Sunday, September 11, 2022

SRINGERI SARADHA PEETAM



 ஸ்ருங்கேரி ரகசியம்  -   நங்கநல்லூர் J K  SIVAN 


ஆதி சங்கரருக்கு  அப்போதே  தெரிந்து விட்டது.  அவசியம்  நான்கு மடங்கள் நாலா பக்கங்களிலும் தோற்றுவிக்க வேண்டும். நம்மவர்களுக்கு மறதி ஜாஸ்தி. ஆகவே  யாராவது எப்போவும்  அரைத்தூக்கத்திலிருந்து அவர்களை எழுப்பி விட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.  

சங்கரன்  என்ற  உருவில்  வடக்குநாத  ஈஸ்வரர்,   ஆரியம்பா  சிவகுரு  தம்பதியரின்   மண்டல விரதத்திற்கு  பரிசாக  தானே புத்ரனாக  அவதரித்தது  தெரிந்த கதை.   காலடி  என்கிற  கிராமத்தில்  அவர்   பிறந்தார். 7-8வயதிலேயே  சந்நியாசம் பெற்று இந்திய  க்ஷேத்ரங்கள்  பூரா  கால்  நடையாகவே  சென்று  ஷண்மத  ஸ்தாபிதம் செய்தும்,  4 சங்கர மடங்களை/பீடங்களை    நிறுவியதும்  தெரிந்தது.   சங்கரர்  தனது  திக் விஜயத்தில்  சென்ற இடமெல்லாம்  வேத சாஸ்திர  விற்பன்னர்களோடு  வாதாடி  வென்று   அத்வைத ஸ்தாபனம்    செய்தவர்.

800ம்  வருஷம்  சங்கரர் சாரதா பீடத்தை  சிருங்கேரியில் ஸ்தாபித்தார்.  துவாரகா பீடத்தை  குஜராத்திலும், கோவர்தன பீடத்தை  ஒரிஸ்ஸாவிலும், ஜ்யோதிர்மடத்தை  வடக்கே பதரி ,  உத்தரகாண்டிலும் உருவாக்கினார். சரியான  பொறுப்புள்ளவர்களாக அந்தந்த மடத்தை நிர்வாகிக்க  தேர்ந்தெடுத்தார். தன்னுடைய  சிஷ்யர்கள்  ஹஸ்தாமலகரை  ''நீ  துவாரகா மடத்தை பார்த்துக்கொள்'' என்று நியமித்தவர்  தோடகாச்சார்யார் தான் பதரி ஜோதிர்மடத்துக்கு பொறுப்பு என விட்டார்.  பத்மபாதர் பூரி, ஒரிஸ்ஸாவுக்கு சென்றபோது சுரேஸ்வரரை  (மண்டன மிஸ்ரர் என்றும் பெயர்)  ஸ்ரிங்கேரிக்கு  அனுப்பினார்.   பொது ஜனங்களுக்கு  குருவாக பணியாற்ற அவர்களுக்கு ஜகத் குரு என்று பாரம்பரியமாக  பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 

சிருங்கேரி மடம் அமைந்துள்ள இடம் மிக அழகான இயற்கை வளம் நிரம்பிய மேற்கு தொடர்ச்சி மலைகளின்  சூழலில்.  சிக்மகளூர் ஜில்லாவில்  துங்கா  நதிக்கரையில் கண்கொள்ளா அபூர்வமாக உள்ளது.  அங்கே ரெண்டு பெரிய கோயில்கள்.  வித்யா சங்கரலிங்க  சிவாலயம்.  சாரதா அம்பாள்  சரஸ்வதி ஆலயம். சிவன் கோவில்  1338ல்  விஜயநகர நாயக்க ராஜா வால் கட்டப்பட்டது.  ஹொய்சள, துளுவ மக்கள் கலைத்திறன்  வேலைப்பாடுகள் நிறைந்தது. உடுப்பியிலிருந்து 85 கி.மீ. மங்களூரிலிருந்து 100 கி.மீ.  வடகிழக்கே மலைப்பாதை.   ராமாயணத்தில்  வருவாரே ஒரு ரிஷி,  மழை வரச் செய்யும்  ரிஷ்யஸ்ரிங்க ரிஷி.  விபாண்டகரின் மகன்,  அவர் சம்பந்தப் பட்டது இந்த மலைச்சிகரம்.   தசரதர் குழந்தை வரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்த போது , இந்த யாகத்தை நடத்தி கொடுத்தவர் ரிஷ்யசிருங்க முனிவர். இவரைக்  களைக் கோட்டு  மாமுனி  என்று  தமிழ் சரித்ரங்கள்  சொல்கிறது.  ரிஷ்ய சிருங்கர்  வாழ்ந்த இப்பகுதி   அவர்  பெயரால் ஸ்ருங்க கிரி எனப் பட்டு பின்னர் "சிருங்கேரி' ஆனது. 

