Thursday, September 1, 2022

brindhavanamum nandhakumaranum


 ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும்  நிதி வனம்  6 - 

#நங்கநல்லூர்_J_K_SIVAN 

நிதி வனம்

 எங்கும் துளசி தளங்கள் பச்சைப் பசேலென கமகமவென மணக்கும்  செடிகள் நிறைந்தது நிதி வனம். பிருந்தாவனம் என்றாலே  துளசிக்காடு தானே.  அந்த  வன பிரதேசத்துக்கு எல்லாம்  பிரதம  வளம் நிறைந்த  நிதி போன்றது இந்த வனம்  என்பதால்
இதற்கு  இந்த பெயர். 
 
கிருஷ்ணன் ராதை  இருவருக்குமே  ரொம்ப பிடித்த,  அடிக்கடி சந்தித்து ஆடிப்பாடும்  இடம். கோபிகளோடு இங்கு அவர்கள் குதூகலமாக  இருந்ததை ஜெயதேவர் அஷ்டபதியில் பாடலாக தந்திருக்கிறார்.  நாள் தோறும் தவறாமல்  ஒவ்வொரு இரவும்  அவர்கள் இந்த இடத்தில் இன்றும் சந்திக்கிறார்கள்.  ஆகவே  இந்த நிதி வனத்தில் எவரும்  அஸ்தமனத்துக்கு பிறகு  இரவுகளில் செல்வதி ல்லை.  கிருஷ்ணன் ராதா கோபியர்கள்  ராஸ லீலையை பார்க்க  அத்து மீறி  சென்றவர்கள் பல விளைவுகளை சந்தித்திருக்கிறார்கள்.  ராஸ லீலை  ஆடும்  கண்ணன் கோபியரின்  தெய்வீக  ஒளி  கண்ணை குருடாக்கி இருக்கிறது.  சிலருக்கு சித்த பிரமை பிடித்து  விடுகிறது.   

இரவெல்லாம்  ஆடிப்பாடி விட்டு களைத்து ராதையும் கிருஷ்ணனும் இங்கே உள்ள ரங் மஹால் எனும் இடத்தில் உறங்குவார்கள்.கிருஷ்ணனே  ராதைக்கு அலங்காரம் செய்து விடுவார். அவளும் அவரை  அலங்கரிப்பாள்  என்று  புது வஸ்திரங்கள், வளையல்கள் ஆபரணங்கள், இனிப்பு வகைகள் எல்லாம் கொண்டு காணிக்கையாக  சேர்க்கிறார்கள். மறுநாள் வஸ்திரங்கள்  கலைந்து  இனிப்புகள்  அளவில் குறைந்து வளையல்கள் ஆபரணங்கள் புஷ்பங்கள் மலைகள்  எல்லாம்  எடுத்து உபயோகப்படுத்தப்ப ட்டுள்ளது என்று மறுநாள் அறிகிறோம்.

''என்னைவிட  நீ , ஒரு சாதாரண  மூங்கில் குழாய்  கிருஷ்ணனிடம் சொந்தம் கொண்டாடுவதா, அவ்வளவு நீ ஒஸ்தியா?'' என்று கிருஷ்ணன் புல்லாங்குழலை திருடி ஒளித்து வைக்கிறாள்  ராதை.  அது இந்த இடம் தான்.   புல்லாங்குழல் திருடிய  ராதா,  வம்ஸி சோர் ராதா வுக்கு  கோவில் இங்கே  இருக்கிறது.   சுவாமி ஹரிதாஸ்  இங்கே  கிருஷ்ணனை  பங்கே பிஹாரி என்ற நாமத்தில் கோவில் கட்டி வணங்கி இருக்கிறார்.

