Sunday, September 11, 2022

BRUNDHAVANAMUM NANDHAKUMARANUM

 பிருந்தாவனமும் நந்தகுமாரனும் -  நங்கநல்லூர் J K  SIVAN 


14.  பக்த மீராபாய் ஆலயம் 
 
பிருந்தாவனத்தில் கவனம்  கிருஷ்ணன் ராதை மேல் இருந்தால் மட்டும் போதாது. அதி முக்கியமாக கண்ணாடி போட்டுக்கொள்ள கூடாது, கையிலோ பாக்கெட்டிலோ  மொபைல் போன் கூடாது. கைப்பையும் இடுப்பில் இருக்க கட்டிக்கொள்ளவேண்டும். இதைச் செய்ய மறந்தாலோ மறுத்தாலோ, அவை உங்களுடையதல்ல, எண்ணற்ற  வானரர்கள் அவற்றைப் பிடுங்கும் பணியில் சதா  ஈடுபட்டிருக்கிறார்கள். பிருந்தாவனத்தில்  வானரங்கள், நதிகள், உள்ளூர் பக்தர்கள், சாதுக்கள் ஆகியோர் பிரம்மாவை விட உயர்ந்த தெய்வீக நிலை பெற்றவர்கள். எல்லாம் கண்ணன் அருளால் தான். ப்ருந்தாவனத்துக்கு வரும் ஒவ்வொருவரையும் ராதையும் கண்ணனும் கவனித்து வரவேற்கிறார்கள் என்பது மனதில் இருக்கவேண்டும். வ்ரஜபூமி அவ்வளவு ஸ்ரேஷ்டமானது.

அப்படி அறிந்து இங்கே வந்த  ஒருவள்  மீராபாய். அவள் வந்து தங்கிய இடம் இன்று ஒரு கோவிலாக நிற்கிறது.   ஒரு குறுகிய சந்தில் ஷா ஜி  கோவில் அருகே தரிசித்தேன்.  அருகிலேயே  தனிமையான ஒரு இடத்தில் நிதிவன் .  ரெண்டு நிமிஷத்தில் அங்கிருந்து நடந்து போகலாம்.  பிருந்தாவனத்தில்  குறுகிய சந்துகளுக்குக் கணக்கே இல்லை.  அது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.

மீராபாய்  சித்தூர்கார் ராணி. சகலமும் துறந்து சன்யாசினியாக  பிருந்தாவன் வந்தவள். மீரா தினமும் வணங்கிய வழிபட்ட கிரிதாரி இந்த ஆலயத்தில் காட்சி தருகிறார்.  15ம் நூற்றாண்டில் மீரா பாயை வரவேற்று உபசரித்த குடும்பம் சந்ததியினர் இன்றும் இந்த ஆலயத்தை  நிர்வாகம் செய்து பராமரிக்கிறார்கள் என்பது ஒரு அதிசய செய்தி. மீராபாய் ப்ருந்தாவனத்தில் இருந்த காலம்  1524 முதல் 1539 வரை  பதினைந்து வருஷங்கள். அப்புறம் இங்கிருந்து துவாரகை சென்று  அங்கே கிருஷ்ணனோடு கலந்தாள் .

 மீராவின் ஒரே நினைவு கிரிதர கோபாலன். அவள் சொல்வதை கேளுங்கள்: "mere to giridhar gopal, dusro na koi" which means "  எனக்கு கிரிதர் கோபால கிருஷ்ணனைத் தவிர வேறெவரும் இல்லை''

இந்த மீராபாய் ஆலயம் பிகானீர் ராஜாவின் திவான் தாகூர் ரேம் நரேன் பாட்டி என்பவரால் 1842ல் கட்டப்பட்டது. ராஜஸ்தானிய கலாச்சாரத்தில் அழகாக சிற்பவேலைப்பாடுகளோடு  காண்கிறது.  மதுரையிலிருந்து 10 கி.மீ.. கிருஷ்ணன் இளவயதில் விளையாடிய இடம்.  மீராவுக்கு கிரிதாரி கிடைத்ததை பற்றி சொல்கிறேன்:

