Monday, September 12, 2022

BRINDHAVANUM NANDHAKUMARNUM




 பிருந்தாவனமும் நந்தகுமாரனும் - #நங்கநல்லூர்_j_k_SIVAN

 
15.  ராதா மதன் மோஹன் 

மதன் மோஹன் என்றால் ''மன்மதனையே மயங்க செய்யும் அழகுடையவன்'' என்று அர்த்தம். நூற்றுக்கு ஒரு லக்ஷம் இது ரொம்ப சரி. கிருஷ்ணனைக்  கண்டு மயங்காதவர் யார்?  ஐந்தாயிரம் வருஷம் ஆகியும் இன்னும் அவனை மயக்கிய  ராதையை பிருந்தாவன மதுராபுரி மக்கள் மறக்கவில்லையே.   நன்றி என்று சொல்வதற்கும், நகரு என்று சொல்வதற்கும் எது சொன்னாலும் அதை முடிக்கும் முன்பும்,  குட் மார்னிங்  குட் ஈவினிங் என்கிறோமே அதற்கு பதிலாக   ''ராதே ராதே''  என்ற வார்த்தை எங்கும் ஒலிக்கிறதே. கிருஷ்ணன் ''ராதே ராதே'' என்று அவள் பின் ஐந்தாயிரம் வருஷம் முன்பு ஓடியதை இன்னும் வ்ரஜ பூமி மக்கள் மறக்கவில்லையே. இன்றும்  ராதே ராதே  என்று சொல்கிறார்கள். பாக்கியசாலிகள்.  இனி  நாமும் அடிக்கடி ''ராதே ராதே'   சொல்ல பழகுவோம்

 பிருந்தாவனத்தில் மதன் மோஹன் விக்ரஹத்தை 5000 வருஷங்களுக்கு முன்பு  முதலில் ஸ்தாபித்தவர்  கிருஷ்ணனின் கொள்ளுப்பேரன் வஜ்ரநாப ராஜா.  அது காலப்போக்கில் காணாமல் போய்  அத்வைத ஆச்சர்யர்  கோகுலத்தில் மஹாவனத்தில் அதை கண்டுபிடித்தார். ஒரு பழைய ஆலமரத்தின் அடியில் அதைப்  பார்த்தார்.  வங்காளத்தில் நவத்வீபம்  திரும்புவதற்கு முன்பு அதை  மதுராவில் வாழ்ந்த தனது சிஷ்யர்  ஒரு  ப்ராமணர் புருஷோத்தம சொவ்பே யிடம்  ஒப்படைத்தார்.  பல வருஷங்களுக்கு பிறகு சைதன்ய மஹா பிரபு  தனது சிஷ்யர்   சனாதன கோஸ்வாமி என்பவரை அனுப்பி  ''நீ கிருஷ்ணன் விளையாடிய, பழகிய இடங்கள் அத்தனையும் பிருந்தாவனத்துக்
கு போய்  அடையாளம்  கண்டுபிடித்து  புத்தகமாக்கு'' என்றார். 

சனாதன கோஸ்வாமி பிருந்தாவனம் மதுராபுரிக்கு  வந்தார்.  நித்யம்  உஞ்சவிருத்தி எடுத்து வீடு வீடாக செல்லும்போது தான் ஒருநாள்  ப்ராஹ்மணர் புருஷோத்தம சொவ்பே வீட்டு வாசலில் சொவ்பே யின் குழந்தைகள் மதன் மோஹன் விக் ரஹத்தை வைத்து விளையாடிக்  கொண்டிருப்பதைப்  பார்க்கிறார்.  ''அடாடா, என்ன அபச்சாரம்,  என்று உள்ளே ஓடி சொவ்பே யிடம்   எப்படி கிருஷ்ணனை அர்ச்சித்து பூஜித்து ஆராதனை செய்யவேண்டும் என்று கற்பிக் கிறார்.  அன்று இரவே  சொவ் பே க்கும்  சனாதன கோஸ்வாமிக்கும் கனவில் மதன்மோஹன் தோன்றி ''என்னை  சொவ் பே  குழந்தைகளில் ஒருவனாக பாவித்தால் அதுவே போதும், அதுவே என் விருப்பம்'' என்கிறான்.  சொவ்பே யின் கனவில் ''சொவ்பே , நான் உன் குழந்தைகளில் ஒருவன். உனக்கு நிறைய குழந்தைகள் இருப்பதால் என்னை சனாதன கோஸ்வாமி யிடம் கொடுத்துவிடு'' என்கிறான்  மதன் மோஹன்.  சந்தோஷமாக மதன்மோஹன் சனாதன் கோஸ்வாமியை அடைந்தான். ''நான் பரம ஏழை, என்னால் முடிந்தவரை உனக்கு உபசாரம் செய்கிறேன் ''என்றார் கோஸ்வாமி அவனிடம்.''ஆஹா  அதுவே எனக்கு போதும்'' என்றான் மதன் மோஹன் கிருஷ்ணன். தினமும்  உஞ்சவிருத்தியில் கிடைத்த கோதுமைமாவில்  வறட்டு சப்பாத்தி செய்து  மதன்மோஹனுக்கு நைவேத்தியம் செய்தார் கோஸ்வாமி.  அதில் உப்பே இல்லை. ''கொஞ்சம் உப்பு போடேன் ''  என்ற மதன்மோஹனிடம்  ''நானே ஒரு பரதேசி, உப்பு போன்ற  ''உயர்ந்த''  வஸ்துவிற்கு எங்கே போவது'' என்று கையை விரித்தார் கோஸ்வாமி.  அந்த ஆலயத்தில் இன்றும் உப்பில்லாத சப்பாத்தி தான் நைவேத்தியம்.