 இந்த இடத்தை ஏன் எதற்கு  ஆதி சங்கரர் தேர்ந்தெடுத்தார்? இது புரிய உடனே  ஒரு கதை சொல்லவேண்டுமே .
மாகிஷ்மதி நகரில் விசுவரூபர் என்பவரிடம் ஆதிசங்கரர் அத்வைத வேத வாதம் செய்தார். இதற்கு விசுவரூபரின் துணைவியும், சரஸ்வதி அவதாரமுமான உபய பாரதி நடுவராக இருந்தார். வாதத்தில் சங்கரர் தோற்றால் துறவறம் விடுத்து இல்லறம் மேற்கொள்ள வேண்டும். விசுவரூபர் தோற்றால் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்பது நிபந்தனை. 

இருவருக்கும் மாலை அணிவித்து, யாருடைய மாலை முதலில் வாடுகிறதோ அவரே தோற்றவர் என அறிவிக்கப்பட்டது. 17 நாள் போட்டியின் முடிவில் விசுவரூபரின் மாலை வாடியது. தோல்வியை ஒப்புக்கொண்ட விசுவரூபர் துறவறத்திற்கு தயாரானார். உடனே அவரது மனைவி உபய பாரதி, "சங்கரரே! மாலை வாடியதால் மட்டும் தாங்கள் வெற்றி பெற்றதாக கருத முடியாது.
என்னிடம் இல்லறம் பற்றி வாதம் செய்து வெற்றி பெற்றால் தான் அது முழு வெற்றியாகும்,''என்றார்.
சங்கரரோ பிரம்மச்சாரி. ஒரு மாதத்திற்கு பின் இல்லறம் பற்றிய வாதம் வைத்துக் கொள்ளலாம் என்றார். இல்லறம் பற்றி யோசித்துக்  கொண்டு செல்கையில், அமருகன் என்ற மன்னன் இறந்ததை அறிந்த சங்கரர், தன் யோக சக்தியால் மன்னனின் உடலில் புகுந்து இல்லறம் பற்றி அறிந்தார். சங்கரரின் உடலை அவரது சீடர் பத்மபாதர் பாதுகாத்து வந்தார். மீண்டும் சங்கரர் தன் உடலில் புகுந்து உபயபாரதியிடம் வாதம் செய்தார். உபயபாரதி தோற்றார். விசுவரூபர் துறவறம் ஏற்றார். சங்கரர் அவருக்கு "சுரேசுவரர்' என்ற நாமம் கொடுத்து தன் சீடராக ஏற்றுக்கொண்டார்.

சரஸ்வதி அம்சமான உபயபாரதியிடம் சங்கரர்  "தான் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து வர வேண்டும்,''என்ற வரத்தை பெற்றார். அதற்கு சம்மதித்த உபயபாரதி, 'சங்கரரே! உம்மை தொடர்ந்து வருகிறேன். ஆனால், நீர் திரும்பி பார்க்காமல் செல்ல வேண்டும். திரும்பிப்   பார்த்தால் நான் அந்த இடத்திலேயே நின்று விடுவேன். அதன் பின் தொடர்ந்து வர மாட்டேன்,'  என்று நிபந்தனை விதித்தாள்.

சங்கரர் தன் சீடர்களுடன் செல்ல, பின்னால் உபயபாரதி கால் சலங்கை ஒலிக்க வந்து கொண்டிருந்தாள். அனைவரும் சிருங்கேரியை அடைந்தனர். அங்கு பாம்பும் தவளையும், பசுவும் புலியும் இணைந்து விளையாடுவதைக் கண்ட
சங்கரர், சாத்வீகமான அந்த இடம், யோகிகள் தங்குவதற்கு தகுந்தது என தீர்மானித்தார். அப்போது, உபயபாரதியின் சிலம் பொலி நின்று விட திரும்பிப்  பார்த்தார் சங்கரர். நிபந்தனைப்படி  அங்கேயே நின்று விட்டாள் உபயபாரதி.அங்குள்ள பாறை மீது ஸ்ரீசக்கரம் வடித்து அவளுக்கு "சாரதா' என்ற திருநாமம் சூட்டி பிரதிஷ்டை செய்தார். அப்போது, உபயபாரதி அவருக்கு சரஸ்வதியாகக் காட்சி கொடுத்து,  'சங்கரா! இன்று முதல் இந்த பீடம் சாரதா பீடம் எனப்படும். இந்த பீடத்தில் அமர்பவர்களிடத்தில் நான் குடி கொண்டு ஆசி வழங்குவேன்,''என அருள்பாலித்தாள். சுரேசுவரர் சங்கர பீடத்தின் முதல் ஆச்சார்யர் ஆனார்.  சிருங்கேரி ஆச்சார்யர்களுக்கு பாரதி என்ற பட்டப்பெயர் அதனால் தொடர்ந்தது. 

