி  அவர்கள் இருந்த  திருவதிகை கிராம தெய்வம்  விரட்டானேஸ்வரரின் விபூதியை  தருகிறாள்.

''என் அருமைத் தம்பி,  உன் வேதனை என்னை  வாட்டுகிறதடா.   நீயும் எவ்வளவு சொல்லியும்  சமணர்கள் பின்னாலேயே போகிறாய். அவர்கள் உனக்கு எந்த மருந்தும் தந்து உன் வலியைப் போக்க முடியவில்லையே.  இப்போவாவது என் சொல் இரு நிமிஷம் கேளேன். நமது மூதாதையர் வணங்கிய கண்கண்ட தெய்வம் அருகிலேயே இருக்கிறதேடா. இதோ வீராட்டனேஸ்வரர் உனக்கு  உதவ காத்திருக்கிறார். அவரை வணங்கி நான் தருகின்ற அவரது திருநீற்றை கொஞ்சம்   பிரசாதமாக ஏற்றுக் கொள் . உடலில் வயிற்றில் முக்கியமாக  பூசிக்கொள் . என் இறைவன் சர்வேஸ்வரன், சிவபெருமான் உன்னை எனக்கு மீட்டுத்தருவான். உன் வலி காற்றில் பறந்து போகுமடா செல்லமே. ''

அவ்வாறே செய்த தம்பிக்கு  வயிற்று வலி (சூலை நோய்)  மட்டுமா காணாமல் போனது? மருள் நீக்கியே காணாமல் போய் திருநாவுக்கரசரனானான். அப்போது  எத்தனை சந்தோஷமாக இருந்திருக்கும்  திருநாவுக்கரசரருக்கு.  ஒரு தெய்வீக  திருப்பதிகம் வீரட்டானேஸ்வரர்  மீது நன்றி கலந்து எழுந்தது.  சமணனாக  இருந்தவன் வீர சைவனானான்.  அந்த   திரு வீரட்டான திருப்பதிகம் உலகமுழுதும்  சைவர்களால் மனமுருகி பாடப்பட்டு வருகிறது. நிறைய தடவை அந்த பாடலை நான் பாடுவேன்.

''கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே''…

சென்னையிலிருந்து  ரெண்டு மணி நேரத்தில்  வேகமாக  வழவழ  சாலையில் காரில் சென்றால்   கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும் திருவதிகை என்னும்  திருவதிகை எனும் வீரட்டான க்ஷேத்ரம் சென்றுவிடலாம்.  


வீரட்டானம் எனும் க்ஷேத்திரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும்  தலைவா ! யான் இப்பிறப்பில் என் மனம் அறிந்து அறிவு இடம்  கொடுத்து, பல கொடுஞ் செயல்களைச் செய்தேனா  என்றே  எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் புகுந்து குடல் முதலான  ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்கி  ஒடுக்கி, சுருட்டி, என்னால்
அவ்வலியைப் பொறுக்க இயலாதவனாக துடிக்கிறேன். இரவு பகல் உண்ண முடியாமல் உறங்கமுடியாமல்  வாடுகிறேன்.  கொடிய  யமதர்மனைப்போல் அந்நோய் என்னை   வாட்டி வதைத்து  துன்புறுத்தும் செயலை 
நீங்கள் அல்லவோ  போக்கும்  நீக்கும்  சக்தி உடையவர்.  ஐயா பரமேஸ்வரா, தயவு செயது  என்  குறைகளை பொருட்படுத்தாமல் என் மேல் கருணை கொண்டு  என்  சூலை நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற இனி  என் காலமெல்லாம் அடிமையாக வணங்குவேன்''

இப்படி  மனமுருக   நாமும் இறைவனை  மனமார நினைத்து வணங்கவேண்டும். அப்புறம்  காசு பிடுங்கும் ஆஸ்பத்திரிகள் பக்கமே கால்  போகாது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...