Thursday, May 16, 2019

OURANGZEB

சரித்திரம் ஞாபகம் உண்டா ?
J K SIVAN

நமது நாட்டுக்கு அடுத்த தலைவர் யார் ?
நாம் ஜனநாயக வாதிகள். அமைதியான குடிமக்கள். எண்ணற்றவர் நமக்கு தலைவர்களாக துடிக்கிறார்கள். யாரை தேர்ந்தெடுக்க போகிறோம். எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவரவர் அமைதியாக தமக்கு பிடித்த, பொருத்தமான, நேர்மையான, நம்பிக்கை நக்ஷத்ரமாக யாரை தேர்ந்தெடுக்க வேண்டுமோ அதைச்செய்ய விடமாட்டேன் என்கிறார்களே.

''வனை ஆதரிக்காதே, அவனை வீட்டுக்கு போகச் சொல். அவன் அயோக்கியன். இவன் தான் உண்மையில் நாட்டுப் பற்று கொண்டவன் என்று என்னென்னவோ மாதக்கணக்கில் காதில் நாராசமாக கெட்டவார்த்தைகளோடு ஆறுமாதத்திற்கு மேலாக நம்மை அமைதி இழக்க செய்கிறார்கள். எதற்கு இன்னொருவர் உபதேசம்? காசு வாங்கி கடமையை செய்வதாக உரிமையை இழப்பவனை பற்றி பேச்சு வேண்டாம். அவன் வேறு ரகம். இன்னும் பத்து நாளுக்குள் தானாகவே தெரிந்துவிடும். ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன நான் என்றும் கஷ்டப்படத்தானே போகிறேன் என்று இருப்போர் தான் அதிகம். நொந்துபோனவர்கள் அனுபவசாலிகள்

இதற்கிடையில் நேரம் கிடைத்தபோது கொஞ்சம் சரித்திரம் படித்தேன். அதை சுருக்கமாக சொல்கிறேன்.

இந்த பாரத தேசத்தை எத்தனையோ மதத்தினர் ஆண்டிருக்கிறார்கள். மக்கள் ஆனந்தமாக வாழ்ந்ததை விட அவலமாக அவதிப்பட்ட காலம் தான் அதிகம். என்ன நடக்குமோ, ,எப்போது எந்த பேராபத்து நிகழுமோ என்ற பயத்திலேயே செத்துப் பிழைத்தவர்கள் நமது முன்னோர்கள். தெய்வ பலம் ஒன்றே அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டியது. அப்படி நமது நாட்டை ஆண்டவர்களில் ஒருவன் 16ம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட முகலாய மன்னன் ஒளரங்கசீப். இந்திய சரித்திரத்தில் ரத்தக்கறை படிந்த பக்கங்களை தனதாக்கிக் கொண்டவன். அவன் ஹிந்துக்களை நடத்திய விதம், தக்ஷிணத்தின் மீது தொடுத்த போர், ராஜபுத்ரர்களோடு சீக்கியர்களோடு, மராத்தியர்களோடு புரிந்த யுத்தம், எத்தனையோ ரத்த ஆறுகளை தோற்றுவித்தது.

அவன் தந்தை ஷாஜஹான் காலத்தில் ஹிந்து அதிகாரிகள் 5000 த்துக்கு மேல் இருக்கவில்லை.
அக்பர் காலத்தில் நிறைய ஹிந்துக்கள் உயர் பதவியில் இருந்தார்கள்.
ஜஹாங்கிர் ஷாஜஹான் காலத்திலேயே ஹிந்து ஆலயங்கள் நொறுக்கப்பட்டன என்றாலும் ஹிந்து த்வேஷம் அவ்வளவு மோசமாக இல்லை.
ஜிஸியா வரி விதிக்கப்பட்டதற்கு ஒப்புக்கொள்ளப்படும்படியான காரணம் இல்லை. வரி கட்டவேண்டும். அவ்வளவு தான். ஹிந்து கோவில்கள் கட்ட அனுமதி இல்லை. இருந்த ஆலயங்கள் இடிக்கப்பட்டன. சீக்கியர்களும் மராத்தியர்களும் பொங்கி எழுந்து எதிர்த்தனர் . பீஜப்பூர் கோல்கொண்டா சுல்தான்கள் ஷியா வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் ஒளரங்கசீப் அவர்கள் மேல் போர் தொடுத்தான் என்று ஒரு குற்றச்சாட்டு.

