Sunday, May 19, 2019

ANDAVAN PICHAI

ஆண்டவன் பிச்சை       J K SIVAN 

                                                                                                     
                   அபய முத்திரை ஆசீர்வாதம்
ஆண்டவன் பிச்சை என்று  பிற்காலத்தில் மாறிவிட்ட  மரகதத்தம்மாள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்  ஆலயம் சென்றபோது ,  இரவு ஆலய கதவுகள் சாற்றி விட்டபோதிலும் அவள் உள்ளே சென்றிருந்தாள் . அருணாச்சலேஸ்வரர்  தரிசனம் கிடைத்தது.  அவளுக்கு  தண்டபாணி என்கிற இளம்  அர்ச்சகர் அம்பாள் சந்நிதி கதவை திறந்து அர்ச்சனை செயது பிரசாதம் கொடுத்தான். ஒரு ஓட்டைக் காலணா தக்ஷிணையாக வாங்கிக்கொண்டான். மறுநாள் சந்திப்போம் என்று சொன்னான். மறுநாள் அர்ச்சகர்கள் மரகதத்தை பார்த்து கேலியாக சிரித்தார்கள். எப்படி நேற்றிரவு உங்களுக்கு தரிசனம் கிடைத்திருக்க முடியும். நாங்கள் தான் எல்லா சந்நிதிகளும் பூட்டி சாவி எடுத்துக் கொண்டு சென்றுவிட்டோமே.  மேலும்  எங்கள் குடும்பத்தில் தண்டபாணி என்கிற சிறுவன் அர்ச்சகராக என்றும் இல்லை, என சொல்லி விட்டார்கள்  அல்லவா.

மறுநாள் திங்கட்கிழமை.   மரகதம் அம்மாளும் மற்ற உறவினர்களும்  திருவண்ணாமலையில்  ரமணாஸ்ரமம் சென்றார்கள். அன்று பிரதோஷம். ரமணரை தரிசிக்க  நல்ல கூட்டம்.  மரகத்துக்கு  பரம சந்தோஷம். முதல்  முதலாக ரமணாஸ்ரமம் வந்து ரமணரை தரிசிக்கும் பாக்யம் வேறு. ஆனால்,   என்னவோ  இந்த இடம் புதிதில்லை, ஏற்கனவே பழக்கமான இடமாக  அல்லவோ  அவள் மனதில் தோன்றியது. அருகில் இருந்தவர்கள் எல்லோரையும் மறந்தாள் . தன்னை மறந்தாள் . அவள் ஐம்புலன்கள் சக்தி இழந்தன.  எதிரே தூரத்தில் ஒரு  சாய்வு நாற்காலியில்  ரமணர் படுத்திருக்கிறார். அது மட்டும்  தான்  தெரிகிறது. அவர் கண்களும் மூடி இருக்கிறது. முகத்தில் ஒரு பேரொளி.  உடல்நோயின் வலி கொஞ்சமும் தெரியவில்லை அவருக்கு. எங்கோ  காற்றில்  ஆனந்தமாக மரகதம்  விண்வெளியில் இறக்கை அடித்து பறக்கிறாள் .   பக்தர்கள் கூட்டம்  வரிசையாக,  மெதுவாக பகவான் ரமண ரிஷியை நெருங்கியது. மரகதமும் நகர்ந்து பகவான் அருகே வந்துவிட்டாள் அவள் மயக்கம் தெளிந்தது. ஒரு அதிர்ச்சி.  உடல் முழுதும் கிடுகிடுவென்று  நடுங்கியது. இதயம் படபடவென்று வேகமாக துடித்தது. தன்னையறியாமல் அவர் எதிரே விழுந்து வணங்கினாள். தலை நிமிர்ந்து மகரிஷியை பார்த்தாள். மஹரிஷியின் கண்கள் அவள் கண்களை சோதித்தன. கருணை வெள்ளம் பாய்ந்தது. ஒரு கணம் மின்னொளி போன்று ஒரு வெளிச்சம் அவர் கண்களிலிருந்து தெறித்து வெளியேறி அவளை  விழுங்கியது.  ஆஹா  என்ன அற்புதம், என்ன பாக்யம் மரகதத்துக்கு.   மஹரிஷி  நயன தீக்ஷை அளித்துவிட்டார் அவளுக்கு.   அந்த ஒளி  ஷடாக்ஷரி மந்த்ரத்தை அவளுக்கு  உபதேசித்தது. ''ஓம்  சரவண பவா''.  அவளை ஊடுருவி சென்று அவள் ஆத்மாவில் புதைந்தது.  அவளிடமிருந்து  அஞ்ஞான இருள் விலகியது.  மஹாவாக்ய அர்த்தம் தெளிவானது.  ''நான்  யார் '' புரிந்தது. ஜீவனின் ஆத்மா  பரமாத்மாவுடன் ஒன்று சேர்ந்தது. நானே  எல்லாம்,எல்லாம் நானே.  கண்கள் இருந்தன. உடல்  முத்து முத்தாக வியர்த்தது.  அண்ட சராசரம் வேகமாக சுழன்றது.  அருகில் இருந்தவர்கள் ஏதோ சாவி கொடுத்தால் அசைகின்ற பொம்மைகளாக கண்டாள் . கூட வந்தவர்கள் கொண்டுவந்திருந்த  திராக்ஷை பழத்தை மகரிஷி முன்  வைத்தது தெரிந்தது.  அவள் ஆகாயத்தில் இருந்து எல்லோரையும் பார்ப்பது போல் இருந்தது. 

