Saturday, May 11, 2019

MOTHER'S DAY




இந்நாள் மட்டும் இல்லை, எந்நாளுமே அம்மா அம்மா தான். J K SIVAN
இன்று அம்மா தினமாம். என் கம்ப்யூட்டர், மொபைல் ரொம்பி வழிகிறது. அம்மா தினத்தை பற்றி செயதிகள் படங்கள், குட்டி குட்டி செய்திகள், வாழ்த்துக்கள், அம்மா பெருமை பொம்மைகள். தொப்பி போட்ட குரங்கு டமாரம் அடித்துக்கொண்டே சிரிக்கிறது.. கம்ப்யூட்டரில் என்னென்னவெல்லாம் பண்ணுகிறார்கள். குரங்குக்கும் அம்மா உண்டே. அதற்கும் அம்மாவின் வயிற்றைக் கட்டிக்கொண்டு மரத்துக்கு மரம் தாண்டின, தாவிய அனுபவம் உண்டே.

அது என்ன 12.5.19 மட்டும் அம்மா தினம். அம்மாவுக்கு ஒரே ஒரு தினம் போதுமா? இது நியாயமா? வாழ்நாள் பூரா ஒவ்வொரு கணமும் நன்றிக்கண்ணீரோடு நினைக்க வேண்டியவளுக்கு வருஷத்தில் ஒரு நாள் ஒதுக்குவது அக்கிரமம் இல்லையா? பரவாயில்லை ஒரே ஒரு நாளாவது அம்மாவை நினைக்கலாமே என்ற நல்லெண்ணம் கொண்டவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்து.

அம்மா படித்தவளாக இருக்கவேண்டாம். அழகே தேவையில்லை. அவள் யாராக இருந்தாலும் அவள் தியாகத்தால் உருவானவள். தனக்கென எதையும், உங்களையும் என்னையும் போல் உலகில் நினைத்தவள் தான். ஆனால், தன்னுள் ஒரு சிசு பிறந்ததும் முழுதும் மாறிவிடுபவள் . இது தான் அம்மா விந்தை. இதைத்தான் பகவான் ஒவ்வொரு பெண்ணிலும் புதைத்து வைத்திருக்கிறான். அது தானாகவே முளைவிட்டு அரும்பாகி விருக்ஷமாகிறது. அம்மா எனும் ஜீவன், அன்பு, எல்லை இல்லா, ற பாசம், பரிவு, தன்னலமற்ற தியாகம் எல்லாம் தன வயிற்றில் பிறந்த மற்றொரு ஜீவனுக்காகவே அர்ப்பணிக்கும் தெய்வம். ஐயா மார்களே,அம்மா மார்களே அம்மாவைப்பற்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எழுதலாமே. அலுக்காத ஒரு சப்ஜக்ட் அம்மா. ஒரு கதை சொல்லி நிறுத்திக்கொள்கிறேனே .

சுப்பு சாஸ்த்ரி வாழ்நாளில் ஒரு சில கோவில்களில் ராமாயணம் ,பாரதம், பாகவதம் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லி அதிகபக்ஷம் பத்து பேருக்கு மேல் கேட்க வராததை கண்டவர். உலக வாழ்க்கை முடிந்து மேலுலகம் சென்றார். மீண்டும் பூவுலகில் மனிதப்பிறவி எடுக்கவேண்டிய நேரம் வந்தது. தன்னுடைய கடைசி பாப கர்மா தீருகிற வரை ஒவ்வொருவனும் மறுபடி பிறவி எடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். அதனால் தான் அடுத்த பிறவியைத் தவிர்க்க இந்த பிறவியிலேயே எண்ணத்திலும் வாக்கிலும் செயலிலும் பிறர்க் குதவியாளனாகவே இருக்க முயலவேண்டும். முடிந்ததைச் செய்யலாமே. கொடுக்க கொடுக்கத்தான் வரும். மேலும் மேலும் சேரும். தனக்கென சேர்க்க சேர்க்க அது தன்னை விட்டு அதிகதூரம் விலகும்.

கதைக்குள் செல்வோம்.