24.10.1618 ஜஹாங்கிர் தக்ஷிண பிரதேசத்தில் மாலிக் அம்பர் என்பவனை தோற்கடித்துவிட்டு ஆக்ரா கோட்டைக்கு திரும்பிக்கொண்டிருந்த போது ஒரு குதிரை வீரன், ஜஹாங்கீரின் மகன் ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் மஹால் ஒரு ஆண் குழந்தை பெற்றாள் என்ற சேதி கொண்டுவந்தான். ஷாஜஹான் குல வழக்கத்தின் படி ஆயிரம் பொற்காசுகளை அரசன் ஜஹாங்கீருக்கு வழங்கினான். குழந்தைக்கு அவுரங்கசீப் (சக்ரவர்த்தியின் கிரீடத்தில் முத்து) என்று பெயர் சூட்டினான். நூர்ஜஹானின் கொடுமையில் ஷாஜஹான் வங்காளம், ஒரிசா, தக்ஷிணம் என்று அகதியாக ஓடினான். அவன் மனைவி மும்தாஜ், குழந்தைகள் அவனோடு சென்றனர். கடைசியில் அடிபணிந்தான் . ஜஹாங்கிர், அவுரங்கசீப், தத்தா , ஆகிய இருவரையும் பிணைக் கைதிகளாக பிடித்து லாஹூருக்கு கொண்டுவந்தான். இருவரையும் லாஹூர் நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். இதற்கிடையில் ஜஹாங்கீர் மரணமடைந்தான். இரு குழந்தைகளும் ஆக்ரா கொண்டு செல்லப்பட்டு மும்தாஜ் மஹலிடம் வளர்ந்தனர்.

28.5.1633 அன்று காலை ஒரு அதிசயம். ரெண்டு யானைகளின் சண்டையை ஆக்ராவில் அரண்மனை மண்டப மைதானத்தில் அரச குடும்பம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு யானை மதம்பிடித்து அவர்கள் பக்கம் ஓடிவந்தது. எல்லோரும் ஓட ஒளரங்கசீப் மட்டும் அங்கிருந்து நகரவில்லை. தனது ஈட்டியை வீசி யானையை தாக்கினான். பிறகு வாளை உருவி அதை வெட்ட முயன்றபோது மற்றவர்களும் வந்து உதவ யானை ஓடிவிட்டது. அவனது திட மனது, தைர்யம், எல்லோருக்கும் புலப்பட்டது. பின்னர் வளர்ந்ததும் முகலாய தளபதியாக அவன் தக்ஷிணம், பீஜப்பூர் ஆகிய இடங்களுக்கு சென்று கலகங்களை ஒடுக்கினான்.

அப்போது தான் (செப்டம்பர் 1657ல் ) தந்தை ஷாஜஹான் நோய்வாய் பட்டு ஆக்ராவில் படுக்கையில் இருக்கும் செய்தி வந்தது. சகோதரர்களுக்குள் அடுத்த வாரிசாக ராஜ்யத்தை ஆளப் போவது யார்? என்ற போட்டி தலை தூக்கியது. ஜனநாயகம் இல்லா காலத்தில் அரசனுக்கு அப்புறம் அடுத்த ராஜா அவன் பிள்ளை தான். யாருக்குமே அவனது ஆளும் தகுதி பற்றி கவலையே கிடையாது. அது இன்றும் நம் தலைவர்களிடையே இருப்பதால் தான் நமக்கு ஏகப்பட்ட ரகளை! வாரிசுகளிடையே நான் தான் அடுத்தது என்ற தகராறு அதை வெளியே அதிகமாக்குகிறது.

முகலாய வம்சத்தில் எவனுக்கு படைபலம் அதிகமோ அவன் மற்றவர்களை வீழ்த்தி அரசனாக தன்னை சிம்மாசனத்தில் அமர்த்திக்கொள்வது வழக்கம் என்று சரித்திர பக்கங்கள் சொல்கிறது.

பாபர் என்ற அந்நியன் 1526ல் பானிப்பட்டில் போரில் வென்று ராஜாவானான். ஆண்டவன் அவனுக்கு அதிக காலம் ஆயுசு போடவில்லை.மடிந்தான்.அவனுக்கு ரெண்டு பிள்ளைகள் ஹுமாயுன், கம்ரான் மீர்சா. அடுத்த ராஜாவாக ஹுமாயூன் பதவி ஏற்பதை கம்ரான் விரும்புவானா? கம்ரான் கண்களை குருடாக்க அரசாங்க உத்தரவு. குருடன் கம்ரான் மெக்காவுக்கு செல்கிறான். அங்கே மறைகிறான். ஹுமாயுன் எப்படியோ எதிர்ப்புகளை சமாளித்து ராஜாவாக பத்து வருஷம் காலம் ஓட்டினான். ஷெர்ஷா சூரியின் படைகள் முற்றுகையிட்டு ஹுமாயுன் தோற்று இப்போது ஈரான் எனப்படும் பாரசீகத்துக்கு தப்பி ஓடுகிறான். பதினைந்து வருஷங்கள் கழித்து நாடாளும் ஆசை மீண்டும் வலுக்க ஷெர்ஷா சூரியை எதிர்க்கிறான். அவனுக்கு அக்பர் மகனாக பிறந்து ஷெர்ஷா சூரியை பானிபட் போரில் வெல்கிறான். ஆட்சியை கைப்பற்றுகிறான்.