மகரிஷி சாதாரணமாக எல்லோரிடமும் சிரித்து பேசும் நிலையில் அப்போது இருந்தார். 
மரகதத்தை பார்த்து  ஒரே கேள்வி   ''என்ன,  தண்டபாணி  தரிசனம்  கிடைச்சுதா?''  கூட வந்தவர்கள்  முதல் நாள் இரவு கண்ட  அர்ச்சக பையன் தண்டபாணியை பற்றி சொல்கிறாரோ என்று வியந்தார்கள்.அர்ச்சகப்பையன் வேறு யாருமில்லை, கம்பத்திளையனார் முருகன் என்று உணர்த்துகிறாரோ?
அடுத்த கணமே  மரகதம் கொண்டுவந்த திராக்ஷைகளை கையால் சுட்டிக்காட்டி, ''இந்த த்ராக்ஷையை இந்த தேகத்துக்கு ரொம்ப பிடிக்கும் '' என சொல்லி ஒரு திராக்ஷை பழத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். மற்றவைகளை  அருகே இருந்தவர்களுக்கு  பிரசாதமாக விநியோகித்தார். 

மகரிஷி ஷடாக்ஷரி மந்திரத்தை மரகதத்துக்கு  உபதேசித்தது  அவளது ஊழ்வினைப் பயன். அவளுடைய அனுபவம் நினைவுக்கு வந்தது.  எப்போதாவது மஹான்கள் முன்னிலையில் அவள் தரிசித்து நின்றால்  இதே மந்த்ர உபதேச அனுபவம் ஏற்பட்டதை  உணர்ந்தாள். ஆம், இதுவரை ஆறு முறை நடந்திருக்கிறது. இந்த தடவை விசேஷமாக  நேருக்கு நேராக  நயன தீக்ஷை அனுபவம்.

தரிசனம் முடிந்தது. திருவண்ணாமலையை விட்டு கிளம்பினார்கள்.  ரெண்டு வாரத்தில் மீண்டும்  மரகதம் திருவண்ணாமலை வந்தாள் . பகவான் ரமணர் உடல்நலம் மிகவும் சீரழிந்திருந்தது.  ரெண்டாவது தரிசன பாக்யம்.

12.4.1950 அன்று.  ரொம்ப கவலைக்கிடமாக  இருக்கிறது மஹரிஷியின் உடல் நிலை என்று பக்தர்கள் அவரை தரிசிக்க வந்திருந்தார்கள்.  இடது புஜத்திற்கு கீழே  பெரிய கட்டு போட்டிருந்தார்கள். ஆபரேஷன் பண்ணி இருந்தது. பக்த கோடிகள்  அவரை சிரமப்படுத்தாமல் ஒரு சில வினாடிகள்  மட்டுமே அருகே நிற்க   அனுமதிக்கப்பட்டனர். மரகதத்தின் முறை வந்தபோது ஒரு வினாடி அவரை நமஸ்கரித்தாள். அவள் கையில்  ரமணாஸ்ரமத்தில் வாங்கிய  ரமணரின் சிறிய படம் ஒன்று. படத்தை எங்கே   வைத்துவிட்டு நமஸ்கரிப்பது என்று யோசிக்கும்போதே  மஹரிஷி வலது கையால் அந்த படத்தை வாங்கிக் கொண்டார். நமஸ்கரித்து விட்டு எழுந்தாள். சிரித்துக்  கொண்டது படத்தை வலது கையால் அவளிடம் அளித்து கையை  தூக்கி அபய முத்திரை ஆசீர்வாதம் செய்தார்.  மஹரிஷியோடு பேசமுடியவில்லையே என்ற வருத்தம். என்ன செய்வது.  அதுவே அவளுக்கு அவர் அளித்த கடைசி தரிசனம்.  ரெண்டு நாள் கழித்து  உலகமே சோகத்தில் ஆழ்ந்தது.  மகரிஷி மறைந்துவிட்டார்.மஹாசமாதி   அடைந்துவிட்டார்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...