Saturday, May 18, 2019

NARASIMMA


தசாவதாரம்                                   J K SIVAN 
நரசிம்மாவதாரம்                                    
                                                                   
                             நரசிம்மா.ஆ ஆ ஆ - 2

நாரதரின் ஆஸ்ரமத்தில் ஹிரண்யனின் மனைவி  கயாது   பூரண கர்ப்பவதியாக  சில காலம் தங்க  நேரிடுகிறது.  ஆமாம்,   ஹிரண்யன் அரண்மனையை விட்டு வெளியேறி  காட்டில் கடும் தவம்  கொண்டிருந்த காலம் அது. 

 எவ்வளவு பாக்யாசாலி  அவள்.   ஸ்ரீமன் நாராயணனின்  மஹாத்மியத்தை   விஷ்ணுவின் முதன்மையான  பக்தர் ஸ்ரீ நாரதரிடமிருந்தே  அனுதினமும்   நாரதர் வாயினால் ஆனந்த பரவசத்தோடு  அவர்  சொல்லச்  சொல்ல  விடாமல் கேட்டுக்கொண்டு வந்தாள்.   அவளை அறியாமல் விஷ்ணுவிடம் அவளுக்கு ஒரு பிடிப்பு, சிறந்த பக்தி உண்டாயிற்று   சொல்லும்போதோ, எழுதும்போதோ  என்ன  ஆச்சர்யம் இருக்கிறது.

அவள் வயிற்றில் வளரும் ப்ரஹ்லாதனைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவனறிந்த ஒரே தெய்வம் நாராயணன் என்பது  உறுதியாயிற்று. அவனும் அவனது விஷ்ணுபக்தியும் சேர்ந்தே வேகமாக வளர்ந்தார்கள். 

இதற்கிடையில் காட்டில் நெடுங்காலம்ஹிரண்யன்  கடும் தவம் புரிந்து அது நிறைவேறும் நேரம் வந்துவிட்டது.  ,உடலை வருத்தி, அன்ன ஆகாரமின்றி , நீரின்றி, அசையாமல் தவமிருந்த ஹிரண்யனை சுற்றி புற்று மேடிட்டு, செடி கொடி மரங்கள் வளர்ந்து அவன் அதற்குள் புதைந்திருந்தாலும் அவனது  விடாத ஜப சப்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. அவனது தவத்தின் சக்தி அக்னியாக உஷ்ணத்தை வெளிப்படுத்த ப்ரம்மலோகத்திலிருந்து பிரமன் அவன் தவத்தை மெச்சி ஹிரண்யனை தேடி வருகிறார். அவன் இருந்த மண் மேட்டின் மீது தனது கமண்டல ஜலத்தை தெளித்ததும் ஹிரண்யன் வெளியே வருகிறான். பிரமனை வணங்கினான். அவன் விரும்பிய வரம் கேட்கும் நேரம் வந்துவிட்டதே. இதற்கு தானே அவன் காத்திருந்தான்.

''ஹிரண்யா, என்னை நோக்கி கடும் தவமிருந்தாயே. மிக்க மகிழ்ச்சி. உனக்கு என்ன வரம் வேண்டும் என்பதற்காக  நீ  தவம் இருந்தாய். சொல்?''

'ப்ரம்ம தேவா, எனக்கு மரணமே சம்பவிக்க கூடாது. இது தான் எனக்கு வேண்டிய வரம்''

''ஹிரண்யா, மரணத்தை தவிர்க்க முடியாது. அதை நிறுத்த என்னால் முடியாது. பிறந்தது அனைத்தும் மறைந்தே ஆகவேண்டும் என்பது நியதி. வேறு ஏதாவது வேண்டுமானால் கேள் தருகிறேன்''

ஹிரண்யன் யோசித்தான்.  வரம் தர  வந்திருக்கிற  இந்த பிரமனை விடக்கூடாது. தான் வேண்டியதை நேரடியாக கேட்காமல் மறைமுகமாக கேட்டுப்  பெறவேண்டும். என்ன வழி... ஆஹா இப்படிக்  கேட்டால் என்ன ?   
 மரணம் உலகில் எப்படி எல்லாம் நடக்கிறதோ அப்படி இல்லாமல் கேட்டால் என்ன? சாகாவரம் பெற இப்படியும் வழி இருக்கிறதே!   இந்த பிரமன் மூலம் தான் வேண்டிய   வரத்தைப் பெறுவது என்ன  கடினமான, முடியாத காரியமா.   ஹிரண்யன் தனது சாமர்த்தியத்தை தானே மெச்சிக் கொண்டான். வரம் கேட்டான்: 

''ப்ரம்ம தேவா, தாங்கள் சொல்வதை கேட்டால் யாரும் மரணத்தை மீற முடியாது என்று புரிகிறது. ஆகவே என் மரணம் எப்படி நடக்கக் கூடாது என்று கேட்கிறேன் அப்படி நேராமல் இருக்க வரம் அளியுங்கள்.''

