Sunday, May 19, 2019

GEETANJALI


கீதாஞ்சலி      J K SIVAN 
ரவீந்திரநாத் தாகூர் 

                                                                           
         
            அவனை  எங்கே  தேடுகிறாய்?

எனக்கு அப்போது  15 வயது.  சென்னை  தியாகராயநகர்  உயர்  நிலைப்பள்ளி மாணவன்.  ஆங்கிலப்பாடம்  நடத்துபவர்  ஸ்ரீ  T .N . சுந்தரம். பள்ளி தலைமை ஆசிரியர்.  LEO''S    என்று ஆங்கிலத்தில் SSLC   பாட த்திற்கு  நோட்ஸ் போடுவார். ரொம்ப பிரபலம்.தமிழில்  கோனார் நோட்ஸ்  போல.     இது  ரெண்டும் இல்லாத SSLC  படிக்கும்  மாணவர்களை அப்போதெல்லாம் பார்க்க முடியாது.  TNS  பஞ்சகச்சம், வெள்ளை முழுக்கை சட்டை. மேலே அங்கவஸ்திரம். வெள்ளையும் கருப்புமாக சிறிது முடி இடது பக்க வகிடு எடுத்து வாரிய தலை. தேன்  கலர்  பிரேம்  போட்ட  கண்ணாடி. சிவந்த மேனி. நெற்றியில் விபூதி.  அடிக்கடி   இடதுகை மணிக்கட்டு பக்கம்  சட்டையை விலக்கி வெள்ளை நிற  கைக் கடிகாரத்தில்  மணி பார்க்கும் பழக்கம்.  அவர் சொல்லிக்கொடுத்த  ரெண்டு ஆங்கில  கவிதைகள் இன்றும் நினைவிருக்கிறது.  ஒன்று  ரபீந்திர நாத் தாகூரின்  11 வது கீதாஞ்சலி பாடல். அதை தான் கீழே  கொடுத்திருக்கிறேன்.  மற்றொன்று  LEAD KINDLY  LIGHT  என்ற ஹென்றி நியூமன் எழுதிய பாடல்.  அதை அப்புறம் எழுதுகிறேன்.இப்போது தாகூர்:  

11   Leave this chanting  and singing and telling of beads.
Whom dost thou worship in this lonely dark corner of a temple with doors all shut?
Open thine eyes and see thy God is not before thee.
He is there where the tiller is tilling the hard ground
And where  the path maker is breaking the stones
He is with themIn sun and in shower, and his garment is covered with dust
Put off they holy mantle and  even like him come down  On the dusty soil
Deliverance? Where is this deliverance to be found?
Our Master himself has joylfully taken upon him the bonds of creation;
he is bound with us all for ever.
Come out of thy meditations and leave aside thy flowers and incense!
Wlhat harm is there if thy clothes become tattered and stained?
Meet him and stand by him  in toil and in sweat of thy brow.

