Wednesday, May 8, 2019

ARUPATHTHU MOOVAR

அறுபத்து மூவர் J K SIVAN
குலச்சிறை நாயனார்
திருநீறு அகற்றிய வெப்புநோய்
பெரிய சிவாலயங்களில் அறுபத்து நாயன்மார் சிலைகள் பிரகாரங்களில் நாம் வழிபட அமைத்திருக்கிறார்கள். நிறைய பேருக்கு அவர்கள் யார் எதற்காக அறுபத்து மூவர்களாக எண்ணப்பட்டு வழிபட வைத்திருக்கிறார்கள். எல்லா சிலைகளும் ஒரே உருவத்தில்,உயரத்தில் நிற்கும்போது பெயர் மட்டும் வித்யாசமாக இருந்தால் போதுமா? யாருக்கு இதை எல்லாம் நின்று பார்த்து படிக்க பொறுமை? நமக்கே இப்படி என்றால் அடுத்த தலைமுறை கோயிலுக்கு போக கூட பொறுமையோ நேரமோ இல்லாத வர்க்கம்.

நான் அறுபத்துமூவர் பற்றி , அவர்கள் வாழ்ந்த ஊர், வழிபட்ட சிவன் ஆலயம் பற்றி விவரங்கள் சேகரித்து எழுதுவதை அநேக நண்பர்கள் விரும்பி படிக்கிறார்கள் என்று அறியும்போது முயற்சி வீணல்ல, அவர்களில் சிலராவது அடுத்த தலைமுறைக்கு எடுத்து கதையாக சொல்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

புதுக்கோட்டையில் 60 கிமீ. தூரத்தில் மணமேற்குடி என்று ஒரு கிராமம். அங்கே ஜெகதீஸ்வரர் என்ற பெயரில் சிவபெருமான் ஆலயம் உள்ளது. அம்பாள் பெயர் ஜெகத்ரக்ஷகி. உலகை காப்பவள்.

குலச்சிறை என்பவர் அந்த ஊர் தலைவர். சமண மதம் பின்பற்றிய நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னனின் முதலமைச்சர் . குலச்சிறை சிவபக்தி மிக்கவர். சிவனடியார்கள் நம்மை முக்தி அடையச் செய்பவர்கள் என்று எல்லோரையும் கண்டால் வணங்கி உபசரிப்பவர். . இவரைப் பற்றி சுந்தரமூர்த்தி நாயனார் “பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் சொல்லியதால் தெரிந்தது.

பாண்டிநாட்டில் திருமறைக்காட்டிற்கு திருஞான சம்பந்தர் தரிசனத்துக்கு வருகிறார் என்று ஒருநாள் கேள்விப்பட்டார் குலச்சிறை. பாண்டிய ராஜா மனைவி சிவபக்தை. திருஞானசம்பந்தரை ராணி வரவேற்றார். குலச்சிறை சம்பந்தர் வரும் வழியில் விழுந்து வணங்கினார். ஞான சம்பந்தர் முத்துப் பல்லக்கிலிருந்து இறங்கி இருக்கரங்களாலும் அவரை தூக்கி எழ செய்தார்.

“சென்ற காலத்தின் பழுதிலாத்திறமும் இனி எதிர்காலத்தின் சிறப்பும்இன்று எழுந்தருளப்பெற்ற பேறிதனால் எற்றைக்கும் திருவருடையோம்நன்றியினால் நெறியில் அழுந்திய நாடும் நற்றமிழ்வேந்தனும் உய்ந்துவென்றிகொள் திரு நீற்றொளியினில் விளங்கும் மேன்மையும் படைத்தனம்"
என சம்பந்தர் வாக்கருளினார்.

சைவ சமய குரவர் சம்பந்தரின் வருகை சமணர்களுக்கு எரிச்சலை தந்ததால் அவர் பற்றி எரியூட்டும் என்று சம்பந்தர் தங்கியிருந்த மடத்துக்கு தீ வைத்தார்கள். சம்பந்தர் பதிகம் அந்த தீயை சமண மதம் சார்ந்த மன்னன் பாண்டியனுக்கு வயிற்றில் வெப்பு நோயாக மாற்றி அவனை வாட்டியது. பாண்டியன் மனைவி மங்கையர்க்கரசி சிறந்த சிவ பக்தை என்பதால் குலச்சிறையோடு சிவனடியார்களை வரவேற்று அமுது படைத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தாள்.
சமண வைத்தியர்களால் தீர்க்க முடியாத வெப்பு நோயை சம்பந்தர் தீர்க்க முடியும் என்று நம்பிய பாண்டியன் ராணியையும் மந்திரி குலச்சிறையையும் சம்பந்தர் தங்கிய மடத்திற்கு அனுப்புகிறான்.

'ஒன்றுக்கும் அஞ்சாதீர்' என்று சம்பந்தர் அபயமளிக்கிறார். சம்பந்தரை பல்லக்கிலேற்றி அரண்மனைக்கு அழைத்துவருகிறார் குலச்சிறை. தாங்கமுடியாத வயிற்று வலியுடன் படுத்திருக்கும் பாண்டியன் தலைமாட்டில் அமர்கிறார் சம்பந்தர்.

சமணர்கள் வாதம் செய்கிறார்கள். சைவமதத்தை இழிவு படுத்துகிறார்கள். அனல்வாதம் புனல்வாதம் போன்ற போட்டிகள் நடைபெறுகிறது. புனல் வாதத்தில் சமணர்கள் நூல்கள் நீரில் மூழ்க சம்பந்தர் அளித்த தேவார பாடல்கள் நீரில் மிதந்து அதன் போக்குக்கு எதிர்த்து வருகின்றன. தோற்ற சமணர்களை எட்டாயிரம் பேரை கழுவிலேற்ற பாண்டியன் ஆணையிட, எண்ணாயிரம் சமணர்கள் கழுவேறினார்கள் என்று அறியும்போது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது . அந்த அளவுக்கு
சமணர்களின் நாலடியார் என்னை ஈர்த்துவிட்டது. மிக அற்புதமான பாடல்கள். சில நாலடியார் பாடல்கள் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகப்படுத்தி .இருக்கிறேன். மீண்டும் நாளை கொஞ்சம் நாலடியார் எழுதுகிறேன்.

பாண்டியன் சைவனானான். திருநீரணிந்தான் . வெப்பு நோய் நீங்கியது. சம்பந்தரோடு மதுரை சொக்கனை தரிசித்தான். குலச்சிறை சம்பந்தரை நிழலாக தொடர்ந்து பல சிவாலயங்களை தரிசித்தார். தனது சொந்த ஊரான மணமேற்குடிக்கும் விஜயம் செய்ய வைத்தார். பல காலம் சிவனடியார்க்கு சேவை செய்து, சிவத்தொண்டு புரிந்து சிவனை அடைந்தார் குலச்சிறையார்.
அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவராக நமக்கு அருள் பாலிக்கிறார்.







No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...