Tuesday, May 14, 2019

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம் J K SIVAN
மஹா பாரதம்
எல்லாம் நானே எதுவும் நானே
இந்த பிரம்மாண்டமான வேலையை துவங்குவதற்கு முன் எனக்கு ஒரு சந்தேகம். பகவத் கீதையை தொடாமல் மஹா பாரதம் எழுதலாமா? ஒரு வரியில் ''யுத்தம் தொடங்குமுன்பு அர்ஜுனன் மதி மயங்கியபோது கிருஷ்ணன் அவனுக்கு பகவத் கீதையை உபதேசித்ததால் அர்ஜுனன் மனம் தெளிவடைந்து யுத்தத்தில் ஈடுபட்டான்''. இப்படி எழுதி விட்டு பாரத கதைக்குள் செல்லலாமா? என்று தோன்றியது. மேலும் ரொம்ப கடினமாக இருக்கிறது என்று எவருமே பகவத் கீதை வரும் பக்கங்களை புரட்டிவிட்டால் எழுதி என்ன பலன்?. கதையை மட்டும் தேடும் அன்னங்கள் ஆயிற்றே நமது வாசகர்கள் என்று ஒரு எண்ணம் தோன்றியது. நன்றாக யோசித்தபின் பகவத் கீதையை தொடாமல் அதை விளக்
காமல் மஹாபாரதம் எழுத முற்படுவது தலை யில்லாமல் ஒரு மனிதனின் சித்திரம் வரைவது போல் அல்லவா ஆகும் என்று மனது உறுதிப்பட்டது. கீதையை நன்றாக கிரஹித்து புரியும்படியாக எளிய நடையில் எழுதேன், அப்போது வாசக நண்பர்கள் நிச்சயம் அதை படிப்பார்கள் புரிந்துகொள்வார்கள் என்று கிருஷ்ணன் உள்ளே என்னை ஊக்குவித்தான். எழுதுகிறேன்.

பகவான் கிருஷ்ணன் அருளாலே பாதிக்கு மேல் பகவத் கீதையை ஓரளவு அறிமுகப் படுத்த முடிந்தது. இன்று ''விபூதி யோகம்'' என்கிற பத்தாவது அத்தியாயம் விளக்கப் படுகிறது. விபூதி யோகத்தில் பகவான் தனது விபூதிகளை (பூசிக்கொள்ளும் சாம்பல் அல்ல) அதாவது பிரபாவங்களை , தத்வங்களை, ரூபங்களை தெளிவாக விளக்குவதாக அமைந்திருப்பது விசேஷமானது. அர்ஜுனனை விளித்து, பகவான் கிருஷ்ணன், அவன் மூலமாக நம்மை '' ப்ரியமாணாய , ஹித காம்யயா '' என்ற அபூர்வ வார்த்தைகளால் வர்ணிக்கிறார். என் மீது நீ கொண்டுள்ள பிரியத்தினால், அன்பினால், பிரேமையினால், நான் உனக்கு ஹிதமாக, நன்மையாக எது விளையுமோ அதை சொல்கிறேன் '' என்று சொல்கிறார்.

ஒரு சாதாரண வஸ்துவிலிருந்து பகவான் வரை அனைத்தை பற்றியுமான உண்மையான அறிவு ம் அதில் அநித்தியமானது எது சாஸ்வதமானது எது என்று அறிவது தான் ஞானம்.

இதற்கிடையில், ஒவ்வொரு அத்யாயம் எழுதும் முன்பு இதுவரை என்ன கற்றோம் என்று பார்க்க வேண்டாமா?

முதல் அத்யாயம் -- மோகத்தை அழித்து ச்வதர்மத்தில் ஈடுபடுவது பற்றி சொல்லப்பட்டது.
இரண்டாம் அத்யாயம் - வாழ்க்கையின் தத்வம், கர்ம யோகம் பற்றி சொன்னார்.
மூன்றாம், நான்காம், ஐந்தாம் அத்யாயங்கள்: - விரிவாக கர்மம், விகர்மம், அகர்மம் ஆகியவை அறிந்தோம். கர்மம் என்றால் ஸ்வதர்மத்தை அனுஷ்டித்தல், அதோடு மனதை ஈடுபடுத்தல், கர்மமும் விகர்மமும் சேர்ந்து செயல் புரிதல் மூலம் சித்தம் தூய்மை பெறுதல். பற்றற்ற அகர்மம் உருவாதல்
ஆறாம் அத்யாயம் : அகர்மத்தை அடைய விகர்மம் எவ்வாறு உதவும் என்பதையும் ஏகாக்ரதைக்கான தியான யோகம் பற்றி விளக்கினோம். இதற்கு பயிற்சி, வைராக்கியம் எப்படி உறுதுணை ஆகும் என்று அறிந்தோம்.
ஏழாம் அத்யாயம் : தூய பக்தி எப்படி இறைவனோடு நம்மை இணைக்கும். பிரபத்தி என்கிற சரணாகதித்வம் பற்றி அறிந்தோம்.
எட்டாவது அத்யாயத்தில் - ஸம்ஸ்காரங்களை பற்றியும் இடைவிடாது சாதனை செய்யவேண்டிய அவசியம் பற்றியும் தெரிந்து கொண்டோம்.
ஒன்பதாவது அத்யாயத்தில் '' ஸர்வம் கிருஷ்ணாரப்பணமஸ்து'' என்று மனோ, வாக்கு, காயத்தால் ஆன கர்மங்கள் யாவையும் அவனுக்கே அர்ப்பணமாக செய்வதான ராஜயோகம் பற்றி அறிந்தோம்.