பிறகு அக்பர் மகன் சலீம் ஜஹாங்கீராகிறான். ஆட்சியைப் பிடிக்க அப்பன் அக்பரோடு மகன் ஜஹாங்கீர் மோதுகிறான். தோற்கிறான். ஜஹாங்கீர் ஒரு ஹிந்து பெண்ணை ஜோதாபாய் என்பவளை மனக்கிறான். குஸ்ரு என்ற அவன் பிள்ளை தான் பின்னால் ஷாஜஹானாகிறான். ஒரு விஷயம் தெரியுமா? அக்பர் சக்ரவர்த்தி மறைந்தபின், ஒரு கூட்டம் அக்பர் பேரன் ஷாஜஹானை அடுத்த அரசனாக்க முயல்கிறது. அக்பர் மகன் ஜஹாங்கீர் வாரிசாக இருக்கும்போதே இப்படி ஒரு சதி திட்டம். இது ஜஹாங்கீருக்கு தெரிந்ததும் தனது மகன் ஷாஜஹானை சிறையில் அடைக்கிறான்.

ஜஹாங்கீரும் அக்பர் உயிருடன் இருக்கும்போது ராஜாவாக சதி செய்தவன் தான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையாதா? பிற்பாடு ஷாஜஹான் அப்பன் ஜஹாங்கீரை சிறையில் அடைக்கிறான் . அதே கதை ஷாஜஹா
னுக்கும் நேருகிறது. தன்னுடைய சகோதரர்கள் தேவார் பக்ஷ், ஷாரியர் இருவரையும் தவிர நெருங்கிய உறவினன் தமூரெஸ் என்பவனையும் தீர்த்துக் கட்டுகிறான் ஷாஜஹான். அப்பாடா, இனி எவனும் போட்டிக்கு வரமாட்டானே!

ஒளரங்கசீப்புக்கு இந்த குடும்ப பாரம்பரிய பழக்கம் எல்லாம் தெரியாதா? ஷாஜஹான் உடல்நிலை சரியில்லை, விரைவில் போய்விடுவான் என்று தெரியும்போது அடுத்து நாம் பட்டத்துக்கு வந்து ஆளவேண்டும் என்கிற ''நேர்மையான'' ஆசை இருக்காதா? ஷாஜஹானின் மற்ற பிள்ளைகள்,தாரா, ஷூஜா, முராத், ஒளரங்கசீப்புக்கு மூத்தவர்கள். ஒளரங்கசீப் நன்றாக படிப்பான்.புத்திசாலி. பார்ப்பதற்கு அமைதியாக இருப்பான். மன உறுதி கொண்டவன். ஷாஜஹானுக்கு தாரா மீது தனி பாசம் அன்பு. இது ஒளரங்கசீபுக்கு தெரியும்.

தக்ஷிண பிரதேசத்துக்கு அதிகாரியாக அனுப்பப்பட்டவன், எட்டு வருஷங்கள் (1636-1644) கழித்து ஆக்ரா திரும்புகிறான். மீண்டும் குஜராத் பிரதேசத்துக்கு அனுப்பப்படுகிறான். அப்புறம் அங்கிருந்து 1648ல் கவர்னராக நியமனம் செய்யப்பட்டு மூல்தான் போகிறான். அரசாங்கத்துக்கு சேரவேண்டிய பணத்தை அவுரங்கசீப் அபகரிக்கிறான் என்று சேதி ஷாஜஹானிடம் போகிறது. விளக்கம் கேட்ட அரசனுக்கு ஒளரங்கசீப் கடிதம் எழுதுகிறான்:

''மகாராஜாவுக்கு என் மீது கோபமும் அருவருப்பும் ஏன்? எனக்கு சேரவேண்டியதை தந்தாகிவிட்டது என்கிறார். இங்கே நான் வெள்ளம், புயல் அவற்றால் உண்டான சீர்கேடுகளை சமாளித்து படைகளுக்கும் உணவளித்து பாதுக்காக்கிறேன். எனக்கு நகையோ, ஆபரணமோ, பெருமையோ வேண்டாம். மற்ற இளவரசர்கள்போல் அதில் எல்லாம் எனக்கு ஆசையில்லை. கிடைத்த பணத்தை படைகளை ஒற்றுமையோடு சீர் குலையாமல் பாதுகாப்பதில் செலவழிக்கிறேன். 5,000 குதிரைப்படை வீரர்களை பராமரிக்க வேண்டும். பத்துமாத சம்பளம் அவர்களுக்கு கொடுக்கவே சேமிப்பு இல்லை. ஆறு ஏழு மாதத்துக்கு தான் தாக்குப்பிடிக்க முடியும். எப்படி நான் தங்க மொஹாராக்களை வீரர்களுக்கு வாரி வழங்கமுடியும்?எப்படியோ ஒருவழியாக அவ்வப்போது அவர்களுக்கு வேண்டியதை கொடுத்து சமாளிக்கிறேன். ரொம்ப நாள் தாக்கு பிடிக்க முடியாது''
அப்புறம் என்னென்ன செய்தான்?



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...