மார்வார் தேசத்தில் ஜோத்புரில் குர்கி என்ற ஸ்தலம். அங்கே  ராஜ குடும்பத்தில் பிறந்தவள்  மீரா.  அந்த குழந்தையின் வயது ஐந்து. நிறைய வாய் ஓயாமல் பேசும் சூட்டிகையான பெண். ஒருநாள் வீட்டு வாசலில் வெளியே மேள  தாளத்துடன்  ஊர்வலம் வருவதை பார்த்து கேட்டது
“இது என்னம்மா?”.
கல்யாண ஊர்வலம் டீ கண்ணு!”
“அது யாருமா நடுவிலே குதிரை மேலே தலப்பா கட்டிண்டு?”.
“அது தான் மாப்பிள்ளை. அவன் தான் அதோ அவன் பக்கத்திலே ஒரு பல்லக்கில் வருதே  உன்னை மாதிரி ஒரு சின்ன பொண்ணு, அதுக்கு கணவன்”.
''கல்யாணம் என்றால் இப்படி குதிரை மேலே மாலை போட்டுக்கொண்டு, கலர் கலரா டிரஸ் பண்ணிக்கொண்டு பல்லக்கில் நிறைய நகையோடு உட்கார்ந்து கொள்வார்களா?''
''ஆமாம்''
“ அப்போ எனக்கும் அப்படி கல்யாணம் பண்ணுவியா?”
“ ஓ.நிச்சயமா, தடபுடலா”
“அப்போ எனக்கு யாரு கணவன்?”
“வா காட்றேன்.” அம்மா குழந்தையை கை பிடித்து அருகே இருந்த பூஜை பக்கம் போனாள் . அவள் கண்ணில் பூஜா அறையில் கிருஷ்ணனின் படம் தென்பட்டது. சிரித்தாள். பிறகு விளையாட்டாக சொன்னாள் .
“இதோ இவன் தான் உனக்கு கணவன்”
குழந்தை  மீரா அந்த வார்த்தையை கெட்டியாக பிடித்துகொண்டாள. எரியும் விளக்குக்கு எண்ணையும் கிடைத்தது. எத்தனை ஜென்மமாக காத்துக்  கொண்டிருந்தாளோ இந்த வாய்ப்புக்கு. கிருஷ்ணனை மனதில் பதிய வைத்துக் கொண்டது அந்த குழந்தை. கல்யாணம், காதல், எதுவுமே தெரியாத, அறியாத ஐந்து வயது குழந்தை. காரணம் புரியாமலே கண்ணனை பிடித்துவிட்டது அவளுக்கு. இனி அவளிடமிருந்து அவனுக்கு விடுதலை கிடையாது.
தெருவில் ஒருநாள் ஒரு பொம்மை விற்பவன் ''பொம்மையோ பொம்மை'' என்று கத்திக்கொண்டே சென்றான். அவன் தலையில் கூடையில் நிறைய கலர் பூசிய பொம்மைகள். ஒரு சின்ன அழகிய கிருஷ்ணன் பொம்மையை அவன் கூடையில் வைத்திருப்பதை பார்த்து விட்டு அதை வாங்கினால் தான் விடுவேன் என்று அடம் பிடித்து அதை வாங்கியது குழந்தை. ஆமாம், தன் உயிர் போகும் வரை வைத்திருந்தாள் குழந்தை என்று நாம் அறியும் மீரா. அவள் மூச்சு, பேச்சு எல்லாமே கிருஷ்ணன் தான்.
விளையாட்டு வினையாக போய்விட்டதே என்று பெற்றோருக்கு கவலை அரித்து தின்றது  மீராவின் அம்மா சிறுவயதிலேயே மறைந்தாள். அப்பா அவளை  மேவார் ராணா ஸங்க்ராம் சிங்கின் மூத்த மகன் போஜராஜுக்கு கல்யாணம் பண்ணி வைத்தார்.   பேருக்கு தான் கல்யாணம் . அவளை முழுதும் ஆக்ரமித்தவன் கிருஷ்ணனே. அவளை எல்லோரும் ஒரு இளம் சன்யாசினியாகவே கண்டனர். இருபது வயதுக்குள்ளேயே அவள் தனியள் ஆனாள். அவள் கணவன் ஒரு போரில் மாண்டான். மீராவின் உலகில் ஒரே ஜீவன் தான். அது கிருஷ்ணன். வீட்டை விட்டு தெருவுக்கு சென்று விட்டாள் மீரா. கண்ணன் மீது மட்டற்ற காதல் அவளை அவன் கோபியாகவே மாற்றியது. கண்ணனை நினைத்து இரவும் பகலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். பக்தர்களும் ஆவலுடன் சேர்ந்து கொள்ள அவளது ராஜ வம்ச குடும்பம் எதிர்த்தது. அவளைக் கொல்ல விஷம் வைத்தார்கள். அவள் குடித்த விஷத்தை அம்ருதமாக மாற்றினான் கிருஷ்ணன். அவதூறு பேசினார்கள். எதற்கும் மசியவில்லை அவள் மாசற்ற காதல். படுக்கையில் கூரான விஷம் தோய்ந்த ஆணிகள். அவை அனைத்தையும் ரோஜா இதழ்களாக மாற்றினான் கிருஷ்ணன். “இந்தா கிருஷ்ணனுக்கு பூ” என்று ஒருநாள் ஒரு கிழவி மூலம் அவளைக் கொல்ல பூக் குடலையில் கருநாகம் வைத்து தந்தார்கள். கைவிட்டு எடுத்தாள் மீரா அதை. நாகம்  நறுமண மல்லிகை மாலையாயிற்று
“நீங்கள் மிக பிரசித்த கிருஷ்ண பக்தர் உங்கள் வாயிலிருந்து கண்ணன் பெருமையை கேட்க ஆசையாய் இருக்கிறது” என்று மீரா சந்நியாசி ஒரு சைதன்யரின் சிஷ்யர் ரூப கோஸ்வாமியை வேண்டினாள். கோஸ்வாமி என்ன சொன்னார்: 
“நான் பெண்களை பார்ப்பதில்லை பேசுவதில்லை. நீ போய்வா அம்மா''
“ஐயா இந்த பிரபஞ்சத்தில் புருஷர்கள் யாருமே இல்லையே. இருப்பது ஒரே ஒரு புருஷன் கிருஷ்ணன் தானே, நாம் அனைவருமே அவன் அடிமைகள் தானே” . 
மீரா அமைதியாக பதிலளித்தாள்.
பிறகு என்ன? கோஸ்வாமி ஓடிவந்து மீராவின் காலடியில் சரணடைந்தார். ஊர் ஊராக பாடிக் கொண்டே ஆடிக்கொண்டே மீரா காசிக்கு சென்று கபீர் தாசுடன் சேர்ந்து கிருஷ்ண பஜன் செய்தாள். நேரமாகி விட்டது. காதலின் உச்சகட்டம் வந்து விட்டது. கிரு ஷ்ணனுக்காகவே வாழ்வை அர்பணித்து எண்ணற்ற பக்திபாடல்களை கர்ணாம்ருதமாக வழங்கி விட்டு துவாரகையில் எல்லாரும் பார்க்க மீரா கிருஷ்ணனோடு கலந்தாள்




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...