பத்தாம் அத்யாயம் முழுக்க முழுக்க எப்படி நமது கர்மங்களை கிருஷ்ணனுக்கு உரிமையாக்கலாம், அர்ப்பணம் பண்ணலாம் என்னும் யோகத்தை கற்பிப்பதுடன், என்னை எவ்வாறெல்லாம் சிந்தனை செய்து அறியலாம் என்று ஒரு பெரிய ஜாபிதாவே கொடுக்கிறார் கிருஷ்ணன். ரொம்ப அற்புதமான அத்யாயம் இது.

நாம் எப்படி முதன் முதலில் படிக்கும்போது ''அ'' னா, ''ஆ'' வன்னா'' என்று பெரிய கொட்டை எழுத்துக்களைப் பார்த்து, அதன் மேல் திரும்ப திரும்ப எழுதி தான் பழகினோம். எழுத்தை அறிந்தோம். எழுத்தில் எழுத்துக்களை கூட்டி படித்தோம். அப்பறம் மெதுவாக சேர்த்து படித்தோம். அப்புறம் தானே, சின்ன சின்ன எழுத்துக்களில் நிறைய பக்கங்கள் கொண்ட குண்டு குண்டு புத்தகங்கள் படிக்க முடிந்தது. .

இது போலவே பெரிய மலை, கடல், சூரியன் சந்திரன், மரம், மேகம், ஆகாயம், ப்ரித்வி -- பஞ்ச பூதங்களை - பகவானாக, முன்னோர்கள் அறிந்து பிறகு சூக்ஷ்மமாக அணுவிலும் அவனை கண்டனர். இது ஸ்தூலத்திலிருந்து சூட்சுமத்தில் அவனைக் காண்பது.

மற்றொரு முறை சிறியதிலிருந்து பெரியதை அறிவது. சூக்ஷ்மத்திலிருந்து ஸ்தூலத்தில் காண்பது. சிறிய எழுத்தான தாரக மந்த்ரமான ''ராம'' என்ற இரண்டேழுத்திலிருந்து ராவணன் என்ற கடின பெரிய உருவத்தை அறிவது. பிண்டத்திலிருப்பது தான் அண்டத்திலும் இருப்பது என்று புரிந்து கொள்வது. ராவணன் பெரிய சிவபக்தன். தவ ஸ்ரேஷ்டன். அவனுள்ளும் பரம் பொருள் உறைந்து தான் இருந்தான்.

ஒரு உத்ரணி ஜலத்தில் ஜ்வலிக்கும் சூரியனின் ஒளியிலிருந்து உலகை விட பெரிய சூரியனை அறிகிறோம். சுலபத்திலிருந்து சிக்கலான விஷயத்தை அறிவது. தஹிக்கும் சூரியனை அருகில் நாம் காணமுடியுமா?

தாய் தந்தை குரு அதிதி, தேவாதி தேவன் ஆகியவர்களை முறையே பிறந்தவுடன் அருகில் நெருக்கமான தாயிலிருந்து கடைசியில் அண்டமே உருவான ஆண்டவனாக வணங்க கற்கிறோம். இயற்கையான, நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்று பஞ்ச பூதங்களில் கண்ணுக்கே தெரியாத அந்த இறைவனை அறிகிறோம். சரணடைகிறோம்.

ஸ்ரிஷ்டியில் விலங்குகள், பறவைகள் தாவரங்கள் ஆகியவற்றிடம் பரி பூரண அன்பு பூண்டு அவற்றுள் இயங்கும் ஆண்டவனை அறிகிறோம்.

ஹனுமான், வானர சைன்யம் இல்லாவிடில் ராமன் இல்லை.
பசுக்கள் , கன்றுகள் இல்லையென்றால் கிருஷ்ணன் இல்லை.
ஆதிசேஷன், கருடன் இல்லை என்றால் நாராயணன் இல்லை,
சிறிய மூஞ்சுறு இல்லாவிடில் விக்னேஸ்வரர் இல்லையே.

இதன் மூலம் அறிவது என்னவென்றால் சிறியதிலும் சிறியதாக பெரியதிலும் பெரிதாக நான் இருக்கிறேன் என்று பகவான் உணர்த்துவதை, எல்லா உயிரிலும் நான் உள்ளேன் என்பதைத் தானே. .