ராதா மதன் மோஹன் ஆலயம்  துவாதச ஆதித்ய மலையில் உள்ளது.   அதன் கீழே யமுனா ஓடுகிறது. அதில் சென்ற ஒரு வியாபாரி க்ரிஷ்ணதாஸ் கபூர் என்பவரின்  சரக்கு படகு தரை தட்டியது. என்ன செய்வது எப்படி படகை  மீண்டும் மிதக்கவைப்பது, எப்படி ஆக்ரா போவது?  என்று தடுமாறினார் கபூர். மதன் மோஹன்  அப்போது  ஒரு  மாடு மேய்க்கும் சிறுவனாக  கபூரிடம் சென்று  ''என்னோடு வா'' என்று அவனை சனாதன கோஸ்வாமியிடம் அழைத்து செல்கிறான். ''ஐயா என் சரக்கு படகு தரை தட்டி தவிக்கிறேன்'' என்று கபூர்  கோவாமியிடம் அழுதார். 
''ஐயா  நானோ ஒரு சந்நியாசி, என்னால் என்ன செய்யமுடியும்?இதோ இந்த மதன் மோஹனிடம்  வேண்டிக்கொள்ளுங்கள் அவன் உதவுவான்'' என்றார். மதன் மோஹனை ஒரு சிறு கூரை வேய்ந்து அருகில் வைத்திருந்தார். கபூர் என் சரக்கு ஜாக்கிரதையாக ஆக்ரா போய் சேர்ந்தால் உனக்கு ஒரு கோவில் காட்டுகிறேன்'' என்று  வேண்டிக்கொண்டான். யமுனையில் உடனே வெள்ளம் வந்து  சரக்குப் படகு தானாகவே மிதந்தது. ஆக்ரா போய் சேர்ந்து  சரக்கு விற்கப்பட்டு நல்ல லாபம் அடைந்தகபூர்   நன்றி மறவாமல் மதன் மோஹனுக்கு  கோவில் கட்டினான். 

கோவிலில் மதன் மோஹன்  ராதாராணியுடனும்  தோழி லலிதாவுடனும் நிற்கிறான். அருள் பாலிக்கிறான்.  ஒளரங்க சீப் காலத்தில்  இந்த ஒரிஜினல்  ராதா மதன் மோஹன்  விக்ரஹம்  உடைந்து நாசமாகாமல்,  சிதையாமல், இருக்க   ஜாக்ரதையாக ஜெய்ப்பூர்க் கு அனுப்பி வைக்கப்பட்டது.  1670ல்  ஒளரங்கசீப் ஆட்கள் பிருந்தாவன கோவில்களை நாசமாக்கினார்கள். காலப்போக்கில்  இந்த கோவில்கள்  ஹிந்து ராஜாக்க ளால் புனருத்தாரணம் செய்யப்பட்டது.  சனாதன கோஸ்வாமி யால் மதன்மோஹன்  ஆலயம் மேலே சொல்லப்பட்டபடி உருப்பெற்று நாம்  தரிசிக்கிறோம். ஒரிஜினல் மதன் மோஹன் விக்ரஹத்தின் நகல் வடிவம் தான் நான் தரிசித்தது.  சனாதன கோஸ்வாமியின் சகோதரர்  ரூப கோஸ்வாமி. பிருந்தாவனத்தை நாம் இன்று  கிருஷ்ண பிரதேசமாக காண்பதற்கு காரணம் ஆறு கோஸ்வாமிகள்.   சனாதன கோஸ்வாமியை  ராதாராணியின் தோழிகள் லவங்க மஞ்சரிகளில் ஒருவள் அவதாரம் என்பார்கள்.  மதன்மோஹன்  ஆலயத்தில் சனாதன கோஸ்வாமி சமாதி சந்நிதி இருக்கிறது.  மனதார வணங்கினேன்.   அங்கேயே  இன்னொரு சந்நிதியில் பிரபுபாதா  காட்சி அளிக்கிறார். 

 ராதா மதன் மோஹன்  ஆலயம் அற்புதமான கட்டிடம். யமுனைக்கரையில்  காளீய காட்  அருகே  50 அடி  தூரத்தில் உள்ளது. சிறந்த சிற்ப வேலைப்பாடு கள் கொண்ட  20 மீட்டர் உயர  சிவப்பு கல் கோவில். 1819ல் நந்த குமார் பாசு என்பவரால்  நிர்மாணிக்கப் பட்டது.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...