எங்கோ ஒரு மூலையில்   சுவரோரம்  கண்ணை மூடிக்கொண்டு  அமர்ந்திருக்கிறாய்.  இருட்டு உனக்கு  சௌகர்யம்.  கோவிலில் நீ  இல்லையென்றால் உன் வீட்டின் பூஜை  அறை   கதவை சார்த்தி க்கொண்டு உள்ளே  கண்ணை மூடிக்கொண்டு இருப்பாய்.    உன்  கையில்  ஒரு ஜெபமாலை. ஸ்படிக மணிகள் உருளும்.   ஒரு நாமத்திற்கு  ஒன்று  என்று ஜபித்து   ஒவ்வொரு மணியையும் உருட்டுகிறாய்.  கைதட்டி  பாடுகிறாய்.   ஆமாம் இதெல்லாம்  யாரை எதிர்பார்த்து, வேண்டி,  நீ தொழுகிறாய்?  கொஞ்சம் கண்ணை திறந்து சுற்றிலும் பார். நீ தேடிய கடவுள் கண்ணுக்கு தெரிகிறாரா? அவரைப் பார்க்கவேண்டுமா. எழுந்திரு . வா  வாசல் பக்கம்.  வந்தாயா வெளியே  பார்  தெருவில்  என்ன பார்க்கிறாய்?  கோடை வெயில் கொளுத்த,  உச்சி வெயிலில் காலில் கோணியை சுற்றிக்கொண்டு தலையை கிழிசல் துணியால் மறைத்துக் கொண்டு,  கொதிக்கும் தார் பக்கெட்   தூக்கிக்கொண்டு ஒருவன்  மற்றவர்கள் சீராக  பாவிய கருங்கல் மேல் ஊற்றுகிறானே. கருப்பு  குழம்பாக  அது பரவுகிறது கொஞ்சம் உன் மேல் பட்டாலே போதும். அடுத்த ஜென்மம் வரை வடு மறையாது உங்கள் மண் தெரு  தார் போட்ட மழமழ  ரோடு  ஆகவேண்டாமா?    அதற்காக கருங்கல்களை ஒரு பக்கம் சிறிதாக உடைத்துக்   கொண்டு இருக்கும்   சிறிதும் பெரிதுமாக  முக்காடிட்ட பெண்கள் தெரிகிறார்களா?  அவர்களோடு  சிறு குழந்தைகளும் கல் உடைப்பதை பார்த்தாயா இல்லையா?  ஊர் ரெண்டு பக்கமும் சத்தம் கேட்கிறதா?  ஹை ஹை என்று மாட்டை விரட்டிக்கொண்டு கோவணத்தோடு  வயலில் ஏர் உழுபவன், நாற்று நடும்  பெண்கள், வரப்பு ஓரத்தில் அமர்ந்திருக்கும்  எண்ணெய்  காணாத சிக்கு பிடித்த தலை முடியோடு உடையற்ற குழந்தைகள்----- இவர்களும் தெரிகிறார்களா?  

இவர்கள் அத்தனைபேரும்  வெயில் மழை என்று பார்க்காமல்  வெயிலில் வாடியும், மழையில் நனைந்தும் குளிரில் நடுங்கியும்  வேலை செய்பவர்கள். உடலெல்லாம் மண், தூசி, காயம். அங்கே தான் நீ தேடிய கண்ணன் இருக்கிறான். அவர்களில் ஒருவனோ, அத்தனைபேருமோ அவன் தான். 

சரி, ஒரு சின்ன  அறிவுரை.   உன்  தூய வழி பாடு போதும்.  நீ  எவனை நாடி உன் வேண்டுதலை எல்லாம் தனிமையில், சௌகர்யமாக  வீட்டிலோ கோவிலிலோ சொகுசாக தேடினாயோ, அவன் சொகுசு இல்லாமல், வெயில் மழை, குளிர் பாராமல், ஏழைகளோடு ஏழையாக கிழிஸல் கந்தை உடுத்து, மண்ணிலும்  சேற்றிலும்  உழன்று அழுக்காக அல்லவோ காட்சி தருகிறான். நீயும் அவனை அங்கே  தேடிச்சென்று தரிசிக்கலாமே .  

முக்தியாமே?  அதை எங்கே  அடைவது? பிறப்பு இறப்பு இல்லாமல் தானே முக்தி கிடைக்கும். ஆனால் முக்தி கொடுப்பவன் சந்தோஷமாக  பிறப்பையும் ஏழ்மையையும் தேடி  அங்கே  காண்கிறானே. அங்கு மட்டும் இல்லை, எங்குமே, நம்மோடு  இணைந்து பிணைக்கப்
பட்டு  காண்கிறானே .  

கொஞ்சம் உன் மந்திர தந்திரத்தை நிறுத்தி மூட்டை கட்டி வைத்துவிட்டு வா. நீ அவனுக்காக கொண்டுவந்து  சேர்த்த ஊதுபத்தி, சாம்பிராணி, வாசனை   திரவியங்கள் அங்கேயே   அப்படியே இருக்கட்டுமே.   வெயிலில் காட்டில் மேட்டில், கழனியில்,  சேறாகி , கிழிந்து உன் ஆடை கொஞ்சம் வீணானால் என்னப்பா?  இறைவனை  நாடி,  தேடி செல்லும்போது இது தானா முக்கியம்?  அதோ பார்   அவனை.  எப்படி நெற்றி வியர்க்க, அழுக்காக, வேலை செயகிறான். தனக்காக அல்ல, பிறருக்காக, அவனருகே நில், தோளோடு  தோள் கொடு. அந்த சேவையின் இனிமையில் பங்கு கொள் .




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...