''கிருஷ்ணா நீ சொல்வது புரிகிறது. உன் சக்தி தெரிகிறது. என் சிந்தனை செல்லும் இடத்தில் எல்லாம் நீ இருக்கிறாய் என்று நான் உணர நீ எந்தெந்த ஸ்வரூபங்களில் இருக்கிறாய் நான் தியானம் செய்ய என்றும் சொல்லேன்?'' என்று அர்ஜுனன் கேட்கும்போது தான் கிருஷ்ணன் மிக அழகாக சில உதாரணங்களை சொல்கிறார். சுருக்கமாக அதைப் பார்க்கலாமா?

''இதோ பார் அர்ஜுனா, என்னை விவரிக்க இயலாது, விவரித்தாலும் நீ அறிய முடியாது. நான் சில ரூபங்களில் இருப்பதை மட்டும் சொல்கிறேன்.கேள்.

உயிரினங்களில் ஆன்மா நான்.
ஆதியும் முடிவுமானவன்.
அதிதிகளில் விஷ்ணு.
ஒளி தருபவையில் சூரியன்,
வாயுக்களில் தேஜஸ்,
நக்ஷத்ரங்களில் சந்திரன்.
வேதங்களில் சாமவேதம்,
ஐம்புலனில் மனஸ் ,
உயிரினங்களின் சக்தியில் ஞான சக்தி,
ருத்ரர்களில் சிவன்,
செல்வத்தில் குபேரன்,
வசுக்களில் அக்னி,
மலைகளில் சுமேரு,
சேனாபதிகளில் நான் ஸ்கந்தன்,
நீர் நிலைகளில் கடல்,
மகரிஷிகளில் பிருகு,
அக்ஷரங்களில் ஓங்காரம்.
அசையா வஸ்துவில் இமயமலை,
மரங்களில் அரசு,
ரிஷிகளில் நாரதன் ,
கந்தர்வர்களில் சித்ராதன் ,
முநிஸ்வரர்களில் கபிலர்,
குதிரைகளில் உச்சைஸ்ரவஸ்,
யானைகளில் ஐராவதம்,
ஆயுதங்களில் வஜ்ராயுதம்,
பசுக்களில் காமதேனு,
சர்ப்பங்களில் வாசுகி,
நாகங்களில் ஆதிசேஷன்,
நீர் நிலைகளில் வருணன்,
பித்ரு தேவதைகளில் அர்யமான்,
நானே யம தர்மன்,
ராக்ஷச வம்சத்தில் ப்ரஹ்லாதன்,
மிருகங்களில் சிம்ஹம்,
பறவைகளில் கருடன்.
புறத்தூய்மை வஸ்துகளில் காற்று,
ஜலத்தில் வாழ்பவைகளில் முதலை,
நதிகளில் கங்கை,
சகல படைப்புகளுக்கு ஆரம்பம், நடு முடிவு நானே.
வித்தைகளில் ஆத்ம வித்தை ,
எழுத்துகளில் முதல் எழுத்து அகாரம் .
காலத்திற்கு காலமாக, எப்புறமும் முகங்கள் கொண்ட விராட் ஸ்வரூபம்.
தேவிகளில் என்னை கீர்த்தி தேவி, ஸ்ரீ தேவி, வாக் தேவி, மேதா தேவி, த்ருதி தேவி, ஸ்ம்ருதி தேவி, க்ஷமா தேவியாகவும் காணலாம்.
சந்தஸ்களில் நான் காயத்ரி.
காலங்களில் வசந்தம், கலைகளில் ஓவியம் மாதங்களில் மார்கழி, வஞ்சகத்தில் சூது, வெற்றிபெருபவர்களின் வெற்றி,
தீர்மானிக்கிறவர்களில் தீர்மானம்,
விருஷ்ணிகளில் வாசுதேவன்,
பாண்டவர்களில் நீயே தானப்பா நான்,
முனிவர்களில் வியாசர்,
கவிகளில் சுக்ராசார்யார்.
சக்திகளில் நான் அடக்கும் சக்தி, நியாய உணர்வு, மௌனம், தத்வ ஞானம்.

அர்ஜுனா நான் மேலே சொல்லிக்கொண்டே போக முடியாது. அதற்கு முடிவே இல்லை. ஒன்று மட்டும் தெரிந்து கொள். எது சிறப்பானதோ, ஒளி மிகுந்ததோ, சக்தி வாய்ந்ததோ, அது தான் நான். அனைத்துல
கையும் எனது யோக சக்தியின் ஒரு அம்சத்தினால் தாங்கிக்கொண்டு இருப்பவனப்பா நான்.

கிருஷ்ணன் தான் எவ்வாறு இந்த ஜகத்துக்கே நாதன் என்று அர்ஜுனனுக்கு இந்த அத்யாயத்தில் உணர்த்துகிறார். ''ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்'' என்று புரிய வைக்கிறார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...