''சரி. அதற்கென்ன,  அப்படியே ஆகட்டும். கேள். தருகிறேன்''

''தேவாதி தேவா, சதுர்முக ப்ரம்மா, எந்த மானுடனாலும், மிருகத்தாலும், உன்னால் படைக்கப்பட்ட எந்த ஜீவனாலும், இரவிலோ, பகலிலோ, விண்ணுலகிலோ, மண்ணுலகிலோ, வீட்டின் உள்ளோ, வெளியிலோ, எந்தவிதமான ஆயுதத்தாலோ எனக்கு மரணம் ஏற்படக்கூடாது''

''ததாஸ்து.... அப்படியே ஆகுக'' --  பிரமன்  வாக்களித்தான்.   
பிரம்மனிடம் மறைமுகமாக இப்படி ஒரு ''சாகா'' வரம் பெற்றுவிட்டான் ஹிரண்யன்.    பிரமன் ஹிரண்யனின் கடும் தவத்தால் அவன் வேண்டிய வரத்தை அளிக்க வேண்டிய நிர்பந்தம். ஹிரண்யன் மிகவும் கொடியவன். தேவர்களையும் விஷ்ணுவையும் எதிர்ப்பவன். இப்படி ஒரு வரம் பெற்று விட்டானே. இதை நாராயணனிடம் அறிவிக்க வேண்டும் என்று வைகுண்டம் சென்றார் ப்ரம்மா. விஷ்ணுவிடம் நிலைமையை எடுத்து சொன்னார்.  இப்படி  ப்ரம்மா ஒரு வரம் தந்து விட்டாரே, இனி  இது ரட்சிக்கும் கடவுளான விஷ்ணுவின் பொறுப்பு என்று ஆகிவிட்டதே. 

மிக்க சந்தோஷத்தோடு ஹிரண்ய கசிபு வெகு காலத்திற்கு பிறகு தனது நாட்டுக்கு சென்றான், அரண்மனை வெறிச்சோடி இருந்தது. நாடே நாசமாகி இருந்தது. அவன் தோழர்கள், படை எல்லாமே அழிக்கப்பட்டு இருந்தது.

இருப்பவர்களிடமிருந்து விஷயம் அறிந்து எல்லாம் இந்திரன் செயல் என்று அறிந்து கடும் கோபம் கொண்டான். அவன் மனைவியைக் காணோம். எங்கே சென்றாள் என்ன ஆனாள்?

தபோ பலத்துடன் சென்ற ஹிரண்யகசிபு வெகு எளிதில் விண்ணுலகை அடைந்து தேவர்களை வென்று மண்ணுலகம் விண்ணுலகம் அனைத்துக்கும் அதிபதி ஆனான். அவன் மனைவி கயாதுவையம்,  மகன்  ப்ரஹ்லாதனையும்  நாரதர் ஆசிரமத்திலிருந்து தனது அரண்மனைக்கு  அழைத்துக் கொண்டு வந்தான். தேவர்களை வாட்டி எடுத்தான்.

கயாது எவ்வளவோ சொல்லியும் அவன் கோபம் அடங்கவில்லை. தனது பரம வைரியான விஷ்ணுமீது பகைமை அதிகரித்தது. அவன் மகன் பிரஹலாதனும்  தன்னைப்போலவே விஷ்ணுவின் எதிரியாக வளரவேண்டும் என்று  ஆசைப்பட்டான். நாராயண பக்தனாக பிரஹலாதன் வளர்ந்தபோது ஹிரண்யனும் விஷ்ணுவின் கொடிய பகைவனாக வளர்ந்தான். தேவர்களை இன்னல்களுக்கு ஆளாக்கினான். எங்கும் ஹிரண்யமயம். சர்வம் விஷ்ணுமயம் ஜகத் என்பதை மாற்றி சர்வம் ஹிரண்யமயம் ஜகத் என்று அதிகாரத்தால், அதீத பலத்தால் மாற்றி அமைத்தான்.  ப்ரஹ்லாதனுக்கு அளித்த கல்வி இப்படித்தான். ஆனால் பிரஹலாதன் எல்லாமே விஷ்ணுவினால். அவரே ரட்சிக்கும் தெய்வம் என்று தைரியமாக தந்தையிடம் எடுத்துச் சொன்னான்.