சுப்பு சாஸ்திரி எப்பவும் கிருஷ்ணா கிருஷ்ணா என்று போன பிறவியில் நினைத்து இறந்ததும் மேலே கிருஷ்ணனோடு இருந்தவர். அதனால் ''மறுபிறப்பு'' தீர்ப்பு. வந்ததும் ரொம்பவும் வருத்தம்.
கிருஷ்ணனைக் கேட்டார்.
''நான் அவசியம் மறுபடியும் பூவுலகில் குழந்தையாக பிறக்கவேண்டுமா கிருஷ்ணா? ''
'ஆமாம்'' நாள் ஓடியது.
குழந்தை (பழைய சுப்பு சாஸ்திரி) ஒரு வயிற்றில் வளர்ந்தது. பிறக்க வேண்டிய நேரம் வந்தது. அது கேட்டது.''
''நாளைக்கா நான் பிறக்கப்போகிறேன்? இவ்வளவு சின்னக்குழந்தையாக இருக்கிறேனே கிருஷ்ணா, நான் எப்படி வாழ்வேன்?''
''விட்டுவிடுவேனா? ஒரு நல்ல தேவதையை உன்னை ஜாக்ரதையாக பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறேனே?''
''நான் ஏதோ பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இங்கே உன்னோடு இருந்தேனே... எதற்கு எனக்குப்போய்........''
''கவலைப் படாதே. உனக்காக அந்த தேவதையே ஆடும் பாடும் சிரிக்கும். போதுமா?''
குழந்தையாக வளர்ந்து வரும் சுப்பு சாஸ்த்ரியின் கவலை முகத்தில் தெரிந்தது.மெதுவாக கிருஷ்ணனை கேட்டார்.
''எனக்கு பூலோக பாஷை தெரியாதே எப்படி பேசுவேன், புரிந்து கொள்வேன் ?''
''இப்படி உனக்கு கவலை வரும் என்று தெரிந்து தான் அந்த தேவதை உன்னோடு பேசி, பாடி உனக்குப் பேசக் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்''
''மீதி பேரோடு பேசுவது இருக்கட்டும், கிருஷ்ணா, உன்னோடு எப்படிப் பேசுவேன்?''
''உனது ரெண்டு கையும் மனதையும் என்னை நினைத்து ஒன்றாக சேர்த்து வைத்துக்கொள்ள அந்த தேவதை கற்றுக்கொடுக்கும்'. அது தான் என்னோடு பேச சுலப வழி. '
''பூலோகத்தில் கொடூரமான ஆசாமிகள் இருக்கிறார்களாமே. நான் எப்படி பிழைப்பேன்?''
''அந்த தேவதையிடம் இதைப்பற்றியும் சொல்லியிருக்கிறேன். தன் உயிரைக் கொடுத்தாவது உன்னைக் காப்பாற்றும். உனக்கு பயம் ஏன்?''
''கிருஷ்ணா, எனக்கென்னமோ இங்கிருந்து உன்னை விட்டு போக மனமே இல்லை''
''கவலையை விடு. அந்த தேவதை என்னைப்பற்றி உனக்கு ஞாபகப்படுத்திக்கொண்டேயிருக்கும். எப்படி என்னை மீண்டும் சேர்வதென்று சொல்லித்தரும்.''

இப்படி பேச்சு நடக்கும்போது, சுப்பு சாஸ்த்ரி ஒரு குழந்தையாக பிறக்கும் நேரம் வந்துவிட்டது. ஏகப்பட்ட சத்தம் பூமியில் அவர் அவதரித்த வீட்டில் கேட்டது. எல்லோரும் ஆவலாக குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருந்தனர். என்னென்னவோ பேசினார்கள் . அடிக்கடி கடிகாரத்தை பார்த்துக் கொண்டி ருந்தனர்.

.''கிருஷ்ணா நான் பிறக்கும் நேரம் வந்துவிட்டது போல் இருக்கிறது. முக்யமாக கேட்க மறந்து விட்டேனே? அதுசரி, யார் அந்த தேவதை, அதன் பெயர் என்ன?''

''அதன் பெயர் உனக்கு அவசியமில்லை. உலகமுழு தும் அதற்கு ''அம்மா'' என்று தான் பெயர், அம்மா என்று கூப்பிட்டாலே அது ஓடி வந்து உனக்கு சகல பணிவிடைகளும் செய்யும். ஏன், உனக்கு அப்படி கூப்பிடத் தெரியும் முன்னாலேயே கூட, நீ கூப்பிடாமலேயே அது தன்னை உனக்கு அரப்பணிக்கும். ''

சுப்பு சாஸ்திரிக்கு மட்டும் அல்ல, எந்த குழந்தை பிறந்தாலும் அதற்கு அவன் நியமித்த தேவதை தான் அம்மா. அவள் எந்த ரூபத்திலும் இருப்பாள்.



கிருஷ்ணா உனக்கு நன்றி எப்படி சொல்வது?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...