சிருங்கேரி மடம்   ஸமஸ்க்ரித  மொழி வளர்ப்பு, அத்வைத கோட்பாடு   வேத  சாஸ்த்ர சம்பிரதாயத்தை கற்பிக்க,  வளர்க்க,  பரப்ப  இந்த மடம் நூலகமாகவும்   செயல்படுகிறது.  எண்ணற்ற ஓலைச்சுவடிகள் இன்னும் அங்கே இருக்கிறது. நான்கு வாசல் கொண்ட மடம் .

சரித்திர புத்தகத்தில் பள்ளியில் படித்தது ஞாபகம் இருக்குமே.   விஜயநகர  சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தது ஹரிஹரன் புக்கன் என்ற இரு வேடுவர்கள். அவர்களுக்கு வழிகாட்டி ராஜாக்களாக்கியது சிருங்கேரி சந்நியாசி மாத்வ வித்யாரண்யர்,  தக்ஷிணத்தில் முஸ்லீம்களின்  ஆக்கிரமிப்பில் இருந்து விஜயநகரம் மீட்கப்பட்டது. ஹம்பி  தலைநகரானது.  வித்யாரண்யர் பின்னர்  சிருங்கேரி மடத்தின் ஜகத்குருவாக இருந்தவர்.  ஹரிஹர புக்கர்கள்  சர்வமான்யமாக  சிருங்கேரி மடத்துக்கு கொடுத்த இடம் இது. அப்போது இருந்த ஜகதகுரு பாரதி  தீர்த்தர் (1346).

எவ்வளவு மகோன்னதமான சாம்ராஜ்யம் என்றாலும் ஒருநாள் மறையும், இன்னொன்று தோன்றும். அப்படித்தான் விஜய நகர  சாம்ராஜ்யத்திற்கு பின் இஸ்லாமியர் தலை எடுத்து  நாச  வேலைகள் ஆரம்பமானது. மேற்கு கடற்கரையில் பல நாடுகள், நகரங்கள்   சிருங்கேரி மடம்  உட்பட  பல   பகவான் சங்கல்பத்தால்  கேலடி  நாயக்க வம்சம் பாதுகாப்பில் வந்தது.  250 வருஷங்கள்  சிருங்கேரி மடம்   நாயக்க மன்னர்களால்  ஜாக்கிரதையாக பராமரிக்கப்பட்டது. அப்புறம் தான் திப்பு சுல்தான் தலை எடுத்தான். மைசூர்  சுல்தான்  ஆனான். 

ஒளரங்க சீப்பிற்குப் பின்னர் மராத்தி ராஜாக்கள் ஆண்டபோது  சிருங்கேரி மடம் வந்தது. அற்புதமான  சரித்திர  சான்றுகள், தடயங்களை  சிருங்கேரி  மடம் பாதுகாத்து வருகிறது.    ஆச்சர்யமாக  ஹைதர் அலி கூட  சிருங்கேரி மடாதிபதிக்கு, பல்லக்கு,  பரிசுகள், ஐந்து குதிரைகள்,  ஒரு யானை, மற்றும்  ஜகத் குரு  யாத்திரைக்கு பணம்  எல்லாம் பரிசளித்திருக் கிறான்.  ஹைதர் அலியின்  மகன் திப்பு சுல்தான் ஆட்சியின் போது,   சிருங்கேரி மடம் யாரோ சில கொள்ளையர்களால்  சூறை யாடப்பட்டு  தங்கம் வெள்ளி,   செம்பு விக்ரஹங்கள்  கொள்ளையடிக்கப்பட்டு,   பல  பிராமணர்கள் கொல்லப்பட்டனர் என்ற சேதி அறிந்ததும்  மடத்திற்கு திப்பு  பண உதவி அளித்ததாக சரித்திர ஏடுகள் சொல்கிறது. 


சிருங்கேரி  செllன்றவர்கள்  அதன்  இயற்கை  கொப்புளிக்கும்  வளமையை கவனிக்கத் தவறினால் அவசியம்  அகர்வாலுக்குப் போய்  கண்ணாடி மாட்டிக் கொள்ளவேண்டும்.

சாரதாம்பிகை, வித்யாசங்கரர் (சிவன்) கோயில்கள் ஏற்கனவே உள்ளன. இப்போது, ஆதிசங்கரருக்கு கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பீடாதிபதி பாரதிதீர்த்த சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.
சிருங்கேரி மங்களூரிலிருந்து 107 கி.மீ. தூரம். காலை 5 முதல் மாலை 4.30 வரை மலைப்பாதையில் பஸ்கள் ஓடும். நாங்கள் ஒரு தனியார்  வண்டியில் கிடு கிடு பள்ளத்தை கீழே பார்த்து நடுங்கிக்கொண்டு மலைச்சரிவில்  வளைந்த பாதைகளில் சிருங்கேரி சென்றது இன்னும் மறக்கவில்லை. விடாத மழை வேறு.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...