காதில் நாராசமாக இந்த சொல் விழவே, அனைத்து ஆசிரியர்களையும், ஆசார்யர்களையும் மாற்றி தானே ரட்சிக்கும் தெய்வம் என்று ஹிரண்யன்  பறை சாற்றினான். ப்ரஹ்லாதனால் மாற இயலவில்லை. அவன் மனம் தான்  எப்போதுமே  கருவிலிருந்தே நாரயணனிடம் குடிகொண்டிருந்ததே .

எவ்வளவோ முயன்றும் ப்ரஹ்லாதனை தந்தை ஹிரண்யனால் விஷ்ணுவை விட தான்  உயர்ந்தவனாக ஏற்றுக்கொள்ள  வைக்க  முடியவில்லை.    இதனால் அவன் கோபம் விஷ்ணுவின் மேல் அதிகரித்தது. என் எதிரியை புகழும் என் மகன் எனக்கு வேண்டாம். அவனைக் கொல்லுங்கள் ''   என கட்டளையிட்டான். மலையிலிருந்து கீழே தள்ளினார்கள், கடலில் மூழ்கடித்தார்கள். கொடிய நாக விஷத்தை கொடுத்தார்கள், கூரிய வாளால் வெட்டினார்கள். ''நாராயணா'' என்ற ஒரு சொல்லே ப்ரஹ்லாதனை அனைத்து கொடுமைகள், ஆபத்துகளில் இருந்தும் காப்பாற்றியது. கொடிய விலங்குகளிடம் சிக்கி அழிய காட்டிற்கு அனுப்பினால் ப்ரஹ்லாதனிடம் அனைத்து கொடிய விலங்குகளும் அன்பாக பழகியது ஹிரண்யனுக்கு ஆத்திரத்தை வளர்த்தது.

ஹிரண்யனுக்கு ஒரு சகோதரி. ஹோலிகா. அவளை அக்னி தீண்டாது. அவளை அணுகி ''நீ எனக்கு ஒரு உதவி செய். என் மகன் ப்ரஹ்லாதனை உன் மடியில் வைத்துக் கொள் . தீ மூட்டுகிறேன். நீ உயிரோடு தப்புவாய் உன்னை தீ ஒன்றும் செய்ய முடியாது. என் மகன் அழியட்டும்''. வேறு வழியின்றி சகோதரி ஒப்புக்கொண்டு அவ்வாறே தீ மூட்ட, ஒன்றுமறியாத சிறுவன் ப்ரஹ்லாதனை மடியில் ஏந்தி ஹோலிகா தீயில் குளித்தாள் . நாராயணனை ஜபம் செய்து கொண்டிருந்த ப்ரஹ்லாதனை தீ தொடவில்லை. அவள் செய்த பாபத்துக்காக ஹோலிகா  தீயில் எரிந்து சாம்பாலானாள்.

இனியும் தாமதிக்க கூடாது. ப்ரஹ்லாதனை நேரடியாக நாராயணனை மறந்து தன்னை ஏற்றுக் கொள்ள செய்யவேண்டும். அல்லது அந்த நாராயணனை அழிக்க வேண்டும். அதுவே கடைசி அஸ்திரம்.

சந்தர்ப்பம் கிடைத்தது. ஒருநாள் ப்ரஹ்லாதனை சிறையிலிருந்து அன்ன ஆகாரமின்றி இருந்தவனை இழுத்து வர செய்தான் ஹிரண்யன். வாதம் செய்தான். சாம பேத தான தண்டம் நாலு முறைகளும் பயனளிக்கவில்லை.    வேறு  வழியில்லை.  முதலில் அந்த நாராயணனை அழித்தால் தான் ப்ரஹ்லாதன் தனது சக்தியை புரிந்து கொள்வான் என திட்டமிட்டான் ஹிரண்யன்.

ப்ரஹ்லாதா ஆஆ.... இங்கே வா.....கடும் கோபத்துடன் கையில் தனது சக்தி மிக்க வாளுடன் கண்களில் தீப்பொறி பறக்க ஹிரண்யன் கட்டளையிட்டான்.. என்ன நடந்தது?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...