Thursday, September 29, 2022

oru arpudha gnani

 


ஒரு அற்புத ஞானி. -  நங்கநல்லூர்  J K  SIVAN 

ஒன்லைன்  பிரசங்க குறிப்பு.

இந்திய சரித்திரத்தில்  150 வருஷம்  என்பது ரொம்ப ''சமீபத்தில்''  என்று சொல்ல வேண்டிய ஒரு கால கட்டம்.  அப்போதோ எப்போதோ,  நமது பரந்த பாரத தேசத்தில் எங்காவது யாராவது ஒரு மஹான் தோன்றிக்கொண்டே இருப்பார்.  இது சரித்ரம்  ஆதாரத்தோடு  காட்டும்   மறுக்கமுடியாத உண்மை.   இன்னும் அதுபோல் தொடர்ந்து வரும் காலத்திலும்  மஹான்கள்  தோன்றுவார்கள்.   அவர்களால் தான்  ஓரளவு  நமது புண்ய பூமி  சுபிக்ஷத்தோடு நமக்கெல்லாம் குறையொன்றுமில்லாமல்  வாழ முடிகிறது. 

நூறு வருஷங்களுக்கு முன்பு  சேஷாத்திரி ஸ்வாமிகள் காலத்தில் திருவண்ணாமலையில் நிறைய படித்த வெங்கட்ராமையர் என்ற ஒரு  சாஸ்திரிகள்,  பண்டிதர் இருந்தார். ரொம்ப அமைதியானவர். அவருக்கு ராமாயணம் மிகவும் பிடித்த இதிகாசம்.   நிறைய ராமாயண  சொற்பொழிவுகள்  செய்வார். பக்திமான்.   சேஷாத்ரி ஸ்வாமிகளிடம் அளவு கடந்த மரியாதை. பக்தி. அவருடைய சீடர் என்று கூட சொல்லலாம்.

அந்த பெரியவரை   அணுகி  திருவண்ணாமலையில் இருந்த  ஒரு சன்மார்க்க சங்கத்தில் குகனுடைய நட்பு என்பது பற்றி பேசவேண்டும் என்று சங்கத்தார் கேட்டுக் கொண்டார்கள். அவரும் உபன்யாசம் செய்வதற்கு  ஒப்புக் கொண்டார். ராமாயணத்தில் வேண்டிய அளவு குறிப்புகள் எடுத்துக் கொண்டார்.

உபன்யாசம் செய்ய வேண்டிய நாள் அன்று வெங்கட்ராமய்யர் சேஷாத்திரி ஸ்வாமிகளை தேடி அவரிடம் ஆசி பெற   வந்தார்.   சாஸ்திரிகளின் அதிர்ஷ்டம்  ஸ்வாமிகள் திருவண்ணாமலையில்  கண்ணில் பட்டார்.  சந்தோஷத்தோடு  ஸ்வாமிகளை நமஸ்கரித்தார். கையில் பழங்கள் கொண்டு வந்திருந்தார். ஸமர்ப்பித்தார்.

''இன்னிக்கு என்னடா விசேஷம்?''

''ஸ்வாமி என்னை இன்னிக்கு  ராமாயண  உபன்யாசம் பண்ணச்  சொல்லியிருக்கா''

''என்ன பேசப்போறே?''

'' குகனுடைய நட்பு பற்றி பேச  சபையிலே   சொல்லியிருக்கிறார்கள். அதற்காக போகிறேன். என்ன சொல்வது எப்படி சொல்வது என்று புலப்படவில்லை. ஸ்வாமிகள் ஏதாவது சொல்லி அருளவேண்டும்'' என்று பவ்யமாக கைகளை கட்டிக்கொண்டு வேண்டினார்.

ஸ்வாமிகள் மேலே பார்த்தார். ஒரு சில நிமிஷங்கள் ஓடியது. சில காக்கைகள் பறந்தன. அவற்றை எண்ணினார். அய்யருக்கு சந்தேகம். ஸ்வாமிகள் தான் சொன்னதை மனதில் வாங்கி கொண்டாரா இல்லையா என்றே தெரியவில்லையே.

திடீரென்று ஸ்வாமிகள் ''டேய்,   நீ நன்னா படிச்சவன்.  உனக்கு தான் எல்லாம் தெரியுமே . என்னைப்போய்  கேக்கறியே, 
எனக்கு என்னடா தெரியும்? குகன் படகோட்டினான். ராமன் அவனை கட்டிண்டான். குகன் கங்கையில் விழுந்து செத்துப் போய்ட்டான்'' இதைச்  சொல்லு போதும்'' என்கிறார் ஸ்வாமிகள்.

சாஸ்திரிகள்  புரிந்து கொண்டார். அந்த விஷயங்களை வைத்து ஆச்சர்யமாக பிரசங்கம் செயது முடித்தார். ஸ்வாமிகள் சொன்னதற்கு என்ன அர்த்தம் ?

சுவாமி சொன்ன மூன்றும் கர்மம் ,பக்தி, ஞான யோகம் பற்றிய   குறிப்பு. ஒவ்வொருவரும்  அவரவருக்கென்று இட்ட காரியங்களை விடாது செய்வது ஸ்வதர்மம். நிஷ்காம்யமாக, பற்றின்றி,  செய்யவேண்டும் என்று காட்டுகிறது. படகோட்டுவது குகனுடைய  ஸ்வதர்மம். அதை சந்தோஷமாக பிறருக்கு செய்து உதவினான். கர்ம யோகம் இது.

குகன் சுத்தமனத்தோடு ராமனை அணுகினான். பக்தியின் விளிம்பில் நின்றவன் குகன்.  ராமர் இதை உணர்ந்தவர். அதனால் தான் ராமர்  குகனை ஆலிங்கனம் செய்து இனிமேல் நாம் ஐவர் என்கிறார். பக்தி யோகம் இது.

பக்தியும் ஞானமும் அவனை முக்தி அடையச் செய்ததை அவன் கங்கையில் விழுந்து செத்தான் என்று பூடகமாக ஸ்வாமிகள் சொன்னார்.

சாஸ்திரிகளின் பிரசங்கம் ஜனரஞ்சகமாக  அமைந்து எல்லோராலும் கேட்கப்பட்டு மகிழ்ச்சி  அளித்தது  என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.


  


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...