''கிருஷ்ணா,  எங்களுக்கு தாகமாக இருக்கிறது'' என்று  கேட்ட கோபியருக்காக  கிருஷ்ணன் இங்கே  ஒரு குளம் உருவாக்கினான். அதற்கு  லலிதா குண்ட் என்று பெயர்.  கிருஷ்ணனுக்கு நெருக்கமான ஒரு கோபி லலிதா. 
காய்ந்து போன உருக்குலைந்த தண்டுகளை கொண்ட  துளசி வனத்தில் பச்சைப் பசேல் என்று இன்னமும் வளமை இருப்பது கிருஷ்ணன் அருளால் தான்.  துளசி செடிகள் ஒன்றோடொன்று பிணைந்து இருப்பது ராதா கோபியர் கிருஷ்ணனோடு இனைந்து ஆடியதை
 நினைவூட்டுகிறது. இங்குள்ள  பல துளசி வகைகளில்  ரெண்டு  இதழ்,  துளசி  அபூர்வமானது. வேறெங்கும் காணாதது.  ராதா கிருஷ்ண தளம் என்று அதற்கு பெயர்.    ரங் மஹாலில்  உள்ள  சந்தன மர படுக்கைகள் அவர்கள்  உபயோகித்தவை. இரவுகளில்  தண்டை, கொலுசு,  சதங்கை ஒலி  இன்றும் கேட்கிறது  என்று அருகில் வசிப்பவர்கள் சொல்கிறார்கள்.

சுவாமி ஹரிதாசருக்கு  கிருஷ்ணனும் ராதையும் தரிசனம் தந்த இடம்.  கிருஷ்ணனும் ராதையும் இணைந்த உருவம் தான் பங்கே பிஹாரி.  சுவாமி ஹரிதாஸ் வழிபட்ட  விக்ரஹம் . 

அதிகமாக  உலவும் குரங்குகள் கூட  அஸ்தமனத்துக்கு பிறகு இங்கே வருவதில்லை.  கோபியர்களின்  வஸ்திரங்களை அவர்களுக்கு தானம் செய்த கிருஷ்ணன் ஒவ்வொரு பௌர்ணமியும் அவர்களோடு சேர்ந்து விளையாட வாக்கு கொடுத்த படி இங்கு பௌர்ணமி காலத்தில் விசேஷம். ராஸக்ரீடை  உத்சவம் நடக்கும். 

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் ஆணும் பெண்ணும்  கைகோர்த்து ஆடுவதாக  இதை கருதாமல்  ஜீவாத்மா பரமாத்மா  ஒன்றுசேரும், ஐக்கியமாகும் சம்பவமாக கருதவேண்டும்.   கண்ணன் குழல் ஒலி கேட்டவுடன்  அப்படியே  எல்லாவற்றையும் போட்டு விட்டு கோபியர் இங்கே ஓடிவருவார்கள். 

எல்லோரையும் மகிழ்விக்க  கிருஷ்ணன் தன்னை பல உருவங்களாக ஆக்கிக்கொண்டு ஒவ்வொருவருடனும் இரவு பூரா கை கோர்த்து ஆடி பாடும் ராஸ லீலை நிகழ்ந்த இடம் இது.  பாதியில் திடீர் திடீர் என்று காணாமல் போய்விடுவான். அவர்களை  ஏங்க வைத்து மீண்டும்  கூடுவான்.   களைத்து  கோபியர்கள் மடியில் கண்ணன், கண்ணன் மடியில் கோபியர்கள் ஓய்வெ டுத்த இடம்.  கோபிகா கீதம் அற்புதமாக இதை விவரிக்கிறது. ஹரிதாஸ் தாகூர் ஸ்வாமிகள் சமாதி இங்கே உள்ளது.  ராதா  ராணியின் சகி  லலிதா.  அவளது அவதாரம் தாம்  ஹரிதாஸ் தாகூர் என்பார்கள். அவரால்  அடையாளம் காணப்பட்டது தான் நிதி  வனம்.  கிருஷ்ணனோடு  பேசும்  சக்தி கொண்டவர்.  

அளவற்ற கிருஷ்ண பக்தி கொண்டவர்களால் தான் இதை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...